வா உலகே வந்தென்னை வாரியணை (கரோனா கட்டுரை)

உலகத்தீரே கொஞ்சம் கேளுங்கள்…

அன்பால், நம்பிக்கையால், நமது அறத்தின் வலிமையால், பண்பின் உயர்வு கருதி நாம் இயற்கையால் மீண்டும் நிச்சயமாக மண்ணிக்கப் படுவோம். மீண்டும் அனைவருமாய் வென்றெழுந்து வருவோம்.

மீண்டெழுவோ மெனும் சமத்துவச் சிந்தனைகளோடு மேலும் ஆழ்மனத்திலிருந்து தூய தாயன்பு பெருக்கி, கருணையைக் கூட்டி, நட்பு வலுத்து, நானிலம் சிறக்க நாடெங்கும் நம்பிக்கையை பரப்புவோம், வாருங்கள்…

இப்போதைக்கு நம்மிடமிருக்கும் பெரும்பலத்தின் மூலமே இந்த நம்பிக்கை தான். நற்சிந்தனைகள் தான். நன்னடத்தையும் நல்ல ஆரோக்கியத்திற்கான புரிதலையும், மண்ணின் மரபூரிய மருத்துவமென அனைத்தோடும் சேர்ந்து நாம் விரைவில் மீண்டெழ மிக அரியதொரு நல்ல வாழ்க்கையை நாமெல்லோரும் வாழ்வோமெனும் நம்பிக்கை தான் இப்போதைக்கு நம்மோடு பிறந்த சொத்து.

மகிழ்ச்சி என்பது இம்மண்ணின் உயிர்க்கெல்லாம் பொது என்பதை மறந்ததொன்றே மனிதர் நாம் செய்த மாபெருங் குற்றம். அதைப் புரியும் தருணமிது. தெளியும் அறிவு பெரின்;அது நமக்கு காலம் தரும் கொடை. இன்னொரு வாய்ப்பு என்பதை மகிழ்வோடு ஏற்போம்.

அதை ஏற்கும் அறிவு நமக்குண்டு. நமக்கு எல்லாம் புரிகிறது. எல்லாவற்றையும் எல்லோரும் உணர்கிறோம். எல்லாம் தெரிகிறது ஆனாலும் எதையும் எதற்கோ இன்னும் மறுக்கிறோம்.

மனதை உடைத்துக்கொண்டு வந்து விழிகளில் நிறையும் அழையைப்போல, நம் மனச்செருக்கு குபீரென பீறிட்டு வெளியே வந்து விழுந்து விடுமானால் பிறகு பாருங்கள் நமக்கு மரணம் பற்றிய பயம் உடனே போய்விடும். வாழ்வதற்கு தன்னைத்தானே நாம் வீரியத்தோடு தயாராகி விடுவோம்.

காரணம் நம்மில் பிரிவு எங்கே? நம்மில் உயர்ந்தோர் யார் தாழ்ந்தோர் யார்? பணமொன்றைத் தூக்கி ச்சீயென வெளியே வீசிவிட்டு பகட்டுதனமும் புகழின்றி மனதின் நிர்வாணத்தோடு காண், கண்டு பாருங்கள் யாதுமற்று நம்மை; நாம் அத்தனைப் பேரும் ஒன்றே. ஒன்றேயெனப் புரியும்.

பிறகு இதில் யார் இறக்க? யார் பிழைக்க? பிழைத்தால் அத்தனைப் பேரும் பிழைப்போம். இறந்தால் அத்தனைப் பேரும் இறப்போம். நம்மில் பேதமில்லையென்று ஒன்றி எல்லோரும் நாதத்துள் நிறைக்க ஏற்போம்.

அப்போது அந்த தானெனும் சுடுமண் வந்து வெளியே கொட்டிவிடும். உள்ளே அழகாக தெய்வீகம் மலர்ந்துகொள்ளும். எல்லோர்மீதும் இன்னும் அன்பு சுரக்கும். பிற உயிர்கள் தான் மொத்தத்தில் பெரிதாகத் தெரியும்.

அப்படியொரு மனம் மலர்ந்த தெய்வீகத்தோடு தாய்மையோடு இவ்வுலகை நாம் காணவேண்டும். பேருவகையோடு மனதால் கட்டியணைத்து இந்த இயற்கை அன்னையை நாமெல்லோரும் கூட்டாகச் சேர்ந்து காக்கவேண்டும்.

ஒரு இலை பறிக்க மனசு அஞ்ச வேண்டும். ஒரு பூ பறிக்ககூட உயிர் வலிக்க வேண்டும். உயிர்கள் எனில் வெட்டுவாயா? பெண்கள் எனில் கழுத்தை அறுப்பாயா? எண்ணவே மனது பதைபதைக்க வேண்டும். பதைக்கும் உயிர்களின் வலியது புரிந்தால் யாரை அடித்தாலும் நமக்கும் வலிக்கும். யாரை நொந்தாலும் நமக்கும் நோகும்.

நோக வேண்டும். பிறருக்கு வலித்தால் நமக்கும் வலிக்குமே எனும்போலெண்ணி நாம் வாழவேண்டும். நாமும் மிருகம் தானே? ஆனால் அனைத்தையும் பகுத்தாராயக் கூடிய உயிரின் பச்சை வாசம் என்னவென்று புரிந்த மிருகமில்லையா? அது ஒவ்வொரு மனிதர்க்கும் பொருந்தவேண்டும்.

பசித்தால் வேறென்ன செய்ய? காய் காய்த்தால் பறிப்போம், கனி கனிந்தால் பறிப்போம், வேர் இலை விதை உயிர் கிளை மரம் குருவி பறவை உயிர்கள் அனைத்தையும் பசித்தால் பறிப்போம், பறிப்போம், தின்போம். பசி யாரை விட்டது? பசித்தால் புசிப்போம் தான்; ஆனால் கூடவே அவைகளைக் காப்பொம் என்பதே கவனத்தில் வலுக்கவேண்டும்.

மரம் வளர்த்து உயிர் பெருக்கி காற்று மணக்க மணக்க இந்த மண்ணை பெரு வாஞ்சையோடு காப்போம். எல்லோரையும் எப்போதும் நாம் வாழ்விப்பவர்களாகவே பிறக்கிறோம். அதற்கே போராடிக் கொள்ளும் மகோன்னத தருணமிது.

எனவே, போராட்டத்தை ஆயுதங்களால் அல்ல மனதால் கைகொண்டு எண்ணங்களால் வலிமைப் பூண்டு அன்பினால் ஒன்றிணைந்து உடலாக தனித்தும் உயிராகச் சேர்ந்தும் இப்பிரபஞ்சமென அறிவால் கனத்திருப்போம் உலகத்தீரே.

நம்பிக்கையொன்றே வாழ்க்கை. நம்பிக்கை கொண்டே உயிர்ப்பு. நம்பிக்கையொன்றே நம்மிடம் முழுதாய் இருக்கும் எல்லாம். அத்தகைய ஆழமான நம்பிக்கை நிச்சயமாக நமைக் காக்கும். நாமிந்த பிரபஞ்சத்தை காக்க மட்டும் மனதளவில் தயாராவோம்.

ஆயிரம் கரோனாவின் பிரச்ச்னை என்றாலும் பயமென்றாலும், அதற்கெல்லாம் அப்பாலோரு இயற்கையின் பெருஞ்சிரிப்பை நாம் இரு கண்கொண்டு காணாமல் இல்லை. இன்று இயற்கை நம் கண்ணிற்கு காட்டும் பேரெழில் பல மனித இறப்புகளுக்கு நடுவேயும் தனித்து நின்றுகொண்டு தனக்கானதொரு நியாயத்தை பேசி பேசி கத்தி கதறி வெளுரிய முகத்தோடு தான் அப்பாவி மனிதர்களையும் சேர்த்தே கொன்றுகொண்டுள்ளது.

