தமிழ் ஆள; தமிழ் பேசு..

ஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இதலாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும் நம்மிடையே இப்போதெல்லாம் எண்ணற்றோருக்கு உண்டு.

 
என்றாலும் மொழி வளர்ச்சி, வாழ்வுநிலை, சுற்றத்தார் பொருத்து மொழியும் பல மாறுதலுக்கிணங்க தானே திரிந்தும் கலந்தும் விடுகிறது. எனவே எதையும் முற்றிலும் தமிழில்லை என்று அகற்றிவிடலாமா? அல்லது தனித்தமிழ் அல்ல என்று ஒதுக்கலாமா? எல்லாம் தமிழ்தான் ஆயினும் கலப்புத்தமிழ் இல்லையா என்று வருந்தியே நகர்வதா???
 
இதெல்லாம் சமஸ்கிருத, ஹிந்தி மற்றும் பிற மொழிச் சொற்கள் அல்லது பிற மொழிக் கலாச்சாரத்தால் வந்த சேர்ப்புகள் இல்லையா ? என்றாலும், அனைத்து மொழிக்குமே தாய் ‘நம் ஆதி மொழி’ தமிழ் தான் என்பதிலும் எண்ணற்றோருக்கு உலகளவில் மாற்றுக் கருத்தில்லையே.
 
எனவே இதலாம் தமிழுக்கு பிறமொழிகளிடமிருந்து வந்துள்ளது என்பதை விட, தமிழிலிருந்து தான் பிற மொழிகள் வந்துள்ளன என்பதை உலகமே இதோ மெல்ல மெல்ல ஏற்று வருகிறது. இவ்வருட கனடா ஜப்பான் லண்டன் அமெரிக்கா வளைகுடா நாடுகள் என உலகளாவிய பல பொங்கல் தினக் கொண்டாட்டங்களும் அதற்கொரு சான்று.
 
என்றாலும் குழந்தைகளுக்கு பெயரிடுகையில், விளக்கமளிக்க அவசியமற்றவாறு தனித்தமிழில் மிக அழகாக எவ்வித சார்புமற்று வைக்கலாம். வெண்ணிலா, அறிவு, செல்வன், மதிநிறை, குறள், அருவி, மல்லி.. என்றெல்லாம்.
 
வெள்ளைக்காரர்கள் இப்படித்தான் அவர்கள் மொழிக்கு நிறைவாக, ஸ்டவ், ஸ்ட்ரீட், ட்ரீ, ஸ்டீல், கேவ், மூன், கேட், ஃபிஷ், ஜாஸ்மின், காட் என்றெல்லாம் வைக்கிறார்கள்.
 
நாம் கூட முன்பு இப்படியெல்லாம் வைத்திருந்தோம்; சிவப்பு, செவளை, கருப்பு, தேனு, அடுப்பு, பறி, சூரியன், சந்திரன் என்றெல்லாம் நிறைவாக நம் சொல்லினிக்க மொழியினிக்க வைத்திருந்தோம்.
 
ஏன்னா பெயர் என்புது ஒருவரை அழைக்க, குறிப்பிட என்றாலும் வாழ்நாள் முழுவதும் வெற்றி வெற்றி என்று அழைப்பதொரு போற்றுதலும் இல்லையா? தாத்தா போல வரவேண்டும், பாட்டி போல இருக்க வேண்டும், சூரியனைப்பொல ஒளிர வேண்டும், அருவி போல நிறைய வேண்டும் என பலவாறு எண்ணற்ற மேற்கோள்கள், எதிர்ப்பார்ப்புகள், நன்னெறி கொண்ட சிந்தனைகள், மொழிச் சீர் கொண்ட சொற்கள், பழவகைகள், தவிர நேர்மறை எண்ணங்கள் புக, வர, வளர என பல ஆழப் பார்வை பெயர் வைக்கையில் உள்நிறைவதுண்டு.
 
இடையே கூட ஒரு குழந்தைக்கு ‘மதிநிறைச் செல்வன்’ என்று வைத்தோம், அவர்கள் வீட்டில் மதி என்றழைக்கிறார்கள், அழைக்க ஏதுவாக இருக்குமென்று.
 
