1
ஒரு விடிகாலையின்
கனவுபோல நீ,
எதிரிலிருக்கமாட்டாய்
நினைவில் நிறைய இருப்பாய்..
தண்ணீரிலலயும் முகம் போல
உனது நினைவும் இங்குமங்குமாய் அலைகிறது
ஆனால் கொஞ்சம் கூட
மறைவதில்லை..
அதெப்படி மறையும்
நானின்னும் இறக்கவேயில்லையே.. (?)!!
——————————————————
2
உனக்கான
எதுவுமே எனக்கு கனமில்லை
உன் பெயர்
சொல்லுமிடத்தில் துயரேயில்லை
உனக்காக என்று எண்ணிக்கொண்டால்
எனக்கு கடலில் நடக்கலாம்
நெருப்பில் படுக்கலாம்
வேண்டுமெனில் கத்தியெடுத்து
எனது மார்பில் குத்திப்ப்ப்பார்,
வழியும் ரத்தம்கூட போகுமென் உயிருக்காக
வருந்திவிடாது; ஆனால்
கண்டிப்பாக
உனை பிரிவதையெண்ணி தவித்தேபோகும்..
——————————————————
3
நீரின்றி
அமையாது உலகு,
நீயின்றியும்
அமைவதில்லை நான்..
சப்தங்களால் ஆன
பிரபஞ்சமிவை;
உன்னால் மட்டுமே ஆன
பிஞ்சு இதயம் நான்,
இருட்டும் வெளிச்சமுமானவை
பொழுதுகள்;
நீயும் நீயும் மட்டுமேயானவன் நான்!!
——————————————————
4
உனை நினைப்பதைவிட
ஒரு பெரிய
தவமில்லை,
உனை மிஞ்சிய அழகாய்
எவருமே எனக்குத் தெரிவதில்லை,
உனை ஆராதிப்பதைவிட
மனசு வேறெதையுமே
அத்தனை ஆராதிக்க விரும்புவதில்லை;
அப்படியென்ன
‘பெரிய இவளா நீ’ என்கின்றனர் சிலர்
ஆம்;
எனக்கு நீ எப்போதுமே
பெரிய அவள் தான்..
——————————————————
5
தூக்கிலிடும் தருணம்
இறந்துவிடுவோமென
தெரிந்தும்
அவன் கடைசியாய் இவ்வுலகை
காணும் தருணம் எத்தனை மகத்தானதோ (?)
அத்தனை கனத்தோடுதான்
பார்க்கிறேன் உனை
ஒவ்வொருமுறை விட்டுப் பிரிகையிலும்..
——————————————————
வித்யாசாகர்