ஒரு காலஇடைவெளியின் கண்களோடுத் திறக்கிறது
எனக்கான பார்வை..
நெடுங்காலத்திற்குப் பிறகு மீண்டுமந்த
பழைய ஊருக்குச் செல்கையில்
மரங்கள் வெட்டப்பட்டிருந்தன
ஜூலி இறந்துப் போயிருந்தாள்
மாடுகள் வளர்ப்பு அறவே அங்கு காணோம்
ஆடும் கோழிகளும் கறிக்காக மட்டுமே
கொண்டுவரப்பட்டது
முருகன் அண்ணன் இறந்துப் போயிருந்தார்
இட்டிலி விற்கும் ஐயா
காய்கறி மாமா யாருமில்லை அங்கு..
யாருமில்லா
அந்தத் தெரு எனக்கு விரிச்சோடித் தெரிந்தது
நாங்கள் அன்று பாடிய கண்ணாமூச்சி ரே ரே பாடல்
எனக்குள் மட்டுமே ஒலித்தது
அங்கு விளையாடிய விளையாட்டுக்களை
அந்த தெரு மறந்துப் போயிருந்தது..
அம்மா அப்பா
எனைத் துரத்திக்கொண்டுவந்து பிடித்த காட்சிகள்
அந்த தெருவழியே வந்து
கண்களுள் நிறையத் துவங்கியது
நாங்கள் வாழ்ந்த வீட்டினை இடித்து
அங்கு வேறு கடைகளைக் கட்டி
வாடகைக்கு விட்டிருந்தனர்
நாங்கள் வாழ்ந்ததன்
ஒரு சின்ன அடையாளத்தைக் கூட வைத்திராமல்
தொலைத்த அந்த தெருவை
மனதார சபித்தேன்..
என்னை யாருக்கும் அத்தனை
அடையாளம் தெரிந்திருக்கவில்லை
இனி இந்த ஊருக்கே வரக்கூடாது என்று
எண்ணிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு
விருட்டென்று வேறு தெரு நோக்கித் திரும்புகையில் – ஒரு
நாய் ஓடிவந்து என் மீது பாய்ந்தது
நான் பயந்து திகைத்து அதைப் பார்க்க
அது என் மீதேறி பாய்ந்து முகத்தை உடம்பை
தலையெல்லாம் மாறிமாறி அன்பொழுக நக்கியது
நான் சற்று வியந்து
எனதிரண்டு கைகளையும் அதன்முன் நீட்ட
அது தனது முன்னங்கால்களைத் தூக்கி
என் கைமீது வைத்துக்கொண்டு
என்னையேப் பார்த்து மூச்சிரைத்தது
நல்லாருக்கியா… என்பது போலிருந்தது
அது பார்த்த பார்வை..
யார் நீ என்று நான்
எப்படிக் கேட்க அதனிடம் (?)
ஒருவேளை என் ஜூலிக்குப் பிறந்த
குட்டிநாயாக இருக்குமென்று எண்ணிக் கொண்டு
அதன் தலையில் தடவிக் கொடுத்தவாறே
மீண்டும் அந்த தெருவுக்குள் நுழைந்தேன்
நாயை விட்டு விலகி
வலியச் சென்று நான் தான்
நான் தான் பலானவன்
இங்கிருந்து இதனால் வந்திருக்கிறேன்
முன்பு இங்கு இருந்தோமே நினைவிருக்கிறதா என்றேன்
இரண்டுபேர் நான்காக கூடி
நால்வர் ஐவரெனப் பரவி ஊரே ஒன்று கூடினர்
ஒருவர் சொல்லி ஒருவரென யார் யாரோ
எனைப் பார்க்க ஓடிவந்தார்கள்
இது என் மகன்
இது அவளுடைய மகள்
அவள் அப்போ அந்த வீட்டில் இருந்தாள்
இவன்தான் இப்படி வளர்ந்துவிட்டான் என்று எல்லாரையும்
ஒருவர் மாற்றி ஒருவர் அறிமுகம் செய்தார்கள்
இப்படி வளர்ந்துவிட்டாயே என்று
என்னைக்கண்டு வியந்தார்கள்
என் கன்னம் தடவி கொஞ்சினார்கள்
யார் யாரோ மாறி மாறி ‘என் வீட்டிற்கு வா’ என்று
அழைத்தார்கள்..
ஒருசிலரின் வீட்டிற்குள் மட்டும் சென்றேன்
பழைய புகைப்படங்களையெல்லாம் பார்த்தேன்
தங்கை உயிரோடிருந்த நாட்கள் அப்புகைப்படங்களில் தெரிந்தது
கவலைப்படாதே என்றார்கள்
கண் துடைத்துக்கொண்டு எல்லோரிடமுமிருந்தும்
மெல்ல விடைபெற்றேன்
நிறையப் பேர்
தெருமுனை வரை வந்து
வழியனுப்பி வைத்தார்கள்
எனக்கு அங்கிருந்து வர மனசேயில்லை
அங்கேயே ஒரு வீட்டின் படிக்கட்டில்
அமர்ந்துக் கொண்டேன்
அந்த ஊர்மீது விட்ட சாபத்தை
கண்ணீர் சிந்தி கண்ணீர் சிந்தி துடைத்தேன்..
அந்த நாய் ஓடிவந்து
என் முகத்தை நக்கி நக்கி விட்டது
அதன் எச்சிலைவிட
பாசத்தில் நனைந்த கனமான மனதைச் சுமந்துக்கொண்டு
அங்கிருந்து நடந்தேன்
அகதிகளைப் பற்றியதொரு வலி
உடம்பெல்லாம் சுள்ளெனப் பரவியது..
—————————————————–
வித்யாசாகர்
வணக்கம்
வித்தியாசகர்(அண்ணா)
உண்மையில் நல்ல கவிதை நீங்கள் தாய்வீடு சென்று பார்க்கையில் கடந்த கால நினைவுகள் உங்கள் மனதுக்குள் ஒரு போராட்டமாக இருந்தது வாழ்ந்த வீடகளை இடித்து சிதைத்தார்கள்
யாருமில்லா
அந்தத் தெரு எனக்கு விரிச்சோடித் தெரிந்தது
நாங்கள் அன்று பாடிய கண்ணாமூச்சி ரே ரே பாடல்
எனக்குள் மட்டுமே ஒலித்தது
அங்கு விளையாடிய விளையாட்டுக்களை
அந்த தெரு மறந்துப் போயிருந்தது
இந்த கவிதையை படித்த போது எங்கள் தாயக நினைவு வந்தது அருமையான படைப்பு வாழ்த்துக்கள் (அண்ணா)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
மிக்க நன்றிப்பா. உண்மையில் ஊர் விட்டு வரும் ஒவ்வொரு விடுமுறையின் போதும்; திரும்பப் போகவே முடியாது அங்கு என்றதொரு நிலையில் தனது மண்ணை விட்டு வெளியேறும் எம்முறவுகளின் வலி என்னவாக இருக்குமென்பதே என் மேலும் அடர்த்தியான சோகமாக இருக்கும்..
LikeLike
அருமை. நன்றி.
LikeLike
மிக்க நன்றி ஐயா..
இன்னும் கனக்கும் மனபாரம் நிறைய.., என்றாலும்; வாழ்ந்ததின் கதையை பேசும் நேரமினி கவிதைகளாக விடியுமெனில் மகிழ்வேன்..
LikeLike