84 உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!

நாட்கள் தொலைத்திடாத
அந்த நினைவுகளில்
சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ;

னை பார்த்த பழகிய உன்னோடு பேசிய
முதல் பொழுது முதல் தருணம் –
உடையாத கண்ணாடியின் முகம் போல
பளிச்சென இருக்கிறது உள்ளே;

டிவந்து நீ
சட்டென மடியில் அமர்ந்த கணம்
என்னை  துளைத்து துளைத்து பார்த்த
இருவிழிகள்,
எனக்காக  காத்திருக்கும் உனது தவிப்புகள் என
எல்லாமே உன்னை எனக்குள் –
மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்;

னக்காக இல்லையென்றாலும்
உனக்காகவேனும் வந்து –
உன் வாசலில் நின்று நீ ஓடிவந்து கட்டிக் கொள்ளுமுன்
ஸ்பரிசத்தை எல்லாம் சேகரித்து –
இன்றுவரை பத்திரமாக உணர்வுகளில்
வைத்திருக்கிறேன்;

பெரிதாக அதையெல்லாம் எண்ணி
கதையெழுதும் காதலெல்லாம்
அல்ல; நம் காதல்;

காதலென்ற வார்த்தை கூட நம்
உதடுகளை ஒருவேளை சுடச்செய்யலாம்,
அதையெல்லாம் கடந்து
நமக்கிடையான ஒரு புரிதல்; ஒரு ஆழமான அன்பு அது.

திரும்ப எடுக்க இயலா நீளக் கிணற்றுக்குள்
தவறிப்  போட்டுவிட்ட – கல் போல
மனதிற்குள் மனதை போட்டுவிட்டு
யாரிடமே சொல்லிக் கொள்ளாத தவிப்பு அது.

சொல்லியிருந்தால் மட்டும் உலகம்
அதற்கு என்ன பெயர் வைத்திருக்குமோ
தெரியாது – ஆனால் –

காதலென்னும் அவசியமோ
நட்பென்று சொல்லும் பெரிய வார்த்தைகளோ
அல்லது ‘அத்தனை’ இடைவெளியோ கூட
அவசியப்பட்டிருக்க வில்லை நமக்கிடையே;

ப்படி –
சேருமிடமே தெரியாத
வானமும் பூமியும் போல்
எங்கோ ஒரு தூரத்தில்
ஒட்டிக் கொண்டு கிடந்தது நம் மனசு;

நானென்றால் நீ ஓடிவருவதும்
நீயென்றால் நான் காத்திருப்பதும்
எச்சில் பாராமல் –
தொடுதலுக்கு கூசாமல் –
ஆண்  பெண் பிரிக்காமல் –
எந்த  வரையறையுமின்றி –
உரிமையே எதிர்பாராது – மனதால்  மட்டும்
நெருங்கியிருந்த உணர்வு
சொன்னால் மட்டுமிப்போ யாருக்குப் புரிந்துவிடும்???

தெரிந்தால் புரிந்துக் கொள்ளக் கூட
திராணியின்றி  நகைக்கும்
உலகம் தானே இது;

அட, உலகமென்ன உலகம்;

உலகத்தை தூக்கி வீசிவிட்டு
நாம் கூட நம்மை வெளிப் படுத்திக் கொள்ள
தயாரில்லை என்பதற்கான காரணத்தை
காலம் மட்டுமே ஒருவேளை
அறிந்திருக்கக்கூடும்;

ப்படியோ; யார்மீதும்
குற்றம் சொல்வதற்கின்றி பிரிந்தபின்
இன்று – அறுத்துப்போட்ட உயிர்போல வலிக்கிறதே
உனக்கும் எனக்கும் மட்டும்;

தூரநின்று கண்சிமிட்டும்
அந்த குழந்தையின் சிரிப்புப்போல
நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்
நினைவுகளில் தான்
கட்டிவைத்திருக்கிறேன் என்னை –
வாழ்விற்குமாய்; இப்போதும்!!

ப்படியே கடந்து கடந்து
ஓர்நாளில் –
என் உயிர்முடுச்சு அவிழ்ந்து
நான் கீழே விழுகையில் –

ஒரு சொட்டுக் கண்ணீராகவாவது
நீ வந்து நிற்கையில் –

ன் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்
நீ விழுந்து அழுது புரண்டால் – உனக்கு
வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்!!
————————————————————————-
வித்யாசாகர்

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!!

தேசம் நமக்காக என்ன செய்தது
என்பதைவிட தேசத்திற்காக நாம் என்ன செய்தோம்?

என்றக் கேள்வியை இனி மாற்றி, நாம் தான் நம் தேசத்திடம்; தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தாய் என் தேசமே? என்றுக் கேட்கவேண்டும் போல்!!

அத்தனை இந்தியா மீதான தேசபக்தி நம் ரத்தத்தில் முழுதுமாய் ஊறிப் போய், வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று சொல்லச் சொல்ல உடல் சிலிர்த்துத் தான் கொள்கிறது. அசையும் அந்த மூவர்ணக் கொடிக்கு முன், பக்தியோடு நிற்கும் மனதையும் தனை மீறி கைகளை வானம் நோக்கி உயர்த்திக் கொள்ளும் மனநிலையிலேயுமே தமிழர்களாகிய நாம் வளர்க்கப் பட்டிருக்கிறோம்.

அங்ஙனம், உடல் சிலிர்த்து, மயிர்கால் கூச்செரிந்து, நம்மோடு சேர்ந்து, நம் உணர்வெல்லாம் நிறைந்து ‘வந்தேமாதரம்’ என்று சொன்னதோ என்னவோ; காரணம், அப்படி எண்ணுமளவிற்கு பாரத தேசத்தின் பற்றினால் உணர்வு பீறிட்டெழும் அரங்கமாக விளங்கியது குவைத்தின் அந்த “கார்மல் பள்ளிக்கூட அரங்கம்”.

சற்றேறக் குறைய பத்துக் குழந்தைகள்; காந்தியாக, நேருவாக, சுபாஷ் சந்திர போஸாக, இந்திராவாக, ஜான்சிராணி லட்சுமிபாயாக, கிருஷ்ணனாக, கண்ணகியாக, கண்ணனாக, பாரதியாராக, பாரத் மாதாவாக என்று வந்து கண்முன்னே ஜாதிமதமெனும் பாகுபாடற்ற ஒரு பாரம்பரிய ஒற்றுமையினை நிலைநிறுத்திச் சென்றார்கள். மனிதருக்கும் கடவுளுக்குமிடையே, மனிதருக்கு முழுமையாகப்  புரியாமலுள்ள ஒரு சமன்பாடு அந்த மேடையில் புரியவந்தது.

என் பொதுநல பார்வை நீங்கி, சுயநல சந்தோசமாக; விழா மேடையில் ஒரு பெரிய மகிழ்ச்சியளிக்கக் கூடிய இன்னொரு நிகழ்வும் நடந்து என் கண்களை பூத்துப் போகச் செய்தது.

அந்த ஒரு நிமிட கனம் என் பிறப்பின் பயனையும்; பிள்ளையை பெற்றதன் பயனையும் அடையும் தருவாயாக இருந்தது அந்த கணம். என் பத்து புத்தகங்களை அந்த ஒரு மேடையில் வெளியிட்டதில் எத்தனை மகிழ்ந்திருப்பேனோத் தெரியவில்லை; அதைக் கடந்தும் கண்ணனாக வேடமிட்டு மேடையேறி மகன் முகில்வண்ணன் நிற்க, கூட்டம் அவனின் சிரிப்பையும் நடையையும் விளையாட்டையும் குறும்புப் பார்வையையும், செல்லம்மாவின் அலங்கரிப்பையும் பார்த்து ஓ-வென்று குரலெழுப்ப; என்ன செய்வானோ அவன் என்றிருந்த நேரம் பார்த்து ‘எல்லோருக்கும் வணக்கம்’ என்று காற்றுப் புல்லாங்குழலுக்குள் நுழைந்து வெளியே வரு-மிசையாய் வந்தது அவன் குரலும். பின் ‘ஹே…’ என்றவன் வாயில் கைவைத்துச் சிரிக்க; மக்கள் ஓ-வென்று ஆரவாரம் செய்து கைதட்டி ஆச்சார்ய விழி திறக்கச் செய்த அந்த இரண்டு வயது குழந்தைக்கு இறைவன் தந்த பேற்றினை எண்ணி உளம் குளிர்ந்துப் போனேன்.

அதன் தொடக்கமாக மற்றொரு குழந்தை கண்ணகியாக மேடையேறி வந்து சொன்ன ஒரு தொடர் வசனத்திற்கு; அரங்கத்தில் தட்டாத கைகள் கைகளேயல்ல என்று சொல்லும்விதம், ஒவ்வொரு குழந்தைகளும் வந்து, தன் பெற்றோர் அவர்களின் மீது காட்டும் அன்பினை, அக்கறையினை, மேடையில் தோலுரித்துப் போட்டனர்.

கடைசியாக – பாரத மாதா வருகிறார் என்று சொல்ல; மேடையில் அவரை தேடும் கண்களுக்கு வெற்றிடம் மட்டுமே தெரிய; பின்னே இருந்து வந்தார் பாருங்கள் பாரதமாதவாக அந்த சிறுமியொருவர்; வார்த்தையே இல்லை அந்த தருணத்தை வர்ணிக்க; காரணம் அவருக்குப் பின்னே ஐயா விட்டுக் கட்டி மஸ்தான் அவர்கள்வேறு கையை மேலே தூக்கித் தூக்கி ‘பாரத மாதாக்கி ஜெய்; ‘பாரத மாதாக்கி ஜெய்; ‘பாரத மாதாக்கி ஜெய் என்று முழங்க அந்த குழந்தை வெள்ளை சேலையில் மேடையேறி அத்தனை பிள்ளைகளுக்கு மத்தியில் சென்று நின்றதுதான் தாமதம், ஐயா பிரான்சிஸ் அவர்கள் உடனே ஒளிப் பெருக்கியினை வாங்கி “ஒரு தாய் மக்கள் நாமென்போம்; ஒன்றே எங்கள் குலமென்போம்; தலைவன் ஒருவன் தானென்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்” என்று பாட;

சிறப்பு அழைப்பினை ஏற்று வந்திருந்த இந்திய தூதரிலிருந்து, தமிழகத்திலிருந்து வந்திருந்த லயோலா கல்லுரி முனைவர் சாரோன், இயக்குனர் தம்பி ராமையா, நடிகர் கலைவாணி புகழ் ‘விமல்’ வரை, இதர குவைத்தின் சிறப்பு விருந்தினர்கள் அத்தனைப் பேரும் எழுந்து நின்று ஒட்டுமொத்த இந்தியராய் சிலிர்த்துப் போனார்கள்.

ப்போது தான் எனக்குத் தோன்றியது இத்தனை தேசப் பற்றோடு; ஒவ்வொரு முறை ‘இந்தியா’ எனும் போதெல்லாம்; கத்தி ஆரவாரமிட்டு ‘இதிய தூதர் மேடையேறிப் பேசிய ஒவ்வொரு வரிக்கும் கைதட்டி, நம்மை இத்தனை ஆழமாக பற்றுக் கொள்ளும் இந்தியர் ஆக்கியதன் முயற்சியில் தான்; தமிழர் இன ஒற்றுமையும், தமிழர் சார்ந்த பற்றும் மறைக்கவோ மறக்கவோப் பட்டிருக்கிறது என்று.

