தாய்நாடு, கடலம்மா, அன்னை வயல், தமிழன்னை, என் தாய்மண் என எச்செயல் காணினும் உலகெங்கும், குறிப்பாக, தமிழரிடத்தில் எல்லா உயர்சக்திகளுமே பெண்களைச் சார்ந்திருப்பதைக் காண்கிறோம். சக்தி எனும் ஒன்றில்லையேல் உள்ளே சீவன் என்ற ஒன்றும் இல்லை. அதுபோலத்தான் பெண்கள் எனும் ஒரு பிறப்பில்லையேல் இப்பிரபஞ்சத்தில் வளர்ச்சி ஆக்கம் பரிணாமம் எனும் பல சொற்கள் செயலிழந்துப் போயிருக்கும். அல்லது அதுபோன்ற நிகழ்வு அல்லது ஆற்றல் என ஏதுமே இம்மண்ணில் நிலைத்திருந்திருக்காது.
நம் அனைவரின் உயிராக, செயலாக, நம் பிறந்ததன் ஆதிமூலமாக நம்மில் அனைத்துமே பெண் பெண் பெண்ணாக மட்டுமே இருக்கக் காண்கிறோம். ஆயினும், அந்தப் பெண்மையை எத்தனைப்பேர் நாம் உண்மையாக மதிக்கிறோம் என்பதே எனது கேள்வி.
உண்மையில் பெண்களை மதிக்கிறோம் என்போர் சற்று கவனமாக காது கொடுங்கள். அங்ஙனம் நாம் பெண்மையை அன்றுதொட்டே தொடர்ந்து மதிக்கிறோம் எனில் பிறகு ஏன் நமக்கு அவ்வைக்குப்பின் வேறொரு மூதாட்டி தமிழுக்கு கிடைக்கவில்லை? வேலுநாச்சியளுக்குப் பின் ஒரு வீரத் தமிழச்சி பெயரில்லையே வரலாற்றில் ஏன் ? ஐஸ்வர்யா தாண்டி ஒரு பேரழகி இன்னும் பரவலாக பேசப்படவில்லையே ஏன் ?
கல்பனாவிற்குப் பின் ஒரு தேசம் காப்பவள் இல்லை, இந்திராகாந்திக்கு நேர் என இதுவரை நம்மிடம் யாருமே பெண்கள் இல்லையா ? வெறும் அன்றைய நாளிலிருந்தே அன்றிருந்தவர்களை பெயர்க்காட்டி பெயர்க்காட்டி வாழ்ந்துவிட்டு நம் பெண்களை வெறும் கல்லூரிக்கு படிக்கவும் பிறகு வேலைக்கு சம்பாதிக்கவும் மட்டுமே அனுப்பிவிட்டால் போதுமா?
உடனே வரிந்துகட்டிக்கொண்டு வந்தது நாம் வெகு சிலரின் பெயரை மீண்டும் முன்வைக்க இயலும். அது எனக்கும் தெரிகிறது, பெண்கள் வரமால் போராடாமல் வெல்லாமல் ஒன்றுமில்லை, ஆனால் அந்த வெற்றியானது போதுமானதா என்றொரு சராசரி அளவினை எடுத்துப்பார்த்தால் அது போதுமானதாக இல்லை என்பதையே என் ஆய்வு சொல்கிறது.
காரணத்தை வேறெங்குமெல்லாம் சென்று தேடாதீர்கள் தோழர்களே, நாம் நம்முடைய வீடுகளில் முதலாக என்ன பெரிய மாற்றங்களை இதுவரை ஏற்படுத்திவிட்டோம்? என்னைக்கேட்டால் மாற்றம் என்றாலும் சரி, சீர்திருத்தம் என்றாலும் சரி முதலில் அது தன்னிலிருந்து துவங்கவேண்டும். தனது வீட்டிலிருந்து ஆரம்பமாக வேண்டும்.
இதுவரை அவரவர் அவரவருடைய வீட்டிலுள்ள நமது அம்மா, மனைவி, மருமகள், அக்கா, தங்கை தவிர கூடுதலாக மகளை தவிர, தோழி, உற்றார் உறவினர் என எல்லோரையும் ஆராய்ந்துப்பார்த்தால் இதுவரை நம்மோடுள்ள எத்தனைப்பேரின் திறமையைப் பற்றி நாம் முன்னெடுத்துவர முறையாக சிந்தித்திருக்கிறோம்? எத்தனைப்பேரை நாம் அவர்களின் திறன் கண்டு ஊக்குவித்திருக்கிறோம்?
அவர்களுடைய வீரம், கலை, கல்வி, லட்சியம், காதல், கோபம், உணர்ச்சி பற்றியெல்லாம் அலசி கேட்டிருப்போமா? கவலைப்பட்டிருப்போமா ? அவர்களின் பிடித்தது பிடிக்காதது பற்றியாவது முழுமையாக நாம் அறிந்து வைத்துள்ளோமா என்று கேட்டால்; எனக்குத் தெரிந்தவரை எல்லோருமே முழுமையாக இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்கும்.
இருப்பினும் விதிவிலக்காக ஆங்காங்கே முயன்றவர்கள் செய்தவர்கள் என சிலர் இருக்கலாம், நமக்கு கண்முன் பாடமாக அவர்களும் நம்மோடு வாழலாம். அவர்கள் அப்படியே இருக்கட்டும். அவர்களை மனதார வணங்கிக்கொள்வோம். ஆயினும் அப்படியொரு எண்ணமேயற்ற, அதற்கும் எதிர்மைறையாக எழுந்துநின்று “பெண்களுக்கு ஏன் இதல்லாம் வீண் வேலை” என்று எண்ணுபவர்களும் எண்ணற்றோர் நம்மில் இருக்கிறார்கள் என்பதே எனது கவலை.
பெண்கள் வேலைக்கு போவதோ படிப்பதோ ஒரு பெரிய சாதனையில்லையே, அது வளர்ச்சியின் மாறுதலின் ஒரு இயல்பு தானே? அவசியம் உள்ளோர் படிப்பதும், படித்ததன் பொருட்டோ அல்லது தேவை கருதியோ பெண்கள் பணிக்குச் செல்ல துவங்கியிருப்பதும் அவர்களுக்கான உலகின் ஒரு சின்ன வாசலை திறந்துவைத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
என்றாலும் இன்னும் திறக்கப்படாத பல ஆசைச் சன்னல்கள் அவர்களிடையே ஏராளம் உண்டு. அவைகளைல்லாம் நாம் அறிந்துவைத்துக்கொள்ள துவங்கினால் உதாரணம் காட்ட இன்றும் நம்மிடையே பல பெண்மணிகள் வெற்றிகளோடு முன் நிற்பர் என்பது உறுதி.
பெண்களின் முன்னேற்றத்தை, திறன் பற்றி அறிதலைக் கண்டுகொள்ள பெரிய மாற்றமோ, கூடுதல் முயற்சியோ எல்லாம் வேண்டாம். சாதாரணமாக நம் அருகாமையில் உள்ள பெண்களை சற்று தனியே கவனித்திருங்கள். அவர்களுக்கும் வீரம் உண்டு, கோபம் உண்டு, மானம் உண்டு, கலை, கல்வி, நட்புபெருக்கம் என அணைத்தின்மீதும் பெருத்த ஆர்வமும் அக்கறையும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக; பிடுங்கி வெளியே எறிந்துவிட இயலாத பிள்ளைப்பேறு எனும் ஒற்றில்லா சகிப்புத்தன்மை பெண்களிடம் மட்டுமே உண்டு.
அத்தகைய கண்மணிகள் நலம்குறித்து நாம் சிந்திக்கவேண்டும். அவர்களின் விருப்பு, வெறுப்பு, ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை, மறுப்பு, ஒவ்வாமை, இயல்பு, கருத்து கூறல், என அணைத்தையுமே ஒரு தாய்மையின் ஈரத்தோடு, என்னெல்லாம் நமக்கு நம் தாய் தந்தாளோ அவைகளையெல்லாம் நன்றியின் பெருங் கணக்காக திருப்பித் தந்திடல் வேண்டும். அது ஒரு பிறப்பின் கடன் அல்ல, நம் வாழ்தலின் கடமை.
பெண் சாதனை, பெண் வெற்றி, பெண் ஈடுபாடு, பெண் முன்னேற்றம், பெண்களின் பெருந்தன்மை, பெண்களின் வாழ்வியல் கூறுகளின் வெற்றிக்கு ஒரு சான்று என பலவாறாக அவர்களின் நன்மை கருதி சிந்தித்தல் என்பதும் நமது வாழ்வின் அங்கமாக இயல்பாக நம்முள் ஊறிப்போயிருக்க வேண்டும்.
