இன்று மாலை இலண்டன் புறப்படுகிறேன் உறவுகளே. நாளை இந்நேரம் இங்கிலாந்து மண்ணில் எனைச் சுமந்து பறந்த விமானம் தரையிறங்கியிருக்கும்.
ILM (1947) மற்றும் NCFE பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பயணப்படுமொரு அங்கிகாரம் பெற்ற ஒரு கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட படிப்பு மற்றும் பயிற்சி சம்பந்தமாகவும், அதேவேளை ஒன்பதாம் திகதியன்று பேருயர் “உலக தமிழ்க் கூட்டமைப்பு” இங்கிலாந்தின் (பார்லிமென்ட்) சட்டமன்றத்தில் வைத்து உலகளவு பேசப்படும் வகையில் பல உழைப்பால் உயர்ந்த தொழிலதிபர்களுக்கும் திறத்தால் மிளிரும் திறமையாளர்களுக்கும் “சாதனையாளர் விருது” வழங்கும் விழாவை சற்றேறக்குறைய 27 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அதில், முதன்முறையாக தமிழுக்கென்று ஒரு விருதினை இணைத்துள்ளனர் நமது இலண்டன் வாழ் தமிழ்பெரும் மக்கள். அவ்விருதினை இறையருளாலும் உங்களனைவரின் வாழ்த்தினாலும் (வரும் ஒன்பதாம் திகதியன்று) நான் பெற்றுக்கொள்ள தோர்வுசெய்யப் பட்டுள்ளது.
உண்மையிலேயே கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பார்கள். நான் சொல்கிறேன் பல நன்னிலைகளை உயர் நிலைகளை முன்னேற்றத்தை எதிர்பாருங்கள், பெரிது பெரிதாக எண்ணுங்கள், வானளவு பல வெற்றிகளை அடைவது குறித்து ஆலோசித்துக்கொண்டே இருங்கள், பெரிதாக உலகளவு உயர்ந்துவிட முழுதாய் தன்னம்பிக்கையோடும் முயற்சியாலும் முடியுமென எண்ணம் கொள்ளுங்கள், ஆனால் –
அதை எதன்பொருட்டும் எதையும் இது தான் இப்படித்தான் இதற்காகத்தான் என பிரதிபலன் பார்த்து பார்த்து மட்டும் நல்லதெதையும் செய்துவிடாதீர்கள். நல்லது செய்வது நல்லவிதமாக நடப்பது நான்கு பேருக்கு உதவுவது அறம் சுமப்பது எல்லாம் அறிவின் கடன், மானுடப் பண்பு, தனி மனித சிறப்போ உயர்வோ அல்ல, அது தான் நம்முடைய இயல்பான அழகு; ஒருங்கு.
எனவே ஆசைபடுவோம் நல்லதை எண்ணுவோம், சூழல் அமைகையில் செயலோடு ஒத்துபோவோம். நான் கூட அப்படித்தான்; ஏதோ காலம் போகிறது, நானும் போகிறேன்.
ஒரு விவசாயி தான் விதைக்கும் நிலமறிந்து விதைப்பதைப்போல எமது மண்ணறிந்து மக்களறிந்து அறத்தையும் அன்பின் பெருநிலத்தில் நேர்மையின் நல்விதைகளையும் எழுத்தினால் ஆன அறப்பண்புகளையும் விதைத்துக்கொண்டே வாழ்வைக் கடக்கிறேன்; அது என்னை அமெரிக்கா லண்டன், சிங்கப்பூர் மலேசியா, கத்தார் ஓமன், சவுதி பஹ்ரைன், துபாய் சிறிலங்கா, ஜெர்மன் பிரான்ஸ், ஜப்பான் இந்தோனேசியா, சுவிஸ் ஆஸ்திரேலியா என உலகநாடுகள்தோறும் மொழிவழியேவும் பண்பின் வழியேவும் பல சமூகப் பணி சார்ந்தும் தொழில் சார்ந்தும் பயணப்பட வைக்கிறது.
ஆயினும், என்ன தான் நாம் வளர்ந்தாலும், பயணப்படுவது உழைப்பினால் சுலபம் என்றாலும், நமை மேலேற்றிவிட நல்லதொரு ஏனியைப் போல பல அன்பு உள்ளங்கள், அரும் பல மனிதர்கள், இதயம் நிறைந்த நண்பர்கள் இவ்வுலகம் தோறும் நாடு கடந்து சாதி மதம் கடந்து மனிதத்தின் புனிதம் ஏத்தி ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு எனது சிரந்தாழ்ந்த முழு நன்றி.
அவ்விதத்தில், குறிப்பாக இவ்விருதினை “உங்கள் தமிழுக்கென்று வழங்குகிறோம் வித்யா” தமிழ் தான் உங்கள் பலமென்ற சொல்லிச் சொல்லி என்னை எப்போதுமே ஆராதித்தும், இவ்விருதிற்கு என்னை பரிந்துரையும் செய்து, எந்தன் தமிழ்ப்பணிக்கு நல்லாதரவு நல்கிய ஐயா திரு. ஜேகப் ரவிபாலன் (WTO) அவர்களுக்கு நன்றி. திரு. ஜேகப் ரவிபாலன் அவர்களை எனக்கு அறிமுகமாக்கித்தந்த எழுமின் (TheRise) குடும்பத்திற்கு நன்றி. அதுபோல் “வாழ்வை செதுக்கும் ஒரு நிமிடம்” எனும் ஒரு நல்ல படைப்பினை எனக்கருளிய இறைச் சக்திக்கு, இயற்கைக்கும் நன்றி.
உண்மையில் இவ்வுலகு மிக அழகுங்க. இந்த உலகிற்கு நிறமில்லை மணமில்லை. நாமெப்படி பார்க்கிறோமோ அப்படி தெரிகிறது, நாமெதைக் கேட்டு எண்ணி நுகர்கிறோமோ அப்படி மணக்கிறது. முன்னால் போனால் முன்னால் நின்று வரவேற்கவும், பின்னால் சாய்ந்தால் நமை விழாது தாங்கிக் கொள்ளவும் இந்த உலகும் இயற்கையும் நமை அறிவுக்கண் திறந்து மிக ஆழமாக கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கிறது.
அத்தகு அறிவுக் கண்ணுள் மிக கம்பீரமாகத் தெரியும் உலகளாவிய பலருள் ஒருவராக இருந்து தனது கடும் உழைப்பாலும் நம்பிக்கையினாலும் வளர்ந்து இன்று ஏறக்குறைய உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு தொழிலாலும் பணத்தாலும் உதவி புரிந்து ‘எமது குவைத் மக்களின்’ தங்கக் கொடையாளராக விளங்கும் டிவிஎஸ் (TVS) குழுமத்தின் நிறுவனர், தொழிலதிபர் ஜனாப் திரு. ஐதர் அலி அவர்களுக்கும் இந்த சட்டமன்ற (பார்லிமெண்ட்) விழா அரங்கில் “தொழில்சார் சாதனையாளர் விருது” வழங்கி இலண்டனில் “உலக தமிழ் அமைப்பு” (WTO) பெருமை செய்யவுள்ளது.
கிட்டதட்ட ஏழெட்டு இங்கிலாந்து மந்திரிகளின் முன்னிலையில் உழைப்பாலும் திறத்தாலும் இம்மண்ணிற்கு உழைத்த முன்னேறிய பத்திற்கும் மேற்பட்டோரை அழைத்து விருதளித்து மதிப்பு கூட்ட உலகறியாத பல சேவை மனிதர்களை எல்லாம் திரட்டி பெருவிழா எடுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொள்வது குறித்து எனக்கு பெரு மகிழ்ச்சியும், அனைவருக்குமான நன்றியும் வணக்கமும் உரித்தாகும் தோழர்களே.
வரும் பத்தாம் திகதி வரை இன்னும் ஒரு வாரம் இலண்டனில், கிரைடனில் இருப்பேன். பல வேலைகளும் எண்ணற்ற குறிக்கோள்களோடும் மேற்கொண்டுள்ள ஏழே ஏழு நாட்களுக்கான பயணமிது. அதை வரமாக்கி தரும் பொருப்பு இந்த நிலம் நீர் காற்று வானம் வெளிச்சம் உடன் எம் இலண்டன் தமிழ்மக்கள் இறையருள் எல்லோரோடும் உண்டு.
சந்திப்போம் உறவுகளே. நலமோடிருங்கள். வளமோடு மகிழ்வாக வாழ முயலுங்கள். எப்போதும் உள்ளத்துள் மகிழ்ச்சியும் நிறைவும் விடுதலை உணர்வுமாய் இருக்க எண்ணுங்கள். இயன்றளவு ஒருவருக்கொருவர் எதுகுறித்தும் உதவுங்கள். உதவுவது உங்களை அக்கறை மிக்கவராகக் காட்டும். அக்கறை அன்பைக் கூட்டும். அன்பு கோடுகளை அகற்றும். கோடுகள்று மேல்கீழ் இல்லாது உள்ளச் சமநிலையோடு வாழ்க எம் உறவுகள், வாழ்க எம் பேரன்பு மனிதர்கள், வளம் பெருகி மகிழ்ந்திருக்கட்டும் இம் மண், இவ்வுலகு, இப் பெருநிலம்; அனைத்துயிர்களோடும்…
வித்யாசாகர்