அப்போது மீண்டும் நினைத்தேன்; ஏ பாரதத் தாயே!!!!! என் இந்திய தேசமே!!!!!!! இத்தனை உனக்காக கூச்சல் போடும் எம் மக்களுக்காய் என் செய்தாய் என் தேசமே? மாறாக எம் உறவுகளை கொன்று வீழ்தினாயோ??? என்று எண்ணுகையில் உள்ளே இந்திய தேசத்திற்கென உணர்வு பூண்டிருந்த நரம்புகள் ஒவ்வொன்றாய் அறுந்து, இதயத்திற்குள் ரத்தமாய் சொட்டிப் போனது.

இருப்பினும், இவைகளை கடந்து; இந்திய தூதர் திரு. அஜய் மல்கோத்ரா அவர்கள் பேசுகையில்; அவர் ஊட்டியில் படித்து வளர்ந்ததாகவும், ஒரு வயதில் பேசிய முதல்வார்த்தை அம்மா என்றும், இரண்டு வயதில் எழுதிய முதல் எழுத்து தமிழ் என்றும் அவருடைய அம்மா அடிக்கடி அவரிடம் சொல்வதாகவும் சொல்லி எல்லோரையும் பூரித்துப் போக வைத்தார்.

அது தவிர, குவைத் வாழ் மக்களின் நலனுக்கான திட்டமாக; குவைத்தில் அரசு முறை தவறி வசிக்கும் இந்தியர்களை உடனே எந்த விசாரிப்புமின்றி இரண்டு மாத காலத்திற்குள் தாயகம் அனுப்பி வைக்கும் இவ்வேளையில், அதற்கான முழு செலவையும், ஏறக்குறைய நூறு பேருக்கேனும் குறைந்தது இந்திய தூதரகம் எடுத்துக் கொள்ளும் என்று சொல்லி, மேலும் தேசப் பற்று நிறைந்த உங்களை நான் மதிக்கிறேன், ஒவ்வொரு முறை இந்திய இன்னல்களுற்றப் போதும் பெரிதாய் உதவியவர்கள் நீங்கள், உங்களுக்கு இந்நேரத்தில் எந்த உதவியையும் என்னால் இயன்றவரை செய்யக் காத்திருக்கிறேன்” என்று சொல்ல எல்லோரையும் அறியாமலே, எல்லோருக்கும் அவர் பாரத தாயின் சிறந்த குடிமகனாகவே மெச்சப் பட்டுப் போனார்.

அடுத்து வந்த சாரோன் பேசுகையில், திரைத் துறையில் உள்ளவர்கள் நம் பண்பினையும் மரபினையும் தரம் குறையாவண்ணம் காத்திடல் வேண்டும் என்பது குறித்தும், தமிழராய் நாம் தலை நிமிர்ந்திடல் வேண்டும் என்றும்; அங்ஙனம் நாம் உயர்வாக இருப்பின், தமிழர் தமிழராய் வாழ்வின், ஒற்றுமை மேலோங்கின், நமக்கான தமிழ் தேசம் மலரும், ஈழம் மலரும்’ என்று கூறி பலத்த கைதட்டல்களோடு அமர்ந்தார். அவரின் புலமை, பொருமை, நிறைகுடம் தலும்பாது எனும் நம்பிக்கைக்கு சான்றாக அவரின் கூச்சலற்ற குழப்பமற்ற பேச்சும் புன்னகையும்; சாட்சியாக நின்றது.

அடுத்து வந்த ‘கலவாணி’ திரைப்படத்தின் கதாநாயகன் விமல் அவர்கள் பேசுகையில்; அவரின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பை மேலும் அதிகப் படுத்திக் கொள்ளும் விதமாக மூன்று படத்தின் வெற்றிக் களிப்பின்றி, துளியும் கதாநாயகனெனும் கர்வமின்றி, எந்த அவசியமற்ற ஆரவாரமுமின்றி, மிக தன்னடக்கத்தோடும் எளிமையோடும் பேசி, பிறகு எல்லோரும் கேட்ட சில கேள்விகளுக்கு மிக பொருத்தமாக நிதானமாக சிரித்த முகத்தோடு பதிலளித்து, கூத்துப் பட்டறை பற்றியும் அவரின் குரு பற்றியும் சொல்லி;

கடைசியாக “அவரவர் செய்யும் தொழிலில் அவரவர் நல்லவராக இருந்தால் போதும்; அந்த தொழிலில் அவர் நிச்சயம் நட்சத்திரம் போல் மின்னுவாரென்று” அவர் குரு அவருக்குச் சொல்லிக் கொடுத்ததை நமக்கும் நட்போடு பகிர்ந்து; பின், அவரும் அங்ஙனம் இருக்க முயல்வதாகவும்; நீங்களும் அங்ஙனம் இருக்க முயலுங்கள் என்றும் ‘ஒரு உயர்ந்த எண்ணத்தின் விதையினை எல்லோர் மனத்தினிலும் மிக லாவகமாக தூவி அதேநேரம், மிக இயல்பாக ‘நான் நல்லவனாக இருக்க முயன்றதால் தான் இன்று நான் நன்றாக இருக்கிறேன், நீங்களும் முயலுங்கள் நன்றாக வருவீர்கள் என்று சொல்லியமர –

அந்த வாய் இன்னும்கொஞ்சம் ஏதேனும் பேசிடாதா, அந்த முகத்தை இன்னும் கொஞ்ச நேரத்திற்கு கண்டுக் கொண்டே இருக்க மாட்டோமா என்றொரு ஆசை எல்லோருக்குள்ளுமே வரத் துவங்கியது.

அடுத்து வந்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் திரைப்படத்தின் இயக்குனர் தம்பி ராமையா பேச வந்தபோது – வருத்தம் எல்லோருக்குள்ளும் உண்டு, அவைகளை கடந்து சிரிக்க முயல்வோம் என்று சொல்லி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். இருபது வருட உழைப்பே எனை உங்கள் முன் கொண்டு வந்து நிற்க வைத்துள்ளது, நீங்களும் உழைத்தால் வெற்றி உண்களுக்கும் நிச்சயம் உண்டு என்று கூறியதோடு நில்லாமல் –

திரை துறை என்றாலே; எல்லோரையும் தவறாக பார்க்கும் பார்வையை நீங்கள் எல்லோரும் மாற்றிக் கொள்ளவேண்டும், காரணம் உங்களில் அதிகம் பேர் எண்ணுவது போல திரைத்துறையில் உள்ள மொத்த பேருமே தவறல்ல.

இந்த இருபது வருடத்தில் நான் சந்திக்காத பிரபலங்களோ; அழகிய பெண் நட்சத்திரங்களோ அல்ல; ஆயினும் என் மனைவியைத் தவிர இதுவரை யாரையும் நான் தொட்டது கூட கிடையாது’ என்று கூறி எல்லோரையும் நெகிழவும், அதோடு நல்ல நோக்கு கொள்ளவும் செய்தார். ஆக, அவரின் வெள்ளை மனசும் அவரின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணமென்பது மேடையின் கீழ் அமர்ந்து அவர் பேசக் கேட்ட எங்களுக்கு நன்றாகவே புரிந்தது.

இடையே விழா நடத்தும் ‘குவைத் தமிழோசைக்கு‘ கொடையளித்து வெற்றிக்குப் பின் நின்ற முதன்மை கொடையாளி TVS கார்கோ நிறுவனர் பேசுகையில், அம்பானி உருவான கதையும், அவரின் உழைப்பும் நேர்த்தியான பார்வையும் சிந்தனையுமே அவரை உலக பார்வையில் அம்பாணியாக்கி நிறுத்தியது என்றும், நாமும் முயற்சித்தால், நல்லவர்களாக நம்மை நாம் செம்மைப் படுத்திக் கொண்டால்; நாமும் வல்லவர்களாக திகழலாம் வையகத்தில் என்றும் தனது அனுபவ பாடத்தை வந்தோருக்கு அளிக்கும் ஆர்வததோடு பேசி அமர்ந்தார். அவரின் நல்ல மனசும், உண்மையை மறைக்காது நடக்கும் நல்நடத்தையும், கடவுளின் மீது கொண்ட பற்றும் தான் அவரை இத்தனை பெரிய கொடையாளி ஆக்கியதென்பதற்கு அவர் பேச்சும் ஒரு சான்றாக அவருக்கு; மேடையிலும் துணை நின்றது.

தவிர, விழா நடந்த விதம் என்பது, நம்மை கலைகளினால் மெய்மறக்க செய்ததென்பது இரண்டாம் பட்சமென்றேக் கூறலாம் போல். காரணம், அத்தகு, வெளிநாட்டில் தான் வசிக்கிறோமா, வெளிநாட்டில் தான் நம் தமிழன் இத்தனை செய்கிறானா என்று எண்ணுமாறு தன் அமைவுகளை பண்பு மாறாமல் செய்து காட்டியதிந்த “ஐம்பெருங்காப்பிய விழா எடுத்த இவ்வமைப்பு.

ஆரம்பிக்கையிலேயே, வாசலில் இனிப்பும் சந்தனமும் விபூதியும் கொடுத்து இரு கவிதாயினிகள் அழகிய சேலையில் நின்று வரவேற்க, மேடைக்கு வந்ததும் குத்துவிளக்கேற்றி, பாரதனாட்டியத்தோடு விழா துவங்க, பின் சிறார்களின் நடனத்தோடும் மனதை கொள்ளை கொண்டுபோகும் ரசிக்கத் தக்கப் பாடல்களோடும், புத்தக வெளியீடும், விழா மலர் வெளியீடும், கவியரங்கமும், நாட்டியமும் என ஆடல்பாடலுமென விமரிசையாக நடந்தேறியது இப்பெரு விழா.

நம் பத்து புத்தகங்களை ஒவ்வொரு கட்டாக பிரித்து, இந்திய தூதர் திரு. அஜய் மல்கோத்ரா அவர்கள் வெளியிட நான்கு இதர படைப்புக்களை திரு. இலக்கியப் புயல் சாரோன் செந்தில்குமார் அவர்களும், மூன்று இதர படைப்புக்களை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான திரு. தம்பி ராமையா அவர்களும், மூன்று இதர படைப்புகளை பசங்க மற்றும் கலவாணி திரைப்படங்களின் புகழ் கதாநாயகன் திரு. விமல் அவர்களும் பெற்று விழாவினை சிறப்பித்தனர்.

பாடல்களை மனதின் ஆழம்வரை தன் குரலால் தொட்டுவிடும் கணேசன், கங்கேஷ்வரன், ராணி மோகன் மற்றும் பாசத்திற்குரிய குழந்தை தெரசாவும் அசத்தலாக பாடி வந்தோரை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தனர். அதிலும் பறை.. பறை.. என வரும் ‘தென்றல்’ திரைப்படத்தின் பாடலை ரா.பார்த்திபன் பாடுவதாக நடித்துக் காட்டியது போலவே, ‘அதே வீரியத்தோடு பாடகர் கணேசன் பாட; அரங்கம் சற்று கூடுதலாக உணர்ச்சிவயப் பட்டு பாட்டின் வேகத்தை உடம்பெல்லாம் புகுத்திக் கொண்டே இருக்கும் என்று சொல்லுமளவிற்கு மிக சிறப்பான பாடல்களும் மேடையில் பாடப் பட்டன.

