(83) பிரிவுக்குப் பின் – நிறைவுறுகிறது!

கவிதை மலர்களாய் உதிர்ந்த கண்ணீர் பூக்கள்..

உடம்பெல்லாம் நரைத்து சிரித்த
ரோமங்களுக்கிடையே –
வலித்துக் கொண்டன – உன்னோடில்லாத
அந்த தனித்த நாட்களெல்லாம்;

ஊரெல்லாம் சிரிக்கும் சப்தங்களை
தாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன –
நாம் பிரிந்து தவித்த அந்த
விசும்பலின் சப்தங்களெல்லாம்;

நெருப்பில் சிவந்து தகித்த அனலாய்
எரியுதடி – உன்னோடில்லாத நாட்களின்
இரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய
நம் இளமையும் துள்ளலும்;

எட்டி தூரவைத்த கால்களிங்கே ஓய்ந்து
தரையில் வீழ்கையில் – மிச்சம் மீந்ததென்ன
நீயும் நானும் சேர்ந்திடாத நாட்களின்
வெறுத்து வாழ்ந்த சலிப்பு நினைவுகள் தானே..?

ஒருவேளை –
விடுமுறையில் வந்து போனதை
ஊரார் வேண்டுமெனில் கணக்கில்
வைத்துக் கொள்வர்; கொள்ளட்டுமேடி –

நீயும் நானும் வாழ்ந்ததெல்லாம்
‘சீக்கிரம் வந்து விடுங்களென’
நீ போட்டக் கடிதத்திலும்’இம்மாதக் கடைசியில் வந்துவிடுவேனென’
நானெழுதிய கடிதப் பொய்யிலும் தானே;

இப்படி ஆசைகளை மூட்டைகட்டி
இருபது வருட வாழ்வை தொலைத்து –
வீடு திரும்பினால் –
பிள்ளைகள் பேசிக் கொண்டன
‘பொறுப்பில்லாத அப்பாவாம் நான்;

பணத்திற்காய் ஓடுகிறேனாம்;
நான் – எனக்காய் வாழ்ந்தாவது போனேனா???

இல்லையென என் பிள்ளைகளுக்கு நான்
பாடையில் போன பிறகு தான் புரியுமோ?

உன் கனவையும் என் கனவையும் சேர்த்து
நான் அங்கு தொலைத்ததால் தான்
இவர்களின் வாழ்க்கையை – இங்கு பெற்றேனென
புரிந்துக் கொள்ளும் முன் –
என் மீது – புள் பூண்டு முளைத்துப் போகுமோ???

முக்கிப் பெற்ற மூன்று பிள்ளைகளுக்குக் கூட
எனை அப்பா என்று நீ –
தொலைபேசியில் சொல்லித் தெரிந்தது தான்
நான் பெற்ற சாபமோ?

நிஜத்தில் –
காற்றும் வானமும் மட்டுமேடி
உன்னையும் – என்னையும் அறிந்திருக்கும்,

தொலைபேசியில் நீ அழைத்தப் போதெல்லாம்
நீ கேட்டுத் தர முடியாத – முத்தங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..?

தொலைபேசியில் பெருமூச்சு விட்டே
கழிந்த வருடங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..?

ஆசைப்பட்டு – ஆசைப்பட்டு
பட்டு.. பட்டு.. பட்டுப்போன
கனவுகளெத்தனை – ஒன்றாயிரண்டா..?

அத்தனையும் வாழ்ந்துத் தீர்க்க
இன்னும் ஜென்மமெத்தனை பிடிக்குமோ
பிடிக்கட்டுமேடி;

இதோ மரணக் கயிறு வந்து
கழுத்தை இருக்கும் கடைசி இறுக்கத்தின்
அழுத்தம் வரை –

உனக்காய் நானும்; எனக்காய் நீயும்
மட்டுமே வாழ்ந்தது வாழ்க்கையடி; வாழ்க்கையடி!!
—————————————————
வித்யாசாகர்

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 82

ன்று எனக்குப்
பிறந்தநாள்,

புது துணியுடுத்தி
எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து
தொலைபேசியில் எல்லோரிடமும்
வாழ்த்துப் பெற்றுக் கொண்டு
வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில்
கண்களின் ஓரம் –
ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது;

தூக்கம் கலைவதற்குள் நீ வந்து
என் காதுகளில் கிசுகிசுக்காத
பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 81

தொலைபேசியில்
பேசும்போது –
ஏதோ நீ பேச வந்ததை
பாதியில் நிறுத்தினாய்;

நாம் கடந்த இரவுகளின்
மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்;

தயவுசெய்து –
கடிதத்தில் கூட அவைகளை
எழுதிவிடாதே,

இன்னும் –
ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க
எனக்கு பலமில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 80

நிறுவன ஒப்பந்தப் படி
என் – உறவுகள் தொலைந்த
பாலை நிலங்களில் இரண்டு வருடங்களை
தொலைத்தாகி விட்டது;

இன்று ஊருக்கு வர
என் கடவுச் சீட்டினை கூட
பெற்றுக் கொண்டேன்;

இன்னும் சற்று நேரத்தில்
என் இரண்டு வருட ஆசைகளும்
விமானமேறி –
நாளை தரையிறங்கும்;

வானம் விடிகையில்
வாசலில் நீ நிற்ப்பாய்,
ஓடி வருவாயோ –
நின்ற இடத்தில் எனை கட்டி
அழுவாயோ – தெரியாது;

நான் மட்டும் சாதாரணமாகக்
காட்டிக் கொள்வேன்,
ஆயினும்,
என் சட்டியின் அந்நிய தேசத்து
வாசனை திரவியத்தால்
என் அழையையும் –
மறைக்க இயலாது தான்!

சரி சரி.. அதோ பார்
நம் கட்டிலில் நனைந்தூரிய
உன் கண்ணீரையும்
தூசிகளையும்
தட்டி தூர எறி;

முடிந்தால்
நான் நாளை வரும் முன்
நாளைய இரவை மட்டும்
சற்று சீக்கிரம் –
இன்றே வரச் சொல்லேன்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 79

த்தனையோ
பூக்களுக்கு மத்தியில்
சிரிக்கும்
ஏதோ ஒரு
அதிசய பூவிலிருந்து தான்
துவங்குகிறது
அத்தனை ஆண்களின்
வாழ்க்கையும்;

எனக்கும் நீ
அப்படித் தான் –
இடையே சற்று
பிரிவென்னும் முட்களோடு!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக