நல்லதோர் வீணை செய்தே…

ந்த உலகமே இடிந்து மேலே விழும் செத்துப்போவோம் என்றாலும் சாகும்வரைப் போராடி தன்னைக் காத்துக்கொள்ளுமொரு துணிவு இந்த உயிரென்னும் கண்ணிற்குத் தெரியாத காற்றுப்பொருளிற்கு உண்டு. உடலெங்கும் நீரால் வாழும் வலிமையும், காற்றைக் கொண்டு பறக்கும் திறமையும், இவ்வுலகை ஒரு கைப்பேசிக்குள் அடக்கிய அறிவையும் கொண்டவர்கள் நாமெல்லோரும். பிறகெதற்கு இங்கே வாழ்வதற்கு பயம் ?

பயம் இல்லாதவர்கள் பதுக்கிடல் தீதில்லையா ? பயமில்லாதவர்கள் மௌனித்திருத்தல் குற்றமில்லையா ? பயமற்றிருத்தல் என்பது அறிவோடு இயங்குவதன் வெளிப்பாடு. எப்போது நாம் எதிர்காலத்திற்கு வேண்டும் என்று எண்ணுகிறோமோ, எதிர்காலத்திற்கென பதுக்கி வைக்கிறோமோ, அப்போதே எதிர்காலத்தில் நான் எந்நிலை ஆவேனோ என்று பயந்த உணர்வையும் வெளிக்காட்டி விடுகிறோம்? எதிர்காலம் நிகழ் காலத்தை விட முக்கியமில்லையே? பிறகெதற்கு எதிர்காலத்தைக் கண்டு பயம் ?

கண்ணெதிரே உயிருக்கு துடிப்பவன், பசியில் செத்தவர் என பட்டியல் நீண்டிருக்க எனது எதிர்காலம் என்பது சுயநலத்தின் உச்சமில்லையா? முதலில், நான் நலம் என்றாலே என்னோடு உள்ளவர்கள் நலமா என்று பார்ப்பது தான் மானுட அறிவு, இல்லையா ? பிறருக்கென்றும் எண்ணி வாழ்வதன்றோ மனிதாபிமான சிந்தனை என்பதாகும் ?

விலங்குகளுக்குத்தான் தனது பசியொன்றே போராட்டம். பசியொன்றே வாழ்க்கை. இருந்தும் விலங்குகள் பல பிரமிக்கத்தக்க தனக்கேயான பல நற்பண்புகளோடு மிகச் சிறப்பாக வாழ்ந்துவருகிறது. நாம் தான், தானும் வாழாமல் பிறரையும் வாழவிடாது மொத்தத்தில் அழிந்து வருகிறோம்.

இந்த தன்னைத்தானே சுயநலப் பள்ளத்துள் தள்ளி, தானழிய தானே காரணம் என்றாதல் கூட சுயநலமொன்றின் பொருட்டே. எனவே, நாம் மெல்ல மெல்ல வெளியேறி சுயநலம் விட்டு பிறர் நலம் காக்கத் துவங்கிவிட்டால் நம் பின்னே இந்த உலகே கூட சேர்ந்துவரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

என்னைக் கேட்டால், முன்பை விட இப்போது உதவுதல் அதிகம். முன்பைவிட இப்போது பதுக்கல் குறைவு. இப்போதிருக்கும் மனிதர்கள் மிக நல்லோராய் இருக்கிறார்கள் என்பதே எனது சமகால பிரிதல். இவர்களுக்கு நியாயம் புரிகிறது. இவர்களுக்கு நீதி சமரசம் சமத்துவம் பிடிக்கிறது. இவர்களுக்கு பொதுச்சேவை மீது அக்கறையும், தனது மண்ணின் மீது பற்றுதலும், மொழியின் மீது தீரா காதலும் குறைவற்று நிறைந்திருக்கிறது. இடையே யாரோ ஒருவர் புனிதர் தேவைப்படுகிறார்; இது இது இப்படி என்று சொல்லவும், தன்னை அந்த நான் என்னும் சுயநலத்திலிருந்து விடுவித்துவிடவும் ஒரு நல்ல மனிதர் தேவைப்படுகிறார் அவ்வளவே.

ஒரு மரம் வளர்கிறது, அது தானே வளர்ந்து காய்த்து பூத்து உதிர்ந்து எல்லாமுமாய் முடிந்துபோகையில் விறகாக, பூவாக, இலையாக, கனியாக, சாம்பாலக, உரமாக பயன்பட்டுவிட்ட வரலாறோடு தான் அந்த மரத்தின் கதை முடிகிறது. ஒரு மரத்திற்கே வரலாறு பிறருக்கு பயன்பட்டதாக முடிகிறது எனில் நமக்கு எவ்வாறு முடிதல் வேண்டும் ?

வாழ்தல் என்பதே உதவுதலிற்கு உட்பட்டது. உதவுதல் என்பது பெரிய உன்னதமெல்லாம் இல்லை, அது ஒரு இயல்பு. தரையில் பாயும் நீர் பள்ளம் பார்த்தே நிரம்புவதைப்போல’ கொடுப்பவர்க்கே இவ்வுலகம் பெரிதாய் நிறைகிறது. கொடுப்பவரைதான் தெய்வம் என்கின்றனர் இல்லாதோர். தெய்வம் கொடுக்கும் என்று நம்பிக்கை கொண்டோனை மூடனென்று நாம் சொல்லி முடிப்பதற்குள் அவன் வேண்டியதைப் பெற்றுவிடுகிறான். காரணம், கொடுத்தது தெய்வமல்ல அவனுடைய நம்பிக்கை என்று புரியத்தான் கொஞ்சம் சீரிய அறிவும் தொலைநோக்குப் பார்வையும் அமைதியான மனமும் தேவைப்படுகிறது.

ஆக, ஒரு மனிதனுக்கு வாழ்தல் எத்தனை முக்கியமோ அவ்வளவிற்கு அவ்வளவு தன்னைப்பற்றிய புரிதலும் தன் மீதான நம்பிக்கையும் இயற்கையின் கொடைக்கு சரணடையும் நன்றியுணர்வும் முக்கியமாகும். அந்த நன்றியுணர்வின் பற்பல ஏற்பாடுகள் தான் மதங்களும் கோட்பாடுகளும் நம்பிக்கையும் என்றாயின. அதன்பின் அவற்றிலிருந்து மேல்கீழ் பிரிகையிலும், உயர்வு தாழ்வு என்று ஆனபோதுதான் அவற்றுள்ளும் பிரிவினையும், நல்லது கெட்டதுமென பல பொதுநலமற்றப் பார்வைகளும், அதீத சுயநலமும், தனக்கே தனதே என்னும் கர்வமும், நானென்ற ஆசையும், ஆசையில் வெற்றியும், வெற்றியால் ஆணவமும் அதிவேக வேகமாக கூடி இப்போது சுயநலமே எங்கும் நஞ்சென பரவிவிட்டது.

இருந்தும் மதம் கடவுள் என்பதெல்லாம் கடந்து மனிதம் மாறாமல் கருணையோடும் அறம் கொண்டும் வாழ்வோர் எக்காலத்திற்கும் ஆங்காங்கு ஒருவர் இருவரென பலர் இருக்கின்றனர். அத்தகையோரே மனதால் புனிதர் என்றானார். அதில் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை. அவ்வாறிருப்போர் மிகக் குறைவு என்றறியப்பட்ட பின்னர்  தான் மனிதன் அவர்களைப்போல பலரை உருவாக்க கோயில்களையும் பிறகு பள்ளிக்கூடங்களை நம்பி நாளடைவில் வெறும் கட்டிடங்களை எழுப்பிவிட்டு மனிதத்தை அழித்துக்கொண்டு வருகிறான்.

உண்மையில் கோயில்களைப் போல் ஒரு அறிவு புகட்டும் பகுத்தறிவு கூடம் வேறில்லை. பள்ளிக்கூடத்தைப் போலொரு நற்பண்பை உருவாக்கும், சமத்துவத்தைச் சொல்லித்தரும், அறத்தை போற்ற வலியுறுத்துமொரு நல்ல இடமில்லை. இன்று மாறாக பள்ளிக்கூடங்களில் போராட்டமும் கோயில்களில் கற்பழிப்புமாய் மாறிய கீழ்த்தர சமூகமாக நாம் மாறிவிட்டோம் என்பதே வேதனை. மாறியதோடு நில்லாமல் ஆங்காங்கே நாம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமெனச் சேர்த்து மொத்த இயற்கைக்குமாய் இன்று பல தீங்கிழைக்கின்றோம்.

இனியேனும் அத்தகு தீங்கு நிலைவிட்டு வெளியே வாருங்கள். நமைச் சுற்றி வேறு பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அறம் பொருந்திய ஊர் இருக்கிறது. வள்ளுவம் மறக்காத அளவு காற்றிலும் வெளிச்சத்திலும் அது பற்றி பேசி பேசி பலரால் பதியவைக்கப்  பட்டுள்ளது. அத்தகு உணர்வுகளை உள்ளுள் நிறைத்து அறந்தனை முழுதாக கையிலெடுப்போம். வள்ளுவந்தனை புரிதலோடு வாசித்து அதற்கொப்ப வாழ்தலை புதிப்பிப்போம். வள்ளுவனை தாண்டியோரு ஆசானோ வழிகாட்டியோ நமக்கு அவசியமில்லை என்பதை நன்கறிந்த இனம் நம்மினம். அத்தகு இனத்தின் மான வீர மரபு மாறா காதல் மனிதர்களாக வாழ்ந்து பிறர்நலம் காத்து மிக கம்பீர நடைபோட இனியுள்ளோர் புறப்பட வேண்டும்.

ஒரு சிகரெட் வாங்கி பத்து பேர் குடித்துக்கொள்ளும் மனதை சிகரெட்டிடமிருந்து பிடுங்கி, ‘ஒரு தட்டில் உண்ணச் சோறிருந்தால் அதைக்கொண்டு இயன்றொர் பகிர்ந்துண்ணும்’ அறிவிடம் மீட்டு தருவோம். காக்கை குருவி மரம் குழந்தை உயிர் எல்லாம் ஒன்றே என்றறிதலில் எழும் அக்கறை நிரம்பிய மனதைக்கொண்டு பிறர்நலம் காக்கும் தன்மையையும் இயற்கையின் இயல்பென போற்றி ஒவ்வொருவரும் தனக்குத்தானே வளர்த்துக்கொள்வோம்.

ஒரு மரம் தன்னை மரமாக சொல்லிக்கொள்ளவோ காட்டிக்கொள்ளவோ இல்லவேயில்லை. அதன் பணி; காய்ப்பது, கணிவது, பூப்பது, உதிர்வது, மீண்டும் துளிர்ப்பதாக இருக்கையில்; நாம் மட்டுமேன் தன்னை மடிபவராக மட்டுமே எண்ணுகிறோம் ? நாமும் இனி மாற்றி சிந்திப்போம், நமக்கும் மரணமில்லை. வரலாறாக தன்னை செதுக்கிக் கொண்டோர்க்கு ஆம் இனி மரணம் எப்போதுமேல்லை என்பதை அடியாழ மனதுள் பதிந்துவைப்போம்.

ஒரு கம்பன் வாழ்ந்தைப்போல, ஒரு பாரதி, கண்ணதாசன், கட்டபொம்மன் வாழ்ந்தைப்போல, ஒரு சேர(யிள)ன்,  ஒரு சோழ நாட்டார், ஒரு பாண்டியர்க் குடி தன் பேர்சொல்ல வாழ்ந்ததைப்போல நாமும் இக்கால வாழ்வை மிக அழகியல் சேர்த்து நிறைவோடு வாழ்வோம். மனதால் மகிழ்வோம். இவ்வுலகை அறத்தால் வெல்லவும், வள்ளுவம் நிரப்பிப் போற்றவும், மகிழ்வை எல்லோறுக்குமாய் ஏற்றத்தாழ்வின்றி பகிர்ந்து காக்கவும் மனதால் அன்பு நிரப்பித் திரிவோம். நன்றே வாழ்ந்து, மீண்டும் புதிதாய் பிறக்கவே அன்றன்றில் அகக்கண் திறந்தே முடிவோம். நமக்கு முடிவில்லை என்பதை வாழும் தமிழ் காலம் சொல்லட்டும், அவ்வாறே எதிர் வருவோர் நம்மைப் பற்றி எழுதிச் செல்லட்டும். நன்றி. வாழ்க.

பேரன்புடன்…


வித்யாசாகர்  

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s