கடவுளை நோக்கி விரிகிறது; வானம்!! (திரை விமர்சனம்)

மூகத்தின் சந்து பொந்துகளில் வீழ்ந்துகிடக்கும் மனிதர்குல இன மானத்தை நிமிர்த்தி, மனிதர்களை மனிதர்களாக அடையாள படுத்த நல்லதொரு திரைப்படமாய் விரியத் துணிந்திருக்கிறது வானம்.

நடக்கும் தவறுகளை யார் சட்டையையும் எட்டிப் பிடிக்காமல், நகர்வுகளில் வெளிப்படும் மனிதரின் இயல்பான மனிதத்தினால் எடுத்துக் காட்டி, ஆங்காங்கே தெறிக்கும் ஞானமென; அதர்மத்தை உடைத்தெறியத் தக்க காட்சிகள் அமைத்து, கடவுள் பற்றிய ஒரு மறைமுகப் புரட்சி செய்து, மனிதரை மனிதர் அறிந்துக் கொண்டால் கடவுளும் புரியும் என்கிறார் இயக்குனர் கிருஷ்.

கொல்லும் மனிதரைக் கூட மனிதத்தால் வெல்லும் மனிதர்களின் பார்வையில் பிறக்கிறது தெய்வமும் தெய்வத்தின் இன்னபிறவும் என்பதை காட்சிகளால் உறுதிபடுத்துகிறது இந்த ‘வானம்’ திரைப்படம்.

ஒரு நிரபராதி அநீதியினால் தண்டிக்கப் படுகையில், அவன் வாங்கும் அடியைக் காட்டிலும் மனது எப்படி வலித்துத் துடிக்கும் என்பதை தன் அபார நடிப்பினால் நடித்துக் காட்டி அசத்தியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். வயிற்றில் வளரும் தன் கரு களைந்துவிட்டதென்பதை திடுக்கென அறியும் அப்பாக்களின் மனசு ‘சுமக்காத தாயாக எப்படி மரணத்திற்கு நிகராகத் துடிக்கும் என்பதை புதுவிதாமாகக் காட்டியது அவரின் அந்த அழுகை.

தன் குழந்தையின் எதிர்காலம் வளமாக அமைய தன் உயிரையும் தரும் பெற்றோரை தாய்வடிவாக காட்டியது படமென்றாலும், அந்த தாய் சிந்தும் கண்ணீர் மொத்தமும் தன் குழந்தையின் நலத்திற்கன்றி வேறில்லை என்பதைக் காட்ட அடுத்தடுத்து வரும் காட்சிகளில் சரண்யாவின் நடிப்பு இதயம் கசக்கி எறிகிறது.

அவர் தன் பிள்ளையின் படிப்பிற்கென படும் துயரங்களை கண்டு, திரையரங்கின் இருட்டிலும் யாருக்கும் தெரியாமல் அழுகிறது படம் பார்ப்போரின் மனசெல்லாம். அத்தனை கண்ணீரும் ஓர்நாள் சரண்யாவிற்கு விருதாகக் கிடைக்கும் என்பதில் ஆச்சர்யமொன்றுமில்லை. (பதினைந்து நாட்களுக்கு முன் எழுதிய விமர்சனம் இது, என்றாலும், தற்போது தேசிய விருது கிடைத்துள்ளது என்பது வாழ்த்திற்கும் மகிழ்ச்சிக்கும் உரியது)

அதிலும், சரண்யாவின் மாமனாராக வருமந்த பெரியவரின் நகர்வுகள் ஒவ்வொன்றும் நம் வீட்டு மனிதர்களை எல்லாம் நம்முன் நிறுத்தி; அவர்கள் நமக்கென எடுக்கும் அக்கறைகளை வலியினூடாகக் சொல்லிப் போகிறது காட்சிபடுத்திய விதம்.

சிம்பு மருத்துவமனையில் இருந்து பணப்பையினை பறித்துக் கொண்டு ஓடுகையில், அதை தடுத்துவிடவேண்டி அந்தப் பெரியவர் சிம்புவின் காலைப் பிடித்துக் கொண்டு ‘ஐயா என் பணம்யா, ஐயா என் பேரன் படிப்புய்யா’ என்று கதறும் ஒரு காட்சி’ இளகிய மனம் கொண்டோரை அழவைத்து, அழமுடியாதோரை இச்சமுகத்தின் அவலம் கண்டு முகமிறுகச் செய்கிறது.

நிச்சயம் அந்த பெரியவரின் நடிப்பினை பாராட்டும் விதத்தில் திரைப்படத் துறையினர் மொத்தபேரும் கூட எழுந்து நின்று  ஓர்முறை அந்தப் பெரியவருக்கென கைதட்டி பாராட்டினாலும் தகும்.

நெருப்பென்றால் சுடுவதில்லை என்றாலும், சில வார்த்தைகள் ஊடகத்தின் வாயிலாக உச்சரிக்கையில் நிறைய பேரைச் சுடுகிறது தான். அப்படி இப்படத்திலும் சுடும் வார்த்தைகள் ஏராளம். படம் செய்வதற்கு முன் ‘இதை இதை செய்யவேண்டும் என இயக்குனர் கையில் எடுத்துக் கொண்ட பாடுபொருள்கள் அத்தனையும் வெடித்தால்; சமூகமாக வெடிக்கக் கூடியது’ என்றாலும் மிகத் திறமாக மறுபக்க நியாயத்தைக் காட்டி பார்ப்போரை வாய்மூடச் செய்திருக்கிறார்.

ஒரு ஜனநாயக தேசத்தில் ஒரு மதத்தின் காரணம் கொண்டு மனிதர்களை இரண்டாம் நிலைப் படுத்தும் இழிசெயலினை அடிக்கோடிட்டுக் காட்ட நினைத்திருப்பார்போலும். அது முத்தாய்ப்பாகவே தெரியச் செய்கிறது சில காட்சிகளில். இஸ்லாமிய சகோதரர்களை சிறுபான்மையினர் என்று ‘வெறும் மதத்தை காரணமாக வைத்துப் பிரிக்கும் எண்ணம்’ எப்படி ஒரு ஜனநாயகத்தை ஜனஜாயக தேசமாக முன்னிறுத்தும்? என்ற கேள்வி ஏனோ இந்திய தேசத்திற்கு எழவேயில்லை! அதையும் அதனால் அவர்கள் படும் இன்னல்களையும் தலைவலிக்க வலிக்க பார்க்கமுடிகிறது இப்படத்தில்.

அதிலும், என்னதான் சிறகு ஒடிய பறந்து முட்டினாலும், ஏழ்மை குடியில் பிறந்தவன் ஏழையாகவே தான் சாக வேண்டுமா? எனும் கேள்வியை ஆங்காங்கே எழுப்புகிறதிந்த வானம் திரைப்படம். இருப்பினும், கடைசியில் சிம்பு அதே ஏழையாகவே உயிர்விடும் பாத்திர அமைப்பும், அதன் முந்தைய கேள்விகளும், சிந்திக்கையில், பணம்; பணம் உள்ளவரிடமே சேரும் என்று மறைமுகமாய் சொல்வது போலுள்ளது.

சந்தானம் இடை இடையே வந்து சிரிக்கவைப்பதில் சற்று வேறு சில வார்த்தைகளின் வீரியம் பற்றிய சிந்தனை குறைகிறது என்றாலும், ஆரம்பத்தில் அந்த காவலாளியை ஒரு இந்துவாக காட்டி, பின் அவரால் பிரகாஷ்ராஜை தீவிரவாதியாக மாற்றுவதுபோல் காட்சிகள் அமைத்து; அதன்பின் அவரை கொண்டுபோய் மருத்துவமனையில் விடுகையில் ‘இதோ இவன் ஒரு தீவிரவாதி, நீ ஒரு தீவிரவாதி, இவன் சீனியர் தீவிரவாதி நீ ஜூனியர் தீவிரவாதி’ என்று சொல்லும் காட்சி; ஆக அந்த சீனியரை உருவாக்கியதும் இந்த காவலாளி தான், அதாவது ஒரு இந்து தான் என்று காட்டிவிட்டு, கடைசியில் அவரையே அத் தீவிரவாதிகளின் கும்பலுக்கும் தலைவன் போல் காட்டுவது என்பது ‘மொத்த தீவிரவாதியையே இந்துவாகிய அக் காவல் துறையினர் தான் உருவாக்கினர் என்பது போல் சித்தரித்திருப்பதை, தமிழர்கள் பெயரில் செய்யாதிருந்திருக்கலாம்.

இன்றுவரை இஸ்லாமியரும் இந்துக்களும் ஒரே தட்டில் உணவுண்ணும் நேசம் மிக்க மண்; நம் மண். அதற்குள் இப்படி ஒரு நஞ்சினை புகுத்தாமல் இருந்திருக்கலாம். என்றாலும், இப்படி சில காவலாளிகளின் தவறான பார்வையால் அல்லது, மதவெறி கொண்ட சிலரால், அல்லது அவர்களின் சாட்சியமற்ற சந்தேகத்தால் தான் தீவிரவாதம் தலைதூக்கி நிற்கிறதோ என்றும் சிந்திக்க வைக்கவும் செய்கிறது வானம் திரைப்படம்.

சிம்பு, பேபே…., என் பேபே..’ என்று தன் காதலியின் பின் உருகிவரும் கணமெல்லாம் காதலை கண்களில் காட்டினாரோ இல்லையோ; இக்கால இளைஞர்களின் திறனையும் அவர்களின் உயர்தட்டு சிந்தனையையும் அழகாகக் காட்டி இருக்கிறார். பொதுவாகவே, சிம்பு என்றாலே; நிறைய திறமைகளில் சற்றும் சளைத்தவர் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம் தான் என்றாலும், இப்படமும், கோவில் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயாயினை போல்; அவரின் நடிப்புத் திறனுக்கு ஒரு ஆதாரமென்றே சொல்லலாம்.

கடவுளை பரத் உணரும் காட்சியாக, அவருக்கு அதை போதிக்கும் காட்சியாக  வரும் இடங்களில் வளம்வரும் இரண்டாம் நாயக  நாயகிகளின் பாத்திரம் கூட; இயக்குனர் எடுத்துக் கொண்ட பாடுபொருளின் மூலத்தை சொல்லும் அவசியம் கொண்டதாகவே அமைந்ததும், அதி முக்கியமாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும், நடிகர்களின் தேர்வும் படத்திற்கு பலம்.

இருப்பினும், அனுஷ்கா வரும் காட்சிகள் அழகென்றாலும்; வசனத்திற்குத் தான் காதை மூடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அனுஷ்காவின் தோழி, உயிர் பிரிய இருக்க, மருத்துவரிடம் அனுஷ்கா காப்பாற்றச் சொல்லிக் கேட்கையில் ‘இடையில் அவள் தன் உயிர் பிரிய இருப்பதையும் பெரிதாகப் பொருட்படுத்தாமல் ‘எப்படியாவது என்னை காப்பாற்றி விடுங்கள் டாக்டர், அவளுக்கு என்னை விட்டால் வேறு யாருமே இல்லை டாக்டர்’ என்று அனுஷ்காவைப் பார்த்து சொல்லியழும் காட்சி’ தோழமையை வலுப் படுத்துகிறது.

கடவுள் வேறெங்குமே இல்லை, உள்ளே கசியும் இரக்கத்திலும், மானசீகமாய் தவறுணரும் தருணத்திலும், பிறர் நலம் கருதும் குணத்திலும், ஆபத்திற்கு எதிரியாயினும் உதவும் மனிதாபிமானத்திலும், இயல்பை இயல்பாகவே ஏற்று தெளிவின் கண் திருத்திக் கொள்ளும் நன்மையிலுமே உண்டென வெகு நாசூக்காய் புரிந்துக் கொண்டு வருகின்றனர் இக்கால மக்கள்.

மதம் பிடித்தமையால் பிறர் மனம் வருத்தி, தன் சுயநலத்திற்கென பிறரை கடவுளின் பேரில் மட்டப் படுத்தி, தன்னை எப்பொழுதுமே புத்திசாலியாக காண்பித்துக் கொள்ள முனையும் ‘நிறைய பேரின் மனநிலையில், மதத்திற்கென மனிதனைக் கொன்று, ஆடு வெட்டி, கோழியறுத்து; கொன்ற உயிரில் ‘பிறக்கும் தெய்வம் ‘மனிதத்தைக் கொன்றே பிறக்கிறது’ என்பதை இளைஞர்கள் இனி புரிந்துக் கொள்ளும் நாளும் வெகு தொலைவில் இல்லை என்பதற்கு கிருஷ்ஷும், கிருஷ்ஷின் இந்த வானமும் சாட்சி தான்!!
————————————————————————————————————
வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

97 இதயவலி; இலவச இணைப்பு!!

காதல் மறுக்கப் பட்ட காதலியின்
கால்கொலுசு சப்தங்கள்;

இதயம் மரணத்தினால் துடிக்கும்
துடிப்பு;

துரோகத்தால் புடைக்கும்
நரம்பு;

பிரிவின் வலியின்
அழுத்தம்;

திருட்டு கொள்ளைகளால் எழும்
பயம்;

குழந்தை கதறும் அலறலின்
கொடூரம்;

பெண் கற்பழிக்கப் படும்
காட்சிகள் மற்றும் கதைகள்;

கொட்டிக் கொடுக்கப் படும்
வட்டியின் வேதனை;

உறவுகளின்
சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும்
குடும்ப அரசியல்;

அலுவலக மேலதிகாரி
அரசியல்வாதி
காவல்துறை மற்றும் ரவுடிகளின் மிரட்டல்கள்;

சமுகம் சுற்றிக் கிடக்கும்
பொறுக்கமுடியா
அநீதிக் குப்பைகளென –

எல்லாமுமாய் சேர்ந்துக் கொடுத்தது
முப்பத்தைந்து நாற்பது வயதில் – ஒரு
பிரெசர் மாத்திரையும் –
இரண்டு வேலை உப்பில்லா சோறும்;
இதயவலி உடன் இலவச இணைப்பும்!!
——————————————————
வித்யாசாகர்

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம் – ஈழ விடுதலையுடன் – நிறைவுறுகிறது!!

இதற்கு முன்..

பீரங்கிக்கே துணிந்துவிட்ட தமிழினம் துப்பாக்கிக்காகவா பயம் கொள்ளும். மார்பை விரித்துக் காட்டி நின்றனர் எல்லோரும்.

யாரைச் சுடப்போகிறாய் என்னைச் சுடுகிறாயா? சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ?

உறங்கிவிடுவாயெனில் ம்ம் சுடு……………..” ஒருவன் உரக்க கத்த ஒரு கூட்டமே அவன் பின் குரல் கொடுத்து மார்பு காட்டி நின்றது.

“உன் குழந்தை ஒன்றை ஒரு கையில் தூக்கி வானத்திற்கு காட்டி பொட் பொட்டெனச் சுட்டால் அப்போ தெரியும் உனக்கு உயிரின் வலியும் விடுதலையின் விலையும் என்னவென்று!!”

அந்த கூட்டம் மீண்டும் வலியோடு பேச; காவலாளிகள் ஒரு அடி பின்னே விலகினர். இது உணர்ச்சிவயப் பட்ட கூட்டமல்ல, சிந்தித்து சிந்தித்து அழுது அழுது வேறு வழியின்றி நரம்புப் புடைத்தெழுந்த மக்கள் சக்தி என்று அவர்களுக்குத் தெள்ளனவே விளங்கிற்று.

ஆயினும், காவலர்கள் கட்டளைக்கு உட்பட்டவர்கள் என்பதால் வேறொருவன் மிக வேகமாக முன்வந்து துப்பாக்கியெடுத்து மாணவர்களின் கால் பார்த்துச் சுட; சற்றும் அசராத அந்த மாணவனில் ஒருவன் எகுறி துப்பாக்கியை அவனிடமிருந்து பறித்து ‘உனக்கு சுடத் தானே வேண்டும் இதோ நான் சுடுகிறேன், டிஷ்யூம்!! டிஷ்யூம்!! டிஷ்யூம்!! மூன்று மாணவர்களின் காலைப் பார்த்து அந்த மாணவனே சுட்டான், “போதுமா போதுமா.. இதோ டிஷ்யூம்!! அவன் தன் காலிலும் சுட்டுக் கொண்டான், இன்னும் பார்க்க வேண்டுமா டிஷ்யூம்!! தன் ஒரு கையில் இன்னொரு கையினால் துப்பாக்கி முனையை வைத்து அழுத்திச் சுட்டுக் கொண்டு கையில் ரத்தம் சொட்டச் சொட்ட போதுமா போதுமா என்றான்.

அதற்குள் சத்தியசீலனுக்கு ஒரு பொறி தட்டியது, உயிரை திரியாக்கி துப்பாக்கியில் இட்டானவன், ஓடிச் சென்று அந்த மாணவனிடமிருந்து  அந்த துப்பாக்கியைப் பிடுங்கினான், டிஷ்யூம்!! டிஷ்யூம்!! டிஷ்யூம்!!  தன் இரண்டு காலில் மாறி மாறி சுட்டுக் கொண்டான், மக்களெல்லாம் அவனை காப்பாற்ற ஓடி வந்தது.., “யாரும் அசைய வேண்டாம், நமக்கு நம் உயிர் பெரிதல்ல, நம் விடுதலை முக்கியம்’ என்று அவன் ‘பேசிக் கொண்டிருக்கும் போதே மாதங்கி விமானத்தில் உடன்வருகையில் பேசியதும், குழந்தைகளை சிங்களன் கொன்றதும், பெண்களை எல்லாம் பாலினக் கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தப் பட்டதும்,  காடுகளில் தமிழரை இருத்தி தமிழர் வாழ்ந்த இடத்திலெல்லாம் சிங்களக் குடிமக்களை அமர்த்துவதும் என எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் வர –

தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான்; கடைசியாய் “காவலாலிகளே இதோ என் உயிரும் இனி எம் விடுதலைக்கு துச்சம், எம் தாகம் தமிழீழ தாயகம்’ என்று சொல்லி; டிஷ்யூம்!! துப்பாக்கி வெடித்து ரத்தம் எதிர் முனையில் பாய சத்யசீலன் உயிரற்று கீழே விழுந்தான். காவலாளிகள் துப்பாக்கியை போட்டுவிட்டு ஓடி அவனைத் தூக்க எல்லாம் நேரடி ஒளிபரப்பாக ஊடகம் மூலம் உலகம் முழுக்கக் காட்டப் பட்டது. ஒவ்வொரு நகர்வும் செய்தியாக்கப் பட்டது.

துடிதுடித்தனர் உலகமக்கள். ஆங்காங்கே படை திரண்டனர் தமிழர்கள். அத்தனையையும் பதிவு செய்து இணையம் முழுதும் ஒளிபரப்பி அதன் மூலம் தங்களின் நியாயத்தை உலகின் பார்வைக்கு விளக்கி முன்வைத்தனர். அடுத்தடுத்த வினாடிகளில் ஒவ்வொன்றாய் பரவி இந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் இது மட்டுமே தலைப்புச் செய்தியானது.

ஆங்காங்கே ஒருசிலர் மாணவர்களின் போராட்டத்தை பலப் படுத்தும் விதமாக உயிரோடு தீக்குளித்தனர். குடும்பமாக மாடியில் இருந்து குதித்துக் காட்டினர். இனியும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இனி பிணக்குவியல்களே தெருவெங்கும் கிடைக்கப் பெறுமென்று எச்சரிக்கை விடுத்தனர். இது ஈழ விடுதலை கிடைக்கும்வரை நீடிக்கும் என்று அறிவிப்பு செய்து சுவரெல்லாம் ஒட்டி தன் கண்ணீரை விளம்பரப் படுத்தினர். உலகநாடுகள் இவைகளை எல்லாம் கேள்வியுற்று தொலைகாட்சிகளின் மூலம் கண்டு பதறி அவசர நடவடிக்கை யெடுக்கும் படலாமாக உடனடியாக ஒன்று கூடியது.

ஐ.நா தலையிட்டு விசாரித்து, தமிழருக்கு எதிராக நடந்தவையில் அதிகபட்சம் போர்குற்றமே என்றும் உடனே அரசை களைத்து உரியவர் மேல் தக்க நடவடிக்கை எடுக்கும்படியும், சம்மந்தப் பட்ட அனைவரையும் சர்வதேச குற்றவாளி கூண்டில் அடைக்குமாரும் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு பகிரங்கப் படுத்தி உலக நாடுகளுக்கு அறிக்கை விட்டது. சிங்கள அரசு எத்தனை முண்டியடித்தும் தீவிரமாய் மறுத்தது உலக நாடுகள்.

இத்தனை நடந்தபின்னும் அம்மக்களுக்கு சிங்கள அரசால் விடிவு கிடைக்காது. கிடைத்தாலும் அது அடிமைத்தனம் கொண்டதாகவே இருக்கும். அதனை காட்டிலும், ஒரு ஆதி மொழி கொண்ட இனம், தனியே வாழ தகுதியுள்ள ஓர் இனம், இத்தனை கோடி மக்கள் தொகையை கொண்ட ஓர் இனம் வெகு நிச்சயமாய் தனிநாடாக விடுதலை பெற முழு உரிமையும் பலமும் கொண்டுள்ளதென்று உலகநாடுகள் அத்தனையும் சிபாரிசு செய்தன.

இந்தியா பொறுத்துப் பார்த்து தன் படையை மொத்தமும் பின்னுக்கெடுத்தது. போர்குற்றம் வெட்டவெளியாக அம்பலமாக, தான் இனி இலங்கை அரசுக்கு துணை நிற்கப் போவதில்லை என்றும், அதர்ம வழியில் போரிட்டு மக்களை அழித்தமையால் தான் இனி தன் உதவிகளை அனைத்தையும் ரத்து செய்துக் கொள்ளப் போவதாகவும், தமிழ் மக்களுக்கு தனிநாடு தருவதொன்றே அவர்களுக்கு பாதுகாப்பினை  அளிக்கவல்லதென்றும் திட்டவட்டமாக அறிவித்தது.

தமிழர்கள் வானம் பார்த்து கைகூப்பினர். இந்தியக் கொடி கண்டு நிமிர்ந்து நின்று வணக்கம் செலுத்தினர். இந்தியா என் தேசம்; எம் மக்களின் நலனுக்கு துணை சேர்த்த இந்தியர் எம் சகோதரர்கள் என்று மேடைகளில் முழங்கினர்.

உலக நாடுகள் இந்தியாவிற்கு வாழ்த்துக்கூறி ஐ. நா வை முன்னிலை படுத்தி சிங்களத்தை தனியாகவும் தமிழர்கள் வாழும் பகுதியினை தனியாகவும் வேறு வேறு நாடுகளாக அறிவிக்கக் கூறின. உலக தமிழர்கள் தன் ஒட்டுமொத்த நன்றியையும் உலக நாடுகளுக்குத் தெரிவித்து ‘இந்தியாவை தன் சகோதர தேசமென்று கொண்டாடினர்.

தமிழீழ தேசம் அமைப்பதன் பேரில் தலைவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் பட்டு பதினைந்திற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கூடிய கூட்டத்தில் வெகு மனிதம் மிக்கவராகவும், துரோகம் இழைத்தவனையும் மன்னிக்கத் தக்கவராகவும் பேசுகிறார். ‘தண்டனைக்குரிய ‘சிங்கள அரசு சார்ந்தோரை மன்னித்து விட்டுவிட வேண்டு மென்றும், ஆர்மி செய்த தவறுகளால் அப்பாவி மக்கள் ஒருபோதும் தண்டிக்கப்படக் கூடாதென்றும், அரசின் தவறான அணுகுமுறைக்கு பொதுமக்கள் பொருப்பல்ல என்றும், இனி வாழும் எம் எஞ்சிய மக்களேனும் நிம்மதியும் மகிழ்வும் பூரித்திருக்கத் தக்க நாங்கள் வாழும் ‘தமிழிழீழம்’ வரை எங்கள் தேசமென்று அறிவித்தால் போதுமென்றும், அவர்கள் ஆளுமிடத்தை இலங்கையாக அவர்களே ஆண்டுக் கொள்ளட்டுமென்றும் கூற, ‘தமிழரின் பெருந்தன்மையும், இத்தனை நடந்தும் எஞ்சிய மக்களுக்காக சிந்தித்த நியாயம் வழுவிடாத மனமும் உலக மக்களிடத்தில் மொத்த தமிழினத்திற்கே பெருமையை சேர்த்தது.

மன்னிப்பினை ஏற்றுக் கொண்ட சிங்கள அரசும், காலத்தின் சூழலில் நாங்களும் கட்டாயத்திற்கு தள்ளப் பட்டோம் என்றாலும், நடந்தவை போர்முறை சார்ந்ததன்றி தமிழர் மேல் எங்களுக்கும் எந்த தனிக் கோபமுமில்லை. அவர் பூமியை அவர் ஆளட்டும் எங்கள் இலங்கையை நாங்கள் ஆண்டுக் கொள்கிறோம்” என்றும் முழங்க –

பட்டாசு வெடித்தது  விடுதலையின் ஆரவாரம் ஊரெங்கும் பரவியது. சுதந்திரத்தை தன் மண்ணில் பெற்றுவிட்ட சந்தோஷம் உள்ளூரப் பொங்கியது. உலகமெங்கும் அகதிகளாய் திரிந்த தமிழரெல்லாம் ஈழம் நோக்கி உடனடியாகத் திரும்பினர். வராதவர்களும் அன்பு கரம் கொண்டு வரவழைக்கப் பட்டனர். தமிழீழக் கொடி ஓர் நல்ல நாள் பார்த்து வானில் கனகம்பீரமாக பறக்க, தலைவர் கண்களில் பெருகிய நீர்துளியோடு மாவீரர்களை நினைத்து மனமுறுகி நிற்க; இந்திய பிரதமர், இலங்கை அதிபர், உலக நாடுகளின் இன்னபிற தலைவர்களின் முன்னிலையில், தமிழக முதல்வரும் அருகில் நின்று எல்லோரும் சேர்ந்து எழுப்பிய கரவொலியின் ஆராவரத்தில் ‘தமிழீழ தேசம்’ விடுதலைப் பெற்ற சகோதரத்துவ நாடாக அறிவிக்கப் பட சுதந்திர இசை முழக்கத்தின் மத்தியில் பெருங்கம்பீர்மாய் ஒலித்ததந்த சத்யசீலனின் கவிதையொன்று –

னவு சுமந்தோம் கனவு சுமந்தோம்
ரத்தம் சொட்ட வருடம் சுமந்தோம்,
உயிரை துறந்தோம்; உயிரை துறந்தோம்
ஓர்நாள் வெல்லும் உறுதியைக் கொண்டோம்!

விடிவு பிறக்கும் வாசல் திறக்க
உயிரை கடந்தும் காத்துக் கிடந்தோம்,
வருடம் தொலைந்து உறவுகள் இழந்தும் –
வெல்லும் உறுதியில் கனவு சுமந்தோம்!

வேரூர் பறந்து உறவு பிரிந்து
விடியல் நோக்கிப் பயணம் செய்தோம்,
அகதியாய் பட்டக் கரையைத் துடைக்க
ஈழக் கொடியை ஏந்தி பிடித்தோம்!

றுதி யெடுப்போம் உறுதி யெடுப்போம்
ஒற்றுமை யெமது நெற்றிப் பொட்டென
வளர்ச்சி யொன்றே என்றும் மூச்சென
மதமும் இனமும் கடந்துப் பறக்கும் –

ஈழக் கொடியினை உயர்த்திப் பிடிப்போம்;
உலக மக்கள் பார்வையி லெங்கள் – தமிழை
தமிழரை பெருமைபடுத்தி – தேசம் சிறக்க
கனவு சுமப்போம்!

னவு சுமப்போம்னவு சுமப்போம்
மா – வீரர்கள் கண்ட கனவையும் சுமப்போம்;
கனவுகள் வெல்லும் முழுமை நாளில்
தமிழராய் மட்டுமோர் குடையினில் நிற்போம்!!
——————————————————————————————-
…முற்றும்…

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 15)

இதற்கு முன்..

விமானம் எப்படி வெடித்தது, ஏன் வெடித்தது, வாசலில் நின்று மிரட்டிய மாதங்கி யார்? அவள் ஏன் அப்படி செய்தாள் ஒன்றிற்குமே விடை கண்டுபிடிக்க இயலாமல் தவித்தனர் லண்டன் விமான நிலையத்தினர்.

சத்தியசீலன் முதலில் இறங்கிக் கொண்டமையால் யார் கண்ணிலும் படாமால் அவசர பயணியைப் போல் அங்கிருந்து வெளியேறி,  காவலாலிகளோ அல்லது மற்ற யாரோ சந்தேகப் படுவதற்குள் அலைபாய்ந்து ஓடிக் கொண்டிருந்த மக்களோடு மக்களாகக் கூடி தப்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினான்.

வெகு வேகமாக ஒரு மகிழுந்து பேசி எடுத்துக் கொண்டு நேராக வங்கிக்கு சென்று, அங்கு அவன் முன்பு சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் எடுத்து அமெரிக்க டாலராக மாற்றிக் கொண்டு லண்டனிலிருந்து விமானம் மூலம் வான்வழி போகாமல், வேறொரு மகிழுந்து பிடித்து தரைவழியே லண்டனைக் கடந்து வேறொரு ஐரோப்பா நாட்டிற்கு சென்று அங்கிருந்து மாதங்கி கொடுத்த அத்தனை புகைப்படங்கள் காணொளிகளை இணையம் மூலம் பதிவு செய்து சில முக்கிய நண்பர்களுக்கு அனுப்பினான்.

அனுப்பிவிட்டு அவர்களை அழைத்து இங்ஙனம் இங்ஙனம் நடந்ததென்றும் இனி அவசரத் திட்டமாக வேறு என்னசெய்யப் போகிறோம் என்ற தகவல்களையும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து இந்தியா ஏர்லைன் மூலம் சென்னை வந்து இறங்குகிறான்.

——————-*——————-*——————-

மாதங்கி  ஏன் அந்த விமானத்திற்கு வெடி வைத்து தகர்க்க வந்தாள், யார் அந்த விமானத்திற்குள் பயணித்தார்கள், அந்த கோர்ட் சூட் போட்டிருந்த ஆசாமி யார், ஏனவனைஅவள்  கொள்ளவேண்டும், அவள் அந்த சிவப்பு நிற பொத்தானை இயக்கிடாத போதும் வேறு யார் அந்த விமானத்தை வெடிக்கச் செய்திருப்பார்கள்’ என்ற எல்லா விவரமும்  பின்னர் அந்த காணொளிகளை கண்டதும் சத்ய சீலனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் புரிய வந்தது.

நண்பர்கள் நடந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்தும் மற்ற இதர விடயங்களை கேள்வியுற்றும் திகைத்துப் போனார்கள். ரகசியமாய் ஓரிடத்தில் மொத்தப்பேரும் கூடினார்கள். காணொளி மற்றும் புகைப்படங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அலசிப் பார்த்து அவைகளை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதை எல்லாம் தீர்மானித்துக் கொண்டார்கள்.

இடையே சில காட்சிகளை பார்க்க இயலாமல் கைவைத்து மறைத்தும் வாய்விட்டு அழவும் செய்தார்கள். இனி என் உயிரே போனாலும் போகட்டும் இதற்கு ஒரு முடிவு கட்டியே தீருவதென்று உறுதி ஏற்றார்கள்.

இனி வீடு உறவு உலகம் நியாயம் தர்மம் அத்தனையும் மறந்து புறப்பட்டார்கள். அவரவருக்கு பிரித்துக் கொள்ளப் பட்ட அவரவர் கடமைகளை ஆற்றுவதை தன் லட்சியமாகவும் ஈழம் ஒன்று மட்டுமே அவர்களின் இறுதி வெற்றி என்றும் தீர்மானங்கள் கொள்கின்றனர்.

அதன் முதல் படியாக, குழந்தைகள் சிதறி சக்கை சக்கையாக வாரிப் போட்டதிலிருந்து, மாதங்கியின் அண்ணன் பயித்தியமாய் திரிந்தது வரை, மலர்விழி வயிறு கிழித்து கர்ப்பத்திலிருந்து குழந்தையை எடுத்து சுட்டுப் போட்டது முதல், சின்ன வயசு பையன்களுக்கு சட்டி கழற்றிப் பார்த்து வெடி வைத்தது வரை, கணவனின் கண் முன்னாள் மனைவியையும், பிள்ளைகளின் கண் முன்னாள் பெற்றெடுத்தத் தாயையும் கர்ப்பழித்தது முதல் மாதங்கி வெடித்துச் சிதறி செத்தது வரை எல்லாமும் சாட்சிகளோடு கல்லூரி மாணவத் தலைவனுக்கு நண்பர்களால் காண்பிக்கப்படுகிறது.

பிறகு அவன் மூலம் இதர கல்லூரி நண்பர்களையும் அழைத்துப் பேசி சாட்சி விவரங்கள் காண்பித்து, மெல்ல அது தமிழகத்தின் மொத்த கல்லூரிக்கும் பரவி, தமிழக இளைஞர் அணிக்குத் தெரியப் படுத்தப் பட்டு, அவர்கள் ஒருபுறம் படை சூழ, மறுபுறம் மடை உடைத்து வரும் வெள்ளத்தினைப் போல் கல்லூரி மாணவர்கள் திரண்டு வர; எல்லா ஏற்பாட்டினையும் வெளியே யாரையும் அறியவிடாமல் செய்துக் கொண்டு திடீரென வெடித்த வெடிகுண்டுப் போல ஓர்தினம் நிர்ணயிக்கப் பட்டு,  அன்று தமிழகம் முழுக்க வெடிக்கிறதொரு ஈழத்திற்கானப் புரட்சி.

அனைத்துக் கல்லூரிகளுக்கும் பஞ்சினில் பரவிய தீ போலப் பரவி, காட்சிகள் ஆங்காங்கே ஒட்டப் பட்டு காண்போர் மனதையெல்லாம் கண்ணீரால் சுட்டுக் கதற வைத்தனர் இளைஞர் படையினர்.

இதுவரை எங்கோ இலங்கையில் சண்டை என்று கேட்டிருந்த மக்களுக்கும் மாணவர்களுக்கும், சண்டை ஈழத்தில் என்றும் அது தன் மக்களுக்கான இழப்பு மட்டுமே என்றும் அறிவிக்கப் பட –

தான் உண்டு; தன் படிப்புண்டு என்றிருந்த மாணவர்களுக்கு, குழந்தைகள் இப்படி செய்யப் பட்டுள்ளார்கள், அக்காத் தங்கைகள் இப்படி செய்யப் பட்டுள்ளார்கள், தாய்மார்கள் வயோதிகர்கள் இப்படி வன்முறைக்கும் வன்புணர்சிக்கும் ஆளாக்கப் பட்டுள்ளார்கள் என்பது ஆதாரத்தோடு அறியப் பட கோபத்தை அடக்கமுடியவில்லை அவர்களால்.

மொத்தக் கல்லூரி மாணவகளும் ஓரிடத்தில் தன் சுய சிந்தனையோடு யார் தலைமையும் இன்றி ஒன்றுகூடி ஈழத்திற்கென ஒட்டுமொத்தமாய் கொடி பிடித்தனர். தீர்பு இங்கே நிர்ணயிக்கும் வரை படிப்பு கிடையாது கல்லூரி கிடையாது ஒன்றும் கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்தனர். மீறி எங்களுக்கான கோரிக்கை நிறைவேறா விட்டால் சாகவும் துணிவோம், அவசியப் பட்டால் சாகடிக்கவும் துணிவோமென்று மிரட்டாமல் தன் துணிவினை ஒர்ருமையினால் காட்டினர்.

தமிழக மூளை முடுக்கெல்லாம், பட்டிதொட்டியெல்லாம், எங்கு காணினும் ஈழத்து புகைப்படங்களும், கையின்றி காலின்றி தலையின்றி நிர்வாணப் படுத்தப் பட்டு, உடல் சள்ளடையாக்கப் பட்டு, குழந்தையின் தலை கூட சிதறடிக்கப் பட்டு பார்ப்பதற்கே உடம்பு கூசும் படங்களும், அங்கு நடந்த அத்தனை போர்க்குற்றத்திற்கும் ஆதாரம் காட்டும் விதமாகவும் ஒவ்வொன்றினையும் செய்தனர்.

மக்கள் ஆங்காங்கே நடந்ததை கண்டுத் துடித்து வெறி பிடித்து எழும் விதமாக அத்தனை இளைஞர்களும் தன்னாலியன்றதை செய்தனர். அவரவருக்கு இட்ட கட்டளைப் படி அவரவர் செயலாற்றினர். ஆண் பெண் பெரியவர் சின்னவர் என்று எல்லோருமாய் ஒன்று சேர்ந்து ஈழம் என்னும், தமிழர் என்னும் ஒரேயொரு ஒற்றைக் குடைக்குள் நின்றனர்.

பாவாடைச் சட்டை போட்ட பெண்குழந்தைகள் கூட தனித்தனியாக நின்று கோஷமெழுப்பி, பெரியோர்களுக்கும் இளைய சமுதாயத்திற்கும் முழு பலமாக நின்றனர். எந்த புள்ளியிலும் அடங்கி விடாமல், யார் சொல்வதையும் கெட்டுவிடாமல், எதற்கும் பயந்தோ விட்டுக் கொடுத்தோ சுயநலம் கொண்டோவிடாமல் மொத்த கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்க; விஷயம் தீ போல் பரவி, கல்லூரி மூலமாக மட்டுமின்றி  ஊடகங்கள் வாயிலாகவும் அண்டை மாநிலத்திற்கெல்லாம் தகவல் சென்றடைந்து, இரக்கப் பட்ட மனமெல்லாம், மனிதம் நிறைந்த மனமெல்லாம் ‘களத்தில் இறங்கி ஈழத்திற்கென பரிந்துப் பேசியது.

ஒரு கட்டத்தில் காவலாளிகள் அரசு சார்ந்தவர்கள் கூட மாணவர்களின் நியாயம் புரிந்து, மக்களின் எழுச்சி புரிந்து ‘அங்கு நடத்தப் பட்ட கொடுமைகள் அத்தனையும் அறிந்து; அந்த துரோகத்திற்கு ஒரு முடிவு கட்ட இதுவே சமயமென்றெண்ணி தன் கோபக் கண்களை மூடிக் கொள்ள; நாடு முழுக்க வெடிக்கிறதொரு ஈழப் புரட்சி; ஸ்தம்பித்து போகிறது இந்திய அரசு!

மாணவர்கள் மொத்தபேரும் ஒன்று திரண்டனர். இளைஞர்கள் ஒருவரும் எக்காரணம் கொண்டும் அசர வில்லை. விடயம் கட்டுப் படுத்த இயலாமல் போக சென்ரல் போலிஸ் வந்து தமிழகத்தில் குவிய ஆரம்பிக்கிறது. மொத்தபேரும் சத்திய சீலன் இருக்கும் கல்லூரியை முற்றுகை இடுகிறார்கள். ஆங்காங்கே 144 சட்டம் போடப் போவதாக அறிவிக்கப் படுகிறது.

என்றாலும், யாரால் எது நடக்கிறது, யார் இதை முதல் ஆரம்பித்தார்கள், யார் யார் கூட்டு, யார் இதற்கெல்லாம் மூலக் காரணமென்று ஒன்றுமே தெரிய வாய்ப்பின்றி மொத்த மாணவர்களும் இளைஞர்களும் ஆண்பெண் சமுகமென மொத்தப் பேரும் தமிழராய் மட்டும் கிளர்த்தெழுந்து நிற்க; வானம் நோக்கி முதல் எச்சரிக்கையாய் துப்பாக்கிக் கொண்டு சுடுகிறது மத்தியக் காவல் துறை..
——————————————————————————————-
தொடரும்…

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 14)

இதற்கு முன்..

வள் பெயர் ‘நாராயணி பிரேமதாச’ என்றும், இனம் சிங்களம் என்றும் கண்டதும் அதிர்ந்துப் போனேன். அதற்குள் அவள் வெளிப்பட்டாள். நான் அவளின் கைப்பையினை அவசரமாக கீழே வைப்பதையும் அவள் பார்க்கத் தவறவில்லை. பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததில் சற்று வியர்த்துத் தான் போனது எனக்கும். அதேநேரம் ஒரு சிறிய டியூட்டி ப்ரீ பிரிவின் பெயர் பொருந்திய பாலித்தின் பையினை கையில் அவள் புதிதாக கொண்டுவருவதாயும் நான் கவனித்துக் கொண்டேன்.

என்னருகில் வந்து நின்றதும் என்னை வெளியே எழுந்து வா என்றாள், வந்தேன். அவள் உள் பக்கம் சென்று அமர்ந்து பைக்குள் இருந்து ஏதோ எடுத்து எதையோ போட்டு கடைசியில் சிறுசிறு துண்டுகளாக இருந்த சில எந்திர பாகங்களை ஒவ்வொன்றாக எடுத்து மாட்டினாள்.

அவ்வப்பொழுது ஆட்கள் இங்குமங்குமாய் வரும்நேரம் பார்த்து அதை அப்படியே பையோடு கீழிட்டாள். சற்று நேரத்தில் மீண்டும் அந்த விமாணப் பணிப்பெண் அக் கழிவறைக்குள் புகுந்து என்னவோ செய்துவிட்டு வெளியே வர, சற்று நேரம் கழித்து மாதங்கியும் அங்கே சென்று வந்தாள். போகும்போதும் வரும்போதும் கையில் அந்த டியூட்டி ப்ரீ பிரிவைச் சார்ந்த பை இருந்தது.

“கடைசியாய் வந்தமர்ந்த போது. நீ சிங்களமா?” என்றேன்

“ஏன் பயமாக இருக்கிறதா?” என்றாள்

“ஹும்.. எனக்கென்ன பயம்?” என்றேன்

அவள் என்னையே கூர்ந்து நோக்கினாள்.

“என்ன ஒன்னு எதிரியிடமே என் வீட்டைப் பற்றி பேசிவிட்டேனே என்றொரு வருத்தம் வரும்”  என்றேன்

“அப்போ இப்போது வருத்தமில்லையா?”

“ஏன்?”

“நான் சிங்களத்தியாக இருப்பேனோ” என்று

“இல்லை, அதலாம் விடு, நீயே சொல் யார் நீ?”

“முதலில் வந்த போதே சொன்னேனே ‘போராளி என்று. மீண்டும் கேட்பீர்களேயானால் தமிழச்சி என்று சொல்லலாம்”

“அப்போ ஏன் கடவுச் சீட்டில் சிங்களம் என்றிருக்கிறதே”

“தமிழச்சிக்கு அத்தனை சுதந்திரமில்லை எங்கட நாட்டில், சிங்களத்தி என்றால் ஓடும் விமானம் கூட எனக்காக உடனே நின்று, ‘எங்கு வேண்டுமோ அங்கு தரையிறங்கும்”

“ஆம், எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், என்றாலும் அவர்களிடம் தண்ணீர் வாங்கிக் கூட குடிக்க முடியாதவள் எப்படி இத்தனை சுலபமாக….. தன்னை சிங்களத்தி என்று சொல்லிக் கொள்ள முடிகிறது?”

“எங்கட கோபமெல்லாம் அப்பாவி ஜனங்க மீது கிடையாது,  சிங்கள அரசிடம்.  அரசு சார் அமைப்புகளிடம். சிங்கள ஆர்மியிடம். அதற்காக சிங்களத்தி என்று என்னை சொல்லிக் கொள்வது ஒன்றும் அத்தனை சுலபமுமில்லை, அதற்குபதில் மரணத்தை பதிலாக வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறேன்”

“என்ன???!!!”

“எல்லாம் கடந்து நாங்கள் எங்களின் விருப்பிற்கு வாழ்பவர்கள் அல்ல, லட்சியத்திற்காக உயிரை விடவும் சம்மதித்துள்ளவர்கள். தலைமை ‘போ என்றால் போகவேண்டும் அவ்வளவுதான்”

“அது புரிகிறது மாதங்கி”

“வேறென்ன புரியவேண்டும்”

“கள்ளக் கடவுசீட்டு தானே அது?”

“ஆம்”

“ஏன் அப்படி”

“கட்டளையின் படி வந்துள்ளேன். வேறொன்றும் சொல்வதற்கில்லை”

“தப்பித்துப் போவதாக சொன்னாயே?”

“தப்பித்து வருவதாக சொன்னேன், அதற்காக விட்டுவிட்டு  ஓடுவதாக சொல்லவில்லையே”

“பிறகு கடவுச் சீட்டில்…. உன் பெயர் …………. கூட…. வேறாக பார்த்தேனே”

“பார்த்திருப்பாய் என்று தெரியும்”

“ஒருவேளை நான் யாருடமேனும் சொல்லி இருப்பின்”

“சொல்லமாட்டாய் என்றும் தெரியும்”

“அதெப்படி, இதலாம் கவனமின்மை”

“கற்பனை செய்துக் கொள்ளாதீர்கள், அதிகம் பேச எனக்கு நேரமில்லை, போராளி என்றாள் என்ன துப்பாக்கி சுடமட்டும் தெரிந்தவள் என்று எண்ணிவிட்டீர்களா?”

“சரி, நேரே விசயத்திற்குவா என்ன செய்யப் போகிறாய் இந்த விமானத்தை”

“அதலாம் சொல்ல எனக்கு அனுமதி கிடையாது. எனக்கு இட்ட கட்டளையை கூட உமக்காக தாமதப் படுத்திக் கொண்டுள்ளேன்”

“எனக்காகவா……………….????!!!”

“ஆம். நீங்கள் யார் என்பதை நான் கொழும்பு விமான நிலையத்திலேயே அறிந்துக் கொண்டேன். உம்மை நாங்கள் மொத்த பேரும் நம்பி இருக்கிறோம்”

அவள் என்னென்னவோ சொன்னாள். ஒரு சிறிய நினைவடக்கியினை (மெமரி சிப் ஒன்றை) எடுத்து என் கைக்குள் திணித்தாள். இதில் நிறைய புகைப்படங்கள் உள்ளன. எல்லாம் சிங்களன் செய்த போற்குற்றத்தை நிரூபிக்கக் கூடியது. அதை உலக மக்களிடம் சேர்க்க வேண்டும் சேர்ப்பாயா என்றாள்.

கண்கள் கலங்கிப் போனது. இதை செய்யாத என் பிறப்பெல்லாம் பிறப்பா என்று தோன்றிற்று. ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அதை நான் பார்த்துக் கொள்கிறேன் மாதங்கி ‘எங்கே போகிறாய் நீ? என்ன செய்ய வந்துள்ளாய்?” என்றேன்

“போவதை பற்றி பிறகு தெரிந்துக் கொள்வாய். இருக்கும் வரை நடந்ததை சொல்கிறேன் கேள் –

‘அன்றொரு மாலை நேரம், பூந்தோட்டம் போன்ற எங்கள் வீடு குழந்தைகளின் சிரிப்பில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அப்பாவும் நானும் வீட்டில் புழுக்கமாக இருப்பதாக எண்ணி காற்றாட வெளியில் வந்து அமர்ந்தோம்.

அண்ணன் அப்போது தான் கடைத்தெரு வரை போகிறேன் என்று வெளிவந்து எங்களோடு பேசிக் கொண்டே நின்றார். அதற்குள் அவருடைய பெரிய குழந்தையொன்று ஓடிவந்து, அப்பா நானும் கடைக்கு வரேனென்டு அழ அவர் ஒரு அடிபோட்டு உள்ளே நின்றிருந்த அண்ணியிடம் விட்டுவிட்டு வந்தார்.

அதையெல்லாம் கேட்காமல் அக்குழந்தை மீண்டும் அழ, அண்ணி இரண்டாம் மகளை காட்டி பார்த்தியா உன்னிண்ட தங்கச்சியானாலும் எப்படி  நல்ல பிள்ளையாக நடந்துக் கொள்கிறாள், நீ பெரியவனாக இருந்தும் இப்படி அடம் பிடிக்கலாமா என்று கேட்க அந்த சின்னக் குழந்தை பெரியவனை நோக்கி ‘வா அண்ணா நாம் விளையாடலாம் என்று அழைத்துக் கொண்டு அவன் கை பிடித்து ஓட பின்னாலேயே இவனும் ஓட., இருவரும் –

ஹே… என்று கத்திக் கொண்டே, ஓடிச் சென்று வெளியே வாசலில் அமர்ந்திருந்த அப்பாவை தொட்டுவிட்டு இருவரும் வீட்டிற்குள் ஓடுகிறார்கள். பின் வீட்டிலுள்ள அண்ணியை தொட்டுவிட்டு வாசலுக்கு ஓடி வருகிறார்கள். வீடெல்லாம் அவர்களின் சிரிப்பு சப்தம் நிறைந்துப் போகிறது.

மீண்டும் அந்த சின்னக் குழந்தை ஓடி வாசலுக்கு ஓடி வந்து யே… அப்பா’ என்று அண்ணனைத் தொட்டுவிட்டு வீட்டிற்குள் ஓட அண்ணா அவர்களையே பார்த்து சிரித்துக் கொண்டு நிற்க;

நொடிப் பொழுதில் சீறி வருகிறதந்த விமானம், கண்ணிமைக்கும் பொழுதிற்கெல்லாம் இரண்டுமூன்று குண்டுகளை சரமாரியாக வீட்டின்மீதும் தோட்டத்துப் பக்கமும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பக்கமும் என வாரிவீச வீடும் குழந்தைகளும் சிதறிப் போகிறது.

திரும்பிப் பார்க்கும் வேளையில் குண்டுப் போட்டுக் கொண்டேப் போன அந்த விமானத்தின் சப்தம் காதிலிருந்து ஓயும் முன், சிதறி பஞ்சு பஞ்சாக பிய்ந்துப் போனார்கள் அண்ணியும் அந்த குழந்தைகளும்.

கை தனியே கால் தனியே சக்கை சக்கையாக பொறுக்கி எடுத்து கூடையில் போட்டுக் கொண்டு மார்பில் அடித்து அழுதக்  கதை கேட்டால் நெஞ்சை சுடவில்லையா?” கண்களில் நெருப்பு சிதறுவதைப் போல் கோபத்தை வைத்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கேட்டாள் மாதங்கி.

அந்த காட்சியை கண்ட இடத்திலேயே அப்பா மூர்ச்சையாகி பின் அன்றே இறந்தும் போனார். கையில் தன் மனைவியையும் இதுவரை விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் தூள் தூளாக எடுத்துப் பார்த்த பெரியண்ணனுக்கு அப்போதே மதி கேட்டுப் போனது. இன்று வரை அவருக்கு பைத்தியம் தெளிந்த பாடில்லை, தெருவெல்லாம் அண்ணியின் குழந்தைகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே சுற்றி அலைகிறாராம். ஆனால் பாருங்கள், அவர்மேல் இன்றுவரை ஒரு குண்டு விழாமல் நோக நோக உயிரோடு வைத்திருக்கிறது இந்த பாழாப்போன விதி கூட.

கடைசியில் எல்லாம் இழந்து எனக்கென மீதம் இருந்தது ஒரே ஒரு சின்னண்ணன் மட்டும் தான். அவரையும் ‘புலி’ என்று சந்தேகப் பட்டு அதற்கெல்லாம் முன்னாலேயே கொண்டு போய் எத்தனை சித்திரவதைகளை செய்தார்கள் தெரியுமா?’ நாங்கள் கூட எங்கோ வேலை காரணமாக போயிருக்கிறார் என்று தான் முதலில் எண்ணியிருந்தோம்.

பிறகு யாருமற்று நானிருந்த இருட்டு நாளொன்றில் வந்தார் சின்னண்ணா. அடையாளமே மாறியிருந்தார். கேட்டதற்கு ‘உடம்பெல்லாம் நெருப்பால் சுட்டான் சிங்களவன் என்று சட்டையை கழற்றிக் காட்டி அழுதார். நடந்த கதையெல்லாம் சொல்லிக் கதறினார். கைவிரல் நகத்தை மட்டும் ஒவ்வொன்றாக துண்டித்தார்களாம் பாவிகள்.

அதலாம் கூடத் தாங்கிக் கொள்வேன்; சிங்களன் பேண்டதை கையிட்டு வாரச் சொல்லி அடித்தார்களாம். ஒவ்வொன்றினையாய் வந்து சொல்லி கதறி கதறி அழுதார். இந்த கையை வெட்டிவிடுகிறேன் என்று சொல்லி சொல்லி துடித்தார். ஒரு கட்டத்தில் பெரியண்ணன் உள்ளே வர –

அவரை  பைத்தியமாக கண்டபிறகு தான் வேறு வழியின்றி அண்ணியும் குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்பது பற்றியும், அப்பா இறந்துவிட்ட விவரம் பற்றியும் சொல்லவேண்டி வந்தது. அன்று அதலாம் கேட்டுவிட்டு தாளமுடியாமல் ‘இந்த மண்ணே எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு தெரு நோக்கி ஓடியவர் தான்; இன்றும் எங்கிருக்கிறார் என்று தெரியாது.

இது என் ஒற்றை வீட்டின் கதை எனில், இன்னும் எத்தனை எத்தனை வீடுகள், எத்தனை எத்தனை மனிதர்கள் எல்லாமே இந்த சிங்களனின் சுயநல வெறியால் எப்படி மண்ணோடு மண்ணாகப் போனார்கள் தெரியுமா?????????

