அம்மாப் பேச்சு…

சொல்லிலடங்கா சுகமெனக்கு

எப்போதுமே அவள்தான்,
அவளுக்கு மட்டும் தான்
அது நானாக மட்டுமே இருக்கிறேன், அவளுக்கு
எப்போதுமே நான் அதீதம் தான்;
சொல்லைக்கடந்த சுகம் எனக்கு
அவளைவிட வேறென்ன? அவளுக்கான
சொற்கள் மட்டுந் தான் என் மூச்சு
அவளுடைய ஒற்றைப் பெயரை யாசித்து தான்
எனக்கான மீதநாட்களே நீள்கின்றன
அவள் சொல்லிலும் இனிய சொல்லாள்
இதயத்திலும் ஆழம் உள்ளாள்;
அவளைப்போல்
எவர்க்கும் வேறு தெய்வம் பெரிதில்லை
அவளின் சிரிப்பிற்கு ஈடாக
எங்களுக்கு ஒரு மருந்தேயில்லை

ஆயிரம் சொர்கத்தின்

ஒற்றைக் கூடாரம் அவள்;
அவளைத் தாண்டி என்னிடம்
பேச மொழியில்லை
பாட தமிழில்லை
எனக்கு உயிருள் நிறைந்த ஒற்றை உயர்ச்சொல்
அவள் தான்; அது அம்மா,

அம்மாவின் நாட்கள்
அவள் கட்டும் புடவையைப் போன்றே
அழகானவை;
அவளுக்கென்ன அத்தனை அழகு

கம்பீரம்
நடமாடும் நதி போலவள்;
அன்றைய நாட்கள் நினைவிலுண்டு
அவள் பட்டுப்புடவை கட்டி நடந்துவந்தால்
அங்கே நீண்ட தெரு கூட
எழுந்துநின்று எங்கம்மாவின் அழகை எட்டிப்பார்க்கும்,

கடைத்தெரு போய்வந்தால்

கூடையைக் காட்டிலும் ஆடையில்
அத்தனைக் கண்கள் ஒட்டியிருக்கும்
பாவமவள்; மேய்ந்தக் கண்களை அழுக்கெனத் துடைத்திடுவாள்

ஒன்றிரண்டை அன்பினுள் அடைத்திடுவாள்
அவளின் பெரு மந்திரமே

அந்த அன்பு தான்; தாயன்பு;

நாங்கள் ஐந்து பேர்
ஆளுக்கொரு கண்ணில் அமர்வோம்
அவரவர் ஆட்டத்திற்கு
அவள் தலையை உருட்டுவோம்
ஆடினால் பேயாட்டம் ஆடுவாள் அம்மா
கேட்டால் நான் பத்திரகாளி தெரியுமில்ல என்பாள்
ஆம்; அவள் காளிதான்
இல்லையேல் அம்மியில் அரைத்து
உரலில் மாவாட்டி
மிச்சத்தில் துணி துவைத்து
மாங்காய் தொக்கு வைத்து
வடவம் உண்டை உருட்டி
வத்தல் பொரித்து
இன்று நாம் தொலைத்ததையெல்லாம்
அன்று மறக்காமல்
எங்களுக்கு கொடுத்தவள் காளிதானே?
அவள் காளி மட்டுமில்லை சாமியும்
அழகில் ஆற்றலில் வாணியும் தான்
நான்குகால் பாய்ச்சலில்
இடுப்பில் புடவை முடிந்து ஆடுவாள்
அடுப்பில் சோறும் குழம்பும் என்றால்
ஊரு மணக்கப் போடுவாள்
அவள் வைக்கும் ரசமென்றால் தெருவெல்லாம்
வாசம் வரும்
அவள் கூட்டும் குழம்பிற்கு ஊரெல்லாம்
வீடு வரும்,
அன்றெல்லாம் நாங்கள் உணவுண்டுவிட்டு
படிக்கச் சென்றால் இடையிடையே
கையை முகர்ந்துப் பார்ப்பதுண்டு
அதன் காரத்திலும்
அம்மா முகம் இனிப்பதுண்டு;
அதென்ன
சமையலென்ன சமையல், அவள் மென்றுதரும்
எச்சில் சோற்றிற்கு நீயா நானா
என்று சண்டை வரும்,

அவள் பிட்டுத்தரும் வெற்றிலைக் காம்பிற்கு

அவனா இவனா என
போட்டி நடக்கும்,
அவள் நாக்கு சிவந்தாள்
எங்கள் நாக்கு சிவக்கும்
அவள் உள்ளம் சிரித்தாள்
எங்கள் வாய் சிரிக்கும்,
குடும்பத்தின் மகிழ்ச்சிகளை அப்படி
சிவக்க சிவக்க எங்களின் மனதுள்
அன்றே பூசியவள்
அவள் தான், அம்மா!
இரவில்
அவள் காலடியில் படுத்துக்கொள்ள
காலமெல்லாம் தவமிருப்போம்
ஒண்ணுக்கு போயி நனைத்தாள்
மார்பிலேறி கிடப்போம்
அப்பா ஒரு புறம்
அம்மா ஒருபுறம்
அன்பின் ஆனந்தத்தில் திளைப்போம்
அப்பாவை விரும்பும் அம்மாபோல்
பாக்கியம் வேறென்ன இருக்கும்
மகன்களுக்கும் மகள்களுக்கும்..?

பூவரசம் மரமேறி குதிப்போம்
கூரை மீதேறி கோழி விரட்டுவோம்
கிணற்றில் இறங்கி

ஏதோ விழுந்ததாகச் சொல்லி
நாளெல்லாம் தண்ணீரில் மிதப்போம்
எல்லாம் அவளுக்குத் தெரியும்,
தெரியாதது போலவே
எங்களை விரட்டுவாள்
நான் யாரு தெரியுமா ‘காளி’ என்பாள்
கோபம் வந்தால்
பத்திரகாளி தெரியுமா என்பாள்
மீண்டும்
கொஞ்சம் அழுதாள் வாரியணைப்பால்
உள்ளே எங்களுக்கு அவளே அவளே
எப்போதும் சாமியாவாள்;

அதிரசம் சுடும் நாட்கள் எங்களுக்கு

புத்தகமெல்லாம் எண்ணெயூரும்
எழுதியதெல்லாம் இரண்டாகிப்போகும்,
முறுக்கு சுடும் நாட்களில்
எதிரிகூட நண்பனாவான்
வகுப்பே எங்களோடு பாசமாகும்,
அப்போவெல்லாம் தண்ணீர் கொடுத்து
வெள்ளைத் தாள் பெறுவது வழக்கம்
வெள்ளைத்தாள் சேர்ப்பது ஒரு ரசம்
பொதுவாக எல்லோரும் வெள்ளைத்தாள் கொடுத்து
தண்ணீர் வாங்கி குடிப்பார்கள்,
நாங்கள் தான்
பலகாரங்களைக் கொடுத்து
தண்ணியும் வாங்குவோம் காகிதமும் வேண்டுவோம்
அன்பைக் கப்பலாய் கப்பலாய் விடுவோம்
கப்பலுக்குள் எண்ணெயும்
எண்ணெய்க்குள் அம்மாவின் அன்பும்
நனைந்திருந்த நாட்களவை;
அம்மாவிற்கு நாங்கள்
எப்போதுமே சண்டியர்கள் தான்,
சர்க்கரைக் கொட்டிவைப்பாள்
தின்று தீர்த்துவிடுவோம்,
வத்தல் போட்டுவைப்பாள்
தின்று தீர்த்துவிடுவோம்,
அப்பா கம்பனியில் ஆர்லிக்ஸ் தருவார்கள்
அன்றே அது தீர்ந்து போகும்,
பெட்டி பெட்டியாய்த் தீர்வதால்
கத்தி கத்தி பேசுவாள்,
பின்னால் சென்று –
பிள்ளைகள் தானே போகட்டுமென்பாள்
அப்போதெல்லாம் அவள் சுட்ட
பலகாரங்களை விட எங்களுக்கு

அவள் காட்டும் பாசம் தான் அப்படி இனிக்கும்;

அவள் தெருவில் நடந்து வருவதைப்

பார்த்து ரசிப்போம்,
யாரோடும் பேசி நின்றாள்

அவள் சிரிக்க காத்திருப்போம்,

அப்பா போலவே நாங்களும் அம்மாவிற்கு
பரம ரசிகர்கள் தான்,
அம்மா தீபாவளியா பொங்கலோ வந்தால்
துணியெடுக்க நகரம் போவாள்
சிலசமயம் திரும்பிவர தாமதமாகும்
மாலைவரைப் பார்ப்போம், அதற்குமேல்
பொறுக்கமுடியாமல்
இருண்டவீட்டைவிட்டு அப்பா வெளியே போவார்

வாசலில் வந்தமர்ந்துகொள்வார்
நாங்களும் வாசலில் அமர்ந்துவிடுவோம்
சிலவேளை உறங்கிகூட இருப்போம்

சுவாசம் மட்டும் அம்மா அம்மா என்றே
சுவாசித்திருக்கும்;

இப்போதுதான் வளர்ந்துவிட்டோம்
அம்மா முகம் சுருங்கி

உடல் மாறி வயதானவளாகத் தெரிகிறாள்
கிழவியைப்போல பேசுகிறாள்
நாங்கள் வளர்ந்துவிட்டோமாம்
எங்களுக்கு வயதாக வயதாக
அவளுக்கு வளர்கிறோம் என்பதில் அப்படியொரு சந்தோசம்
ஆனால் அவளுக்கு வயதாக ஆக
முதிர்கிறாளே என்று எங்களுக்கு பயம்;
சொல்லப்போனால்
உண்மையில் எங்களுக்கு வாழ்நாள் சாதனை
என்ன என்றெல்லாம் தெரியாது,
அம்மா இருக்கும்வரை
இருப்பது தான் எங்களுக்குச் சாதனை!

அம்மா; சொல்லினும் இனியவள்
அன்பினும் தூயவள்
அவள் வாழினும் பெரிதொன்றை மனது
கேட்டதேயில்லை இதுவரை;

நன்றாக சிந்தித்தாலும்
எப்படி யோசித்தாலும்
அவள் அடங்கும் சொல் என் தமிழில் இல்லை
அவள் தான் எங்களுக்கு
பரம எல்லையும்
இப் பிறப்பைத் தந்த சாமியும்!!

சாமியானால் என்ன
சாதல் என்று ஒன்று

எல்லோருக்கும் உண்டு தானே ?
அது எங்களுக்கும் இருக்கும்,
ஆனால் அது
அவளிருக்கும் வரையாக இருத்தல் வேண்டும்!!
———————————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அம்மாப் பேச்சு…

  1. நடராஜன் சொல்கிறார்:

    நற்கவிதை நறுக்குத் தெறித்து கவிதை;பொருள் மிகுந்த புதுக்கவிதை;தருவீர் நாளும்!

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s