வனமகன்; ஒரு வாழ்வியலின் அடையாளம்.. (திரை விமர்சனம்)

ந்த உலகம் எதற்காகவோ ஏங்கிக்கொண்டேயிருக்கிறது. எதையோ தேடி தேடி கிடைக்காதுபோகையில் இதுதான் முடிவென கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் ஒரு சிறுபிள்ளையினைப் போல ஏந்திக்கொண்டு மீண்டும் மீண்டும் வெறும் ரணத்தோடும் தோல்விகளோடும் எங்கோ தான் வென்றிருக்கும் தடத்தின் வழியேகூட பயணிக்க இயலாது மீண்டும் குறுக்கே புகுந்து வேறு புறம் வளைந்து தனக்கான எதையோ ஒன்றை எப்பொழுதிற்குமாய் தேடிக்கொண்டே இருக்கிறது இவ்வுலகம்.

இங்கே உலகமென்பது யார், நாம் தான் உலகமாக உருவெடுக்கிறோமா? நாம்தான் இவ்வுலகை செதுக்கவோ அறுக்கவோ செய்கிறோமா? அல்லது இவ்வுலகு இப்படி ஆகிவிட்டமையால்தான் அதன்பின்னே நாமும் அதுவாகப் பயணிக்கிறோமா?

எதுவாயினும் எங்கோ யாராலோ முழுதாய் பிறழ்ன்றிருக்கிறது இவ்வுலகு. அந்தப் பிறழ்வுதனை நேர்த்தியாக்க முயன்றும் அல்லது அடையாளம் கண்டும் தமக்கான சமகாலத்தில் இது இது இப்படியிப்படி நேர்ந்ததென வாழ்ந்ததை பதிவுசெய்துவைத்துப் போக பிரயத்தனப் படுகிறது பலவித இலக்கியப் படைப்புகள். அதில்; ரசனைகளின் கோட்டிற்குள் ஊர்ந்து அறிவுதனை அழகியலோடு அசைத்துக்கொள்கிறது நம் திரைக்கலை படைப்புகள். அங்ஙனம் நமது சமகாலத்திலிருந்து பின்னோக்கிச் சென்று என் பாட்டன்’ முப்பாட்டன்’ முப்பாட்டனின் முப்பாட்டனென எம் பாட்டன் பூட்டன்களின் வாழ்க்கையை பதிவாக்கித் தந்து, இன்றும் காடுகளுக்கு காவலிருக்கும் சாமிகளைப் பற்றி படம் செய்ய அயராது உழைக்கிறது எமது திரையுலகம். அதற்கான நன்றியை நல்ல ரசிகர்களாகச் சொல்வதெனில் இந்த வனமகன் திரைப்படக் குழுவினருக்கும் சொல்லவேண்டும்.

கண்டிப்பாக வனமகன் திரைப்படம் பார்க்காதவர்கள் ஒருமுறை பாருங்கள். அது ஒரு பச்சைமரக் காடு. உள்ளே புகும் சூரியக் கீற்றினைப் போல மனத்தைக் கிழித்துப் போய் உள்ளே குடிகொண்டு விடுகிறான் இந்த வனமகன். என் பிறப்பு குரங்கிலிருந்து வந்ததற்கு சூதானமாக என்னுள் உணர்வுகள் பெரிதாய் புரிந்துவிட ஒன்றுமில்லை; ஆனால் காடுகளைக் காண்கையில் நான் வாரிச் சுருட்டிவந்த எனது கோரைப் புள் பாய்களும் பச்சையிலை ஆடைகளும் அழகழகாய் நெஞ்சைத் தொடுகிறது. உள்ளே காற்று புகுமளவு இந்த உயிர்; அதை வளர்க கூடுகளை எழுப்பிய நகரத்தைக் காட்டிலும் காற்று விரிந்த காடுகளில் மனசுங் கூட இன்னும் பச்சையாகவே இருப்பதை கைக்கண்ணாடியாகக் காட்டிய வனமகன் இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களுக்கு நன்றி.

காணும் திசையெல்லாம் சாபம். காசுக்கு மட்டுமே விலைபோன தன்மானம். குடிக்கவும் நடிக்கவும் வாழ்க்கை. கொள்கையருந்த நாக்கு. கொடிபோல் ஆசைகளுள் படர்ந்திருக்கும் மானது. அனைத்தையும் கொஞ்சநேரம் கட்டிப்போட்டு மனிதர்களைக் காட்ட காட்டிற்குக் கூட்டிப்போன வசி அவர்களுக்கும் காவ்யாவிற்கும் நன்றி.

சுட்டுப்போட்ட மனிதர்கள் நாமெல்லாம். தனது அறிவு, ஒழுக்கம், மானம், வீரம், ஈகை அனைத்தையும் சுட்டுப்போட்டுவிட்ட சுயநலத்தால் சுட்டுக்கொண்ட மனிதர்கள் நாம். வீடு கட்ட ஊரழிக்கும், ஊரழித்து ஒரு வீடு கட்டும் தன்னாசைப் பித்தர்கள். காடழித்து விட்டதாய் மார்தட்டிக் கொள்கிறோம், மூடர்கள் நாம் வீடழிந்துப்போவதை கவனிப்பதேயில்லை.

உண்மையில் பச்சைமரம் தொட்டு இயற்கையின் மீதான நேசத்தோடு நுகர்ந்துப் பார்த்தால் தான் பாதியில் நம் அம்போவென காடுகளை விட்டுவந்த உயிருறவு புரியும். ஆனால் நாம்தான் சிவப்பு ரத்தத்தையே சுவைத்து உண்ணும் விலங்குகளாயானோமே, நமக்கு பச்சைவாசம் எங்கு புரிய?! ஆடை உடுத்திய மேதாவிகளாய் நாம் மறைத்துக்கொண்டது வெறும் நிர்வானத்தை மட்டுமாக இருந்திருந்தால் கண்டிப்பாக காடு புரிந்திருக்கும் நாம் வாழ்வை நிர்வாணப்படுத்தி விட்டு வாழ்ந்த மண்ணையும் திறந்துக்காட்டிவிட்ட கரைதனை சுகிக்கிறோமே; நமக்குத்தான் கொசு கடித்தால் அடி, பாம்பு வந்தால் அடி புலியோ சிங்கமோ வந்தால் சுடு, யானை வந்தால் குறுக்கால குண்டு வையெனக் கட்டளையிட்ட அறிவு நமக்கான எதிரிகள் தந்தது என்பதை காடு சொல்லித் தருவதற்குள் மாடிகளுள் புகுந்துக் கொண்டோமே. இனி நம்மாழ்வார்கள் எங்கிருந்து வருவார்கள் நம்மை முழுதாய் இயற்கையிடமிருந்து காத்துவிட?

இதோ.., வா, இதோ உன் மூச்சுக்காற்று சுவாசி, சுவாசி, நன்கு இழுத்துவிடு, எனப் பேசிக்கொண்டிருந்த காற்றின் மொழியை கலைத்துவிட்டு காடுதனக்கு பாலூட்டிய தாய்மரங்களை வெட்டினோமே. அவைகளின் கோவத்தில் கட்டிய நமது கோபுரங்கள் இனி என்னாகும்? தாய்மரங்கள் ஊமையாகிவிட்டு எந்திரங்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்தோம், எந்திரங்கள் இப்போது ஏதேதோ பேசுகிறது, காரி உமிழ்கிறது. நமக்கு அதன் பாவம் கூட முழுதாய் புரியவில்லை. வெறும் நஞ்சினையும் நோயையும் மாறி மாறி தருகிறதின்று நம் மாடுகளின் நிலம். மாத்திரை உண்டாலும் மரணம், இல்லையென்றாலும் கொஞ்சம் தள்ளி மரணம். மரணத்தை ஒளித்துவைக்க அன்று காடிருந்தது. காட்டில் மரங்களும் மரத்தோடு நதியும், நதி குதித்து குதித்து ஓடி வீழும் அருவியும் இருந்தது. அருவிச் சாரல்களில் நனைந்து பறவைகளும், பறவைகளோடு பேச தாத்தனும் பாட்டனும், பாடம் சொல்ல புலியும் கரடியும் நரியும் சிங்கமுமென ஒரு இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கை அன்று நமக்கு இருந்தது. இறைவனைப்போல காடுகளில் சுற்றிவந்தோம். இன்று  இறைவனை மட்டும் தேடுகிறோம். போங்கள்; முதலில் காட்டை பிடித்துக்கொள்ளுங்கள், அங்கே இறைத்தன்மையும் புரிந்துவிடும் என்று இனி நமக்கு  எவ்வாறு முழுதாய் புரிய? அனால் ஒன்றைச் சொல்கிறேன் புரியும் நண்பர்களே காடுகளை விட்டுவந்த நமக்கு காட்டின் மலையின் நதிகளின் பிரிவு தந்தது தான் இன்று நாம் மருந்துகளால் சேகரித்துவைத்துள்ள விட்டு சுகரும் கேன்சரும் பிரசருமெல்லாம். அதற்கென்ன செய்ய இவைகளிடமிருந்து மீண்டும் தப்பித்து ஓடி எங்கேனும் ஒளிந்துக் கொள்ளத்தான் நமக்கு காடும் இல்லை நேரமும் இல்லையே.

இதென்ன கோமாளித்தனமான எழுத்து? பிறகென்ன நாகரீகம் உனக்கு கசக்கிறதா? இலையுடுத்தி மீண்டும் நீ வாழவா? நானென்ன காட்டுமிராண்டியா ? என்று யாரேனும் ஒருவேளை நினைக்கக் கூடும். நினைத்தால் சென்று அந்த காடுகளை ஒருமுறை அறிவினால் தரிசித்து வாருங்கள். இல்லையேல் இந்த வனமகன் திரைப்படம் பாருங்கள், இந்த வனமகன் திரைப்படம் கூட உங்களை அங்கே கூட்டிப்போகும்.

எனக்கொரு கேள்வி, முதலில் எது நாகரீகம்? பெண்களுக்கு தீங்கு செய்வதா? ஆணையும் பெண்ணையும் சாதியால் பிரிப்பதா? ஏழையை பாழையை ஆணவத்தால் அடிமை என்பதா ? பாட்டனைக் காப்பாற்ற முதியோர் இல்லமும் பேரனை வளர்க்க கிண்டர்கார்டானும், வீட்டில் குடிக்க டாஸ்மாக்கும் வெளியே புடிக்க புகையிலைச் சுருட்டும், பேச்சுத் துணைக்கும் அவனும் அவளும், பொழுது போக அரிசியலும் காதலும், அடித்துக்கொள்ள கோபமும் பொறாமையும், முக்தி தேடி ஆசையும் கோயிலும்; அதற்கிடையே ஒரு ஆய் பாய் சொல்ல அம்மா அப்பாவும் போதுமெனும் மொழி கூட மறந்த வாழ்க்கை நமக்கு நாகரிகமெனில், நாம் இன்றே மாண்டுவிடலாம். நம் பிணத்தில் இனி காடு முளைக்கும் முளைக்கட்டும்.

கணினி ஒரு வளர்ச்சி. குளிரூட்டி ஒரு மாற்றம். கோபுரமும் கண்ணாடி மாளிகையும் விர்ரென்று பறக்கும் விமானமும் ஒரு விஞ்ஞான வரம். வரம் தான். மறுக்கவில்லை. இந்த மன்னாங்கட்டிகளுக்குள்ளேயே நம் வாழ்க்கை யது முடிந்துபோகும் எனில் அது மட்டுமே வரம் தான். ஆனால் நாம் காடைப் போல வீடு, காற்றைப் போல ஏசி, சப்தங்களைப் போன்ற இசையென அசலுக்கு தானே பின் நகல்போல நகர்கிறோம். இந்த மிக்சியும் கிரைண்டரும் போய் நாளை மீண்டும் அம்மியும் உரலும் வந்துவிடுகிறதென்றால் இன்று எதற்கிந்த போலியாட்டம் நமக்கு ? அதற்கு வீட்டுச் சுவர்களை உடைத்துவிட்டு காடுகளுக்குள் குடிபோனால் கோடுகள் மறைந்து தீண்டாமை ஒழிந்து நல்ல சமத்துவமேனும் மிஞ்சாதா என்று ஆசை எனக்கு.  ஆசையைத்தான் என்றோ கண்டா இந்த வனமகன் திரைப்படம் கொஞ்சம் கோபத்தோடு கூட்டி நமை வேறு பாதைக்குள் சிந்திக்க அழைக்கிறது.

அதென்ன இத்திரைப்படத்தில் அத்தனைச் சிறப்பு? இது வரை நாம் காணாத காதலில்லை. நாம் சந்திக்கத மனிதர்களில்லை. நமக்குள் ஏற்படாத புதுச் சண்டையுமில்லை. ஆயினும் இரத்தச் சிகப்பு இதயத்தை பச்சைக் காட்டி மயக்குகிறார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இயற்கையை காண்பது ஒரு அறிவு. அழகு நிறைந்த அறிவு. ஒரு இறைவனைப்போல தன்னை என்ன வைத்து நானே ஜகம், நானே அகம், நானே இந்த வனத்தின் மொத்தமும் எனுமொரு இறைப்பார்வையை இயற்கை தருகிறது. அந்தக் கண்ணில் காணுங்கள் பச்சைமரம் எத்தனை அழகென்று தெரியும். இந்த மரங்களும் கடலும் வானம் உயிர்களும் அழகு அழகு அத்தனை அழகு. கொட்டும் அருவியின் சாரலும், மனத்தைக் கொஞ்சி குலவுபோடும் திரைக்கதையும், வாய்ப்பேசிடாத ஒரு கதாநாயகனின் கண்ணிய மொழியும், கட்டித்தழுவி முத்தமிடலாம எனத் தோன்றும் ஜெயம் ரவியின் நடிப்பும், கையெடுத்துக் கும்பிடக் கேட்கும் கதாநாயகியின் கண்களும் ஆகாகா, இது விலங்குகளின் சரணாலயம் பற்றிய படமல்ல, மனிதர்களின் இச்சைக் கூடி நாம் இடம் பெயர்ந்துவிட்டதன் சாப சாட்சியைப்பற்றி சிந்தைக்கவைக்க ஒரு சின்ன தீப்பொறி தூவுகிறது இந்த வனமகன் திரைப்படம்.

உணர்வில் அதிரும் பின்னிசை, கொஞ்சம் ரசனை வேண்டும் பாடல்கள், நம்பவைக்கும் அதே ஒன்னரை டன் அடி, உனக்கும் எனக்கும் என்றுச் சொல்லி ஏமாற்றும் அதே திரை வஞ்சகமான சில பாடல்களின் வழியே காட்டும் அத்தனைக் கூசிடாத ஆடைக் குறைப்பு இல்லா திரைக்கதை, நிறைத்து சிரிக்கவைக்கும் உழைப்புக் கலைஞன் ஐயா திரு. தம்பி ராமையா, சற்றும் தெவிட்டாத கதை நகர்வொடு, கொஞ்சமும் மாறாத அதே பிரகாஷ்ராஜ், ஒரு மாற்றத்தை நடிப்பை, ஒரு தந்தையின் பாசத்தை ஒற்றைக் கோணல் அழையோடு சேர்த்துக் காட்டிய கதாநாயகி என உள்ளே படம் பார்க்கச் சென்றமர்ந்து வெளியே மின்விளக்கிட்டப்பின் எழுந்து நிற்கும் கடைசி நொடி வரை மிக ரம்மியனமான வாழ்வொன்றைக்கண்டு காடுதனில் வாழ்ந்து வரலாம், வனமகன் திரைப்படம் காண திரையிறங்கிற்குச் சென்றிருப்பின். முடிந்தால் ஒருமுறை அந்தக் காவ்யாவின் கடைசிக் காட்சி நடிப்பிற்கு ஒரு கைகுலுக்களையும், தம்பி ஜெயம் ரவியின் உழைப்பிற்கு ஆரத்தழுவி ஒரு முத்தத்தையும் கூட தந்து வரலாம்.

ஒரு காட்சியில் புலி ஒன்று சீறிவரும். பின் பாய்ந்து கதாநாயகனை தாக்கவரும். அவரும் லாவகமாக தன் கையிலிருக்கும் சிறு கத்தியினால் பாயும் புலிக்கு முதுகுப் பக்கத்தில் ஒரு கொடு போல கிழித்துவிடுவார். புலி எப்போதும் போல் கீழே விழுந்து வலியில் கர்ஜிக்கும். அந்த இடத்தில் புலியைத்தான் கத்தியால் குத்திவிட்டோமே இனி நமக்கென்ன வேலை என்று கதாநாயகன் திரும்பிப் பார்க்காமல் போயிருந்தால் இப்படத்தைப் பற்றி எனக்கு இவ்வளவு பேசவேண்டி அவசியம் வந்திருக்காது. ஆனால் அங்கு தான் தமிழர்தன் வாழ்வுதனை கோடிட்டுக் காட்டியிருப்பார் இயக்குனர். அவன் வலியில் துடிப்பது தன்னைக் கொல்லக்கூடிய புலிதான் என்று தெரிந்தும் கூட அதன் கிழிந்த உடம்பை முள் வைத்துத் தைத்துவிட்டு கூடுதலாக ஒரு பச்சிலை மருந்தையும் ஊற்றிவிட்டு அந்த விலங்கிடமிருந்து தப்பித்து பிழைக்கும் நோக்கோடு மட்டும் நகர்வான். இதுதான் எம் பாட்டன் முப்பாட்டனின் வீரமும் பண்புமென இவ்விடத்தில் மனது மனமும் அறிவும் இலகுவாய் நம்பிக்கொள்கிறது.

இன்னொரு பெரிய மகிழ்ச்சி என்னவெனில் இப்படத்தில் வில்லன் என்று தனியாக யாருமில்லை. பொதுவாக மனிதர்களிடையே கோபமுண்டு ஆசையுண்டு பொறாமையுண்டு வீரமும் சிறந்த அறிவும் உண்டு அதனைத்தையும் வாழ்வினூடாக இயல்போடு கடந்துவிடுகையில் அன்புமட்டும் கோவிலுக்குள் இருக்கும் சாமியைப்போல உள்ளே உயர்ந்து நின்றுவிடுகிறது. அதுவே நாளடைவில் மதிப்பு கூடி கூடி பக்தியாய் பழுக்க பழுக்க பிறகு பலாச் சுளையின் வாசமெபப்டி முற்களைத் தாண்டி வெளிவருவது இயல்போ அப்படி இவ்வுலகின் சூழ்ச்சியைக் கடந்தும் ஒரு அறிவு ஒளி நமை இயக்க மேலோங்கி நமக்குள் நின்றுகொள்கிறது. அதுவும் நமது கண்ணியத்தை பொறுத்து அது இயல்பாகவே நடந்துவிடுகிறது. இதற்கிடையே சூழ்ச்சி எங்கு பிறக்கிறது நம்மில்? எப்போது நாம் நம் உணர்வுகளை ஒத்து பிறரிருப்பதை உணராது தனக்கு மட்டுமே எல்லாம் என்றெண்ணி சுய ஆசைக்கு முக்கியத்துவம் தந்து சுயநலத்தால் மேலெழுந்து வளர்ந்துவிட்ட ஆணவத்தில் தலை நீட்டுகிறோமோ அப்போது தான் அங்கே ஒருவரை ஒருவர் கொள்ள ஆசையும் சூழ்ச்சியும் பிறக்கிறது. அந்த சூழ்ச்சியைக் கையாள்பவர் வில்லனாகிறார். ஆனால்,

இத்திரைப்படத்தில் அப்படி யாருமே இல்லை என்பதே ஒரு உளவியல் உத்தி. காரணம் தாயின்றி வளர்ந்தததால் காவ்யா அடமாக வளர்கிறாள், நண்பன் விபத்தில் இறந்ததை உணராமல் கொலையென்று நம்பி  அவனின் தம்பியைக்கூட ஒதுக்கிவிட்டு தனது நண்பனின் மகளை தன் மகளாக வளர்க்கிறான். ஒரு கட்டத்தில் தனக்கென்று இருந்தவளுக்கு அருகில் இன்னொருவன் நிற்கிறானே எனும் கோபத்தில் பொறாமை தலைக்கேறி காமம் முன்னே வந்துவிடுகிறது பிரகாஷ் ராஜ் மகனுக்கு, அவன் கீழ்த்தரமாக நடப்பதாக காவ்யாவிற்கும் வசி எனும் ஜெயம் ரவிக்கும் கோபம். அதனால் ஒரு காட்சியில் துவம்சம் செய்யப்பட்டவனின் பின்னால் தன் மகள் போகிறாளே என்று காவ்யா மீது பிரகாஷ் ராஜிற்கு கோபம், தன்னிடமிருந்து தப்பித்து தப்பித்து தண்ணிக் காட்டுவதால் வனத்துறை இலாக்கா காவலாளிக்கு  ஜெயம் ரவியின் மேல் கோபம். தன்னைக் காப்பாற்றியவனைக் கொள்ள வருகிறார்களே என எதிர்த்தவர் மீதெல்லாம் புலிக்கு வெறி ஏற மொத்தத்தில் எங்குமே மனிதர்களும் மிருகங்களும் சூழ்சிகளைச் செய்வதில்லை எல்லோருமே உணர்ச்சிவயப் படுகிறார்கள் பின் உடைந்த உணர்வுகளால் பிரிந்துப் போகிறார்கள் என்பதனை அழகாக இப்படத்தில் காணலாம்.

சூழ்சிகளை; ராசதந்திரமெனும் பெயரில் அரசும், அரசென தனையெண்ணி ஆளும் பல சர்வாதிகார செருக்குநிறை தலைமையுமே செய்கிறது என்பதை பூடகமாக அரிய முடியும் இப்படத்தின் வழியே. இதற்கிடையே கூட ஓரிடத்தில் காவ்யா சென்று தனது சித்தப்பாவைச் சந்திக்கிறாள், அவர் கொலை என்று இதுவரை நம்பியிருந்ததை இல்லை அது விபத்து அவர் எனது அண்ணன், இவர்கள் உனது சகோதரிகள் நீ எனது மகள் வா வந்து கட்டிக்கொள் எனக்கு பணம் வேண்டாம், நீ அனாதையில்லை உனக்காக நாங்கள் இருக்கிறோம், இந்தக் குடும்பம் இருக்கிறது, வா வந்து இந்தக் காட்டிற்கு ஆழகைக் கூட்டென அழைக்கையில் காவ்யா பேசும் விம்மலும் வியப்புமான மௌனமான உடல்மொழி அத்தனை அழகு. கண்களால் மாறி மாறி உறவுகளை அவர் ஆரத்தழுவிக்கொள்ளுமொரு காட்சி காண காண எல்லோருக்குமே பிடிக்கும். மனது கனம்தனை களையும்.

எனினும் இத்தனைப் பெரிய வெளியின்; ஒரு வனத்தின் கதையில்; நம் கதாநாயகன் அன்புசால் ஜெயம் ரவிக்கு எங்கும் வசனம் கிடையாது. ஒரேயொருமுறை காவ்யா என்கிறார், அதைக்கூட அவர் அவரை மதிப்பு தாண்டி அன்பினால் ஏற்று உரிமையாய் அழைப்பதாய் இயக்குனர் அங்கே பதிவு செய்ய அக்காட்சியை பயன்படுத்தியிருக்கிறார். பொதுவில் காவ்யாவும் சரி வசி எனுமந்த ஜராவும் சரி நமபத் தகுந்த உடல் மொழியும் நங்கூரமிட்டு மனத்தைக் கிள்ளிக்கொள்ளுமளவிற்கு கண்கள் பேசுதலும், உணர்வினால் உயிர்களின் பச்சை வாசத்தைப் பற்றி வாழ்ந்துக் காட்டியிருப்பதும் அடடா அடடா அத்தனையும் அவர்களின் உழைப்பு. இயக்குனருக்கும் நடிகர்களுக்கும், இதில் பங்கேற்ற இன்னபிற கலைஞர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். காரணம், இப்படத்தில் எல்லோருமே பின்னிப் பினைந்துபோனதொரு கதையாழத்தை நமக்குக் காண்பிப்பார்கள். உண்மையிலேயே நமக்கொரு ஒரு சுகமான அனுபவத்தை தரும் களம் இது. காடு குறித்துப் பேசும் நல்லதொரு கதை இந்த வனமகன்.

இப்படிப்பட்ட நல்லதொரு திரைப்படத்திற்காக உழைத்த அருமை இயக்குனருக்கும், அவருக்குப் பின்னே உழைத்த அனைத்து நல்ல கலைச் செல்வங்களுக்கும், குறிப்பாக ஓரிரு காட்சியில் வந்துபோனாலும் பழுதின்றி நடித்துக்கொடுத்த அன்புத்தோழர் திரு. அஜயன் பாலா அவர்களுக்கும் முதிர்ச்சியை தனது அனுபவத்தால் நடிப்பால் திறனால் வென்றெடுக்கும் ஐயா திரு. தம்பி ராமையா அவர்களுக்கும், எப்போதுமே தனது நடிப்பினால் கிடைக்கமிடத்தில் யாராலும் அசைக்க முடியதளவிற்கு தனக்கானதொரு சிம்மாசனத்தைப் போட்டு அமர்ந்துகொள்ளும் நடிப்புச் சக்ரவர்த்தி திரு. பிரகாஷ் ராஜ், ராஜகிரீடத்தை தனது கம்பீர நடிப்பிலும் வைத்திருக்கும் ஜாராவின் அப்பா, ஜாராவாக வந்து நமக்கெல்லாம் காடுதனை போதிக்கும் உண்மைக் கதாநாயகன், மனதையும் தோற்றத்தையும் அழகாய்க் கொண்ட சகோதரன் திரு ஜெயம்ரவி போன்றவர்களுக்கும் முழு பாராட்டுக்களும் மனது மெச்சும் நன்றியையும் கூறிக்கொள்கிறேன்.

கடைசியாக ஒரு விண்ணப்பம், இன்றிரவு உறங்கச் செல்லும் முன் சற்று யோசியுங்கள்; காடுகளுக்கு இனி காவலிருக்கப் போவது யார்..? காடுகளில் இருக்கும் விலங்குகளைக் கொன்றுவிட்டு கேன்சரிடமிருந்தும் சுகர் பிரசர் மற்றும் பொய்மருத்துவம் போன்ற பல பூதங்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றி நம் பச்சைமர வீடுகளை நமக்கு மீட்டுத் தரப்போவது யார்? நதியும், வனமும், மரமும், சகோதர விலங்குகளும், மலர்களும், பறவையும், கனியும் களங்கமில்லாக் காற்றும் இனி யார் கொண்டுவந்து நமக்கு தரப்போகிறவர்? யாருமாயும் இருக்க அதிக வாய்ப்புகளில்லை. நாம் தான் இனி திரும்பிச் செல்லவேண்டும். ஒன்று காடு நோக்கிப் பயணிப்போம் வாருங்கள், அல்லது வீடுகளின் சுவற்றை உடைத்து வனப்பயிர் இட்டு மண்ணையும் மனதையும் இயற்கையின் பச்சை பச்சையோடு நிரப்புவோம் கூடுங்கள். யாரையும் இனி எதிர்ப்பார்க்க நேரமில்லை, காலம் இப்படித்தான் காலருந்துக்கொண்டே போகும், கரோனா போல ஒரு மரோனா வரும், மரணம் எளிதாய் வரும், எனவே நாம்தான் நம் கையினால் ஆனதைக் கொண்டு நாளை மாறுமொரு நற்சிந்தனை மிக்க சமுதாயத்திற்கென சுயநல நஞ்சுதனை அகற்றிவிட்டு பொதுநல நோக்கத்தோடு பாடுபட தயாராகவேண்டும்.

இது நம் அனைவருக்குமான மண். நமது தாயகம் இந்த பூமி. நமக்கு ஒரு நாடோ மண்ணோ போதனையோ எல்லாம் நிறைவாகாது; நாம் எங்கும் நீண்டு பரந்துவிரிந்த உலகைப்போலே எண்ணத்தால் மனதால் அறிவால் இணக்கம் கொள்ளத்தக்க பேராற்றல் கொண்டவர்கள். இந்த பூமியை உலகை மண்ணை எந்தவொரு பாகுபாடுமின்றி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது. எனவே, இன்று உறங்கும் முன் இதுகுறித்து சிந்தியுங்கள், இன்றே நம்முள் எல்லோரும் ஒன்றென்று உயர்ந்துநிற்கும் நாமென்னும் போதனையை நிரப்புங்கள். அதற்கான முதல் விதையை இன்றே இப்போதே நெஞ்சில் விதைத்துக் கொள்ளுங்கள். வாருங்கள், ஒரு காட்டிற்கான முதல் துளிர் நம் வீட்டிலிருந்து துளிர்க்கட்டும். அதற்கென எதுவாக நம் மனக் கதவையும் மண்ணின் மகத்துவத்தையும் இனி நன்றியுணர்வால் திறந்து வைப்போம். வெறும் சன்னல்களை திறந்துவைத்து காற்று வாங்கிய அறிவை இனி மறப்போம். கடப்போம். முறையற்ற வாசல்களை உடைதெடுப்போம். வனாந்திரத்தின் காற்று இனி நம் அனைவரின் மீதும் மிக ரம்மியமாக வீசட்டும்.

நாள்பட நாள்பட நம்முயற் சிந்தனைகளாலும் ஒற்றுமை உணர்வினாலும் இக் காற்று வெளியெங்கும் மகிழ்வது பொதுவாக நிறைந்து எதிர்வரும் மழை நம் எல்லோருக்குமாய் பொதுவென பொழிந்து துளிர்கள் வனத்தின் வண்ண ஆடைகளாய் விரிய அதிலிருந்து முளைக்கும் விதைகளெல்லாம் தனது ஓடு உடைத்து விண்ணைப் பார்க்கையில் நமக்கான சூரியக் கீற்றும் நமக்கான விடியலைக் கொண்டுவந்து தரட்டும் உறவுகளே.

காடு வீடானதால் தான் மனிதர்கள் சாதியாகவும் மதமாகவும் இனமாகவும் பிரிந்துவிட்டோம். இனி வீடுகளை வனத்தின் எழில்கொண்டு அமைப்போம், அதனால் உடைந்து விலகும் இடைச் சுவர்கள் நம் மனச் சுவர்களாய் உடைந்து தெறிக்கட்டும். விடுதலையென்பது உயிர்க்காற்று பருகும் அனைத்திற்கும் பொதுவானது. நன்மை  என்பது அனைவருக்கும் ஒன்றாக நிகழ வேண்டியது. மகிழ்ச்சி எனில் அது உயிர்கள் அனைத்திற்குமான மேல்கீழ் விகிதாச்சாரமற்று நம் உள்ளத்திலிருந்து சுரக்கும் விடுதலையின் சாட்சியாக அமையவல்லது. அத்தகு மகிழ்வால்  நாம் அனைவரும் உண்மையில் ஒன்றாக நிறைவோமெனில்; தனது, தான், நான், எனது என்னும் சுயநலம் வரும் போகும் கடற் சுழற்சியினைப் போல அதுவும் அவ்வப்பொழுது வந்து வந்து போகும். ஆனால் ஒரு கட்டத்தில் அது போயேவிடும். நான் எனும் அவசியமும், எனக்கான என்பதன் தேவையும், எனக்குள் எடுக்கும் பசியும் எல்லோருக்கும் பொது என்பது எல்லோருக்கும் புரிகையில் நாளை அகன்ற வனம் ஒன்று மீண்டும் நம் வாழ்வோடு அழகாக பச்சைப் பூத்து குலுங்கலாம்.  அதில் நதி பேசும் மொழி, பறவைகளின் பாட்டு, மரங்களின் கதை எல்லாமே மனிதர்களோடும் விலங்குகளோடும் சேர்ந்ததாய் அமைந்து நாம் ஆனந்தக் கூத்தாடலாம். அந்த நமது வாழ்க்கை வள்ளுவம் சொல்வதைப்போல அறிவாலும் உணர்வாலும் நன்றியாலும் நிறைந்து நிறைந்து இன்னும் இன்னும் கூட இனிப்பாய் அமையலாம். அத்தகு முழுமை மிக்க வாழ்வொன்றே அனைவருக்குமாய் அமைய எனது வாழ்த்துகள் உறவுகளே…

அதோடு, நற்சிந்தனைகளை வழங்கிய நம் “வனமகன்” திரைக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியும் வணக்கமும்!!

பேரன்புடன்…

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in திரை மொழி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s