
மிதிவண்டியில்
அரை பெடல் அடித்த
நாட்களவை..
எங்களின் கனவுகளையும்
வாழ்வின் ரசனைகளையும்
அப்பாவின் கண்களின் வழியே கண்ட நாட்களது;
மதில்சுவற்றில் எட்டி செம்பருத்தியையும்
கறிவேப்பிலையையும் தின்றுவிட்டு
தெருநடுவில் சாணம்போட்டுப் போகும் மாடுகளை
மந்தையாக விரட்டிவிடும் அப்பா தான்
எங்களுக்கெல்லாம் மருது பாண்டியும்
மதுரை வீரனும்;
அப்பாவோடு இருந்த நாட்கள்
உண்மையிலேயே நந்தவன நாட்கள்,
அவர் பூப்பது பற்றி பேசினால்
கேட்கையில் நாசிக்குள் மணக்கும்,
அவர் பார்ப்பது பற்றி பேசினால்
நினைக்கையில் நெஞ்சுக்குள் இனிக்கும்
அப்பாவிற்கு மட்டுமே தெரிந்த மந்திரமது;
அதெப்படியோ தெரியவில்லை
கையெழுத்து போடத் தெரியாதவர் தான் என்றாலும்
எங்களின் தலையெழுத்தை
தெரிந்துவைத்திருந்தவர் அப்பா மட்டுந் தான்
அப்பாவொரு அறிவினுடைய வனம்
அன்பின் ஆழ்கடல்
அப்பா மட்டும் யாருக்கும் இறக்கவே கூடாது;
அந்த மீசை மாதிரி அழகு
அவர் தொப்பை போல விளையாட்டு
அவர் தோள்மேல தூக்கம்
அவர் கூட அமர்ந்து சாப்பாடு
அவர் நடக்கும் போது வீரம்
எங்களுக்கு ஒண்ணுன்னா துடிக்கும் துடிப்பு
அப்பப்பா.., அப்பாக்கள் எப்போதுமே
அப்பாக்கள் தான்;
அப்பாவிற்கு மட்டுந்தான்
நினைத்ததும் ஆயிரம் சிறகுகள் முளைக்கிறது,
அப்பாக்களால் மட்டுமே
ஆண்கள் எனும் தணல் உள்ளத்தே
நீர் வார்த்ததைப் போல் அணைகிறது,
பொதுவாகப் பெண்களுக்கு
அப்பா தான் முதல் தாய்,
ஆண்களுக்கு அப்பா தான் முதல் தோழன்;
சாமியைப் போல் அவர்
கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும்
மதித்தாலும் மதிக்கவிட்டாலும்
கேட்டாலும் கேட்கவிட்டாலும்
திட்டினாலும் கோபித்துக்கொண்டாலும்
நம்மை குழந்தைகளாக மட்டுமே
பார்க்கும் அப்பாக்கள் அப்பாக்கள் தான்,
அப்பாக்கள் மாறுவதேயில்லை
எனக்கும் அவளுக்கும்
எனக்கும் அவனுக்கும்
அப்பாக்கள் ஒரு மாதிரி தான்;
வாழ்க்கை தான் கணப்பொழுதில்
மாறிவிடுகிறது,
திடீரென மறையும் நட்சத்திரத்தைப்போல
அப்பாக்களும் மறைந்துவிடுகிறார்கள்,
மனது மட்டுமென்னவோ
அப்பாக்களுக்கு மகனாகவும்
அப்பாக்களுக்கு மகளாகவுமே
தன்னை எண்ணிக்கொண்டு உயிரோடு நகர்கிறது..
—————————————————–
வித்யாசாகர்