கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 3)

இதற்கு முன்..

ருவரும், என்னருகில் வந்து நின்று துப்பாக்கியை சரி செய்து வைத்துக் கொண்டு. யார் நீ என்றார்கள். லண்டன் செல்லவிருக்கும் ஒரு பயணி என்றென். அப்படியா விமானச் சீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். கடவுசீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து, சிங்கள மொழியில் ஏதோ பேசிக் கொண்டனர்.

நான் ஒன்றும் புரியாதவனாய் அவர்களையே பார்க்க, பையில் என்ன வைத்திருக்கிறாய் பிரி என்றார்கள், பிரித்து உள்ளே வைத்திருந்த மடிக் கணினியினை காட்டினேன். சரி சரி போ என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, முகத்தை சற்று சந்தேக தொனியோடு வைத்துக் கொண்டு என்னைப் பார்க்க, நான் எங்கும் போக விரும்பவில்லை, என் விமானம் புறப்பட இன்னும் அவகாசங்கள் உள்ளன என்றென்.

அவர்கள், ஒன்றும் பேசிக் கொள்ள வில்லை. எப்படியோ கிட என்பது போல் ஜாடை செய்துவிட்டு, சட்டெனத் திரும்பி அவர்களுக்குள் என்னவோ விவாதித்துக் கொண்டு வந்த வழியே போயினர். நான் ஒன்றும் புரியாதவனாய், சற்று பின்னோக்கி தலைதிருப்பி என் இருக்கைக்கு பின்னால் இட்டிருந்த கண்ணாடிக்குள்ளிருந்து தெரியும் என் தோற்றத்தினை பார்த்தேன்.

லேசாக வளர்ந்து; வரும் அவசரத்தில் வெட்டாத தாடியும், அழுத கண்ணீரில் நனைந்து; பின்னரும் கவலையில் கழுவாத முகமும், ஆங்காங்கே கசங்கிய கருப்பு கலந்த அடர் நீலச் சட்டையும், தோளில் மாட்டிவந்த மடிக்கணினிப் பையும், எல்லாவற்றையும் விட; பார்த்த உடனே தெரியும் ‘தமிழன்’ என்னும் முகமும்தான் அவர்களின் சந்தேகத்திற்கு காரணம் போலென்று எண்ணிக் கொண்டேன்.

அவர்கள் விமான நிலையத்தின் வெளியே தமிழரை பார்க்கும் பார்வையின் நம்பிக்கையற்ற தன்மை; விமான நிலையத்தின் உள்ளே ‘தெள்ளெனத் தெளிந்த நீர்போல்’ புரிந்தது. எம் நிலை என்று மாறும் இறைவா என்றெண்ணி கண்களை அழுந்த மூடி, பின்னால் தலை சாய்த்துக் கொண்டேன்.

நேற்றைய ஞாபகங்கள் மீண்டும் வந்து நினைவைத் தீண்டின. நேற்று விமான சீட்டு வாங்க சென்றதும், வாங்க சென்ற இடத்தில் இந்த தேசம் பற்றி பேசிக் கொண்டதுமெல்லாம் நினைவிற்கு வர, கிராமத்து நடுவே அமர்ந்து வெளிநாடு போக விமான சீட்டு பதிந்துக் கொடுக்கும் அந்த அண்ணன் மேகநாதனும் நினைவிற்கு வந்தார்.

அவர் ஈழம் பற்றியும் அதற்கான போராட்டம் பற்றியும் இன்றைய நிலவரங்கள் பற்றியுமெல்லாம் பேசியது, கேட்டது, நான் கோபமுற்றது பின்பு கைகுலுக்கிப் பிரிந்தது என எல்லாம் ஒவ்வொன்றாய் கோர்வையாக நினைவில் வந்தது.

திடிரென யாரோ எதிரில் நிற்பது போல் தெரிய, பட்டென கண்களை திறந்தேன், வேறு மூன்று ஆர்மி காரர்கள் நின்றிருந்தனர். சற்று பதட்டமாக எழுந்து நின்றேன்..

பரவாயில்லை பரவாயில்லை அமர்ந்துக் கொள் என்றனர். பின் சிரித்து கைகுலுக்கி பெயரென்ன என்றார்கள், சொன்னேன். எங்கேயிருந்து வருகிறாய், எங்கேப் போகிறாய் என்றார்கள்; மொத்த விவரமும் சொன்னேன். ஒருமாதிரி இருக்கிறாயே பார்க்க; உடம்பிற்கு ஏதேனும் முடியலையா என்றார்கள். இல்லை, வீட்டை நினைத்துக் கொண்டேன், அதான் சற்று வருத்தம் என்றேன். அதற்காக கவலைப் பட்டால் பின் மனிதன் தன் பயணத்தை உலக எல்லைவரை எட்டித் தொடுவதெப்படி என்றார்கள். என்னைப் பொருத்தவரை உலகமே என் வீட்டார் தான் என்றென். உறவுகளை பார்த்துப் பிரிவது பெரிய வருத்தம் தான், இரண்டு நாளானால் சரியாகும் கவலைபடாதே என்றார்கள்.

அதுவரை அமைதியாக நின்றிருந்த மூன்று பேரில் ஒருவர், இன்னும் எத்தனை மணிநேரம் தங்கிப் போக வேண்டும் என்றார். நான் மறதியாக தமிழில், நான்கு மணிநேரம் என்றென். அவர் மன்னிக்கவும் எனக்கு தமிழ் அத்தனை புரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னார். உடனே அருகிலிருந்த இருவரும் உடன் சேர்ந்து நாங்கள் சிங்களவர்கள் என்று சொல்லி புன்னகைத்தனர் நயமான ஆங்கிலத்தில்.

நானும் மனிதரிடையே வேற்றுமை காட்டிக் கொள்ளவேண்டாமே என்றெண்ணி, அப்படியா நல்லது நல்லது, விமானநிலையம் அழகாக சுத்தமாக உள்ளது, ஆங்காங்கே தமிழில் கூட எல்லாமே எழுதி இருக்கிறதே என்றென்.

அவர்கள், ஆம் ஆம், தமிழ் எமது இரண்டாம் ஆட்சி மொழி என்றார்கள். எனக்கு அந்த இரண்டாம் என்பது சற்று வலிக்கத் தான் செய்தது. யாரை வந்து யார் இரண்டாம்பட்சமாக்குவது என்று எண்ணிக் கொண்டாலும் அதை காட்டிக் கொள்ளவேண்டிய மனிதர்களல்ல இவர்கள் என்று நினைத்துக் கொண்டு, அப்படியா மகிழ்ச்சி என்றென்.

சாப்பிட்டாயா என்று கேட்டார்கள் மூவருமாக. இல்லை, பசி தெரியவில்லை என்றென். தேனீர் ஏதேனும் வேண்டுமா என்றார்கள். எழுந்து அவர்களின் கை பற்றிக் கொண்டேன். மிக்க நன்றி அதலாம் ஒன்றும் வேண்டாம், மனசு கொஞ்சம் கனத்து கிடக்கிறது, உங்களின் உபசரிப்புக்களுக்கு நன்றி. தனியாக அமர்ந்திருந்தால் போதுமென்றேன்.

அவர்கள் சிரித்துக் கொண்டே கைகுளுக்கிவிட்டு, எங்களின் விமானத்தில் பயணிப்பதற்கு நன்றி, மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திபோம் என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே என்னைக் கடந்து போயினர். அதில் ஒருவர்வேறு சற்று தூரம் சென்று வளைவில் திரும்பும்முன் நின்று என்னைத் திரும்பிப்பார்த்து சிரித்தவாறே கையசைத்துச் சென்றார்.

பாறைக்குள் நீரில்லாமல் இல்லை, தமிழருக்குத் தான் தக்க இடமும்; போதிய விடுதலையும் இன்னும் கிடைக்கவில்லை’ என்று எண்ணிக் கொண்டேன்..
——————————————————————————————-
தொடரும்..

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 2)

இதற்கு முன்..

நானொரு லண்டன் செல்லவிருக்கும் பயணி. இடையில் நான்கு மணிநேரம் கொழும்பு விமானத்தில் விமானம் தரையிறங்கி காத்திருக்க வேண்டுமென்பது ஸ்ரீலங்கன் விமானத்தின் நிர்வாக பயணத் திட்டம். அதன்மூலம் என் மண்ணினைத் தொட்டுக் கடந்து போக இந்த பதினேழு வருட வெளிநாட்டுப் பயணத்தில் இன்றுதான் இப்படி ஒரு வாய்ப்பமைந்தது.

விமான நிலையம் மிக சுத்தமாகவும், காண கலாச்சார பார்வை பொருந்தியதாகவும், புத்தர் இருந்துச் சென்ற வாசத்தை காற்றில் மிச்சம் வைத்துக் கொண்டும் ‘அழகாக காட்சியளித்தது.

ஒரு பரவசத்தோடு இயற்கை வளம் பொருந்திய அந்த அழகிய கொழும்பு நகரத்தின் நாலாப்புறமும் சுற்றிப் பார்க்கிறேன். கண்ணாடிகளின் வழியே தென்படும் மலைப்பாங்கு பிரதேசங்களும்; மரங்களின் ஏற்ற இறக்க அமைப்புக்களோடு கண்ணைப் பறிக்கும் பசுமையின் கொள்ளை அழகும் ஒரு ரசனையான மனப்பான்மைக்கு இட்டுச் செல்லும் காட்சிகளையும் கண்டு அதனூடே என் மூதாதையர் வாழ்ந்த பெருமையை எல்லாம் எண்ணி நிறைவடைந்துக் கொள்கிறேன். அடுத்த ஒரு அரை மணி நேரத்திற்கு, இங்குமங்குமாய் விமான நிலையத்தினுள் சுற்றித் திரிந்துவிட்டு, எங்கேனும் அமைதியாக உட்கார எண்ணி, ஆட்கள் குறைவாக உள்ள ஓர் அமைதியான இருக்கைப் பார்த்து அமர்ந்துக் கொண்டேன்.

மனதிற்குள், வருவதற்கு முன் நடந்த அத்தனை நிகழ்வுகளும், ஒவ்வொன்றாய் நினைவில் வந்து இழையோடிக் கொண்டிருந்தன. ஏதோ பெயருக்கு வாழ்வதாய் எண்ணிக் கொள்ளுமொரு வாழ்க்கை தானே இது. போன மாதமெலாம், என்று போய் என் ஊர் உறவு மக்களோடு புழங்கிக் கிடப்பேனோ என்று ஏங்கிக் கிடந்தேன்.

பின், விடுமுறை கிடைத்து ஊருக்கு சென்று யாரை பார்த்தேன் யாரை பார்க்க வில்லை, என்ன செய்தோம், என்ன செய்யவில்லை என்று கூட யோசிக்கும் முன், ஒரு மாத விடுமுறை முடிந்து, என் கை பிடித்தழுத உறவுகள் நண்பர்கள் என எல்லோரையும் விட்டுவிட்டு இப்படி தனியே வந்தமர்ந்துக் கிடப்பதும், மீண்டும் ஊர் செல்லவிருக்கும் அந்நாளுக்காய் வருடங்களை நோக்கிக் காத்துக் கிடப்பதும் ‘ச்ச..’ ஓர் வாழ்வா ன்று தோன்றியது..

எதையோ இழக்கிறோம், ஏதோ கிடைக்கிறதென்று; அவ்வளவுதான் வாழ்க்கை. வாழ்க்கை முழுதும் இப்படித் தான் நாமெல்லாம், என்று உள்ளே மனம் நொந்து, கண்ணிமை நனைய, அக்கம்பக்கம் திரும்பி யாரேனும் பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு கண்களை துடைத்துக் கொண்டேன்.

கண்கள் வெறிக்க சில மணித்துளிகள் வரை தூரத்தில் காற்றினால் ஆடிக் கொண்டிருக்கும் மரங்களை பார்த்துக் கொண்டிருக்கையில், மீண்டும் தனக்குள்ளே தான் நொந்துப்போக வேண்டிதானிருந்தது. அங்கே வசந்தமும் மரம் செடி கொடிகளும் இருக்கத் தான் செய்கின்றன, ஆனால் காற்று வீசுவதை கண்ணாடிக்குள்ளிருந்து பார்க்க மட்டுமே நாம் விதிக்கப் பட்டிருக்கிறோம். நம் வாழும் வாழ்க்கையும் இப்படித் தானே; எல்லாமிருந்தும் இடையே பணம் எனும் ஒரு கண்ணாடி எல்லாவற்றையும் மறைத்துக் கொண்ட வாழ்க்கை தானே நம் வாழ்க்கையும் என்று எண்ணிக் கொள்ள, மனது மீண்டும் விக்கித்தது.

