இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..

டைப்பின் பெயர் – இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம்
ஆசிரியர் – ஏம்பல் தாஜுமுல் முகம்மது
வெளியீடு – நியூ லைட் புக்செண்டர், மாத்தூர், மணலி, சென்னை – 68
ஆய்வுரை ஏற்பாடு – K-TIC, குவைத்

முதூரும் சொல்லழகு
அகிலம் போற்றும் மொழியழகு
வான்தோறும் புகழ்மணக்கும்
வள்ளுவம் பாடிய தமிழழகு..

அத்தகு தேனூரும் தமிழுக்கு வணக்கம்!!

யிற்றுவலி வந்தவருக்குதான் பிறருடைய வலி தெரியும் என்பார்கள், அது புத்தகம் எழுதி வெளியிடுவோருக்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. புத்தகம் வெளியிடுவது என்பது ஒரு மனக்குழந்தையை சிந்தனையின் அழகோடு பிரசவிப்பதற்கு சமம். அதிலும் இது மதம் பற்றிய புத்தகம். தொட்டால் அல்ல, வாயால் சொன்னாலே உயிர்சுடும் மதங்களின் தன்மையினை, அதன் கூறுகளை, சாராம்சத்தை சொல்லி நாமெல்லோரும் ஒன்றெனக் கைகூப்பும், மனதை மனதால் நெய்யும் படைப்பிது.

இந்த “சமய நல்லிணக்கம்” எனும் நூல் இஸ்லாத்தை நன்றாக பிறமதத்தினரும் அறிவதற்கேற்ற ஒரு பொக்கிஷமாகும். இது வெறும் தனித்த ஒருவரின் சிந்தனையோ வெறும் கருத்தோ அல்ல இப்படைப்பு, இது ஒரு அகம் பண்பட்டதன் வெளிப்பாடு. ஒரு காய் கனிந்து ஞானம் வெளிப்பட்டதன் கூப்பாடு. பலாப்பழம் பழுத்தால் அதன் வாசனையை யாரால் மறைக்க இயலும் ? முடியாதில்லையா ? அப்படித்தான் இப்புத்தகத்தின் ஆசிரியர் ஐயா தஜம்முல் முகம்மது அவர்களும் தனது மனதால்’ கண்ணியத்தால்’ கணிந்துபோனதன் பலனை இப்படைப்பின் வாயிலாக பொதுவெளிக்கு எடுத்துவைத்திருக்கிறாரென்பது மதிக்கத்தக்க செயல்.

எனக்கொரு ஆசையுண்டு, இஸ்லாத்தை முழுதாக படித்துவிட வேண்டுமென்று, காரணம் நமக்குள்ளிருந்து முரண்கள் அகற்றப்படவேண்டும். இஸ்லாத்தின் முழுமையான சகதரத்துவமும், கண்ணியமும், உயிர்நேயமும் காக்கப்படவேண்டும். எங்கள் தெரு மத்தியில் இருக்கும் ஒரு இஸ்லாமிய பாயினுடைய வெள்ளைத்தாடியும் அவருடைய வெள்ளை மனசும் போல எனக்கு எல்லோரையும் காண ஆசை.

நிறைய முரண்கள் குரான் கடந்து நம்மிடையே உண்டு. குரான் என்றில்லை; மதம் ஒரு பாடம் தானே? ஆன்மிகம் ஒரு பயிற்சி தானே? அது ஒரு தவிர்க்க வேண்டாத இயல் இல்லையா? அப்படி நோக்கினால் அனைத்து மதத்தினுடைய நோக்கமும் குற்றம் உடையது அல்ல, ஆனால் அவைகளை நாம் முழுதாக எல்லோரும் அறிவதில்லை அல்லது எல்லோரும் பொதுப்படையாக உணர்வதுமில்லை. வெறும் முரண்களை மட்டும் சுமந்துக்கொண்டு கடவுள் என்கிறோம், எதிரெதிரே நின்று ஒருவர் ஒருவரைக் கொல்லவும் துணிகிறோம். பிறகு மதம் போதித்ததன் பயன்தான் என்ன? நமக்குத்தான் “எனது-உனது” என்று சண்டையிட்டு சுயநலத்தை வென்றெடுக்கவே வாழ்க்கை முடிந்துவிடுகிறதே.

என்றாலும் அப்படிப்பட்ட ஒரு சுயநலக் கூட்டிலிருந்து ஒதுங்கி, தனை கம்பீரமாக நீக்கிக்கொண்டு, தானும் தனித்துவிடாமல், இத்தகைய ஒரு அன்பின் பெருந்திரள் ஒன்றை திரட்டும் விதமாக, உலக அமைதி வேண்டி ஒரு நல்ல படைப்பினை தந்த ஆசிரியர் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களுக்கு எனது சிரந்தாழ்ந்த நன்றியும் வணக்கமும்.

இந்த புத்தகம் பேசும் இஸ்லாம் பற்றிய தகவல்கள் ஏராளம், சமய நேர்த்தி குறித்தும், மத நல்லிணக்கம் வேண்டியுமென்று அறிந்தாலும் பொதுவாக அனைத்து கருத்துக்களும் இஸ்லாம் சார்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் கண்ணியத்தையும் நேர்மையையும் அன்பையையும் பேசி, பெருங்கருணையை விழியிலேற்றி, வாழ்வோர் அதன்படி நடக்க நல்ல பல போதனைகளையும் சொல்லி, சமத்துவத்தை தனது முகமாக்கிக்கொண்டு நல்லவொரு சகோதரத்துவத்தை முன்வைக்கும் மதமாகவும் இஸ்லாத் இருப்பது உண்மை.

அத்தகு இஸ்லாத்தின் அறிவுரைகளை இறையுணர்வு மிக்கோர் தெளிவாக படித்தறிந்து அறியப்படவேண்டிய ஒன்றென்பதில் மாற்றுக்கருத்தில்லை. இஸ்லாத்தின் வழியே நின்று மானுட அன்பையும், மனிதருக்கான நீதியையும் போதிக்கத் துணிபவையாகவே இப்படைப்பினை படைக்க விரும்பியிருக்கிறார் ஆசிரியர்.

இப்படைப்பு சமய நல்லிணக்கத்தைப் பற்றியது என்பதாலும், இறைவணக்கம் செய்வோருக்கு அல்லது இறையுணர்வு கொண்டவர்களுக்கு பொதுவாக படித்தறியத் தக்க நூல் என்பதாலும் இதை முழுதாக வாசிக்கும் கடமையினை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு, இதன் தலைப்பினால் என்னுள் ஏற்பட்ட ஒரு நல்லுணர்வை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்.

முதலில் கடவுள் என்பது யாதுமிலாதது. எங்கும் நிறைந்தது. எல்லாம் அதுவானது, பெரிய சூழ்சுமமெல்லாம் இல்லை, எனக்கு உயிர் போகையில் உனக்கு ரத்தம் தந்துக் காப்பாற்ற மதமோ சாதியோ அல்லது வேறெந்த பெரிதுசின்னதோ தேவைப்படவில்லை யெனில்; மேல்கீழ் அடையாளம் நமக்குள் இல்லாது மனிதத்தோடு நம்மால் பிறருக்கு உதவ இயலுமெனில் நாமெல்லோரும் தெய்வீகம் உள்ளவர்களே.

பொதுவாக வணங்குவது என்பது நன்றி கூறுவது தான் இல்லையா? எனக்கு சோறு போட்டா உனக்கு நன்றி. என்னைக் கொஞ்சம் சுமந்துவந்து உனது வண்டியில் இங்கே இறக்கினால் உனக்கு நன்றி, எனக்கு பேச பத்து நிமிடம் இங்கே அவகாசம் கொடுத்தால் அதற்கு நன்றி. பிறகென்ன ஒரு உதவிக்கு நாம் மனிதத்தோடு காட்டும் நன்றி வணங்குவது தான் என்றால்; யோசித்துப் பாருங்கள், இந்தக் காற்றும்’ இந்த நீரும்’ இந்த வானும்’ இந்த மண்ணும்’ எனக்கு உயிர் தந்து’ உடல் தந்து’ இந்த பிரபஞ்சம் எனக்காய் எனக்காய் அனுதினமும் காத்துக் கிடக்கிறதே, அதற்கு நன்றி கூற வேண்டாமா? அதை வணங்க வேண்டாமா ? அந்த வணங்கும் பண்பு.. ஒரு நன்றியுணர்வு.. உள்ளே கனத்து குவியவேண்டாமா? அதற்குத்தான் ஆன்மிகம்ற ஒரு பயிற்சி தேவைப்படுகிறது.

