வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை – 11 – பொறாமை)

னிதனின் கேடிலும் கெட்ட கேடு பொறாமைதான். மனிதன் பிறக்கையிலேயே தன்னை அழிப்பதற்காக தானே தன்னோடு கொண்டுவந்த மிகப்பெரிய விஷமெனில் அது பொறாமையுணர்வாகத் தானிருக்கும். வெற்றி புரிபடாத நிலையிலும், வெல்வதன் அவசியத்தை உணராமலும், தனது இயலாமையை சரிசெய்துக் கொள்ளமுடியாமல் தன்னைத்தானே கொன்றுவிட தனையறியாமலே தீர்மாணித்து தன்மீதே நெருப்பள்ளி போட்டுக்கொள்ளும் செயலே பிறர்மேல் பொறாமை கொள்ளும் செயலும்.

ஆனால் அந்தப் பொறாமையென்ன சும்மாவிடுமா? முதலில் பிறரை நோகடித்து, கடைசியில் தன்னையும் அழித்து, தனது சுற்றத்தையே ஒன்றுமில்லாதவாறு அழித்துவிட்டு வெறும் தோல்வி கரிந்துப்போன சாம்பளாகவோ அல்லது மனிதத்தை ஒழித்துவிட்ட ராட்சசப் பசியாகவோ மட்டுமே மிஞ்சிப்போகும்.

அத்தகைய பொறாமையால் அழிந்தோர் எண்ணற்றோர். அப்படி எரிந்துக் கருகிய மனதில் மரணம் முட்டி மிஞ்சியச் சாம்பலில்கூட பொறாமை நீருபூத்து சுடும் நெருப்பாகவே கனன்று பிறரின் நல்லெண்ணங்களைக்கூட எரிக்கத்தக்க கடுந் தீஞ்செயலாகவே மாறிவிடுகிறது.

அதேவேளை பொறாமையற்றோரைப் பாருங்களேன்; பொறாமையில்லா மனசு ஒரு பூஞ்சோலை மாதிரி. அங்கே அன்பின் காற்று சில்லென்று வீசும், பெருந்தன்மையின் கடலென அவரின் மனசு விரிந்திருக்கும், கேட்டதைக் கொடுக்க இயலாவிட்டாலும் அவரால் நினைத்ததை செய்து தரமுடிகிறது. அவருக்கென மரங்கள் தனியே அசைகின்றன. சுடும் சூரியன்கூட கொஞ்சம் ஒதுங்கி மேகத்துனுள் மறைந்துக்கொண்டு அத்தகையோரை சுடக்கூட அஞ்சுகிறது. தெளிந்த நீரோடையில் தெரியும் சிறுகல் மற்றும் மணலைப்போல, வெள்ளெந்தியாய், பார்ப்பவருக்க்கு அவரின் முகத்தைக் காட்டும் கண்ணாடியைப் போல சுத்தப்பட்டுவிடுகிறது பொறாமையில்லா மனசு.

உண்மையில் பொறாமையின்றி வாழ்வது எத்தனை இனிமை தெரியுமா? போகட்டுமே’ அவள்தானே என்று விட்டுத் தருதல் எத்தனைப் பெரிய சுகம் தெரியுமா? என் நண்பன் வாழ்ந்தால் நான் வாழ்ந்ததைப் போல மகிழ்வேன் என்று சொல்ல பொறாமையில்லா மனசு வேண்டியிருக்கு. என் தம்பி வாழனும்’ என் தங்கை வாழனும்’ என்னக்கா பூரித்து வாழனும்’ என்னோட அண்ணா பெரிய ஆளா வரணுமென்று நினைக்க மனதிற்குள் எவ்வளவு கூடுதல் அன்பு வேண்டுமோ அவ்வளவு அன்பினையும் மனதில் தேக்கிவைத்துக்கொள்ளுங்கள்; பிறகு பாருங்கள், பொறாமை தானே நமைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்.