இனம்பாரா வருத்தத்தில் கண்களை மூடிக் கொள்ள, எதேச்சையாய் யாரோ என்னை நோக்கி வருவதாய் உணர்ந்து எதிர்புறம் நோக்கித் திரும்பினேன், இரண்டு பேர் ஆர்மி காரர்கள் துப்பாக்கியோடு என்னை பார்த்து ஓடி வந்துக் கொண்டிருந்தனர்.
——————————————————————————————————
தொடரும்…

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 1)

காற்று வீசிடாத வான் கிழித்து, பசுமை பூத்திருந்த தரை நோக்கி விரைந்தது நான் பயணிக்கும் அந்த ஸ்ரீலங்கன் விமானம்.

என் தாயின் மடி தொடும் உணர்வில் – விமானம் நெருங்க நெருங்க ஆசை பூரித்து, வாசலின் முன்வந்து, தரையிறங்கியதும் திறக்கவிருக்கும் கதவு நோக்கிச் நின்றுக் கொண்டேன். விமானம் அறிவித்திருந்த நேரப் படி தாமதமின்றி கொழும்பு விமானதளம் நோக்கி தரையிறங்கியது.

விமானப் பணிப்பெண் ஒருவள் அவசரமாக என்னருகில் ஓடிவந்து, விமானம் தரையிரங்குகையில் அமர்ந்துக் கொள்ளவேண்டும் நிற்கக் கூடாது என்று கட்டளையிட்டாள்.

என் தேசத்தின் சுவாசக் காற்றினை முதன் முதலாக சுவாசிக்கும் தருணத்திற்குக் காத்திருப்பவனாய், இரண்டு கைகளையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு ஜன்னலின் வழியே கொழும்பு நகரத்தின் இயற்கை வளங்களை பார்தாவரே; அருகிலிருந்த இருக்கை ஒன்றினில் அமர்ந்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் விமானம் விமானநிலையத்திலிருந்து சற்று தூரத்திலேயே நின்றுவிட, எல்லோரும் அவசர அவசரமாக தற்காலிக படிக்கட்டின் வழியே இறங்கி அங்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தினுள் ஏறிக் கொண்டிருந்தார்கள்., நானும் மெல்ல என் ஈழத்து மண்ணை முதல்முதலாய் தாயை பார்ப்பவனைப் போல பார்த்துக்கொண்டே இறங்கினேன்.

மேலிருந்து கீழிறங்குகையில் உள்ளே ஒரு படபடப்புப் பற்றிக் கொண்டது.  ‘ஏனோ என் தாயின் தலை மேல் பதம் பதிக்கப் போகிறோமோ எனும்போல் ஒரு  மரியாதை அது. என் தாய்மண்ணின் உடல் தொட்டுப் பூரிக்கப் போகிறோமோ எனும் படபடப்பு அது.

பின்னால் வருபவர்கள் என் தயக்கம் பார்த்து நகர்ந்து எனை கடந்து முன்னே சென்று விட, நான் தரை தொடும் முன் சற்றமர்ந்தவாறு கீழே குனிந்து முதலில் ஒரு கைப்பிடி மண்ணெடுத்து என் ஈழத் தாயே என கண்களில் ஒற்றிக் கொண்டு ‘கால் பதித்தேன். அருகில் எனை கடந்து சென்றவர் ஒருவர் சிரித்துக் கொண்டே போனார்.

அதை பற்றி எல்லாம் எனக்கு யோசிக்கவே தோணவில்லை. உள்ளே இம்மண்ணின் விடுதலைக்கென இத்தனை வருடங்களாய் சிந்திய ரத்தம் அனைத்தும் ஒரு நொடி மண்ணைத் தொட்டதும் எனக்குள்ளே சுட்டு குளிர்ந்தது.

வெகு நாளின் ஆசை இது. ஈழத்திற்கு வரவேண்டுமெனக் காத்திருந்த வெகுநாளின் கனவு இது. எப்படியோ இன்று அது நிகழ்ந்துவிட்ட மகிழ்வில் திளைத்து நடக்கிறேன்..

‘எங்கோ என்றோ பிரிந்து போன உறவுகளின் ஸ்பரிசம் என்னுள்ளே பட, ஊரெல்லாம் சுற்றியலைந்த நான் இன்று எனக்கான ஒரு தேசத்தில் கால் பதித்து விட்டதாய் எண்ணி மகிழ, என் இத்தனை வருட காத்திருப்பிற்கு எனக்கு வெகுமதியாகக் கிடைத்தது வெறும் நான்கு மணி நேர தங்கும் அவகாசம் தான்.
——————————————————————————————-
தொடரும்..

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40 விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு
விலைபோகும்
ஓட்டு எந்திரங்களல்ல – நாம்
நாளைய விதியை இன்றெழுதும்
தேர்தல் பிரம்மாக்கள்;

லவசத்தில் மதிமயங்கி
எடுத்து வீசிய ஊழல் பணத்தில்
வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம்
தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும்
மண்ணின் – உரிமை குடிகள்;

போட்டதை தின்று
விரித்ததில் தூங்கிப் போகும்
புரட்சியே யற்ற வெற்று குப்பைகளல்ல – நாம்
சரி தவறு அலசி; தக்கவரை நிறுத்தி – நாட்டின்
வளர்ச்சி குறித்து சிந்திக்கத் தக்க அறிவுள்ள மனிதர்கள்;

விரல்நுனியில் மை பூசி – இருக்கை பெற்றபின்
தலைக்கு நெருப்பிடும் கைகளை
முறித்துப் போடும் வாய்ப்புதனை அன்றிலிருந்தே
மீண்டும் மீண்டும் பெற்றவர்கள் – நாம்
மீண்டும் மீண்டும் இழக்கிறோமே தவறில்லையா??????

டித்தவனை
திருப்பியடிக்கத்
தயங்காத நம் கைகள் –
வயிற்றில் அடிப்பவர்களை மட்டும்
விட்டுவைத்ததில் சோடைபோனோமே; அதும் தமிழராய்???!!!

ரும் தலைமுறைக்கு
வாழ்வினை சேகரிக்கும் கடமையினை
ஒவ்வொருமுறை – கவனமின்றி பதிந்த ஒட்டுக்களுக்கும்
கொடுத்த விலை படி விற்றுவிட்டோமென்பது
சிந்திக்காத கேவலத்தால் –
நாம்  செய்த பெருங் குற்றமின்றி வேறென்ன???

ந்து வருடத்திற்கு
பணம் காய்க்கும் மரமென்றெண்ணி
ஒரு  குவளை சாராயம் ஊற்றிக் கொடுத்து
வெட்டிச் செல்பவர்களை – இனி
விரட்டித் துரத்துவோம்;

ஓட்டு போடுவதற்கென
அரிசி – யல்ல
அமிழ்தமே தந்தாலும்
தூக்கி முகத்தில் வீசுவோம்;

மக்களின்
சுய புரட்சியின் அர்த்தத்தை
தேர்தலால் அனைவருக்கும்
விளங்கவைப்போம்;

உனக்கும்
எனக்கும்
இத் தேசத்தின் நன்மைக்கும்
இனத்தின் மக்களின் ஒவ்வொரு குடிமகனின்
உரிமைக்கும் மதிப்பு கொடுப்பவர்
சிந்திப்பவர்
உழைக்க முடிந்தவர் எவரேனும் உண்டெனில்
அவருக்கென விரல் நுனியில் மையிடுவோம்;
நம் வாழ்வினை நாமே திருத்தியமைப்போம்!!
—————————————————————————
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சில்லறை சப்தங்கள்..

காலம் எட்டி உதைக்காத நாட்களில்லை
விரலிடுக்கில் சொடுக்கினாற் போல் வருகிறது
வலிகளும்.. துக்கங்களும்!

சொல்லத் துணியா வார்த்தைகளுக்கிடையில்
மறுக்கவும் மறக்கவும் முடிந்திடாத – ஏக்கங்களுக்கு நடுவே
சிரிக்கத் துணிந்த வாழ்க்கையில் தான் –
சொல்லி மீளாப் போராட்டாங்கள் எத்தனை…எத்தனை(?)

