பிரிவுக்குப் பின் – 71

விழுகின்ற ஒரு சொட்டுக் கண்ணீருக்குத் தான்
வருடங்களிரண்டின் வருத்தம் புரியும்;
உன்னை காணமல் – பேசாமல் -தொடாமல் – தவிக்கும்
வாழ்க்கைக்கு தான் நொடியில் கூட நான் இறப்பது தெரியும்!

தொடத் தொட உன் தேகமினிப்பது – கனவிலும்
நினைவிலும் மட்டுமென யாருக்குத் தெரியும்;
பட படவென உடையும் இதயம் தானிங்கே..’கவிதையென்பது’
உனக்கும் எனக்கும் இடையே உள்ள பிரிவுக்குத் தெரியும்!

உனைவிட்டு பிரிந்து வாழ்ந்ததில் – இளமை..
அதோ.. எங்கோ போனது யாருக்குத் தெரியும்;
என் தொலைத்த இளமைக்கு- முதுமை –
வலியான பரிசென..எனக்குமட்டும்தானே தெரியும்!

வாழ்க்கையை எண்ணி எண்ணி வாழ்ந்ததில் –
மீந்த பணங்கள் பணக்கார பட்டத்துடன் சிரிக்கின்றன..
எல்லோருக்கும் தெரியும்;
பணத்தில் பொதிந்த வலிகள் ஆயிரமென
உனக்கும் எனக்கும் தானே புரியும்…!

கேட்குமொரு பாட்டில்கூட அழுத கணங்கள்
எத்தனை எத்தனையோ எல்லோருக்கும் தெரியும்;
பாட்டிற்கு ஏனழுதேனென – ஏக்கங்களை
சுமந்து சுமந்து வாழும் எனக்குத்தானே தெரியும்!

ஊரெல்லாம் சுற்றித்திரிந்தும்; காற்றாய் இங்கே
பறந்துவந்ததும் ஏதோ விதியென யாருக்குத்தெரியும்;
இரவின் நீளங்களில் நான் இறக்கும் கொடுமை
காலையில் பார்க்கும் கண்ணாடிக்குத் தெரியும்!

தொட்டதெற்கெல்லாம் ஆசைவந்தும்; பார்த்ததெல்லாம்
வாங்க நினைத்தும்; ஒரு தேனீரருந்தக்கூட
யோசித்த வாழ்க்கை யாருக்குத் தெரியும்;
இன்று ஆசைகளெல்லாம் மிச்சமாய்..மிச்சமாய்..மிச்சமாய்…
என் காலத்தை கடந்துவிட்டதென யாருக்குத் தெரியும்???

காலை பணிக்குச்செல்லும் பேருந்து நகர்வில்
ஜன்னலோரம் தொலைத்த கனவுகளாயிரம் யாருக்குத் தெரியும்;
தொலைபேசியில் கேட்ட உன் குரலை நினைத்து நினைத்தே
வருடங்களை இரண்டிரண்டாய் இழந்தோமென யாருக்குத்தெரியும்???

காதோரம் பிள்ளைகளின் சப்தமும்,
விழிமுழுதும் – பாசத்தை கடிதத்தில் மட்டும் கண்டு வளர்ந்த
பிள்ளைகளின் சோகமும்,
வாயார அழைக்கும் ஆசையில் கூட பஞ்சம் வைத்த இந்த வாழ்க்கை
கொடுமை – கொடுமையென்று யாருக்குத்தெரியும்;

ஊரில் விட்டுவந்த என் வீடு வாசல் மரம்கூட
வந்தென்னை ஏன்..? ஏன்..? ஏனிந்த பிரிவென்று
கேட்கும் கேள்விகளாகத் தான் வருடங்களிங்கே
நகர்கிறதென எனக்குமட்டும்தானே தெரியும்!!
————————————————————————–
வித்யாசாகர்

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

தம்பி ஆனந்திற்கும் சகோதரி உமாவிற்கும் – திருமண வாழ்த்து!

ரு தெருக்கோடி முனையில்
நின்று –
திரும்பிப் பார்குமந்த
பார்வைக்காய்..,

இமைக்குள்
இருவரும் ஒளிந்து
ஒருவரை தேடுமந்த
இனிய விளையாட்டிற்காய்..,

இரவு பகல் கடந்து
சூரிய..சந்திரன் கடந்து
கடக்க இயலா –
ஒரு நிமிடக் காத்திருப்பிற்காய்..,

நினைவுகளில்
உலகம் விட்டெங்கோ சென்று
ஒருவருக்காக மட்டும் வாழுமந்த
அன்பின் தருணத்திற்காய்..,

பாதி தின்கையில்
மீதியை வைத்துவிட்டு எழுந்திருக்கும்
ஒரு பெரிய நெருக்கத்தின்
சின்ன பிரிவினொரு –
கனமான உணர்விற்காய்..,

குளிக்கையில் –
நடக்கையில் –
உறக்கத்தில் – விழிப்பில் –
திரும்பும் இடமெல்லாம் தெரியும்
ஒற்றை முகத்திற்காய்..,

ஒரே போர்வையில்
உறங்கி –
நான்கைந்து பேராய் எழ விடியும்
பொழுதிற்காய் –

காதல் காதல் காதலென
வளரும் போது கிடைக்காத காதலையெல்லாம்
வாழும் போது; வாழ்ந்தும் தீராத
வாழ்வை – சுகமாக சுவாசித்து,

ரசிக்க ரசிக்க ஆயுளேறி
இனிக்க இனிக்க இன்பமெய்தி
நற்செல்வங்கள் எல்லாம் பெற்று
நன்கு வாழ்ந்தவர் போற்ற
நாளை வாழ்பவர் போற்ற –
வருடங்களாய் காத்திருந்த காத்திருப்புகள் அத்தனையும்
நாளுக்குநாளும் மகிழ்ச்சி வெளிச்சமூட்டிட –
உறவுகளுக்குள் அன்பு பொங்கி வாழ்ந்திட

தம்பி னந்திற்கும் சகோதரி மாவிற்கும்
என் மனம் நிறைந்த திருமண நல்வாழ்த்துக்கள்!
—————————————————————————————
வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

44 துர்க்கா என்றொரு தாயுமானவள்!

றவோடு உயிர்வளர்க்கும் பெண்மையை
உதறிவிட்டு –
எம் உறவிற்காய் உயிர்தந்த
தாயுமானவளே,

அடுப்பெரிக்கும் பெண்ணிற்கு படிப்பெதற்கு
என்றோருக்கு முன் –
அடித்து போர் புரிந்து
ஈழ விடுதலை நெருப்பிற்கு தன்னையே தரித்தவளே;

பெண்படைக்கு
ஆண்படை அஞ்சுமளவு
எம்படை – எவரையும் வெல்ல ஒரு
தனிப்படையையே தேற்றியவளே;

காலம் காலமாய்
யாரேனும் வந்து எமக்கென்று
ஒரு தேசம் மீட்டுக் கொடுப்பார்களா என்றிருந்த
எம் இனத்திற்கு –
நானுமுண்டென –
நம்பிக்கையும், உயிரையும் தந்தவளே;

ஆனந்தபுரம் எழுதத் துணிந்த
வரலாற்று வெற்றிக்கு – அநீதி இழைத்து
சிங்களவன் வீசிய நச்சு குண்டிற்கு
தன்னுயிரையும் தந்து தலைவனைக் காத்த வீராங்கனையே;

முள்ளிவாய்க்காலின் பெருந்துயரை
உன் கனிவான முகத்தில் மறைத்து
எங்கள் இதயத்தில்; இரத்தத்தில்; உணர்வில்
விடுதலை என்னும் ஒற்றை வார்த்தையை
உன் மரணத்திற்கு பதிலாய் ஆழப் பதிந்தவளே;

தீபன், விதுசா, கடாபியெனும் வீர வரிசையில்
நான்காவது நட்சத்திரமாய் மறைந்துக் கொண்ட
ஈழக் கனவில் பூத்த – வீர நெருப்பே;
எம் – வெற்றியின் காத்திருப்பே;

உன் கனவுகளில்
தோல்வி குறிப்பெழுத துப்பில்லாத சிங்களவர்
சதிகார கூட்டு சேர்ந்து
விடம் பாய்ச்சி வீசிய குண்டுகளுக்கு
அஞ்சாத மரண வாகை சூடி
ஈழ விடுதலைக்கு ஜோதியாய் கனப்பவளே;

வானத்தில் ஓர்தினம்
விண்மீன் கூட அற்றுப் போகலாம்; போகட்டும்,
தரணி நாளை – எப்படியும் மாறலாம்;மாறட்டும்
மாறா எம் தமிழ் – மறையாத தலைமுறை வரை
எங்களின் வாழ்தலின் –
விடுதலை வேட்கையின் –
நாளைய வெற்றி முழக்கத்தின் –
உயிர்ப்பாய்.. துடிப்பாய்.. நீயும் இருப்பாயடி அம்மா;
ஈழம் ஜெயிப்பாயடியம்மா!!
—————————————————————————
வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

(43) மனிதத்தை மண் தின்ற நாள்; மே-18

வாருங்கள் தோழர்களே..
உறவுகளின் உயிர்மூட்டை சுமந்து
முல்லிவைக்காலில் உயிர் நடவு செய்வோம்;

பச்சிளம் குழந்தைகள் துடித்த
நினைவெடுத்து –
சிங்களனுக்கு ‘வெண்மனப் பட்டம் தருவோம்;

நான்கு புறம் பரிதவித்த – என்
மக்களின் கதறல்களையெல்லாம் சேகரித்து
உலக மனிதர்களின் காதுகளில் ஓதுவோம்;

பால்குடி மறக்காத பச்சிளம் குழந்தைகளையும்
அப்பாவி மக்களையும் – அநீதியில் கொன்ற
கோழைகளுக்கு – போர்வீரன் பட்டம் அளிப்போம்;

துண்டு துண்டாய் தகர்த்தெறியப்பட்ட –
உடல்களால், உயிர் ஊனமுற்று துடித்த – நம்
இன அழிவு சேதி கேட்டு –
பதறாத இன உறவுகளே………..; வாருங்கள்
நோட்டீஸ் அடித்து நினைவு தினம் கொண்டாடுவோம்;

நஞ்சு பாய்ச்சி
விச குண்டெறிந்து
நயவஞ்சகத்தால் சிங்களன் – எம் கருவறுக்க
துணைபுரிந்த தேசங்களே…………; வாருங்கள்
சமாதானம் பற்றி; அடிமை ஒழிப்பு பற்றி; அஹிம்சா பற்றி
புதியதாய் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டு
வெற்றிவிழா நடத்துவோம்;

பிணக் குவியல்களில் சுடர்விட்டெரிந்த
என் உறவுகளின் பிணவாடையை –
சற்று நினைவுற்று –
நன்றாக நுகர்வுற்ற போதையில் நம்மை
மனிதர் என்று –
மார்தட்டிக் கொள்வோம் வாருங்கள்; உலகத்தீரே!!!!

தாய் எரிந்து
தந்தை உடல் சிதறி
தங்கை கருவறுத்து
அக்கா; தம்பி; அண்ணன்; குடில்; குழந்தை; எல்லாம்
ஒழித்து –
ஒழிந்து போய்விட்டோம்;
எங்களிடம் –
நினைவுகளே மிச்சமுண்டு கண்ணறுத்த தெய்வமே!!!! வா..

தொலைகாட்சிக்கு தீனி போட
செய்தியாக்கி பணம் செய்ய
அனுதாபம் தெரிவித்து ஓட்டுவாங்க
கவிதை எழுதி புத்தகமாக்க –
எம் இனமா நலிந்துபோனது உலகத்தீரே???

பச்சை பச்சையாய் அறுத்து
எரிகிறானங்கே சிங்களவன் – மேலும்
வெற்றி முழக்கமிட்டு
நடனம் ஆடுகிறான் சிங்களவன்
நம் தோல்வி அவன் வெற்றியெனில் போகட்டும்
எம் மரணம் –
அவன் இலக்குயெனில்
சரிதானா உலகத்தீரே???

அறுபது வருடம் போராடி
லட்சாதி லட்சம் உயிர்களை தொலைத்து
வெறும் தீவிரவாதி பட்டம் சுமந்து
வேறு தேசம் தேடி அலைகிறோமே
மனசு யாருக்குமே பதைக்காதா.. உலகத்தீரே???

எச்சில் உணவு தின்று
எவன் கூரை ஓரமோ ஒதுங்கி
துண்டிக்கப் பட்ட கை, கால்களோடாவது
உயிர் வளர்க துணிந்துவிட்டோம்;
வருட வருடம் விளக்கேற்றி
எம் உறவுகள் துறந்த உயிரின் மண் தின்று
உள்ளே சிலிர்த்தெழும் உணர்வு கூட்டி
சிவந்த கண்முழுதும்
ரத்தம் வெறிக்க ரத்தம் வெறிக்க
கோபக் கனல் சுமந்து –
முல்லைவாய்க்காலின்
மரண நெடிக்கு மத்தியிலே – ஓர்தினம்
எம் வெற்றிக் கொடியை பறக்கவிடுவோம்;

அந்த எண்ணம் போகும் தினம்
உயிரையும் துச்சமென விடுவோம்;

யாம் துச்சப் பட்டுப் போகும்
அந்நாளில் – வேண்டுமெனில்
நினைவு தினத்தை நீங்கள் கொண்டாடுங்கள்
உங்கள் நினைவுகளில் எம் உயிர்
ஈழ தேசத்திற்காய் விட்டதாகப்
பதியப் பட்டுக் கொள்ளட்டும்!
———————————————————————-
வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

155 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

வன் சொன்னான்
இவன் சொன்னான்
எவன் சொன்னாலும்,

அம்மா சொன்னாங்க
அப்பா சொன்னாங்க
தாத்தா சொன்னாங்க
பாட்டி சொன்னாங்க
யார் சொன்னாலும் –
சிந்திப்போம்.

தேவையானதை
அவசியமெனில் –
சரியெனில் –
ஆய்ந்து –
தன் புத்திக்கு ஏற்கும் பதில் இருக்குமெனில்
மட்டுமே – ஆமென்றும் இல்லையென்றும்
ஏற்ப்போம் மறுப்போம்;

நம் சுதந்திர சிந்தித்தலில்
மூடதனம் ஒழியட்டும் –
இறைமை யாதென மொத்த பேருக்கும்
புரியட்டும்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக