நம் தமிழர்களை நினைத்தால் எனக்கு எப்போதுமே பெருமை தான். ஆயிரம் குறைகள் நம்மிடையே இருந்தாலும், அவற்றை நம் பல்லாயிரக் கணக்கான நிறைகள் கடந்து வந்துவிடுவதாகவே நான் காண்கிறேன். என்னதான் இந்த உலகின் முன் நாம் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்தாலும் உலகெங்கிலும் பரவியிருக்கிறோம் எனும் நம்பிக்கையைத் தான் நம் தமிழர்கள் நமக்கு ஆண்டாண்டு காலமாய் அதிகம் கொடுத்து வருகின்றனர்.
இலண்டன் சென்றபோது கூட அதை உணர்ந்தேன்; நம் சென்னையில் காணும் அதே நிலை அங்கும் எங்கும் இருப்பதைக் கண்டேன். அதாவது ஒரு பெரிய வான் நிகர் கட்டிடமும் உள்ளே உடை மிஞ்சிய உற்சாக மனிதர்கள் மகிழ்வோடும் இருக்க, அருகே ஒரு குடிசைக்குள் பட்டினியாக உறங்கும் எளிய மனிதர்களும் ஆங்காங்கே இல்லாமலில்லை.
ஆனால், அவர்களைப் பற்றிய அக்கறையே இல்லாமல் எப்படி நம்மில் நிறையப்பேர் மிக இலகுவாக அவர்களை கடந்துவிடுகிறோமோ, அதுபோல் விண்ணுயர் எழிலான தொழிதிநுட்ப வளர்ச்சியும், இயற்கையின் கண்கவர் வளமும் இங்கிலாந்து நாடெங்கிலும் இருந்தாலும், அதனருகே நமது ஓட்டுவீடும், ஆங்காங்கே ஏழைக் குடிகளும், பல சாலைகளின் நெரிசல்களுக்கு இடையே ஒரு கையேந்தி மனிதரும் இல்லாமலில்லை.
ஆக, ஒரு உயர்வு தாழ்வு என்பது நம்மில் மட்டுமில்லை இந்த உலகெங்கிலும் இருக்கிறது. அவற்றைக் கடந்தும் நாம் தமிழரெனும் புள்ளியில் இன்றும் மனது ஒட்டி மொழியெனும் ஒரு புள்ளிக்குள் அக்கறையோடும் தமிழரெனும் பெருமிதத்தோடும் தான் இருக்கிறோம்.
கண்டிப்பாக எமது தமிழரை என்னால் ஒருக்காலும் குறையாகவோ அலட்சியமாகவோ தூக்கியெறிந்துப் பேசவோ சம்மதிப்பதேயில்லை, ஆனால் சற்று மேலும் நம்மை நாம் உயர்வுபடுத்திக்கொண்டால் அதன் பலன் இன்னும் பன்மடங்காக மாறி இவ்வுலக நன்மையை விரைவில் நம் கண்முன்னே கனிய அமைத்துத்தரும் என்பதென் கணிப்பாகும்.
யாரும் அதற்காக ஒரு படி மேலுள்ளோர், கீழே இறங்கவேண்டாம் சற்று குனிந்து கீழுள்ளோருக்கு ஒரு கை நம்பிக்கையை தரவேண்டும். அதுபோல், கீழில்லை, எனினும்; ஒரு படி மேலேறிட முயன்றிருப்போர் எட்டிப்பிடித்து அந்த மேலிருந்து வந்தக் கைதனை நன்றியோடு பற்றிக்கொள்ளலும் வேண்டும். இத்தனை நடந்துவிட்டால் போதும் நம்முள்ளே அந்த சமநிலை மகத்துவம் தானாக நிழழ்ந்துவிடும். எனக்கு உண்மையிலேயே நாம் உயர்ந்துவிடவேண்டும் எனும் ஆசையை விட தாழ்ந்துவிடக்கூடாது எனும் எண்ணம் மிகச் செறிவாக நிறைவாக உள்ளது.
எனவே, பெரிதாக வளர்ந்து விடவேண்டும் எனும் வளத்தை விட; மண்ணில் களவும் திமிரும் பொய்யும் பகையும் சினமும் உண்டாக வாய்ப்பளிக்கும் ஏழ்மை நிலையை போக்கி இல்லாமையை அகற்றவே அதிக அக்கறையுண்டு.
எல்லோரும் சட்டை போட்டுக்கொள்ளவேண்டும் என்பதைவிட, யாரும் வெறுந்தோலோடு இருப்பதாய் எண்ணி வருந்திவிடக்கூடாது என்பதில் கவனத்தைக் கொள்ளுங்கள் உறவுகளே. குறைந்த பட்சம் அவர்களை தரம் பிரித்து ஏதுமற்றவர்கள் என்று எண்ணிக்கொள்ளாத அளவிலாவது நாம் நம்முடைய மனிதாபிமானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எனவே, அன்பு மிகையடைய நம்மில் ஒற்றுமையும் நெருக்கமும் நேர்மையும் வேண்டும், அதேநேரம், அந்த நேர்மையோடும் ஒற்றுமையோடும் நாம் முதலில் ஒருவரை ஒருவர் முழுதாய் அல்ல சிறிதேனும் நட்போடு சந்தித்துக்கொள்ள வேண்டும். அந்த சந்திப்பில் நெருக்கத்தில் கூடும் பலத்தில் ஒரு வெகுவான நம்பிக்கையும் நாளைய மாற்றத்திற்கு அடிகோலாவும் நம்மால் அதன்பின் அழகாக தந்துவிடமுடியும்.
என் தமிழ் மக்கள்; பரிவு, அக்கறை, இரக்கம், ஈகை, நம்பிக்கை, நாணயம், அறம், வீரம், பண்பு, ஒழுக்கம், மரபு வழுவாது நடத்தல், திறமை, தனித்திறன், இலக்கியம், மருத்துவம், கலை, ஆன்மிகம், கற்றல், ஏற்றல், வெல்லல் என அத்தனையிலும் தனித்தனியே சரிநிகர் உயர்வுடைய பெருமக்கள் என்பதில் எள்ளளவும் இந்த உலகிற்கு சந்தேகமேயில்லை. நமக்கும் இல்லை. எனக்குத் தெரிந்து இவற்றை நான் கண்கூடாக உலகெங்கிலும் காணும் வகையில் பெரிதாகவே எம் தமிழரை மதிக்கிறேன். மனதார நம்புகிறேன்.
நம்மால் இவ்வுலகை அரண் போல வளைந்து காத்து அறத்தோடு மனதால் தாய்மைப் பொங்க அணைத்துக்கொள்ள முடியும் என்றொரு பெருநம்பிக்கையுண்டு. கொஞ்சம் நாம் மேலெழுந்து வரும் அழகோடு கீழுள்ள மனிதரையும் பார்க்கத்துவங்கிவிட்டால் போதும், சமத்துவமும் சம வளமும் நம்முள் தானே நிகழ்ந்துவிடும். அதன்பின் அங்கிருந்து வருமொரு தலைவனின் உயர்பண்புகளால் நமது அரசியலும் மெத்த சீர்பட்டுவிடும்.
எனவே, இப்போதைக்கு நமக்குத் தேவை ஒன்றுகூடல். ஒன்றாக கூடி எல்லோரையும் சந்தித்து பேசி யார் உண்டோம் யார் உண்ணவில்லை, யார் பொருள் உள்ளோர் யார் ஏதுமற்றார், யாருக்கு பணி உண்டு யாருக்கு பணியில்லை, யார் நலம் யார் நலமில்லை என்றெல்லாம் விசாரித்து, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, நம் மண்ணிலோடு புரட்சியெல்லாம் இல்லை; ஒருவித மனித மாண்புதனை நிமிர்த்திவைக்கும் சமநிலைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல் இனி மிக அவசியம் என்பதை மிகத் தாழ்மையோடு உங்கள் முன் வைக்கிறேன்.
ஆக, அப்படியொரு ஏற்பாட்டைத்தான் இன்று உலகெங்கிலும் “எழுமின்-TheRise” எனும் தமிழ் அமைப்பு பெருமாற்றத்தைச் செய்து வருகிறது. நமது தமிழர்களால் அருட்தந்தை என்றுப் போற்றப்படும் தமிழறிஞர் ஐயா திரு. ஜகத்கஸ்பர் ராஜ் அவர்களின் சமுதாயக் கனவாக துளிர்விட்டு, எண்ணமது செயலாக மாறி, பல பெருமனிதர்களின் நற்பண்புகளால், உயர்வினால், ஒரு பெரு அமைப்பாக வளர்ந்து, பல கிளைகளாகப் பிரிந்து, பல மாநாட்டின் வழியே உலகமெலாம் விரைந்து நிரைந்து விரிந்து; எம் தமிழர்களை தொழில் வழியே இணைக்கும் பாலமாகவும், வளமதை எவர்க்கும் பெருக்கும் பலமாகவும், அறவழியே நின்று செயல்பட்டு வருகிறது.