நான் தான் மனிதனாயிற்றே என…. நெஞ்சு
நிமிர்த்திய போதேல்லாம் – கர்வம் தலையில் தட்டி
மார்பு உடைத்த நாட்கள் எண்ணிலடங்காதவை;

விட்டுக் கொடுப்பது தானே – வாழ்க்கையென
உணர்ந்து மன்னித்துவிடுகையில் ‘கோழை, பயந்தாங்கொல்லியெனப்
பெற்றப்  பட்டங்களும் குறைவொன்ருமில்லை;

இரண்டுக்கும் நடுவே – விட்டும் கொடுத்து
கம்பீரமாய் எழுந்தும் நின்று வெற்றியென கர்ஜிக்கையில்
எழும் போட்டிகளும் பொறாமைகளும் – காண்கையில்
மிருங்கங்களுக்கு நடுவே வாழுதடா மனிதஜென்மமென
பயின்ற – பாடங்கள் ஏராளம்;

‘போடா மனிதா’ வென மனிதனை வெறுத்து
‘கடவுளே’ என இறைவனை வேண்ட அமர்கையில்

வேண்டுவதற்குக் கற்ற பாடங்களில் கூட –
கண்ணில் பட்டும் படாமலுமிருக்கும் குறைகள் கணக்கிலடங்காதவை;

ஆயிரம் கடவுள்கள்..
ஆயிரம் வேதங்கள்..
எல்லாம் உண்மையும் பொய்யுமாய் –
மனிதம் கொள்ளவும் துணிகிறதே என்ற – உதாரண வலிகள்
அறிவை உருத்தாமலில்லை;,

காற்றினைப்போல் – நறுமணம் போல் – மின்சாரம் போல் –
கண்ணில் படாது எங்கிருந்தோ – இயங்கும்
ஒரு இறைமையின் உணர்வு –
உள்ளே ஊடுருவி உயிரைத் துளைத்தெடுக்க;

இடையே –

எது உண்மை..? யார் சரி..?
யாரை வேண்டுவது..? எப்படி வேண்டுவது?
யாரை அறிவது? எப்படி நாடுவது?
எங்கிருக்கிறேன்? என்ன செய்கிறேன்?
எதற்கு பிறந்தேன்? ஏனிந்த வாழ்க்கை?
என்ன நரகமிது இறைவா யென
நெஞ்சு கணக்கையில் –
ஜென்மம் செத்து செத்து பிழைப்பதின்னும் – எத்தனை காலத்திற்கோ???????!!!!!!!!!!!!

நீள நெடுக்களிலெல்லாம் போராட்டம். மரணம். கொலை. கொள்ளை..
இன்னும் எத்தனை இலங்கை(?)  எத்தனை பாலஸ்தீனம் (?)
எத்தனை காஸ்மீர் ?? எத்தனை மனிதர்கள்???
எத்தனை மரணத்தை – மண் தின்று மிஞ்சுமோ உலகத்தீரே??????!!!!!

நரம் தின்னத் தயங்கும் மனிதம்
உயிர் குடித்து -வெற்றியென கர்ஜிகையில் –
இன்னும் எத்தனை காலங்கள் – இப்படி
இரத்தமாய் சொட்டித் தீருமோ(?)!”

வெறும் செத்து மடிவதும் –
சாகப் பிறப்பதுமா
வாழ்கை?
எனில் – சாவதற்கும் வாழ்வதற்குமேடையே
மரண வாசத்தில் நொடிகள் நகர்வதா – காலமாற்றம்????

“ஏதோ ஒரு பயம் –
எப்போதோ ஒரு சந்தோஷம்:

“ஏதோ ஒரு பதட்டம்-
எங்கோ ஒரு நிம்மதி:

“எத்தனை எத்தனையோ தோல்வி –
யாரோ இழந்த வெற்றி:

“எதற்கோ கவலை-
எப்படியோ ஒரு சிரிப்பு;

“எது பாதையென்றே தெரியாமல் பயணம் –
எதையோ எட்டிவிட்டத் திமிர்;

எதுவுமே நிலைமாறாத வேதனை
மீண்டும் எல்லாம் பெற ஆசை – யென
வெறும் சில்லறை சப்தங்களாக தான்
நகர்கிறது வாழ்கை!!
————————————————–
வித்யாசாகர்

Posted in கவிதைகள், சில்லறை சப்தங்கள் | Tagged , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்