கண்ணீர் வந்தாலே தாங்காத உறவுகளை ரத்தசகதியாக பார்ப்பதென்பது எத்தனை கொடுமை? அதன் பின்னும் ஏனிந்த உயிர் வைத்து இத்தனை காலம் இருந்தேன் தெரியுமா???”

நான் ஏனென்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை, அவள் எது செய்தாலும் சரி என்று எண்ணியிருந்தேன்.

“இதோ பார்…..”

எதையோ எடுத்துக் காண்பித்தாள். உற்றுப் பார்க்கையில் எலும்பென்று தெரிந்தது. கண்கலங்கி கண்ணீர் வர அதை; அழவொன்றும் அவசியமில்லை இனி என்பது போல் துடைத்துக் கொண்டு, அவளே ‘இது யாரினுடியது தெரியுமா?’ என்றாள்

அதற்குள் விமானம் தரை இறங்குவதற்கான அறிவிப்பு வந்தது. அந்த பணிப்பெண் ஓடிவந்து முன்னிருந்த இருக்கையில் எதிரே அமர்ந்துக் கொண்டாள். எல்லாம் தயார் என்பது போல் – கைகாட்டி கண்ணசைத்தாள்.

மாதங்கி அவசரமாக எழுந்து கழிவறைக்குள் போக’ சும்மா தடுப்பது போல் அந்த பணிப்பெண் எழுந்து ‘ஏய் என்கு போகிறாய் போய் அமர்ந்துகொள் என்று சொல்ல, அவள் அவசரம் என்று ஏதோ சொல்லிக் கெஞ்சுவதுபோல் பார்ப்போர்முன் நடித்துவிட்டு கழிவறைக்குள் போனவள் விமானம் தரை இறங்கும் வரை வெளியே வரவே இல்லை.

நான் பதற்றமுற்று உள்ளேப் பார்க்கப் போக, அந்தப் பணிப்பெண் எனை தடுத்து உள்ளே போகாதே என்று சப்தமாக சொல்லிவிட்டு ‘அவள் இருக்கையில் போய் பார்’ என்று மெல்லமாக கிசுகிசுத்தாள்.

நான் வேகமாக வந்து அவள் இருக்கையில் பார்த்தேன். அந்த பையும் ஒரு கடிதமும் இருந்தது. அந்த பையில் சில காணொளிகளின் குறுந்தட்டுகள் இருந்தன. அதை எடுத்து துரிதமாக என் பெட்டியில் வைத்துக் கொண்டேன். கடிதத்தை படித்து விவரம் தெரிந்துக் கொண்டேன். விமானம் நின்றதும் அவள் வருவாளா என்று பார்க்க கழிவறை பக்கம் நோக்கி எழுந்து போனேன். அந்த பணிப்பெண் வந்து விரைவாக இறங்கிவிடு என்றும், முதலாக இறங்கி ஓடிவிடு என்றும் மட்டும் சொன்னாள்.

ஏன் என்று கேட்டேன். இந்த விமானம் இன்னும் ஒருசில மணித் துளிகளில் வெடிக்கப் போகிறது என்று சொல்லிவிட்டு, என் மூலம் அந்த காணொளியும் புகைப்படங்களும் உலக மக்களுக்கு சேர வேண்டுமென்றும் ஒரு காகிதத்தில் எழுதி கையில் கொடுத்தாள்.

நான் மாதங்கி??? என்று கேட்கத் துணியவில்லை. அவளோடு அமர்ந்துப் பேசக் கிடைத்த மணித்துளிகளை எண்ணி பெருமிதம் கொண்டவனாய் ஏதோ செய்யப் போகிறார்கள், ஆனால் காரணமாகத் தான் செய்வார்கள் என்று கடிதத்தில் எழுதியிருந்தபடி எண்ணிக் கொண்டு அவர்களுக்கு ஒத்துழைக்கும் விதமாக, சற்று முன் நகந்து அவளிடம் புறப்படுவதாக சைகை காட்டிவிட்டு ‘வேகமாக விமானம் விட்டிறங்க முன் சென்றவர்களை நகர்த்தித்  தள்ளிக் கொண்டு ‘வேறு விமானம் பிடிக்க வேண்டும் என்று பொய் சொல்லிவிட்டு முன்னோக்கி நடந்தேன்.

எனக்கு முன் ஒன்றிரண்டு பேர் அவசரமாக இறங்கிப் போகப் பார்த்தார்கள். அவர்களை முந்திக் கொண்டு நான் சற்று வேகமாக நடந்து அவர்களுக்கு முன் சென்று வெளியேறுவதில் மட்டும் குறியாக இருந்தேன். என்னோட லட்சியமெல்லாம் அவள் தந்தந்த புகைப்படங்களையும் காணொளிகளையும் கொண்டுப்போய் உலகத்தாரிடம் சேர்ப்பதில் மட்டுமே இருந்தது. நான் வெளியேறி விமான நிலையத்தில் நுழைந்ததும் –

மாதங்கி ஓடி வந்து விமானத்தின் வாசலின் முன் நின்றுக் கொண்டாள். சட்டையை கழற்றி தூர எறிந்துவிட்டு பாருங்கள் நான் பாம் கட்டியிருக்கிறேன் அழுத்தினால் வெடித்துவிடும் என்று காட்டினாள். எல்லோரும் அதிர்ச்சியுற்று அவளைப் பார்க்க, தாமதிக்கவேண்டாம் ஓடி தப்பிக்க முடிந்தவர்கள் ஓடுங்கள் என்று சொல்ல, கோர்ட் சூட் போட்டுக் கொண்டு முன்னாள் முதலிட இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் எழுந்து ஓடப் பார்க்க எட்டி அவனைப் பிடித்துக் கொண்டாள். அசைந்தால் அழுத்தி விடுவேன் என்று சிவப்பு நிற பொத்தானை காட்டினாள்.

எதிரே படாரென சுட ஓடிவந்த இரண்டு மூன்று காவலாளிகளை நோக்கி வேண்டாம் துப்பாக்கியை கீழே போடுங்கள் என்றுகத்திக் கொண்டே  கையை மேலே தூக்கி சிவப்பு நிற பொத்தான் ஒன்றினை காட்டி ‘இனி யார் அசைந்தாலும் அழுத்திவிடுவேன் என்றாள்.

அவர்கள் செய்வதறியாது நின்று பார்க்க மீண்டும் ‘துப்பாக்கியை கீழே போடுங்கள் என்று மிரட்ட எல்லோரும் கீழே போட்டனர். என்றாலும், ஒருவன் மட்டும் சற்றும் தயங்காது சடாரென முன் ஓடிவந்து வீரசாகசம் செய்வதுபோல் சரமாரியாக மாதங்கியை நோக்கி சுட்டு சுட்டு சல்லடையாக்கினான்.

தமிழீழம் என் தாயகமென்று சுவாசித்த உயிர்மூச்சை மண்ணில் சரிந்தவாறே நிறுத்திக் கொண்டதந்த மாதங்கி என்னும் விடுதலைத் தீ. இதுவரை விடுதலைக்காக எறிந்த தீபமது அணைந்து ஜோதியற்று காற்றில் கலந்துப் போனது. மக்களெல்லாம் அலறி இங்கும் அங்கும் திண்டாடி ஓடினார்கள்.

அவள் அந்த சிவப்பு நிறப் பொத்தானை அழுத்துவதற்குள் உயிர்பிரிந்து சட்டென கீழே சரிய, நம்புவதற்கே இடமின்றி அதே கணம் அந்த விமானம் வெடித்து சுக்குநூறானது. அந்த கோர்ட் சூட் போட்டவனும் விமானத்தோடு வெடித்துச் சிதறினான்!!
——————————————————————————————-
தொடரும்..

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்