சின்ன பொய் என்கிறோம்
சிரசில் தீ வைக்கிறோம்,
சின்ன குற்றமென்கிறோம்
சமுதாயத்தை சீர்குலைக்கிறோம்,
சின்ன சின்னதாய் சேரும் காட்டாற்றைப்போல
பெரிது பெரிதாய் இன்று –
அறம்வீழ்ந்து கிடக்கிறதே அறிந்தோமா?
கையில் பணமுண்டு
காரும் வீடும் செல்வங்களும் உண்டு,
இருந்தும் கற்றதில் பிழை என்கிறோம், கல்வியில்
பிழைப்பென்கிறோம், மருந்தையும்
வணங்கும் சாமியையும் கூட
நம்பிக்கைக்கு அப்பால் வைத்துள்ளோமே; அறமெனில்
அறிந்தோமா?
நடிப்பவருக்கு மதிப்புண்டு, தமிழ்
படிப்பவருக்கு துளியுமில்லை,
அடிப்பவரிடம் பயமுண்டு, அன்பு செய்தால்
அவர் பொருட்டேயில்லை,
ஆணவமும் அறியாமையும் தலைவிரித்தாடினால்
அரசதும் உடன் ஆடுமோ,
அறமதும் வென்றுதீருமோ? எம் மண்ணே
அறமதும் வென்று தீருமோ??
புகழெனில் உடம்பெல்லாம் இனிப்பு
பரிசெனில் வாயெல்லாம் பல்
இலவசம் இலவசமென்றால் உயிரெல்லாம் பூரிப்பு
இலவசம் வழங்கி இலவசம் வழங்கி
விற்கும் ஓட்டெல்லாம் நஞ்சாச்சே;
நம்பிக்கை பேச்செல்லாம் பொய்யாச்சே?!!
நஞ்சுண்டு நகைப்போரே பழிப்போரே
அறமெனில் அறிந்தீரோ ?
எம் பாட்டன் புலவனை மதித்தீரோ?
நடிகை வந்து சொன்னால்
கசக்கும் காப்பி கூட சுவை,
நடிகர் வந்து சொன்னால்
கெட்ட பால் கூட அமிர்தம்,
விளம்பரம் உண்டென்று சொன்னால்
‘பேசும் நான் கூட பிணம், நீயும் பிணம்
நீயும் நானும் அறிந்தோமா அறமெனில்
என்னவென்று?
கண்விழித்தால் கைப்பேசிக்கு வணக்கம்
கைப்பேசி எடுத்தால் காதலிக்கு வணக்கம்
காதலி மறந்தால் கல்லிலோ சாமியிலோ
சாதியிலோ கொண்டாட்டம்;
கொண்டாடி கொண்டாடி வாழ்ந்தோர் மத்தியில்
கூடி கூடி பிரிகிறோமே தோழர்களே..,
அறிந்தோமோ ‘அ’ எழுதும் போதே அறந்தனையும்?
கூட்டு வாழ்க்கை போயேப் போச்சு
குடும்பம் பாசம் வாட்சப்பில் ஆச்சு
அத்தை மாமா ‘ஆண்டி அங்கிள் ஆனபோதே’
அழகு கடிதம் முடிந்துப்போச்சு,
பின் உறவும் அறுந்து உலகம் சுருங்கி
தனிமை தனிமை தனிமை யொடுங்கி
தானெனும் சுயநலப் பிறப்பாய் போன மானுடமே?!!
எங்குனது அறம்?
எப்படியுன் அறத்தை தொலைத்தாய் ??
அறம் அறம் என்கிறோமே
அறத்திற்கு அழிவில்லை அறி!
அறத்தான் வருவதே இல்வாழ்க்கை அறி!
அறத்தான் சிறப்பதே இவ்வுலகமும் அறிவாயா??
அறம் வழி வாழ்ந்தோர் எம் முன்னோர்
அது வழி மீண்டும் வா..,
பொய் ஒழி, உண்மை உணர்
எதையும் அறத்திலிருந்து துவங்கு
அவ்வறத்தான் வருவதே பேரின்பம்!! பெருவாழ்வு!!
—————————————————–
வித்யாசாகர்
பிங்குபாக்: 31, அறத்தான் வருவதே.. – TamilBlogs