அப்படி மதி, குயில், அகில், முகில், குறல், வெள்ளி, வாணி, அருள், மணி, சுடர், பாரி, ஓரி, நீதி, கொடை, தனம், அன்பு, நதி, மணி, முத்து, மரகதம், பவளம், குழலி, எழிலி, குறளி, வெண்பா என எண்ணற்ற அழகிய தமிழ் சொற்கள் பெயர்கள் மிகச் சிறப்பாக நம்மிடையே உண்டு அவைகளையெல்லாம் நாம் பார்த்து பார்த்து வைத்து பழக பழக மேலுள்ள கலப்புவகைப் பெயர்களின் மீதான ஆசை தானே ஒழியும். பின் பழக்கமும் அங்ஙனம் மெல்ல மாறிவிடும்.
 
பிறமொழி புகுதலை தடுத்து நிறுத்துகையில் தான் நம் மொழியின் வளம் மிகப் பெருகும். இது நமது தமிழுக்கென்று மட்டுமல்ல அவரவர் தாய்மொழிக்கும் பொருந்தும்.
 
வெறுமனே, ஒரு எண்ண பறிமாற்றம் தானே மொழி என்றெண்ணக்கூடாது. தகவலறிவிக்கத் தானே என்று விட்டுவிடலாகாது தமிழை நம்மால். மொழி தான் நிலத்தை பிரிக்கிறது என்பார் ஐயா கவிஞர் வைரமுத்து.
 
அங்ஙனம் நிலம் பிரிகையில் இனம் மாறிவிடுமோ எனும் நெடிய பதட்டம் இருக்கிறது. சான்றுகளை நாம் பல மாநிலப் பிரிவுகளின் வழியே கண்டுதான் வருகிறோம். அன்று நாம் சேர்ந்து கட்டிய நதியிலிருந்து வரும் தண்ணீரின்று மொழிவாரியாக பிரிக்கப்படுகிறது.
 
ஆக, இனம் மாறிக்கொண்டால் பழக்கவழக்கங்கள் சிதையும். அல்லாது, வெற்றிக் குவிப்புகள் இடம் மாறிவிடும். வரலாறு பிழையாக பிழையாக பேசப் புறப்பட்டு விடுவர் பலர். எண்ணற்ற குழப்பங்கள் மொழி திரிவதால் காலமாற்றங்களிடையே நிகழ்ந்துவிடும்.
 
எனவே மொழிமீது அக்கறை கொள்ளுங்கள். அவரவர் மொழிமீது அவரவர் அக்கறை கொள்ளுங்கள். தெலுங்கு பேச சந்தர்ப்பமோ, ஹிந்தி பேச சூழலோ, ஆங்கிலம் பேச கட்டாயமோ இருப்பின் அங்கே கசடற பேசுவோம். பேச பயிற்சி எடுப்போம்.
 
பல மொழி கற்றுக்கொள்வது பல மனிதர்களை புரிய அணுக ஏற்க மறுக்க வாதிட சொல்லித்தர வணிகம் செய்ய தேவைப்படும். பிற மொழிகளை கற்றல் என்பது திறனைக் கூட்டும். அவர்களின் பண்பாடு, வரலாறு உயர் குறிப்புகள் என அனைத்தையும் அறியலாம் தவறில்லை.
 
ஆனால் எவ்வாறு அம்மொழிகளைக் கற்று மிக நேர்த்தியாகப் பேசுகிறோமோ; அங்ஙனம் நம் மொழியையும் அதன் செழுமையோடு பேசுவதும் உச்சரிப்பதும் எழுதுவதும் பகிர்வதும் இன்றியமையாத ஒன்றாகும். எம்மொழியும் செறிவோடு பேசுகையில் கேட்கையில் அழகு தாம்.
 
ஆயினும் நமக்கு, நமது தமிழ் மிகச் சிறப்பான ஒரு மொழியாகும். மூப்பு நிறைந்த நமது மொழியை பிற மொழிகளைக் கலந்து சிதைப்பது நல்ல அறிவன்று. நீங்களே அதை தனித்து தமிழில் பேச பேச முற்றிலும் உணர்வீர்கள்.
 
எனவே முதலில் நேரம் சொல்வதில், வழி சொல்வதில், பெயரிடுவதில், தொழில் துவங்குவதிலிருந்து துவங்கி மிக இயல்பாய் நம் எளிய தமிழில் பேசிப் பழகுங்கங்கள். குட்மார்னிங், சாரி, தேங்க்யூ, சன்டே மன்டே, டுமாரோ வில் சீ, பை த பை, பட்(டு), நோ, யெஸ், லெப்ட்ல போ, ரைட்ல போ, ஸ்டாப், டேஸ்ட்டி போன்ற அனைத்து சொல்லாடல்களையும் தூக்கி குப்பையில் எறியுங்கள். இவைகள் தான் இன்றைய முழுச் சான்றுகள் நாம் நமது அழகு தமிழை எவ்வாறு சிதைத்துவைத்துள்ளோம் என்பதற்கு.
 
எனவே அங்கிருந்து துவங்கி எங்கும் நிறைந்த மொழி யெம் தமிழை ஒரு தமிழரின் மரபு அறிய, மறம் உணர்த்த, மாண்பு நிலைக்க தூக்கி பிடித்திருப்போம். தவறில்லை. மெல்ல மெல்ல வெறியின்றி குழப்பம் விடுத்து தெள்ளு தமிழில் பேசி நமக்குள் நாம் மகிழ்வோமே உறவுகளே.
 
தவறாக எண்ணாதீர்கள், இதலாம் என் அறிவிற்கு பட்டது. எல்லாம் சரியென்றில்லை. பிற கருத்துக்களும் அமையலாம். அவரவர் கருத்தை நான் ஏற்க தயார் எனினும் தமிழ் நம் மூலம் என்பதை எல்லோருமே அறிகிறோம், பிறகதை அழகுற பேசுவதற்கு, பெயர் சூட்டுவதற்கு தமிழை எப்போதும் நம் இனியதொரு அடையாளமாக வைத்திருப்பதற்கு தயங்குவானேன்.
 
குறைந்த பட்சம் வீட்டில் பிறமொழி கலப்பின்றி பேச முயலுங்கள். நண்பர்களோடு உறவினர்களோடு அக்கம்பக்கம் பழகுகையில் தூய தமிழ்பேசி பழகுங்கள். குழந்தைகள் நம்மிடம் பேசுகையில், குழந்தைகளிடம் நாம் பேசுகையில், குழந்தைகள் பிறரிடம் பேசிப் புழங்குகையில் பிறமொழி கலவாமல் பேசச் சொல்லிக்கொடுங்கள்.

குழந்தைகள் நம் வரம். தமிழ் அவர்களுக்கு நாம் தரும் பெரிய வரம். அதை உடைக்காது தருவோமே? எனக்கு நம்பிக்கையுண்டு; இப்போதெல்லாம் நம் மக்கள் மிக அறிவாக செறிவாக பாரம்பரியம் கெடாது வாழத்துவங்கி விட்டனர். எனவே தமிழையும் அழகாக உணர்வோடு சேர்த்து கலப்பின்றி பேசி மகிழ்வரென்று எனக்கு பெரிய நம்பிக்கையுண்டு.

என்றாலும் ஒன்று உண்மை. மொழி சார்ந்து நாமெல்லாம் சிந்திக்க பழகிவிட்டோம். இனி; நம் காதுகளில் பேசக்கேட்கும் பேசப்படும் தமிழும் மேலும் இனித்துவிடும் என்பது சத்தியம்.
 
அதற்கு நன்றி. வணக்கம். வாழ்க!!
 
வித்யாசாகர்
 
குறிப்பு: நீ முதல்ல வித்யாசாகர்ன்ற பெயரை தமிழ்ல வையிடான்னு திட்டிடாதீங்க. ஒன்று; வித்யா என்பது அன்று என் இறந்த தங்கையின் பெயர். அதனால் இன்று எனது மகளின் பெயர். எனவே அஃ தென் பெயரும் கூட.
 
எல்லாவற்றையும் விட, அறிவுக்கடல்னு தமிழில் வைத்தால் மிக அதீதமாகிவிடலாம். நான் கடல் அல்ல; நீங்களெல்லாம் கலந்திருக்கும் கடலின் ஒரு துளி..🌿

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்!, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s