அன்புறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்,
நம்மால் இயன்ற உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். ஆங்காங்கே பலர் பல இன்னல்களால் ஏமாற்றத்தால் இயலாமையால் ஏழ்மையால் துன்புற்று வருகின்றனர். அவைகளையெல்லாம் சரிசெய்ய யாரோ ஒருவர் வானத்தில் இருந்து நேரே நமக்கென இறங்கி வர மாட்டார்.
நாம் தான் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவரவர் பங்கிற்கு ஏற்றவாறு ஏதேனும் அவரவரால் இயன்ற சிறு சிறு உதவியை பிறரின் நன்மைக்கு வேண்டி செய்து பழகவேண்டும். இன்னலில் இருப்போருக்கு இயன்றதை வழங்கி பொதுமானுடத் தன்மையை, மனிதத்தை வலுப்படுத்தவேண்டும். உண்மையில், உதவுவது என்பது ஒரு தனித்தன்மை அன்று. அது நம் உயிர்நேசச் சான்றாகும்.
பரவலாகப் பார்த்தால் அனைத்துயிர்களும் ஒன்றிற்கொன்று உதவியாகவும் அணுசரணையோடும் தான் வாழ்ந்து வருகிறது. “நாமும் அங்ஙனமிருந்து நமக்குள்ளான இடைவெளியை அகற்றி, எண்ணங்களை மாற்றி, எல்லோரும் எல்லோருக்கும் பாகுபாடற்று உதவிசெய்து மகிழ்வோடும் நிறைவோடும் வாழ்வோம்” எனும் உறுதியை தனக்குள்ளே எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு நினைவிருக்கும், முன்பு குவைத்தில் விபத்தினால் ஒரு கால் இழந்த நண்பர் திரு. ஜாபர் அவர்களுக்கும் மற்றும் இங்கே இறந்துபோன வேறு சில அன்பர்களுக்கும் வீட்டு மனை தந்து உதவுவதாய் முன்பு நாம் கூறியிருந்தோம்.
எமது அன்பு சகோதரர் திரு. நெல்லை மரைக்காயர் கூட சென்ற வருடத்தில் அதைப்பற்றி விரிவாக ஒரு பதிவிட்டு நானும் கூட சிலருக்கு அரை மனையளவு இடம் தருவதாக அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதை பலர் பகிர்ந்துகொண்டு நமக்கு நிறைய நன்றியையும் வாழ்த்தையும் கூறியிருந்தனர்.
சென்ற வாரத்தில் அவ்வாறே, முன்பு கூறியவாறே, திரு ஜாபர், திரு. ஜெயசீலன் மற்றும் வேறுசில குடும்பங்களுக்குமென சின்னதாய் அவர்கள் இழந்த நிம்மதியை மீட்டுத்தரும் பொருட்டு தனித்தனியே ஒரு வீட்டுமனையை (1000Sq/Ft) வீதம் விழுப்புரம் பக்கத்தில் அவரவர் பெயருக்கு சட்டரீதியாக பெயர்பதிவு செய்துத் தரப்பட்டுள்ளது.
இறையருளால், மொத்தம்; பத்திற்கும் மேல் மனைகள் பிறருக்கென உதவவேண்டி வாங்கியிருந்தேன். மாதாமாதம் நான் உழைத்து சம்பாதித்த எனது சம்பள பணத்தில் சேமித்துவந்து இப்பேருதவியை செய்திருக்கிறேன். இதுவரை 6 குடும்பங்களுக்கு மட்டும் பதிவுவேலைகள் துவங்கி நான்குப் பேர்களுக்கு நேற்றுவரை மொத்த பதிவும் முடிந்தேபோயிற்று.
உதவுவதற்கு பெரிதாய் கையில் கோடி கோடியாக பணமிருக்க வேண்டிய அவசியமோ, மிட்டா மிராசாக இருக்கவேண்டியதோ எல்லாமில்லை. பிறருடைய வருத்தம் கண்டதும் உதவி செய்வதற்கான வழியை மட்டும் தேடினால் போதும். உதவும் மனசிருந்தால் போதும். உதவக்கூடிய வழிகளும் தானே பிறக்கும்.
இன்னும், இங்கே (குவைத்தில்) இறந்துவிட்ட இருவரது குடும்பங்களை தேடி வருகிறோம். விவரம் கிடைத்ததும் அவரவர் பெயரில் விரைவில் மீத மனைகளும் பதிவு செய்து தரப்படும். உடனிருந்து உதவிய அன்பு சகோதரர் திரு. நெல்லை மரைக்காயர் (மூத்த செய்தியாளர்), குவைத் சோசியல் மீடியா சகோதரர்கள், மற்றும் அணைத்து தோழமை உறவுகளுக்கும் எனது நன்றி..
வித்யாசாகர்
http://www.vithyasagar.com