சூழ்நிலையின் புரிதலொன்றே பொறாமையொழிக்கும் பேராயுதமாகும். ஒரு காரியத்தை தன்னால் செய்திட முடியாது என்றெண்ணுகையில் செய்பவர்மேல் ஆற்றாமையானது வெருப்பாகப் பொங்கியெழுகிறது. தன்னால் முடியாவிட்டாலென்ன பிறர் செய்துவிட்டனரே என்று ஆசுவாசப்பட்டுக்கொள்கையில் மனசு லேசாகிறது. அல்லாது திறமையைப் பாராட்ட மனமில்லாதபோது சாதித்துச் சிரிப்பவரைக் காண்கையில் கோபம் வைக்கோல் எரிக்கும் தீயென மூளுகிறது.

ஒரு செயலை நான் செய்ய எத்தனை பிரயாசைப் படுவேனோ அதைத் தானே அடுத்தவரும் செய்திருப்பார் என்று சற்று யோசிக்கத்தயங்கும் மனதில்மட்டுமே பொறாமை முள்குத்தி நம்மை மனிதத்தின் முடமாக்கிப் போடும்.

முதலில் தனை நம்பும் அளவு நாம் பிறரையும் நம்ப வேண்டும். எப்படி ஒரு காரியத்தை நாம் எல்லோரைவிட சிறந்ததாக செய்ய எண்ணுகிறோமோ அப்படி அவரும் எண்ணுவார் என்பதை மனதளவில் ஏற்றல் வேண்டும். வெறும் மனிதரை நம்பும் வாழ்க்கையில் நீயா நானா எனும் சிக்கல் இல்லாமலில்லை, அதேநேரம் நமையெல்லாம் இயக்குமொரு மூல சக்தி, எல்லாவற்றையும் கொல்லவும் வெல்லவும் முடிகிற இயற்கை சக்தியொன்று உயர்ந்துநிற்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சுட நினைத்தால் சுடும் சூரியனையும், பொங்கி வெளியேற நினைத்தால் பாய்ந்தோடும் கடலையும், பிளந்து விழுங்க நினைத்தால் வாய்மூடிடமுடியாத பூமியையும் மீறி எப்படி நாம் நம்மை அத்தனைப் பெரியவன் என்று மெச்சிக்கொள்ளமுடியும்? ஆக நம்மை மீறிய சக்தி கடலாக காற்றாக வானமாக பூமியாக நெருப்பாகவும் பல உள்ளதெனில் அந்த ஐம்பெரும் சக்தியை தனக்குள் அடக்கியுள்ள ஒவ்வொரு உயிரும் அதற்கு நிகரான சக்தியையும் ஒன்றைப்போல் மற்றொன்றும் கொண்டுள்ளதுதானே? அதை உணர்ந்தவர் நானாயினும் நீங்களாயினும் ஏன் எவராயினும் இன்னொருவரை அவர் வெல்லத் தக்கவர் தானே? ஒரு தாயின் வயிற்றில் பத்து பிள்ளைகள் பிறக்கிறது எனில் அது பத்துமே பத்து வரம் என்பது இயற்கையாய் நடப்பதொன்றே. பிறகு அதில் ஒன்றுக்கு வானம் போல பெரிதாகச் சிந்திக்கும் மூளை உண்டெனில், ஒன்றிற்கு பூமியைப் போல தாங்கும் பலமும் இருக்கத்தானே செய்யும்?

ஆக ஒரு தாயின் பிள்ளைகள் பலர் என்றாலும் அந்த பலரில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிறப்பு இருப்பதை நாம் அறிந்தவர்களெனில் நாமெல்லோருமே பூமிப் பந்திலிருந்து பிரிந்ததிலிருந்துப் பிறந்த, உயிர்கொண்ட சிறு சிறு சில்லுகள்தானென்பதையும் ஏற்றல் வேண்டும்.

பிறகு, எல்லோருமே இந்த ஐம்பெரும் பூதங்களில் அடக்கமெனில் யாரிங்கு பெரியவர் யாரிங்கு சிறியவர்? நமக்குள் ஏற்றத் தாழ்வே அதை நாம் சரியாகப் புரியாதவரைத் தானே? அது புரிந்து நாமெல்லோரும் ஒன்றென அறிகையில் நமக்குள் பேதமெப்படி எழும்?

ஆனால் எழுகிறதே;

நமக்குள் பலவாறான பேதங்கள் எழுகிறது; காரணம் மனிதன் தன்னைத் தான் மட்டுமே பெரிதாக எண்ணுவதால் அங்ஙனம் நடக்கிறது. தனக்கருகில் உள்ள உயிர்க்கும் தனக்குமான பந்தம் யாதெனப் புரியாமையால் பேதங்கள் எழுகிறது. ஒரு விலங்கு நமை அடிக்கையில் அது நமக்கு எதிராவதைப்போல, ஒரு மனிதன் சில பொருளை எடுத்து தனதென அடக்கிவைத்துக்கொள்கையில் அவர் எதிர்த்திசையில் சென்று விழுகிறார். ஒரு வெற்றி தனை விட்டுப்பிரிகையில் அது இன்னொருவரின் சொந்தமாகிறது. அந்த தனக்குக் கிடைக்காத வெற்றியை அவன் மட்டும் வைத்துள்ளானே என்று எண்ணுகையில் அங்கே பொறாமை பொங்கிவிடுகிறது.

அப்படிப் பொங்கும் பொறாமையை வேரறுக்க இரண்டு வழியுண்டு. அதில் ஒன்று தன்னையும் நம்புவது. எல்லாம் ஒன்றெனில் அவனால் முடிவது நம்மாலும் முடியுமெனில் அந்த முடியுமெனும் நம்பிக்கையை இதயம் நிறைத்து வைத்துக்கொள்ளல் வேண்டும். அந்த நம்பிக்கைதான் நம்மை பலப்படுத்தும். வெல்லவைக்கும். வென்றவரின் வெற்றி பிறகு தன்னடக்கத்தையும் தரலாம். இரண்டாவது எல்லாம் ஒன்றெனில் பிறகு அவன் வென்றாலென்ன அல்லது நான் வென்றாலென்ன? முயன்றவன் வென்றான், முடிந்தவன் ஜெயித்தான். திறமையுள்ளவன் முன்வரட்டுமே என்று விலகி வென்றவனைப் பாராட்டுகையில், அந்தப் பாராட்டும் மனதைவிட்டு பொறாமை தானே விலகிக் கொள்கிறது.

உலகம் மிகப் பெரிது உறவுகளே, உலகில் நமக்கு வேண்டுமெனில் எல்லாமே கிடைக்கும். உலகில் அனுபவிக்க நமக்கென நெடுங்காலம் மிச்சப்பட்டுக் கிடக்கிறது என்பதை ஒரு பார்வையாக வைத்துக் கொள்ளுங்கள், அதேவேளை

உலகம் மிகச் சிறிது. உலகில் கிடைக்கும் ஒன்றுமே தன்னோடு நிலைக்கப் போவதில்லை. வாழ்க்கை என்பது நிற்குமொரு நொடி மூச்சிற்குள் அடங்கிப்போகும். ஒன்றுமே நிரந்தரமில்லை. பிறப்பும் இறப்பும் மாயை. எல்லாமே உண்மையற்றது. போலியானது. இந்தப் போலியான தோற்றத்தில் திரிந்து நமது ஆத்மாவை ஏமாற்றி அலையவிடுவதென நம் வாழ்நிலையைச் சுற்றி எண்ணற்ற சாத்தியக்கூறுகளுண்டு. எனவே எதன்மீதும் பற்று கொள்ளாதீர்கள் என்பதொரு இரண்டாவது பார்வை.

இந்த முரண்பட்ட இரண்டுப் பார்வையினகத்தும் பொறாமையில்லையென்பதை அறிவீர்கள். காரணம், ஒன்று நம்மை நாம் நம்பவேண்டும் அல்லது பிறரை நம்பவேண்டும். எல்லாவற்றிற்குமான எல்லாவற்றையும் மிஞ்சும் சக்தியொன்று உண்டென்று நம்புதல்வேண்டும். தனக்கு மேல் எவனுமில்லை என்று எண்ணியநொடியில் வீழ்ந்தோரை தான் நாம் நிறைய நம் கண்ணெதிரே காண்கிறோம்.

எனக்குக் கீழுள்ளோர் என்றென உலகில் எவருமிலர். எவருக்கும் என் இடம் இலகுவாய் வாய்க்கும். என்னை வெல்லுதலே எனக்கு உசுதமில்லையெனில் பிறகெங்கு நான் பிறரை வெல்ல? பிறகெங்கு நான் பிறரை அவமதிக்க?

பிறகு பிறர் எனும் அனைவரும் அவமதிக்க முடியாதோர் எனில் எல்லோருமே மதிக்கத் தக்கவருமில்லையா? ஆமெனில் பிறகு எவராலும் என்னை வெல்லயியலுமெனில் நம்மில் யார் வென்றாலென்ன?

வென்றவரை வாழ்த்துவதும், வெல்பவரை எண்ணி மகிழ்வதுமே என் முன்னோர் எமக்குக் காட்டிய வழியல்லவோ?

யதார்த்தத்தில், வெல்லாதவரைக் கூட ஒரு கைகொடுத்து மேலே தூக்கி என் அளவிற்கேனும் ஏற்றுவது மனிதனான என் கடமையென்றே எண்ணுகிறேன். வெல்பவர் எவராயினும் அது நமக்கான மகிழ்ச்சி. வீழ்ந்தவரே முழுதும் பரிதாபத்திற்குரியவர்.

எனவே எவரும் எனக்கு எதிரியிலரெனும் மனநிலையைக் கொண்டிருந்துப் பாருங்கள். பிறகொரு புது உலகமும் உங்களுக்காய் பிறப்பதையறிவீர்கள். ஒரு தனி வெளிச்சம் உங்களுக்காய் பீறிட்டு முகமெங்குமடித்து பிரகாசிக்கச்செய்வதை உணர்வீர்கள்.

வீழ்கையில் தூக்கிவிடும் கையினாலும், வாழ்கையில் கண்டு வாழ்த்த முனையும் மனதாலும் மட்டுமே பொறாமையையொழிக்க முடியும். அவரால் மட்டுமே நம்பிக்கையை எவர்மீதும் ஏற்படுத்திட இயலும். எவர்மீதும் நம்பிக்கையை ஏற்படுத்தத் தக்க நிலையும், எவரின் வெற்றியைக் கண்டு பொறாமையடையா குணமும் போன்றவையே நமை இன்னும் உயர்ந்த இடத்திற்கு கொண்டுபோய்ச் சேர்க்கும்.

நானிலம் சூழ மதிக்கும் நற்பேரென்பது சொட்டும் வியர்வையில் மட்டுமில்லை, விட்டொழிக்கும் தீயகுணங்களால் சுத்தமடைந்த பரிசுத்தமான மனதிலும் உண்டென்பதை மானசீகமாய் உணருங்கள்.

இது என்னாலும் முடியும் என்று நம்புமிடத்திலோ, அல்லது இதை அடைந்தவன் மகிழட்டுமே அதனாலென்ன என்று பெருந்தன்மை  பொங்க விட்டுக்கொடுக்குமிடத்திலோ பொறாமை பெரிதாக தலைநீட்டிக் கொள்வதில்லை.

தான் என்ற பெருத்த சுயநலம், தனக்கு கிடைக்கவில்லையே எனும் ஆற்றாமை, தானுண்ணாதபோது அவனுக்கு உண்ணக் கிடைத்துள்ளதே; நாமுண்ணா விட்டாலென்ன அவன் உண்பதையாவது பிடுங்கிவிடவேண்டாமா என்றெண்ணும் வக்கிரம் நிறைந்த மனோபாவம்தான் பொறாமையின் முதல் ஊற்றாகிவிடுகிறது.

புரியத்தெரிந்த மனிதருக்கு பொறாமையும் புரியும். அதை எப்படி அடக்கி ஆளுவது என்றும் புரியும். பொறாமையென்பது எலும்புப் போல, சதையைப் போல, இனிப்பு மற்றும் கசப்பையும் அறியத்தக்க இயல்பான உணர்வொன்றை மனிதன் பெற்றிருப்பதைப் போல பொறாமையும் மனிதனோடு இயல்பாய் உள்ளதொரு சாதாரண அருவறுத்து வெறுத்தொதுக்கக் கூடிய ஒரு ராட்சச குணம் அவ்வளவு தான். ஆனால் அதன் இருப்பின் அளவு அல்லது பொறாமை கொள்ளும் குணத்தை குறைத்துக் கொள்ளாததிலுள்ள வீரியத்தின் வேறுபாடு ஓரிடத்தில் சிறுத்தும் ஓரிடத்தில் பெருத்தும் போகுமிடத்தில் பொறாமையும் தலைவிரித்தாடுகிறது..

என் நண்பன் ஒரு அழகான சட்டை அணிந்திருப்பனெனில் அதைக் கண்டு முதலில் பெருமைப் படுபவன் நானாகத் தான் இருத்தல் வேண்டும். என் நண்பனுக்கு ஒரு பெரிய வேலையோ அல்லது பெரிய படிப்பில் தேர்வுற்று முதல் மதிப்பெண் கிடைக்குமெனில் அதற்கு முழுப் பெருமையடைபவனாக முதலில் நானிருப்பின் எனக்கெப்படி அவன்மேல் பொறாமை வரும்?

மக்கள் மதிக்கும் ஓரிடம், உயிர்கள் துதிக்கும் ஓரிடம் அந்த பொறாமை உணர்வில்லா நிலையில், பிறர் நலனைக் கருதி வாழும் நல்லுணர்வு நிறைந்த இடமொன்றேயென்பதைப் புரிகையில் நாமெல்லோருமே தானாக சுத்தப்பட்டுப்போவோம்.

அங்ஙனம் சுத்தப்பட பட உங்களுக்கான வாசல் ஒவ்வொன்றாய் வெகுசீக்கிரம் திறக்கும். அந்தத் திறந்த கதவுகளின் வெளிச்சத்தில் பிரகாசமாய் தெரியும் ஞானமுகங்கள் உங்களுக்குமானதாய் இருக்குமென்பதை பின்னாளில் அறிவீர்கள்.

பொறாமை அதிகாமாகிவிடாததொரு அரியப் பண்பு பெருந்தன்மையிலிருந்துதான் வருகிறது. எங்கெங்கெல்லாம் நாம் யார் யாரையெல்லாம் நமக்குக் கீழே வைக்க எண்ணுகிறோமோ அவர்களையெல்லாம் இயற்கையங்கே மேல்கொண்டுவரவே தவிக்கிறது. யாரை நாம் சிறிதாக்கி அசிங்கப்படுத்த நினைத்தோமோ அவர்களையெல்லாம் இயற்கையும் பெரிதாக்கியே காண்பிக்கிறது. எனவே பிறரை தனக்குக் கீழாக வைக்கநினைத்த இடத்திலிருந்தே நம் பொறாமையும் தீப்பற்றி எரிகிறது, அதோடு நமக்கானப் போறாத காலமும் கைகால் விரித்துக் கொண்டுவந்து வீட்டில் அமர்கிறது. எனவே பொறாமையை விட்டொழிப்போம், பெருந்தன்மையோடு வாழ்ந்துக் காமிப்போம்., வாழ்க உலகின் அத்தனை உயிர்களுமின் நன்னிலத்தில்..,

வளர்க்க நமக்கான அத்தனை நற்பண்புகளும் இந் நல்மனத்துள்!!

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை – 11 – பொறாமை)

  1. munu. sivasankaran சொல்கிறார்:

    ”அவருக்கென மரங்கள் தனியே அசைகின்றன. சுடும் சூரியன்கூட கொஞ்சம் ஒதுங்கி மேகத்துனுள் மறைந்துக்கொண்டு அத்தகையோரை சுடக்கூட அஞ்சுகிறது. தெளிந்த நீரோடையில் தெரியும் சிறுகல் மற்றும் மணலைப்போல, வெள்ளெந்தியாய், பார்ப்பவருக்க்கு அவரின் முகத்தைக் காட்டும் கண்ணாடியைப் போல சுத்தப்பட்டுவிடுகிறது பொறாமையில்லா மனசு.”
    ஆம்…இந்த சுகத்தை அனுபவித்துதான் உணர முடியும்..!. நன்றி..!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி ஐயா.. சுற்றியுள்ள மனிதர்கள் உங்களைப்போல் நல்லோராய் இருப்பதால் நன்மை நிறைந்த பாடங்களே நாள்தோறும் படிக்கக் கிடைக்கின்றன! அன்பும் வணக்கமும்..

      Like

பின்னூட்டமொன்றை இடுக