விழாவின் முத்தாய்ப்பாக கவியரங்கம் அமைந்தது. திரு. இலக்கியப் புயல் சாரோன் அவர்கள், தலைமை ஏற்க, கவிஞர் திரு. கருங்குளம் சிவமணி, திரு. கவிசேகரன், திரு.சாதிக் பாட்சா, திருமதி.பாரதிக் கண்ணம்மா, திருமதி. தேவி ரவி மற்றும் திரு. கவிப் பிரியன் எனும் இல. கார்த்திக்கேயன் போன்றோர் கலந்துக் கொண்டு மிக சிறப்பான கவிதைகளை பாடி உள்ளத்தை உணர்வுகளால் உருக்கி எடுத்தனர்.

ஒரு கவியரங்கத்திற்கு குவைத் அரங்கம் இத்தனை மதிப்பை தந்து அமைதியாக அமர்ந்துக் கேட்டதெனில்; அது இக்கவியரங்கமாகவே இருக்கும் என்று சொல்லுமளவில் ஆறு பேருமே மிக சிறப்பான கவிதைகளைப் பாடி விழாவிற்கு மிகுந்ததொரு இலக்கிய பலம் சேர்த்தனர்.

தவிர, விழாவின் ஒவ்வொரு அசைவையும் தன் கவிதைத் திறத்தினால் சந்தம் மாறாது கோர்த்த கவி மாலை ஒன்று ஆங்காங்கே கழன்று கழன்று வீழ்வதைபோல் கவி மலர்களால் தூவி தூவி தன் தொகுப்புரையினையும் மிக சிறப்பாக வழங்கினார் நம் பாசத்திற்குரிய கவிஞர் திரு. அபுதாகிர் அவர்கள்.

மத்தியில் பெரும் நன்றிக்குரிய குவைத் தமிழோசை மன்றத்தின், தலைவர் திரு. உ.கு. சிவகுமார், இணை செயலாளர் திரு. அபுதாகிர், பொருளாளர். திரு. அசிஸ் போன்றோர் சேர்ந்து, ‘விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கும் இதர கொடையாளிகளுக்கும் நினைவுப் பேழைகளை வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கச் செய்தனர்.

உடன், விழா தலைவர் திரு அலாவுதீன் அவர்களும் சிறப்புரையாற்ற, முன்னாள் பொறுப்பாளர் ஐயா திரு. விட்டுக் கட்டி மஸ்தான் அவர்கள் நன்றியுரை வாசிக்க விழா இனிதாக நிறைவுற்றது.

விழாவிற்குப் பின்னே உழைத்த முகங்கள் அரங்கத்தின் வெளிச்சமாகவும் வெற்றியாகவும் வெளியில் தெரியாமல் ஆங்காங்கே வந்தோரின் முகத் திரளில் சந்தோசமாக மின்னிக் கிடந்தன.

விழா முடிந்து, கூட்டம் களைந்து, வளாகம் விட்டு வெளியேறுகையில்; வழியில் கிடந்த  வெளிச்சத்தின் நுனியில் கற்றைகளாகப் புறப்பட்ட  இருட்டு  வாசல் கடந்து, மெல்ல மெல்ல மேலெழுந்து, வெற்றிடம் பரவி, வானம் வரை அப்பிக் கிடந்தது.

காற்றில், இருட்டில்; தன் பயணம் நோக்கி கடந்துப் போகும் மேகத்தினைப் போல், எல்லோரும், தன்னைத் தானே ஓர் இந்தியனாகவும், தமிழனாகவும் ஒருவாறு அவரவருக்குப் புரிந்தாற்போல் அவரவர் அவரவரை எண்ணிக் கொண்டு மெச்சிதலோடு வெளியேறினர்.

