முதல் நாள் தோழி எழுத்தாளர் தமிழ்திரு. நிலா அவர்களின் வீட்டில் சந்திப்பு, அதோடு தொடர்ந்து எனது தொழில்வழி பயிற்சி லண்டனில், ஊடே லண்டன் தமிழ் ரேடியோவினுடைய பமுக தொலைக்காட்சி நேர்காணல் மற்றும் லண்டன் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நேர்காணல் நான்கு நாட்கள் முடிந்து முதல் மக்கள் சந்திப்பு எட்டாம் திகதி லுவிசம் சிவன் கோயிலில் நடைபெற்றது.
கவிஞர் வள்ளி மகன் தெள்ளியூரான், ஐயா தமிழ்த்திரு. சச்சிதானந்தம், ஐயா தமிழ்த்திரு. கணேசன், எதிர்கால தமிழர் நலன் காக்க வளரும் நல்லிளைஞன் தம்பி பிரியகன் முரளிதரன், உயிரினிய சகோதரி தோழி பிறேமி எல்லோருமாய் ஈசனாய் இறைச் சக்தியைப் போற்றும் லுவீசம், இலண்டனில் தமிழ் பேசி, தமிழர் வாழ்வு நிலை குறித்து வாதிட்டு இலக்கியம் பகிர்ந்து இறைநிலை எடுத்துரைத்து இறுதியில் தீரா அன்புடன் பிரிய விடைப் பெறுகையில் எடுத்த படங்கள்.
என்னதான் வயிற்றுப் பசிக்கு வேண்டி பயணப்பட்டாலும் எக்காலும் என் தமிழ் மக்கள் தனது வாழ்வின் பண்பாடு, விடுதலை, உறவுகளின் மகோன்னதம், சமகால வாழ்வியலின் தாழ்நிலைக் கூறுகளிலிருந்து வெளி வந்து எதிர் காலம் குறித்துச் சிந்தித்தல், தன்னிலையை உயர்த்தி பிறரைக் கூட்டல், சமகாலத்தை வரலாற்று விழுமியங்களாக மாற்ற உழைத்தலென சற்றும் குறையாத பல உயர் பண்புகளூடே வாழ்வதில் பயணிப்பதில் வல்லுனர்கள் நம் தமிழர்கள் என்பதை இவ்விடமும் கண்டேன்.
தமிழர்கள் கூடி ஆலயம் கட்டுவது, தமிழ் பேசி மொழியுணர்வை வளர்த்துக் கொள்வது, எங்கோ நம் மண்ணில் ஒரு இடர் எனில் இங்கிருந்து உதவுவது என எதையும் விட்டுவிடாது உதவுவது நம் இயல்பு தான் என்றாலும் இந்த இங்கிலாந்து நாட்டில் ஒரு தமிழர் திரு. ஜாஹிர் ஹுசைன் அவர்கள் முயன்று பணம் திரட்டி லண்டன் குரொய்டான் பகுதியில் 600 பேர் தொழுவும் வகையில் பணம் திரட்டி மசூதியைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
இப்படி ஆங்காங்கே நம் தமிழர் பெரிதாகவே வாழ்கின்றனர் எங்கும் என்றாலும் எனது வலியெல்லாம் எமது தாயகம் குறித்தே. இத்தனை அழகாக முறையாக பண்பெழிலோடு ஒரு தேசத்தைக் காண்கையில் எனது மண்ணை களவாடி இங்கே கோபுரம் கட்டியவர்களே எம் நாட்டை ஒழித்து விட்டீரே என்று வெள்ளையர் குறித்து மனம் பதறாமலுமில்லை.
நம் மண்ணில் தாயகத்தில் இன்னும் வறுமை அகன்ற பாடில்லை, சாதி வெறி ஒழிந்த நிலையில்லை, இன்னும் கிழிந்த கால்சட்டையில் தெரியும் ஓட்டை வீடுகளும், வழிப்பறி கொள்ளைகளும், பெண்களை அவமதிப்பதும், அரசியல் தரமில்லாததுமெல்லாம் எண்ணுகையில் பெருவலி மனதுள் கனத்துக்கொண்டு தானிருக்கிறது.
என்றாலும் எந்த ஒரு மாற்றமும் தான் ஒருவனாக நின்று நாம் அனைவரும் முன்னெடுக்காமல் வராது, மாறாது. என்று, தனி மனித ஒழுக்கம் பொதுநிலை அடைகிறதோ, உதவும் மனப்பான்மை பெருகி பகுத்துண்டு வாழ்கிறோமோ, சாதியும் மதமும் இன உணர்வும் கொண்டு எவரையும் பிரிவு காட்டாமல் தாழ்மை படுத்தாமல் வாழ்கிறோமோ, பெண்ணையும் ஆணையும் என்று நில்லாமல் திருநங்கைகள் வரை உணர்வு நசுங்காமல் மதித்து வாழ்ந்து அன்பின் பெருமித்த்தோடு என்று நடக்கிறோமோ அன்று நம் சமுதாயம் முழுதாக திருந்தும்.
தனக்கென்று மட்டும் பதுக்கிக்கொள்ளாத புரிதலை எல்லோருமாய் எப்போது ஒருமித்து கையிலெடுக்கிறோமோ; அன்றே நம் மண்ணிற்கு முழு விடிவும் சமநிலை மகிழ்வும் சாந்தியும் கிடைக்கும். எடுத்துக் கொடுத்து ஏழ்மையை ஒழிக்க எல்லோரும் திரள்கைநில் மட்டுமே ஒரு பெருவளர்ச்சி நம்மிடையும் உண்டாகும். உண்டாக வேண்டும், அதற்கு முயல்வோம், எண்ணம் கொள்வோம். உழைப்போம். நல் உணர்வோடு எல்லோருமே வாழ முயல்வோம்.
வாழ்க எம் தமிழ்பேசும் அயல் தேச உறவுகளும், உடன் வாழும் நாட்டினரும் சகோதர சகோதரிகளும்.. அன்பு உயிரெனப் பூத்த நண்பர்களும்..🌾
வித்யாசாகர்
Arumaiyana Padhivu…Venkat…
Nice Pictures….Vaazhga…Valarga….Endrum…
LikeLike
நன்றி தண்டபாணி..🙏🏼
LikeLike
Super…
On Tue, Sep 10, 2019 at 10:04 AM வித்யாசாகரின் எழுத்துப் பயணம் wrote:
> வித்யாசாகர் posted: “முதல் நாள் தோழி எழுத்தாளர் தமிழ்திரு. நிலா அவர்களின்
> வீட்டில் சந்திப்பு, அதோடு தொடர்ந்து எனது தொழில்வழி பயிற்சி லண்டனில், ஊடே
> லண்டன் தமிழ் ரேடியோவினுடைய பமுக தொலைக்காட்சி நேர்காணல் மற்றும் லண்டன் ஐபிசி
> தமிழ் தொலைக்காட்சியில் நேர்காணல் நான்கு நாட்கள் முடிந”
>
LikeLike
வாழ்க ஐயா..🤝
LikeLike