அதனொரு கிளையை நேற்று எமது குவைத் மக்கள் ஒருசிலர் மட்டும் இயன்றளவில் கூடி ஒரு அமைப்பாக ஒன்றிணைந்து மிக கம்பீரமாக முதல் நிகழ்வைத் துவங்கினோம். ஆங்காங்கே தெரிந்தவர்களிடம் பேசி, தெரிந்தவர்களைப் பற்றி சொல்லி, இயலுமா என்றெல்லாம் யோசிக்காது முடியும் முயல்வோம் என்று மிக நம்பிக்கையோடு தனிமனித்ட லாபமோ எதிர்பார்ப்புமோ இன்றி அனைவரின் வளர்ச்சிக்கானவொரு அமைப்பாக எம்மை உருவாக்கிக்கொள்ள முதல் நிகழ்வை நேற்று துவங்கியுள்ளோம்.
முதல் படியே நமக்கு பெரு வெற்றிப்படியென நேற்று அமைந்தது. இனியும் மாதமாதம் தொடர்ந்து கூடுவோம் என்பதில் ஐயமில்லை. எமது தமிழர்க்கு தெளிவாக சரியாக இதைச் செய்தாலும் பிடிக்கும் எனும் நம்பிக்கையை இந்த குவைத் தமிழ்மக்களும் உலக தமிழர்களும் தந்து வருகின்றனர். எனவே இப்படியும் தொழில்குறித்தும் ஆங்காங்கே கூடுவோம். நிறைய வலியையும் வெற்றியையும் தோல்வியில் இருந்து மீள்வது பற்றியெல்லாமும் நல்லறம் பற்றியுமெல்லாம் நிறைய பேசுவோம்.
எமது வளத்தையும் ஒற்றுமையும் நல்உணர்வோடும் அறத்தின் செறிவோடும் அறிவின் திறத்தோடும் பெருக்குவோம். இம்மண், இவ்வுலகம் எம்மக்கள் என அனைத்துயிர் பற்றியும் சிந்திப்போம். எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்க இயன்றதைச் செய்வோம்.
இது ஒரு புரட்சியெல்லாம் இல்லை, இஃதொரு பயணம். நம்பிக்கையின் அறத்தின் பயணம், உழைப்பின் பயணம். வியர்வையின் வாசத்தில் இருக்கும் ஈகையின் நறுமணத்தை இப்புவனமெங்கும் பரப்பும் பயணம். இது இனி நமக்கான அறுவடைக் காலமும், விதைக்கும் காலமும் என்றெண்ணுக. எண்ணியது எண்ணியபடி நடக்கும்; வாருங்கள் விதைப்போம். வரும் தலைமுறைக்கு நல்லதையே கொடுப்போம்.
ஓங்கி நின்று நாம் குரல் தந்தால் உலகமே கேட்குமாமே; நாம் உயர்வாக நின்று அன்பிசைப்போம், அறத்தை மீட்டுவோம், உடன் அது நமக்கு தேவையான அனைத்தையும் உலகளவில் தரும்.
இந்நிகழ்வில் பங்குகொண்டோர் அனைவருக்கும் நன்றி. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் ஒரு பெருங்கூட்டமாக இனி மீண்டும் மீண்டும் இயன்றளவில் கூடுவோம். பொருளில்லார்க்கு இவ்வுலகில் என்று சொன்ன வள்ளுவனை வணங்கி; பொருள் சேர்ப்பது தனக்கில்லை, பிறர்க்கும் எனும் நம்பிக்கையை இந்த உலகின் மனதில் ஆழ விதைப்போம்.
“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது” என்கிறார் திருவள்ளுவர். வறுமைத் துன்பத்திற்கு நிகர்; வறுமைத் துன்பமொன்றே என்கிறார் அய்யன். அந்த வறுமையை உலகெங்கிலும் இருந்து அகற்ற முற்படுவோம், அதற்கான முயற்சி நம்மிலிருந்து, நமது தமிழரலிருந்தே மீண்டும் துவங்கட்டும். ஆயுதமாய் நம் அறத்தையும் மனிதத்தையும் கையில் கொண்டு நடப்போம், உலகம் ஒரு நாள் நம்மை நிச்சயம் புரிந்து நிமிர்ந்துப் பார்க்கும். நன்றி. வணக்கம்!!
வித்யாசாகர்