29, நட்பெனும் தீ மூளட்டும்; நன்னெறியின் வெளிச்சம் பரவட்டும்..


வேறென்ன வேண்டும் மனிதர்களே
ஓடிவாருங்கள்
கட்டியணைத்துக் கொள்வோம்..

கொன்று, கோள்மூட்டி
கொடிய செயல் செய்தீரோ; யாரோ;
இருப்பினுமென்ன, உனக்குள்ளும் அழகுண்டு
அறிவுண்டு, அன்புமுண்டு; இதோ
அந்த அன்போடு அணைக்கிறேன், வா
கட்டியணைத்துக் கொள்வோம்..

மழைக்கு பகை இல்லை போட்டி இல்லை
நதிக்கு வெறி இல்லை கோபமில்லை
மலைக்கு சாபம் தெரியாது தீது தெரியாது
மண்ணுக்கு மறக்கத்தெரியும் மறுக்கத்தெரியாது
காற்றுக்கு களங்கமேயில்லை கர்வமுமில்லை
எல்லாம் அதுவாக அதுவாக கிடக்க நீயெதற்கு
தனியே நின்று புலம்புகிறாய்? வா மனித
நாம் ஒன்றேயென அறி..

காலங்காலமாக எதிர்த்த பகை
தொடுத்தப் போர்
இனிக்குமொரு சிரிப்பில்
அணைக்குமொரு அன்பின் கூட்டில்
மழை கரைத்த மணல்மேடாக கலைந்தூறிப்
போகாதா ?
கண்ணில் கருணையும், மனதில்
மனிதமும் கொண்டு காலப் பகை தீராதா ??

கலைக்கு வாயுண்டு செவியுண்டு
பேசுகிறது பேசுகிறாய்,
இசைக்கு ஆழமுண்டு அழுத்தமுண்டு
அடிநாதம் தொடுகிறாய்
அதனுள் துவங்கி அதனுள் முடிகிறாய்,
இயற்ககைக்கு எல்லாமே யிருந்தும் – நீ
அசைத்தால் அசைகிறது, நீ தடுத்தால் அமர்கிறது
பிறகு நீ ஏன் தனியே நின்று சபிக்கிறாய் ?
நம் சிரிப்புகளை சுய நலத்துள் புதைக்கிறாய்??

உலகில் உள்ள அனைத்தும்
உனக்கும் சொந்தம் எனக்கும் சொந்தம்
அதில் நீயும் சமம் நானும் சமம்;

என்னால் முடிந்தால் உனக்குதவி
உன்னால் முடிகையில் எனக்கு உதவியிருப்பின்
இடையே வேலியோ, வேறுபாடுகளோ
இரத்தக் கோடுகளோ வந்திருக்கவே போவதில்லை..

சாதியை யொரு சனல் கயிற்ரைப்போல்
அறுத்தெறிய ஒரு சின்ன மனசுதான் வேண்டும்,
அது மனிதத்துள் பொங்க சிறு
தேனளவு அன்பு தான் வேண்டும்,
அன்பூறிய மனதிற்கு சாதியென்ன மதமென்ன ??

மதமென்ன பூதமா?
மனதரைப் பிரித்தாலது பூதம்தான்,
ஆயினுமது அவன் சட்டை, அவனவன் விருப்பம்
அவனோடு போவது நெருப்பானலென்ன
இனிப்பாலென்ன (?) அது அவன் பாடு..

நீ பாடு, உன் இசைக்கு நீ பாடு
உன் குளத்தில் நீ நீரருந்து
உன் குளம் இதோ’ இந்த உலகம்விழுங்கி
சிறு துளியென நிற்கிறது பார்;
இரத்தத் துளிகளாயுனை இயக்குகிறது பார்
அதற்கு ராசகுமாரன் வேறு
சேவகன் வேறில்லை,

எல்லோரும் உன்போல் தனென்று
உலகிற்குச் சொல்லத்தானே மழை எங்குமாய் பெய்கிறது..
அது புரிந்து பிறரை சினேகிக்கும்
அணைக்கும் புள்ளியில் தான்
அன்பின் பனிமழைப் பொழியும்..
மகிழ்ச்சியின் ஒட்டுமொத்த உணர்வுகள் அரும்பும்..

உணர்வுகள் வேறென்ன
மலையிருந்து வீழும் அருவிபோல்
உனக்குள்ளிருந்து தானே கட்டவிழும்..
அதைக் கட்டிக்கொண்டு வா..

வா மனிதா வா..
ஒருமுறை ஆரத்தழுவிக்கொள்
கட்டியணை
மனதால் முத்தமிடு
சாதி மற, மதம் விடு
மனிதம் மட்டுமே மனதுள் நிரப்பு
இறுக்கி பிடி
அன்பால்.. உயிர்நேசத்தால்..
ஒருவரை யொருவர் இறுக்கிப்பிடி
இதுவரைக் கட்டிய கல்மனச் சுவர்களெல்லாம்
உடைந்துபோகட்டும் அப்படிப் பிடி..

நீ வேறென்னும்
நான் வேறென்னும்
நினைவெல்லாம் குருதி கழுவி
நட்பினுள் மனிதத்தோடு மூழ்கட்டும்…

ஏற்றத்தாழ்வுகள் எரிந்துச்
சாம்பலாக ஆகட்டும்..

மண்ணாகிப் போவது
நம் பகையும் கோபமும்
நமக்குள்ளிருந்த பிரிவினையாக மாறட்டும்..

தீண்டாமையை தவிடுபோடியாக்கிவிட்டு
மிச்சமிருப்பதைப்பார் –
உள்ளே ஒரு ஏழையின் சிரிப்பும்
எளியோரின் நிம்மதியும்
பின்னே அப்படியொருவர் இல்லாத நன்னிலமும்
அதுவாக உருவாகிக் கொண்டிருக்கும்…

அங்கே அமைதியெனும் ஒன்று
அர்த்தமற்றுப் போய்விடும்!!
——————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 29, நட்பெனும் தீ மூளட்டும்; நன்னெறியின் வெளிச்சம் பரவட்டும்..

  1. பிங்குபாக்: 29, நட்பெனும் தீ மூளட்டும்; நன்னெறியின் வெளிச்சம் பரவட்டும்.. – TamilBlogs

  2. செந்தில்நாதன் செல்வராஜ் சொல்கிறார்:

    ஐயா. வணக்கம்…

    உங்களுடைய எழுத்து பயணங்கள் மிக அருமை.. மேன்மேலும் உங்கள் பயணங்கள் நன்றாக சிறக்க என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்…
    நன்றி..
    செந்தில்நாதன் செல்வராஜ்

    Like

பின்னூட்டமொன்றை இடுக