என் மகளில்லாத வீட்டை
எப்படியிந்த யுகத்துள் புதைத்து வைப்பேனோ?
என் மகளில்லாத வீட்டில்
எப்படி இந்தக் காற்றை
நெஞ்சிலடைப்பேனோ?
என் மகளில்லாத வீட்டில்
யார்பேசும் குரல்கேட்டு
என்னால் உயிர்த்திருக்க முடியுமோ?
என் மகளில்லா தனிமை
சகித்து சகித்து இனி
இருக்கும் நாள் வாழ்வதெப்படியோ..?
அவள் வளையவந்த வீடு
அவள் ஆசையாய் வளர்த்த பூஞ்செடி
அவளுக்கெனக் காத்திருக்கும் கோழி
காக்கைகளோடு நானழுவதும்
இச் சமூகநீதியின் மௌனத்துள் மறைந்துப போகுமோ..?
போகட்டும்..
போகட்டும்..
எங்கே போகிறாளவள்
மணம் தானே என்கிறார்கள்
சாப்பிடுகையில் என் மனசவளைத் தேடுமே;
உறங்கிவிழிக்கையில் எனது கண்களவளைத் தேடுமே;
இரவு உறங்கச் செல்கையில் –
அவளில்லாத வீடெனக்கு இருண்டு கிடக்குமே,
நெருப்பெனச் சுடுமே அவளில்லாத வீடு???
மணம் தான்; மணம்தான்
திரு மணம்தான்
திருப்பி வாங்க முடியா வீட்டில்
இனி இங்கேயே இருந்துவிடு மகளேயென
எப்படி யவளை தனியே விட்டு வருவேன்?
எப்படி அவளை விட்டுவிட்டுநான்
தனியே வருவேன்??
அவளில்லாத உலகமெனக்கு
யாருமில்லா வீடுபோல்தானென
அவளைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்..?
அவளுக்கு
அப்பா அப்பாவென மனசெல்லாம் அழுது
நான் முதல்நாள் பள்ளியில் விட்டுவந்த
துயர்போல;
இத்துயரும் இருந்தவளை வாட்டாதா?
வெறும், உடம்பும் சதையும் இரத்தமுமாய் அல்ல
உயிரில் உணர்வில் அவளாய் வாழ்ந்த என்
தோள்களும் மடியும் இனி இப்படியேக்
கண்ணுறங்கிப் போகுமோ போகுமோ.. மகளே மகளே..
போய்வா மகளே போய் வா;
அப்பாவிற்கு அழுகையெல்லாமில்லை
நீ கலங்காதே போ, இது அழுகையில்லையாம்
ஆனந்தக் கண்ணீராம்; நீ
போய் வா.. போய் வா..
மிச்ச உயிரை
நிச்சயம் வைத்திருப்பேன் மகளே, நீ போய்வா
உனது தங்கைப் பிரிகையில்
மீண்டும் பிய்த்துத் தர வேண்டுமே..
போய்வா மகளே நீ போய் வா..
———————————————
வித்யாசாகர்
பிங்குபாக்: போ மகளே; நீ போய் வா.. – TamilBlogs