முண்டம் முண்டமென மண்டையில் கொட்டினாலும்
அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான்
எங்களுக்கு வசந்தமான நாட்கள்..
அப்பா கையில் அடி வாங்குவது
அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்..
நம்மை புதிதாகப் பெற்றெடுக்க
அனுதினமும் நெஞ்சில் சுமக்கும் அம்மாக்களாகவே
நிறைய அப்பாக்களும் இருக்கிறார்கள்..
அப்பா திட்டுகையில் என்றேனும்
அப்பா அடிக்கையில் என்றேனும்
பாவம் அப்பா என்று யோசித்திருக்கிறீர்களா ?
உண்மையில் அப்பாக்கள் பாவம்.
தூங்குவதுபோல் படுத்திருப்பேன்,
பிள்ளை உறங்கிவிட்டானென எண்ணிக்கொண்டு
மறுநாளும் அந்த முத்தத்திற்காகவே
இன்னொரு அடிவாங்க உள்ளே அன்பூறும்..
விடிகாலையில் அப்பா
வேலைக்கு புறப்படுகையில் எப்பொழுதும் தருமந்த
சின்ன முத்தத்தைவிட,
நாங்கள் உறங்குவதுபோல் படுத்திருக்கையில்
வெளியிறங்கும் முன் அருகில் வந்து
எங்கப்பா பெரிய ஹீரோவெல்லாம் இல்லை
ஆனால் நல்ல மனிதரென்று
எத்தனைப் பிள்ளைகள் புரிந்துள்ளீர்கள்??
காலம் முழுக்க
எனதம்மாவின் முந்தானைக்குள் விழாமல்
அவளை அடுப்படிக்குள் மட்டுமே அடைக்காமல்
அவருக்குச் சமமாக அவளை வைத்திருக்கும்
என்னப்பா
எனக்கு கதாநாயகன் தான்..
அப்பா கொஞ்சும் கொஞ்சல்களைப் போல
உலகில் வேறு சிறந்த மகிழ்ச்சியில்லை,
அவர் மீசைக் குத்திய முத்தத்திற்கு ஈடு
உலகில் வேறு பரிசே கிடையாது,
அப்பாவின் வாசனைக்கு ஈடாக
இன்னொருவர் இனி பிறக்கப்போவதேயில்லை.,
உண்மையில்
எங்களை உயிராக்கியவள் அம்மா,
அதை தனதுயிராக்கிக் கொண்டவர் அப்பா!!
—————————————
வித்யாசாகர்
பிங்குபாக்: அப்பா அடிச்சா அது தர்ம அடி.. – TamilBlogs