
“டாய்லெட்”
—————-
“என் மகளின் பிறப்புறுப்பில்
புண்ணென்று உங்களுக்குத் தெரியுமா ?
உங்களுடைய மகள்களுக்கில்லை யென்று
உங்களுக்குத் தெரியுமா ?
உங்களுடைய மகள்களின் பள்ளிக்கூடங்களில்
கழிப்பறை உண்டா ?
உண்டெனில் அவைகள் சுத்தம் தானா ?
உங்களின் மகள்களுக்கு அது ஏற்றதா ? அறிவீரா ?
போங்கள்; போய் முதலில் மகளுடைய கழிவறைகளைக்
கண்காணியுங்கள், குறிப்பாக பள்ளிக்கூடங்களில்..
இப்படிக்கு
எவனோ
இப்படியொரு கறுப்புப் பலகையில் எழுதி
அந்த கழிப்பறைச் சுவற்றில்
மாட்டப் பட்டிருந்ததைக் கண்டு
அதிர்ந்துப்போனேன் நான்
மனசெல்லாம் படபடத்தது
என் மகள்களை நோக்கிச் சிறகடித்து
பெரியவளை அழைத்துக் கேட்டேன்
ஏன்டா இப்படிப் பார்த்தேன்டா, நீங்களெல்லாம்
எப்படிம்மா என்றேன் பட்டும் படாமலும்
“நா’ யெல்லாம் அங்க போனதேயில்லைப்பா
இப்பல்லாம் காலையில நாங்க போறதேயில்லைப்பா
அடக்கிக்குவோம்
பழகிடுச்சி
வீட்டுக்கு வந்தாதான்ப்பா எல்லாம்”
பகீரென்றது
நெருப்பின்றி கனலொன்று உள்ளே சுட்டது
இல்லாத கடலுக்குள் மூழ்குவதுபோல் தவித்தேன்
ஆண்களுக் கென்ன
இலகுவாக மேலே அடித்துவிடுவோம்
ஆம் பெண்கள் என்ன செய்வார்கள்?!!
எனக்கு கோபம் கோபமாக வந்தது
இளையவளை அழைத்தேன்
என்னம்மா என்றேன்
“நான் அப்படியே போய்டுவேன் ப்பா
என்னால அடக்க முடியாதுப்பா
ஆனா நாற்ற மடிக்கும், எரியும்பா, அம்மாதான்…”
ஏதோ சொல்லவந்தாள்
நான் சட்டென வெளியேறினேன்
சுடுகாட்டில் பிணம் நடப்பதுபோல நடந்தேன்
கடவுளே!! தெருவெங்கும் கோயில்கள் கட்டினோம்
பள்ளிக்கூடங்களைக் கட்டினோம்
கழிப்பறை கட்டினோமா?
சுத்தமாக வைத்தோமா ??
வேறென்னச் செய்வதென் றறியாது
ஓடிச்சென்று அந்த கழிப்பறைச் சுவற்றின்
வாசகங்களை மறுபடி மறுபடி வாசிக்கிறேன்
மண்டைக்குள்
பெரியவளும் சின்னவளும் எட்டி எட்டி உதைத்தார்கள்
ஆண் ஆண் என்று ஏதோ கத்தி கூச்சல் போட்டார்கள்
கதறி கதறி அவர்கள் அழுவதுபோல் வலித்தது
மகள்கள்.. மகள்கள்..
இந்த உலகம் மகள்களால் ஆனது
ஆம், இந்த உலகம் மகள்களால் ஆனது எனில்
இனி மகள்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்???
முதலில் டாய்லெட் கட்டுவோம்!
—————————————
வித்யாசாகர்