ஆண்மீகமெனும் “நம் வாழ்ந்துதீர்ந்த பல பெரியோர்களின் வாழ்பனுபவத்தினால்” சீர்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம், ஒருசேர்ந்த நற்கருத்துக்களின் கோர்வை, அவ்வப்பொழுதில் காலமாற்றம் சார்ந்து வழிநடத்தத் தக்க அறிவுரைகளின் திரள் என ஒன்று தேவைப்படுகிறது. ஆன்மீகம் எனில் மாயையோ மந்திரமோ கண்டதெல்லாம் இல்லை, அதலாம் சொல்லப்பட்டிருக்கலாம் என்றாலும் அது ஒரு ஒருவழி புரிதல், யாரோ சுமந்துவந்தது, நமது கூட்டுவாழ்வில் கலந்துபோயிற்று, அவைகளை அங்கேயே விடுவோம்.

அதேநேரம், ஒரு முழுநம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்த சில காட்சிகளை’ தோற்றத்தை’ சாட்சியைப்போன்ற பல ஏற்பாடுகளை கண்முன் வைக்க முற்படுவதே ஆன்மீகத்தின் பல கோட்பாடுகளுக்கும் நீதிநெறிகளுக்கும் கொண்டாட்டங்களுக்குமான காரணம் என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது.

பொதுவில் ஆன்மிகமென்பது ஒரு வேருக்கு ஈரமென்ற நீர் பாய்ச்சுவதுபோல, முழுக்க முழுக்க அறிவு சார்ந்தது ஆன்மிகம். அது ஒரு இயல். அந்த இயலுக்கு நாம் வைத்திருக்கும் புத்தகங்கள் எல்லாம் பல விதமானது, பல வழியானது, ஆனால் அனைத்துப் பாடத்தின் நோக்கமுமே இந்த இயற்கையெனும் பெருங்கருணையை அடைவதன்றி வேறில்லை.

இந்த உலகம் கோடானகோடி வருடங்களைத் தாங்கி உருவானது, வெறும் இரண்டாயிரம் ஐந்தாயிரம் பத்தாயிரம் பற்றி மட்டுமே நமது கவலையும் கேள்விகளும் சண்டைகளும் இருக்கிறது. என்னைக்கேட்டால் எல்லாவற்றையும் விட மனிதம் மிக முக்கியமானது. எனது அன்புச் சகோதரர்கள் நீங்கள் முக்கியமானவர்கள். உங்களின் அன்பு பெரிது. தியாகம் பெரிது. இந்த எல்லோருக்குமான அன்பும், நமது எல்லோரின் மகிழ்ச்சியும், வாழ்வும், நமது மண்ணில் நிலவவேண்டிய அமைதியுமே மிக முக்கியமானது. அதற்குள் எந்த போட்டியையும் சண்டையையும் பிரிவையும் யாருமே கொண்டுவந்துவிடாதீர்கள்.

பல முரணான கதைகள் சமயங்களில் உண்டு. குறிப்பாக இந்துமதத்தில் பல உதாரான புருசர்கள் பற்றியும் தத்துவார்த்த நெறிகளும் கதைகளின் வழியே மதங்களின் வழியே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவைகள் மட்டுமே இத்தனைக் கோடானகோடி ஆண்டுகளின் இறுதி முடிவுல்ல இல்லையா? அது ஒரு பாடம், ஒரு பாதை, ஒரு மண்ணின் தோன்றல்களால் போதிக்கப்பட்ட நெறியது. கற்பனையினூடே கடவுளை போதித்ததால் கல்லென்று ஒதுக்கிய’ கடவுளென்று நம்பிய’ இருபாலரைக் கொண்ட மதமது. அதையும் நாம் அறிவைக் கொண்டே பார்க்கவேண்டும். தெளிவின்வழி மட்டுமே உணரவேண்டும். கண்ணுக்கு புலப்படாத அல்லது அறிவுக்கு எட்டாத எதையுமே அத்தனைச் சட்டென ஏற்றுக் கொள்வதற்கில்லை.

எனினும், ஒரு முட்டாளிடம் சென்று நீ முட்டாளென்றால் அவனுக்கும் கோபம் வரும். ஒன்றை சொல்லித்தர வேண்டுமெனில் ஒரு நண்பனாக அவரவருகில் சென்றமர்ந்து கற்றுத்தர வேண்டியுள்ளது. ஆனால் நாமெல்லோரும் எப்போதுமே எதிரெதிரே அமர்ந்துகொள்கிறோம், அதனால் தான் நீதியும் தர்மமும் எவர்பக்கமிருந்தும் எவருக்குமே புரிவதில்லை. எல்லோருக்கும் பொதுவாய் கிடைப்பதுமில்லை. முதலில் இஸ்லாத்தும் இதர மதங்களும் சொல்லித்தரும் கருணையை பெரிதாய் உணருங்கள். சகோதரத்துவத்தை கையில் எடுங்கள். அருகருகே அமருங்கள். எல்லோரும் ஒரு குடும்பமாய் அன்புசெய்யுங்கள். பிறகு அவரவர் மண்ணின் வாழ்வுமுறைக்கு ஏற்ப வழிபாடுகளும் அவரவருக்கு அவரவருடையது என்பதும் தானே எல்லோருக்கும் புரிந்துபோகும்.

எந்த மதமாயினும் சரி அறிவைக் கொண்டு பார்க்கமுடிந்தால், மனதைக் கொண்டுப் பார்க்கமுடிந்தால் இரண்டே இரண்டு தெரியவரும்; ஒன்று நானும் நீயும் வேறல்ல என்பதும், மற்றொன்று பிற உயிர்கள் நோகக் கூடாது என்பதும். ஆக நாம் நினைப்பதெல்லாம் ஒன்றே. எதிர்ப்பார்ப்பதும் அறிவதும் எல்லாம் ஒன்றே. எனது எண்ணம் வேறில்லை உனது வேறில்லை. எனது தேவை வேறில்லை உனது வேறில்லை. நம் எல்லோருமே நிம்மதி.. நன்னடத்தை.. நேர்மை.. அறம்.. என சுழன்று சுழன்று ஒரேபோலான பல வட்டங்களுள் சுழலும் அறிவு மனிதர்கள் அவ்வளவே.

நமக்கு நம் மண்ணுள் தோன்றிய இயற்கையை வணங்குபவர்களாக இருந்தாலும் சரி, கருணையை போதிப்பவர்களாக இருந்தாலும் சரி, கண்ணியத்தை காப்பவர்களாக இருந்தாலும் சரி, மன்னித்து மாண்பு வலுத்த எவராயினும் சரி எல்லோரும் ஒரு குடிலின் பல பிள்ளைகள் அவ்வளவே. நமக்குள் பேதமில்லை, மேல்கீழ் இல்லை. வழிமுறைகள் பல, மதங்கள் பல., வழிபாடு.. பல..பல; இருந்துபோகட்டுமே, எனினும் நமக்கு உயிர் ஒன்றே. எல்லோரும் தேடும் இறை ஒன்றே. அதை அவரவர் வழியில் பொதுவாய் வணங்கி நன்னயம் போற்றி நமது மானுடப்பன்பினை வளர்க்கச் செய்வோம். நன்றி. வணக்கம்.

ஆயிவரங்கில் இஸ்லாத் குறித்து நான் பேசியதன் காணொளியைக் காண்பதற்கு – இங்கே சொடுக்கவும்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அணிந்துரை, ஆய்வுகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..

 1. பிங்குபாக்: இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு.. – TamilBlogs

 2. Tamil Us சொல்கிறார்:

  வணக்கம்,

  http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s