அப்பா யெனும் செல்லாக்காசு..

திருமணம் முடிந்த கையோடு விட்டுச்சென்றவன்
பிரசவத்தின்போது கூட
அவளோடு இல்லை
குழந்தை பிறந்து வளர்ந்தே போயிருந்தாள்

மூன்று வருடங் கழித்து
ஊருக்கு வந்திருக்கிறேன்

 

மகள் சற்று விலகி விலகி
தூரமாகவே போயிருந்தாள்,

எனைக் கண்டாலே
வேறு யாரோவென பயம்போலும், அவளுக்கு

நானும் வந்ததிலிருந்துப்
பார்க்கிறேன் அவள் வாயில் அப்பா என்ற
சொல்லே வரவில்லை

எனக்கு வருத்தமாக இருந்தது
மகள் பிறக்கையில் உடனிருக்காத வலி
சம்பாதித்த பணத்தை விட
அதற்குமுன் இருந்த ஏழ்மையை விட
இப்போது முள்ளாக தைத்தது, மிகக் கொடிதாக வலித்தது..

மகளுக்கு என்னிடம் பாசமே இல்லையே
என்று வருத்தம் வேறு..

மனைவி உள்ளே வந்தாள்
தனியே அழைத்து
என்னமா பாப்பா என் கிட்ட வரவேயில்லையே
என்றேன்,

அதலாம் சரியாயிடுங்க
இன்று தானே வந்திருக்கீங்க, பேசி
பழகவேணாமா…” என்று இழுத்து நிறுத்தினாள்
அதில் ஏன் போனாய் எனும் ஒரு கேள்வியும்
தொக்கி நின்றது..

நான் சற்று நேரம் கழித்து
பெட்டியை பிரித்தேன்
எனது மகளுக்கு வாங்கிவந்திருந்த
பொம்மைகளை எல்லாம் வாரிக் கொடுத்து
வாம்மா வா என்றேன்

குழந்தை ஓடிவந்து
ஒவ்வொன்றாய் எடுத்து ஆசையாசையாய்ப்
பார்த்துக்கொண்டிருந்தது,

மேலே தரையிறங்கும் விமானமொன்று
சொய்ய்ய்யென வீட்டு கூரைமீது பறக்க
அது கீழிறங்கும் சப்தம் சுர்ரென..
வீட்டுக்குள் கேட்டது

கேட்டது தான் தாமதம்
உடனே மகள் விருட்டென அலறி
ஓ…… அப்பா
அப்பா..
அப்பா வென வெளியில் எழுந்தோடி
வானத்தைக் காட்டி
விமானத்தை காட்டி.., கைகொட்டி சிரித்தாள்

அதோ அதுதான் அப்பா
அப்பா
எங்கப்பா வரும் விமானம் என்றாள்,

எனக்கு கண்ணீர் உடைந்து
அந்த வெளிநாட்டு பொம்மைகளின் மீது சொட்டியது..
————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக