தொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை..

எங்களின் அன்பிற்குரியவள் தொத்தா ராஜலக்ஷ்மி..

நான் அன்றும் இறந்திருக்கவேண்டும்
இருப்பதைத் தொலைத்த அந்த வலி
அத்தனை கனமானது;

விமானமேறி நாடுகடந்து
நான் ரசிக்கும் தெருக்களையெல்லாம் வெறுத்துக்கொண்டு
வாய்மூடி உயிர்தேம்பியழுத கணமும்

அவளை ஒருமுறையேனும் கண்டுவிட ஓடிய
ஓட்டமும் தவிப்பும்
எனை எரிக்கும்வரை எனக்குள் வலியோடிருக்கும்

வானம் கிழிவதைப் போல அன்று
அறுபட்ட மனதில்
அவள் அப்படி வலிப்பாளென்று நினைக்கவேயில்லை

காதாழம் சிதைக்கும் மேளசப்தத்தை நிறுத்திக் கொண்டு
அவளை உயிரோடு தேடும் அழையை
என்னால் அடக்கவே இயலவில்லை

அவளின் மூடிக் கிடக்கும் கண்கள் திறந்து
ஒரேயொரு முறை எனைப் பார்க்காதா எனக் கெஞ்சிய
தருணம்  வாழ்வின் அகோர முகத்தைக் கொண்டது

கண்ணடைத்து வாய்கோணி ஐயோவென்று
வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுத அழையில்
நான் குடித்துவளர்ந்தப் பாலின் வாசம்கருகி எனை உயிரோடு கொன்றது

தொடக் கூசும் கைகளில் உயிர்தடவி
அவள் பாதம் தொட்ட இடத்தில்
என் காலத்தைப் போட்டுடைக்க உயிரற்றுப் போனாளேயவள்

மெய்யுதிர்த்து விரல்கட்டவிழ
உயிர்மம் வெடித்து விலகும் உயிரின்
அறுபடும் நிலையை
அவள் இறந்தாளென்று கேட்டதுமே உணர்ந்தேன்

ஊரழ வீடழ நானுமழ
எல்லோரும் கதறுமந்த காற்றின் கீறலுறும் இடைவெளிக்குள்
அவள்புகுந்து
மீண்டும் உடம்பாய் எழுவாளென
அவளை  எரிக்கும்வரை நினைத்திருந்தேன்

அம்மா  என்று அழைக்கயிருந்த வாயில்
அம்மாவெனக் கதறியத் தருணம்
எனைக் கொன்று கொன்றுப் போட்டது

சோரூட்டிய நினைவையும் தாலாட்டிய உணர்வையும்
நேற்று எதிரே நின்று சிரித்த அந்த முகத்தையும்
ஒருநாளில் அவளுடம்போடு எப்படி எரித்துவிட ?

பேசப் பேசக் கேட்டதும்
கேட்க கேட்கப் பேசியதும் நினைக்க நினைக்க உள்ளே
உயிரெல்லாம் அணைகிறதே (?)

அவளின்றி இல்லை அவளின்றி இல்லை
என்று வாழ்ந்த இந்தப் பிறப்பை
இன்னும் யார்யார் மரணத்திற்குப் பின்னும் வைத்திருக்கவோ ?

வாழ்வது கொஞ்சம் சாவது அதிகமெனும் பயம்
உயிர்விளக்குகள் அணையும்
ஒவ்வொரு
வீட்டின் இருண்ட தருணத்திலும் வருகிறது
பின் மறைகிறது

இதோ இன்று மீண்டும் நாங்கள் இருண்டுப் போயிருக்கிறோம்
அவளில்லை,
‘இருக்கிறாள் என்று கண்மூடிக் கொண்டும்
இல்லையென்று கதறிக் கொண்டும்
அடங்கிய மேளசப்தத்தின் மிரட்சியிலிருந்து
மீளாமல் நீள்கிறது எங்கள் வாழ்க்கை; அம்மாயின்றி!!

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to தொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை..

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    எனைப் பெற்றவள் உயிரோடிருப்பினும் வளர்த்தவளுக்கான கண்ணீர்வறண்ட வார்த்தைகள் இவை..

    Like

  2. pattukkottai sathya சொல்கிறார்:

    ஒரு வளர்ப்பு அம்மாவை பிரிந்துவாடும் அய்யாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      சிற்றன்னை சத்யன். அம்மாவின் ஒரே தங்கை. சிறுவயதில் இருந்தே எங்கள் மீது, குறிப்பாக என் மீது அத்தனை பாசம் கொண்டவர். என்னை அவரின் தாயென்றும், வெங்கட்டப்பா என்றும் சொல்லி என் அன்பிற்காக விழி பூக்க காத்திருக்கும் ஒரு ஜீவன். அவரின் இழப்பைப் பற்றியோ பிரிவைப் பற்றியோ எண்ணிடாது இன்றும் அவரின் நிம்மதி குறித்தே எண்ணம் கொண்டுள்ள ஒரு சமயம் இப்படி திடீரென எதிர்பார்த்திராதா வேளையில் விட்டுப்போனது பெரிதாய் வலிக்கிறது. அவரை இல்லை என்று எண்ணுவதில்லை. நாங்கள் எப்போதும்போல் அவரோடு இல்லாமல் இங்கு குவைத்திற்குப் பிரிந்து வந்ததாகவே எண்ணி காலம் கழிக்க நினைக்கிறேன்..

      எப்படியும் அவர் எங்களோடு இருப்பார்.. இருக்கமுடியும் எனில் வாய்ப்புண்டெனில் நிச்சயம் எங்களோடுதான் இருப்பார்..

      Like

  3. ashok manali சொல்கிறார்:

    நானும் உன்னுடைய வலியை உணர்கிறேன்..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      என் நண்பனாயிற்றே; உனக்கும் வலிக்காமலாப் போகும் அசோக் (?) அன்றைய உன் அருகாமை உண்மையிலேயே நட்பின் அருமையை உணர்த்தின. நான் சாய்ந்தபோது நீ தந்த உனது நட்பின் தோள் நன்றிக்குரியது நண்பனே.. உயிருள்ளவரை நினைவில் இருப்பாய்!

      வாழ்வின் கனத்தை சிலநேரம் சுமக்க முடிவதில்லை, என்றாலும் எழுத்துகள் தாங்கிக்கொள்கின்றன என்பதில் லேசுபட்டுவிடுகிறது மனசு, மீண்டும் துவங்கிக்கொள்கிறது வாழ்க்கை, இயற்கையின் நியதியை மறுக்கவேமுடிவதில்லை அசோக்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக