வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)

IMG_5440

பாகுபாடில்லா சமுதாயமே மேன்மையைத் தரும். இது நீ அது நான் எனும் பார்வை மாறனும். இது நாமென்றுக் காட்டுவதில்தான் எத்தனை அன்புண்டு. அதை மானிடர் அனைவரிடத்தும் வேண்டணும்.

எதில் வேற்றுமையில்லை இரு மனிதர் நேராகச் சந்தித்தால் பல மாறுபட்ட எண்ணங்கள் தோன்றும்தான், அதே அருகருகில் அமர்ந்து பேசினால் அங்கே தோழமை மலரும்.

இதுவரை வாழ்ந்தவர் எப்படியேனும் வாழ்ந்துபோகட்டும், எதையும் மன்னித்துவிட்டால் கோபம் தீர்ந்துவிடும். கருணையை நிரப்பிக்கொண்டால் அன்பு சுரந்துவிடும். அன்பில் மலரும் உறவுகளிடத்தே மேல்கீழ் இராது. இருக்கக்கூடாது. வாழ்வதை வரமென்று எண்ணி எல்லோருக்கும் பொதுவாக நிறைவாக வாழ்வோம்.

அடிப்பட்டவருக்கு வலிக்கும்தான் அதற்கு திருப்பியடிப்பதைவிட மன்னித்துப்பார். மன்னிப்பதைவிட ஒரு பெருந்தோல்வியை எதிராளிக்கு கொடுத்திடமுடியாது. மன்னிப்பதுவே இறைத்தன்மை. மன்னிப்பதற்கும் கண்டிப்பதற்கும் காரணம் சமநிலை ஒன்றாக இருப்பதுவே தர்மம். நீதி. இந்த இரண்டிற்கும் நடுவேக் கொஞ்சம் அன்பை வைத்துக்கொள்.

அன்பிருக்கும் இடத்தில் மேல்கீழ் உடையும். அந்த அன்பைக் கூட நாம் சாதிக்குக் கீழ்நின்றும் மதத்திற்கு கீழ்நின்றும் காட்டுவதால்தான் பேசுவதால்தான் தீண்டாமை இன்னும் கருக்குலையாமல் அப்படியே இருக்கிறது. அதன்பொருட்டே நாம் காலத்திற்கும் ஒரு பக்கம் சரியாகவும் மறுபக்கம் தவறாகவும் தொடர்ந்து தெரிந்துவருகிறோம்.

அன்பை அடிமனதிலிருந்து எல்லோருக்கும் பொதுவாய் காட்டுங்கள், எனது.., நான்தான், என்னிடந்தானெனுமந்த தானென்பதை உடைத்தெறியுங்கள், அங்கே நாமென்பது தானே உருவாகும்.

ஒரு வீட்டில் அண்ணன் வேறாக தம்பி வேறாக இல்லையா? அதுபோல ஒரு மண்ணில் வாழ்தல் அவரவருடையதாக இருந்துபோகட்டும், மொத்தத்தில் வாழ்பவர் நாம் மனிதர்களாக வாழ்ந்துமடிவோம்.

நம் மரணம் இம்மண்ணின் மலர்ச்சிக்கான விதைகளாய் நாளை பொதுவாக விளைந்துவரட்டும்..🎶

பேரன்புடன்..

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்!, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக