1
உனக்கு நானென்றால்
எத்தனைப் பிடிக்குமோ தெரியாது,
எனக்கு நீயென்றால்
அதை எப்படிச்சொல்ல..
இதோ இந்த வானத்தைப்
பார்.,
அதோ எங்குமாய் நீண்டு விரிந்த
கடலைப்பார்.,
முடிந்தாலந்த நீலவானின் நட்சத்திரங்களை
மொத்தமாய் எண்ணிச் சொல்;
முடியாவிட்டால் நம்பிக்கொள்
அவைகளையெல்லாம்விட அதிகமானது
உன் மேலான எனதன்பு..
———————————————
2
உனக்கும்
எனக்கும்
தூரம் மனசளவுதான்;
உனக்குப் பிடித்த
எனக்குப் பிடித்த நம் மனசளவு!
உனக்கும்
எனக்கும்
அழகு ஒன்றுதான்;
உனை விரும்பும்
எனை விரும்பும்
நம் அன்பொன்றுதான் அழகு!
உனக்கும்
எனக்கும்
உயிர் ஒன்று தான்;
உனக்குள் துடிக்கும்
எனக்குள் துடிக்கும்
இந்தக் காற்றைப்போல நம்
உயிருமது ஒன்றுதான்..
———————————————
3
விடிகாலை வெளிச்சத்தில்
கத்தும் சிட்டுக் குருவியைப் போலத்தான் நானும்;
உனது சின்ன சிரிப்பைக்
கண்டாலும் எனக்கு
விடிந்துவிட்டதாய் எண்ணிக்கொள்கிறேன்..
———————————————
4
எங்கோ தூரத்தில் கேட்கும்
சிட்டுக்குருவியின் சப்தமும்,
எங்கோ தூரத்தில் கேட்கும்
சாவுமேளத்தின் சப்தத்தையும் போலத்தான் நீயும்
எங்கோ எனக்குள்ளே
ஒலித்துக்கொண்டே இருக்கிறாய்,
எனக்குள் நானாய்
நீயே உயிர்த்திருக்கிறாய்!!
———————————————
5
நீ வந்து நிற்பதை
தினமும் காண்கிறேன்,
தெருமுனை சென்று
திரும்பிப் பார்க்கிறாய்
காண்கிறேன்,
வெகுநேரம் காத்திருக்கிறாய்
காண்கிறேன்,
எதையோ எண்ணி உருகுகிறாய் காண்கிறேன்;
நீ செய்யும் எதையும்
எனக்காகவே செய்வதாக யெண்ணி
சுவாசிக்கிறது என் இதயம்..
ஒருவேளை
அந்தக் காத்திருப்பும்
தவிப்பும் எனக்கானதல்ல என்றறிவேனெனில் அதன்பின்
அந்த இதயம் சுவாசிக்குமா தெரியவில்லை..
———————————————
வித்யாசாகர்
பிங்குபாக்: அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்.. – TamilBlogs