உதவுங்கள்; உலகம் உய்யட்டும் (மனிதர்கள் படிக்கவேண்டியது)

“இந்த உலகம் என்பது நாம் தான்” ஐயா அருட்தந்தை திரு. ஜகத் கஸ்பர் சொன்னது. ஆம், சிந்தித்துப் பாருங்கள் இந்த உலகம் என்பது நாம் தான். இந்த உலகம் நம்மால் தான் இயங்குகிறது. இந்த உலகம் நல்லதோர் நிலையை எய்தி நன்மையை பயக்குவதற்கும், தீய செயல்களால் அழிந்து வேறொரு மக்கள் உருவாவதற்கும் இந்த உலகத்தின் எதிரிகளாகவும் நண்பர்களாகவும் நாமே இருக்கிறோம்.

எது எப்படியோ ஒரு கோடுதனை அழிக்காமல் சிறிதாக்கவேண்டுமெனில் அருகில் ஒரு பெரிய கோடுதனை இடுவதைப்போல, நாம் செய்த பல தவறுகளையும் பாவங்களையும் தானே தீர்ந்துவிடும் என்றெண்ணாது அருகே பல பெரிய புண்ணியக்கோடுகளை இடுவோம் எனில் வாழ்க்கை நமக்கு இன்னும் ஆனந்தமாக மாறும். அது எல்லோருக்குமாய் மாற நாம்தான் இன்னும் கொஞ்சம் பெரிய மனங்கொண்டு பல நற்செயல்களை ஆற்ற வேண்டும்.

நாம் செய்த தவறும் பாவங்களும் நாம் தற்போது செய்யும் பல நன்மைகளால் சிறிதாகி சிறிதாகி ஒரு கட்டத்தில் அது நம் நன்மைகளின் முன்னே நிற்க திராணியற்றதாகி சுருங்கி சுருங்கிபோய் நாளை அவைகள் இல்லாதே போவதுபோல் நமது குற்றங்களும் குறைகளும் கூட இனி இல்லாதுபோகட்டும்.

ஆனால் ஒரு யதார்த்தத்தை நாமிங்கு புரியவேண்டும்; பணமிருப்போர் எல்லாம் தானம் செய்வதில்லை. எல்லோரும் செய்வதில்லை. அவரவர் வைத்திருப்பதில் பாதியை தானம் செய்ய வடன்ஹால் போதும் இவ்வுலகத்து மொத்த பசியையும் போக்கிவிடலாம். ஆனால் வருவதில்லையே ஏன் ? அவர்கள் என்ன கல்நெஞ்சக் காரர்களா ? அதுவுமில்லை. புரிதலின் பிரச்சனையும் சுயநலமும் தான் எடுத்து பதுக்கிக் கொள்வதர்கான காரணமும். இன்னொரு பக்கம் பார்த்தால்; இயல்பாகவே தர்மம் செய்ய எண்ணுவோர் எல்லாம் தர்மம் செய்ய இயலுவதும் இல்லை.

காரணம், கெட்டதை யார்வேண்டுமோ செய்துவிடலாம். எண்ணியதும் எதிர்போவோரை ஒரு அரை அறைந்துவிடலாம். ஆனால் நல்லோரை வாழ்வது கடினம். அது பிறருக்கு புரிய மீறி நாம் வாழ வழியமைவது அதனிலும் கடினம். உண்மையில் கண்டால்; நல்லோராய் வாழ்வதொரு பாக்கியம். சிறந்து வாழ்வதொரு தெய்வீக நிலை. எனவே நல்லதைச் செய்யத்தான் நல்லருள் பெற்றிருக்க வேண்டியிருக்கிறது.

என்றாலும், இத்தருணம் அத்தகையதொரு நல்லருள் கொண்ட தருணம் என்பதை பனமுள்ளோர் நாம் நினைவில் கொள்வோமா? பசிகொண்டோரை நேராக கண்டு உதவ இயன்ற புண்ணியத்திற்கான தருணமிது என்பதை மனதார அறிகிறோமா? ஆங்கங்கே ஏன் வந்தது எப்படி வந்தது என்று கூட தெரியாமல் மக்கள் கரோனா வந்து அவதி படுகின்றனர்.

நோய் வராவிட்டாலும் வந்துவிடுமோ எனும் பயத்தில் புழுங்கி ஒடுங்குகிறார்கள். சுரம் வந்தால் பயம், சளி பிடித்தால் பயம், இருமல் வந்தால் தொல்லையென மனதாலும் உடம்பாலும் நொந்து வாழ்கிறார்கள்.

ஒருபுறம் பயம் மனதை அழுந்தியிருக்க மறுபுறம் ஏழைகளின் அடுப்பில் நின்றெரியும் பசித்த வயிறும் பிஞ்சு உள்ளங்களும் ஏராளம், நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் அன்றாட பற்றாகுறைகள் ஏராளம். வீட்டில் அடங்கி இருக்கும் ஏழைகளின் பசிக்கொடுமை இன்றளவில் மரணம் வரை அவர்களை தள்ளிவிடுகிறது.

அவர்களுக்கெல்லாம் நாம் என்ன செய்யப்போகிறோம்? இந்த மண்ணின் மைந்தர்களாய், இந்த தேசத்தின் குடிமகன்களாய், மனிதாபிமானமுள்ள மானுடர்களாய் நமது கடமைகள் என்ன? நம்மால் குறைந்தபட்சம் இயன்றதென்ன?

உதவுவதற்கு பணக்காரர்கள் செல்வந்தர்கள் டாட்டா பிர்லாவோ அம்பானியோ வேண்டாம். மனது வேண்டும். எனக்குயில் இருக்கும் நூறு ரூபாயில் ஒரு ரூபாவினை பிறருக்கு தரும் மனது வேண்டும். நாம் உண்ணும் உணவில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் போட்டு வெளியில் போகும் பசிகொண்டோருக்கு பாதி வயிறு உணவேணும் தர நம்மால் முடியாதா?

உதவி என்பது அணில் ராமருக்கு எடுத்துத் தந்த மண்ணளவு போதும். தன்னால் இயன்றதை செய்வது போதும். ஆனால் நிச்சயம் செய்யவேண்டும். இந்த உலகம் யார் சொல்லியும் யாரைக் கண்டும் முழுதாக மாறாது திருந்தாது, தனி நபர் ஒழுக்கம் பேனலன்றி.

உதவியும் அப்படிதான் நாமிறங்கி வர உலகிறங்கி வரும். ஆனால் அந்த நாம் யாரென்ற கேள்வியின்றி அது நான் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும். நான் செய்கிறேன் நான் செய்கிறேன் என்று அனைவரும் புறப்படுவோம், பிறகு பாருங்கள் தான் ஏன் செய்யவில்லை என்று பெரியதொரு கேள்வியோடு மூடிய செல்வந்தர்களின் கதவெல்லாம் கூட தானே முன்வந்து திறக்கும்.

ஒரு புறம் காரோனா என்றாலும் மறுபுறம் குடும்பம் வீடு மனைவி கணவன் குழந்தைகள் என உறவுகளோடு மகிழ்வாக இருக்கும் வாய்ப்பமையப் பெற்றோரும் நம்மிடையே எண்ணற்றோர் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. வசதி இருக்கும் செல்வந்தர்களுக்கு இது ஒரு கனவு காலம். வரம் போல அமைந்த இனிப்பு காலம்.

மனிதர்க்கு மட்டுமே இது உயிர்பயம் ஊட்டிய வரலாற்றுத் தருணம் என்றாலும், கிளிகள் கத்துவதும் குருவிகள் பேசித்திரிவதும் மரங்கள் மகிழ்வோடு சுவாசிப்பதும் கண்கூடாக நமக்கு தெரியாமலில்லை. இதே வேளையில் தான் அன்றாடம் தொழில் செய்து பிழைத்த பலர் வீட்டிலிருந்தும் நிம்மதியின்றி பட்டினியில் வாடுகின்றனர். பசி என்பது நீடித்தால் அது பழகாதோருக்கு மெல்லக் கொல்லும் மரணமாக மாறிவிடுகிறது.

எத்தனை நாள் வாயடக்கி இருந்தாலும் உடம்பிற்கென ஒரு தட்டு சோறோ கஞ்சோ கட்டாயமில்லையா ? அதற்கு வழிவகுப்பது நமது மானுடக் கடமையில்லையா? ஆம் எனில் அதற்கு என்ன செய்தோம் நாமெல்லோரும் ? இருப்போர் எல்லோருமே உண்மையிலேயே எல்லோருக்கும் கொடுத்தோமா ? எண்ணற்றோர் செய்கிறார்கள் காண்கிறோம், ஏன் நாமும் செய்யக்கூடாது?

வாருங்கள், எல்லோரும் தனது அனைத்துக் கட்டுகளையும் உடைத்துக்கொண்டு சற்று கீழிறங்கி வாருங்கள். ஒன்றாய் ஆங்காங்கே கூட்டாக இணைவோம், அல்லது கண்ணெதிரே உதவி செய்வோரிடம் சேர்ந்து நாமும் பொருளற்றார்க்கு இவ்வேளையில் உதவ முன்வந்து நிற்போம். உயிர் பயத்தால் வாடும் பலருக்கு பசி கொடுமை இல்லாது போக்க முயற்சிப்போம். பசி ஒரு பெருங்கொடுமை. மெல்ல மாய்க்கும் மனவலி பசி. அதைப் போக்க நம்மால் இயலுமெனில் அதற்கு தயாராவோம். இறைவன் அதற்குரிய தருணத்தை நம் எல்லோருக்கும் தரட்டும்.

இங்கே இன்னுமொன்றையும் சொல்ல வேண்டியுள்ளது. இப்படி பசி என்றாலே உடனே நமக்கு நம் தாய்நாடு நினைவுக்கு வரும். யாரோ தெரிந்தவர் மூலம் உதவுவோம், ஊருக்கு சம்பளம் வாங்கி பணம் அனுப்புவோம், அதிலே ஏதோ நாமும் உதவிவிட்டோமடா என்று நிறைந்து போகிறோம். ஆனால் சிந்தித்து பாருங்கள் உறவுகளே இதுபோல் வெளிநாடுகளில் வாழும் நம் நாட்டவர்களின் நிலையென்ன?

குவைத்தில் துபாயில் சவுதியில் எண்ணற்றோர் வேலையின்றி வருமானமுமின்றி அவரவர் வீட்டு அறைகளில் அவரவர் முடங்கி கிடக்கின்றனர், அவர்களுக்கு யார் உணவு தருவார்? குழந்தை குடும்பமாக தனியாக எத்தனையோ பேர் அவதி படுகின்றனர். பல நிறுவனங்கள் இங்கே பெருமளவு நிறுவனங்கள் சம்பளம் தரவில்லை, சிறுசிறு தொழில் செய்தோர் எல்லோருமே முடங்கி வீட்டில் இருக்கின்றனர்.

அரசாணையின் பொது வெளியே வந்தால் இருபத்தியைந்து லட்சம் அபராதம் குவைத் திருநாட்டில். யாரால் வெளியே வர இயலும்? அவர்களின் பசிக்கெல்லாம் யார் பொறுப்பு? நம்மோடுள்ள மனிதர் பலர் பசித்திருக்கையில் நாம் மட்டும் ருசியாக தின்று குடும்பத்தோடு உறவாடி எள்ளி நகைத்திருப்பது முழு சமுதாய நியாயமில்லையே. இந்த தருணத்தை நாம் நமக்கான காலத்தின் கட்டாயத்துள் தள்ளப்பட்டதோர் போர்க்களமாக எண்ணிக்கண்டு எல்லோரும் இறங்கிவந்து இயன்றளவு பிறருக்கு என ஆங்காங்கே செய்து எல்லோருக்கும் எல்லோருக்கும் உதவியாயிருக்க வேண்டாமா?

அதைச் செய்வோம் அன்புறவுகளே, வாருங்கள், தூரத்து ஊர்களை எண்ணி வாடும் அதே தருணம் அருகாமையில் நின்று பசியால் வாடுவோரைக் காக்க முயல்வோம். அவரவருக்கு இயன்றளவில் அவரவர் அருகாமை மனிதர்களை கவனியுங்கள். நண்பர்களின் மூலம், நண்பர்களின் பிற நண்பர்கள் மூலம் எல்லோரைப் பற்றியும் விசாரியுங்கள். ஒரு பத்து தினார் ஐந்து தினார் ஒரு தினாரேனும் இருப்பவர் இல்லாருக்கு கொடுங்கள்.

ஒன்றை இறுதியாய் சொல்லி முடிக்கிறேன். தனக்கே என்று செல்வங்களையெல்லாம் சுயநலத்தோடு எடுத்து பதுக்கி வைத்துக்கொள்ள நாம் கல்நெஞ்சம் கொண்டபோதிலிருந்து தான் கொடுப்பது நின்று போனது. கொடுப்பது நின்றதும் தான் எடுக்கத் துணிந்தவன் திருடவும் கொன்று பறிக்கவும் துணிந்தான். அனைத்திற்கும் மூலம் பசி ஒன்றே என்றறிக.

நாம் இனி கொடுத்து பழகுவோமே. எடுப்பவரை எடுக்காதே என்பதை விட பறிக்கும் முன் கொடுத்துக்காட்டி மனதால் உயர்ந்து நிற்போமே. இருப்பவர் கொடுப்பது தெரிந்துவிட்டால், இல்லாதோர் குறைந்துவிட்டால் பிறகு எடுப்போர் என எவரிப்பர்? ஒருவேளை உண்மையிலேயே நாமெல்லோரும் அப்படி இருப்பதை முதலில் இல்லார்க்கு கொடுக்க முன்வந்துவிட்டால்; எடுப்பவர் இனி மெல்ல குறைந்து கொடுப்பவர் கூடிவிட்டால்; கூடி கூடி ஒரு கட்டத்தில் பசி ஒழியும். ஒருவரைக் கண்டு ஒருவரென உலக பசியே ஒழியும்.

ஒழியட்டும். பசி ஒரு மருந்தாக இருப்போர் தவிர்த்து வலியாக இருப்போருக்கெல்லாம் பசி என்பதே இல்லாது ஒழியட்டும். பிணி சேர்ந்து ஒழியட்டும். கொல்லை கொலை ஒழியட்டும். பேராசை மெல்ல மெல்ல ஒடுங்கட்டும். மனிதர்களில் யாரோ ஒருவர் திருந்தாதிருக்கலாம், தவறை இழைக்கலாம், அவர்கள் சபிக்கப்பட்டவர்களாக இருந்துபோகட்டும்.

இல்லையேல் மெல்ல மெல்ல அவர்களும் மாறுவார்கள் என்று நம்பி நம் பயணத்தை அவர்களின் நன்மைக்கென்றுமென எண்ணிக்கொண்டு நல்விதமாய் துவங்குவோம்.

நம் அறம் இந்த உலகை காக்கும். நமது எண்ணம் இந்த மனிதர்களைக் காத்துகொள்ளும். சற்று எழுந்து சன்னல் திறந்து வெளியே பாருங்கள்; மரம் செடி கொடி உயிர்கள் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கிறது.

அவற்றை அழித்துக்கொண்டிருந்த மனிதன் ‘ஆகா இனி அவனும் அழிந்துபோனான்’ என்று இயற்கை எண்ணியிருக்குமோ தெரியாது. இனி நாம் மீண்டும் வெளியே வருகையில் இதோ நம்மைக் காக்கும் தெய்வங்கள் வந்து விட்டன என்று அணைத்து உயிர்களும் மரங்களும் செடிகளும் இயற்கையும் கொண்டாடடும் பெருநம்பிக்கையை இந்த பிரபஞ்சத்திற்கு நாம் தரவேண்டும்.

பிற உயிர்கள் பற்றி கவலையில்லை. அவைகள் அவற்றையெல்லாம் கொண்டாடுமோ கொண்டாடாதோ தெரியாது ஆனால் அவைகளை அவைகள் காத்துக்கொள்ளும். அதற்கு சாட்சி வேண்டுமெனில் மீண்டுமொரு முறை சன்னல் திறந்து வெளியே ஆடும் மரங்களையும் பாடும் பறவைகளையும் பாருங்கள்.

வீசும் காற்றை ஒளிரும் நிலவொளியை உற்றுநோக்குங்கள். நாம் வெறும் நம் ஆட்டங்களை நிறுத்திக்கொண்டால் போதும். நாம் வெறும் நம்மைக் காத்துக்கொண்டால் போதும். நாம் சரியெனில் எல்லாம் சரியாகும். வாருங்கள் முதலில் நாம் நம்மை முழுதாய் சரிசெய்வோம்.

நமது சரியை பிறருக்கு உதவும் பொருட்டு துவங்குவோம். உதவினால் பசி மட்டும் போகாது மூடிய மணக் கதவுகலும் எல்லோருக்குமாய் திறக்கும். ஒருவருக்கு ஒருவர் மேல் வாஞ்சை உண்டாகும். மனிதர்க்கு மனிதரின் மேல் நேசம் அதிகரிக்கும். அன்பு பொதுவாய் எல்லோருக்கும் கூடும். அன்பு கூடினால் கோபம் தணியும். சந்தேகம் இடமற்று போகும். பொறாமை மெல்ல அடங்கும். வேறென்ன வேண்டும் பிறகு? மனிதருள் இருக்கும் தெய்வீகம் தானே மெய்மனத்தோடு வெளிப்படும்.

மண்ணெங்கும் மனிதம் தழைக்க மனிதர் சிறக்க உயிர்கள் மொத்தமும் ஏற்றத்தாழ்வின்றி உய்ய, முதலில் நீளும் கரம் எனது கரமாக இருக்கட்டும் என்றெண்ணி நம்மில் இயன்றோர் அத்தனைப்பேரும் பிறருக்கு உதவ புறப்பபடுவோம். உலகை காக்கும் பணியை நம்மிலிருந்து துவங்குவோம். இந்த உலகம் நம்மையும் தானே காத்துக்கொள்ளும் என்று நம்புவோம். நமது செயல் முயற்சி நம்பிக்கையால் இவ்வுலகு இன்னும் நல்லுலகமாக மாறிப்போகட்டும்.

அதற்கு அனைவரும் சேர்ந்து வாருங்கள். அனைவருக்கும் அதற்கு நன்றி பரிமாறி மிக நிறைந்த உள்ளது நேசத்துடன் நிறைவு செய்கிறேன். வாழி… வாழி… நிறைவோடு எவ்வுயிர்க்கும் நோகாது எவ்வுயிரும் ஆனந்தம் கொண்டு எவ்வுயிரும் எங்கும் அதன் பிறந்த விடுதலையோடு நிலைத்து நீடு வாழி!!

வணக்கத்துடன்…

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s