அவ்வாறு, பெண்கள் பற்றி எழுதுகையில்; என் கண்முன் ஒரு வானளவு தேவதையாக உயர்ந்துநிற்பவர் நம் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் செல்வி. மரிய தெரசா என்பவராவார். மொழிக்கு ஒரு மகளாகவும், தமிழுக்கு கிடைத்த பேராற்றலின் பெரும்பேறாகவும், பல மாணவச் செல்வங்களுக்கு ஆசிரியத் தாயாகவும் இருந்தவர் இவர் என்பதை எமது இலக்கியவுலகம் நன்கறிந்திடல் வேண்டும்.
நூற்றுக்கும் மேலாக பல நன்னூல்களை அவர் எழுதியதோடு, இதுவரை 121 விருதுகளையும் பெற்றுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட பல மாணாக்கர்கள் இவரது எழுத்தின் வழியே ஆய்வு மேற்கொண்டு பல உயர்மட்ட படிப்பிற்கான பட்டங்களைப் பெற்றுள்ளனர். 1984-லிலிருந்து, 2016-ஆம் ஆண்டுவரையென; ஏறத்தாழ முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆசிரியப்பணியை மேற்கொண்டுள்ளார் இப்பேராசிரியர்.
இவருடைய தந்தையின் பெயர் ரொபேர் சேழான். தாயின் பெயர் பிளான்ஷேத் அம்மையார். தாய்தந்தையர் இருவருமே கவிஞர்கள் என்பதும், கவிஞர் காரை மைந்தன் பேராசிரியர் மரிய தெராசா அவர்களின் உடன்பிறந்த தம்பி என்பதும் ‘ஒரு குடும்பமே நம் தமிழுக்கு ஆற்றும் பெருந்தொண்டினை கட்டியங் கட்டி கூறுகிறது.
பேராசிரியர் மரியா தெரசா அவர்கள் தான் தமிழை நேசித்த காரணத்தினாலும், எண்ணற்ற தமிழ்ப்பணி ஆற்றுவதில் பெருத்த ஈடுபாடு கொண்டிருந்ததாலும் இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. அது பற்றிக் கேட்கையில் எனக்கு குழந்தைகள் நூறு’ கடவுள் ஒன்று’ என்கிறார். அதாவது தான் எழுதிய புத்தகங்களை குழந்தைகள் என்றும், தமிழை தனது கடவுள் என்றும் போற்றி வாழ்கிறார். இவருக்கு உடன் பிறந்த ஒரு சகோதரியும் உண்டு.
காரைக்காலில் 1955-ஆம் வருடம், ஜூன் 22 -ஆம் நாள் பிறந்துள்ள பேராசிரியர் மரிய தெராசா அவர்கள் இன்னும் பல நற்பேறுகளைப் பெற்று தமிழுக்கெனவும் தாய்மை உயர்விற்கெனவும் பல உயர்ப்புகழோடும் மகிழ்வோடும் நிறைவோடும் பல்லாண்டு பல்லாண்டு சிறந்து வாழ்கவென வாழ்த்தி உள்ளூர நிறைவடைகிறேன்.
குறைந்தளவு, இங்கனம் தேடிப்பிடித்து நம்மோடுள்ள பெருமைக்குரிய பெண்மணிகளை உலகின்முன் கொண்டுவந்து நிறுத்தத்துவங்கினால், அதன் ஊக்கம்கொண்டு இன்னும் பல பெண்மணியர் தனது திறமைக்கு நேரெதிரே சாட்சியாக வாழுங்கால சாதனைப் பெண்மணிகளாக மனதளவில் வெளிவந்து இச்சமுதாயத்தின் முன்னேற்றத்தோடு தாமுமாக உயர்ந்துநிற்பர் என்பதில் ஆச்சர்யமில்லை.
வெறும் ஆடையில் நேர்கொண்டோ, பழக்கவழக்கங்களை ஆணுக்கு சமமாக செய்தோ அல்ல நம் பெண்ணியம் போற்றல் என்பது. அவர்களை தனது தாயிலிருந்து மகளிலிருந்து தோழி மனைவி என உறவுகள் தோறும் மதித்து, அவர்களின் வீரிய சிந்தனைகள், பேராற்றல், கலையார்வம், வீரம் மதித்தல், ஒழுங்கு ஏற்றல், இயல்பை இயல்புகளாக புரிதல், உயிர்வரை நேசித்தல், பெண்மையை தாய்மைக்கு ஈடாக தலைவரைப் போற்றிக் காத்தலென; அவர்களின் மரபுசார் அணைத்தையும் மனிதநேயத்திற்கு சமமாக வெளிக்கொண்டு வர முயல்வதே நம் பெண்ணிய முன்னேற்றத்திற்கான கடமை என்று உணர்கிறேன், நிறைகிறேன்.
வித்யாசாகர்