1
கிழித்துப்போட்ட
காகிதங்களைப் போல கிடக்கிறது
உனக்காக காத்திருந்த மனசு;
அள்ளி தீயிலிட நினைக்கிறேன்
நீயில்லா தனிமைதனில்…
——————————————–
2
நீ நிலவிற்கீடு
ஒரு படி அதற்கும் மேல்..
எப்போதும் ஒளிர்ந்துக்கொண்டே யிருப்பாய்
நானந்த ஒளியின்
ஏதேனுமொரு மூலையில் நின்று
உனைத் தொட்டவாறே உயிர்த்திருப்பேன்..
——————————————–
3
உயிரைவிட
எதைப் பெரிதாகச்
சொல்வதென்று புரியவில்லை;
உன்னைவிட எனலாமா..?!!
——————————————–
4
மழையின்று சோவெனப்
பெய்யுமென்றுச் சொன்னால்
ஒரு விவசாயிக்கு மனசெல்லாம் பல்லாய்
சிரிப்பு வரும்;
எனக்கும் நீ இன்று
வருவாயென்று நினைக்கையில்
நினைக்க நினைக்க ஆனந்தம்..
——————————————–
5
இந்தப் பிரபஞ்சம்
காற்றால் நிறைந்திருப்பதைப் போலத்தான்
நானும் உன்னால் நிறைந்திருக்கிறேன்..
என்னுலகம்
உன்னிலிருந்து துவங்கி
உன்னோடே முடிகிறது..
——————————————–
வித்யாசாகர்
பிங்குபாக்: நீயும் நீயும் நானாவேன்.. – TamilBlogs