1)
ஒரு மரத்தில் ஆயிரம்
இலைகள் முளைப்பதைப்போல
மலர்கள் பூப்பதைப்போல் நாமும்
இலைகளாய் மலர்களாய் உயிர்திருக்கிறோம்..
நமக்கு வேர் ஒன்று
கிளைகளின் வகை ஒன்று
இலைகளுள் கிளைகளுள் கனிகளுள் பாயும்
நீரோ ரத்தமோ எல்லாம் ஒன்றே; ஒன்றே;
உலகம் வெளியில் உள்ள
மரத்தைப் பார்க்கிறது
அதற்குத் தெரிவதில்லை; நாமும்
அந்த மரத்தின் ஒரு இலைதானென்று…
———————————————————————————-
2)
நிலா எத்தனைப் பிரகாசமனதோ
அத்தனை வெப்பமுமானது,
சூரியன் எத்தனை வெளிச்சமானதோ
அத்தனை நெருப்பைக் கொண்டது
பழங்கள் எவ்வளவு இனிப்புடையதோ
அதேயளவு காய்த்து கசப்பையும் செரித்ததே,
மனிதருக்குள்ளும்
வெப்பமுண்டு கோபமுண்டு
கசப்புண்டு பொறாமையுண்டு
ஈரமுண்டு வெறுப்புண்டு
சதையும் எலும்புமாய் ஆசையும் சலிப்பும்
அகல விரிந்த குளம்போல
உள்ளேக் கொட்டிக்கிடக்கும்
நாற்றமாய் காமமும் உண்டு,
அதத்தனையும் பழுத்தால் செரித்தால்
அன்பில் அணைத்தால்
வெறும் அமைதியும் இனிப்பும் வெளிச்சமும்
பிரகாசமும்
நம்மிடையேயும் உண்டு தோழர்களே..,
நமக்குத்தான் –
நமக்குள் இருக்கும் நிலவும் சூரியனும்
காற்றும் நெருப்பும் நீரும் கடலும்
எங்கோ தூரத்தில் மட்டுமே தெரிகிறது..
——————————————————————-
வித்யாசாகர்
பிங்குபாக்: 33, நிலா தெரியும் கடல்.. – TamilBlogs