அதன் வலியைப் புரிவோம். இயற்கை நம்மை எக்கணத்திலும் முழுதாய் கொல்லாது. புரிய வாய்ப்பு தந்து தந்தே தனை கோடான கோடி வருடங்களுக்கும் மேலாக நம்மோடு உயிராகவும் உடலாகவும் மரமாகவும் செடியாகவும் பூவாகவும் பறவையாகவும் கடலாகவும் மலையாகவும் வியாபித்து வைத்து நதியின் எழிலென எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

அதன் நியாயத்தை, இயற்கையை காக்க வேண்டிய அவசரத்தை, அதற்கான அக்கறையை, மிகப் பெரியதாகப் புரிந்து நம் அறிவிற்குள் ஏற்றிக்கொள்ள வேண்டும். என்னை கேட்டால் இது ஒரு சபதத்திற்கான தருணம் என்றெண்ணுகிறேன். காரணம், உடல்நலமின்றி நான் மருத்துவரிடம் செல்லும் காலத்தில் ‘எனக்கு ஓய்வில்லை, அதனால் உடலில் கவனம் செலுத்தவில்லை, பல வேலைகளில் இருக்கிறேன்’ என்பேன், அதற்கு, மருத்துவர் கேட்பார்; உங்களைத் தூக்கி நாளை ஐ.சி.யூ.வில் வைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்? என்பார்.

அப்படித்தான் இந்த இயற்கை நமைத் தூக்கி இன்று ஐ.சி.யூ.வில் வைத்துவிட்டு இன்னபிற அனைத்தையும் உடனே மற, உன்னை நினை, உனது மண்ணை நினை, உனைச் சூழ்ந்த இந்த உலகை உனதென நினை, உனக்காக மட்டும் இந்த நானிலத்தை மாசுபடுத்தி ஒழித்து வெப்பத்தால் அலைக் கற்றைகளால் மின்னெந்திரங்களைக் கொண்டு எமை மாய்ப்பதை நிறுத்து என்று உயிர்க்கொன்று உயிர்க்கொன்று கத்தி கத்தி சொல்கிறது. இனியும் நாம் மாறாது போனால் இன்னும் எத்தனை கரோனா வருமோ என்று தெரியாதென கொஞ்சம் மிரட்ட மட்டுமே செய்கிறது, அந்த நம் மருத்துவரைப் போல.

அல்லாது இயற்கை நமை என்றும் காக்குமேயொழிய கொல்வதில்லை. எனவே அது புரிந்து ஒரு நல்ல சபதமெடுப்போம் “எப்போதுமே இனி மாறமாட்டேன் இயற்கையே, உனை நெஞ்சாரக் காப்பேன், எதன் பொருட்டும் உன்னை விட்டுத் தருகிலேனென” நாம் தனித்தனியே ஒவ்வருவராய் சத்தியம் செய்து, நம் எதிர்கால பயணத்திற்காக உயர் பக்குவமடைய வேண்டிய வேளை இதுவென்று எண்ணி யொரு இயற்கைக்கான தாய்மைப்பூண்ட சாத்தியத்தை ஒன்றாய் கூடி எடுப்போம்.

இந்த உயிர்களின் மகிழ்ச்சி, பச்சை மரங்களின் ஆடல் பாடல், குருவி காக்கைகளின் கும்மாளம், வானத்தில் மிக ஒய்யாரமாகக் கேட்கும் காற்றின் ஒலி, கடலின் இசை, மழையின் ஆட்டமென இதனைத்தையும் நாம் மீண்டும் மீண்டுமாய் இனி நமது தேவைக்காகவேனும் பாதுகாக்கத் துவங்குவோம். நல்லதே எண்ணுவொம். எல்லாம் மாறும். எல்லாம் நன்றே மாறுமென்று நம்புவோம். நம்பிக்கையொன்றே வாழ்க்கை. நம்பிகையொன்றே எல்லாம்.

வாழ்க மக்கள். வாழ்க உயிர்கள். ஓங்கி யெழுக எனது இயற்கையின் நேசம். உள்ளார்ந்து அமர்க யெம் பிற உயிர்களின் பற்று. உலகெங்கும் அமைக அமைதி நன்றே. நலமே யெங்கும் விழைக நன்றே🌿

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s