நீ மின்னல் பெண்ணில்லை
மேனியெழில் பெருசில்லை உன்
அன்புயிர் கூடுருகி என் இதயத்துள் நிரம்புதடி..
உன் கள்ளிப்பால் பேச்சினிமை
உண்மையுன் பேரழகு
உயிர்போகும் நொடிகூட உன் மடியிருந்தால் போதுமடி..
மழலையாய் குறும்பிழுப்பாய்
குழப்பத்தில் கூடமர்வாய்
குடும்பத்துள் நிறைவதெல்லாம் நீ தந்த வெளிச்சமடி..
என் கண்கள் கலங்கும்முன்னே
உன் மனசு வலித்திருக்கும், உன் மனசு
வலிக்கும்முன்னே என் வயசெல்லாம் முடியுமடி..
பெண் குழந்தை சிறுசென்பார்
சின்னறிவால் சொன்ன சொல்லோ ?
பெண்ணென்றால் தாயுமடி, உன் போல ஆகுமடி..
பெண்ணென்றால் போதை இல்லை
பெண்ணென்றால் தாழ்மையில்லை
பெண்ணென்றால் பாதியடி, என் குறைபோக மீதியடி..
எங்கோ பிறந்தவளே, யாரோ பெற்றவளே
மூன்று முடிச்சுள் மகள் ஆனவளே;
முழு காதல் நிலவாக நிற்பவளே நீயடி;
நீ பெற்ற குழந்தையாலே என்பெயரும் அப்பனடி
என் வாழ்வெல்லாம் பெண்ணால்; உன்னால் இனிக்குதடி
வாழ்வின் வசந்தத்தை தந்தவளே நீ பெரும்பேரடி.. பேரடி..
காற்று வெளியிடைச் செல்லம்மா
நம் வாழ்வு இனிக்குதடி
ஒரு சாதல் வரும்வரைக்கும் வா; பிறப்பின்
ஏக்கமன்றோ தீருமடி..
———————————————————————–
வித்யாசாகர்
பிங்குபாக்: காற்று வெளியிடை.. – TamilBlogs