நானும் வெளியேறி வாசலில் இருந்த விளம்பரப் பலகையிலிருந்து உள்ளே நடந்த விழாவின் கடைசிப் புள்ளிவரை தீர அலசி, வந்திருந்த எல்லோரைப் பற்றியும் ஆலோசித்துப் பார்த்தேன், வெளியே செல்லும் மனிதர்களை பார்த்தேன், இதுவரை சந்தித்த அதிக பேரை நினைவுற்றேன், என்றோ படித்த நம் தமிழர் வரலாற்றினையும் நினைத்துக் கொண்டேன், “மனிதராக இருக்க முயன்ற நாம் தமிழராக இல்லையோ? தமிழராக இருந்திருப்பின், அத்தனை தமிழர்கள் அன்று கொடியவர்களால் அனாதைகளாகக் கொள்ளப்பட்டிருக்க  மாட்டார்களோ” என்று தோன்றியது.

ஏதோ நாம் பேசும் ‘மிச்சம் மீதி இருக்கும் தமிழ் மட்டுமே’ நம்மை தமிழராய் அடையாளம் காட்டி, எஞ்சிய இனத்தவரிடமிருந்து’ வாழுமளவிற்கு நம்மை காத்துக் கொள்கிறது போல்’ என்றெண்ணி, விரைவாய் தமிழோடு கலந்துப் பேசும் ஆங்கிலத்தை; இறக்கத் தின்ற மருந்தென’ மறக்கத் துணிந்தேன்!!
——————————————————————————————-
வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நிம்மதி; கிலோ நாலு ரூபாய்!!

து ஒரு மலையடிவாரப் பகுதி. அங்கு ஒரு செல்வந்தர் மகிழுந்தில் வந்து இறங்கினார். சுற்றி நாங்குப் புறமும் பார்த்தார். மலையினை நோக்கி பார்த்தார். சற்று தள்ளி ஒரு வயதானவர் ஒருவர் காவி உடையில் நின்றிருக்க அவரிடம் சென்று –

“ஏங்க இங்க ஒரு பிக்குளி சாமியார் இருப்பாராமே அவரைப் பார்க்க முடியுமா?”

“ஏன் முடியாது, தாராளமா பார்க்கலாம் போய் பாரு”

“எங்க இருப்பார் இப்போ?”

“எங்கனா இருப்பார், போய் சுத்திமுத்தி பாரு சாமி”

“இல்லை பெரியவரே அவர் இருக்கும் ஆசிரம் ஏதோ இருக்குன்னு சொன்னாங்க. அதற்கு எப்படிப்  போவது?”

“பெருசா ஆசிரமம் எல்லாம் அந்தாளுக்குக் கிடையாது. அதோ அந்த மலை ஏறி இறங்கினா ஒரு குடிசை இருக்கும் பார்; அதில இருப்பார்; இல்லைன்னா அந்த குடிசை பக்கத்துல ஒரு பெரிய மரமும் மரம் தாண்டி சின்னதா ஒரு ஆறும் ஓடும் அதன் கரையில இருப்பார் போய் பாரு”

இப்போதெல்லாம் சிலரின் அவதூறு பேசத் தக்க நடத்தையினால்; சாமியார் என்றாலே சலிப்பு வருவதை அத்தனையாக அந்த செல்வந்தர் கண்டுக் கொள்ளவில்லை. பெரியவர் கைகாட்டிய படி நடந்து போனார்.

அப்படி போக, அந்த ‘பிக்குளி சாமியார்’ எனும் பெயர்கொண்ட நடுத்தரம் தாண்டிய சற்றே வயதான ஒருவர் தண்ணீரின் ஒரு கரையில் நின்றுக் கொண்டு, அடுத்த கரையிலிருந்த மரங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு, ஆழமான சிந்தனையில் அமர்ந்திருந்தார். செல்வந்தர் அவரருகில் சென்று நின்றதும் அவர் நிமிர்ந்து பார்த்து..

என்ன வேண்டும் ஐயா என்றார். உங்களைத் தேடித் தான் வந்தேன் சாமி என்றாரந்த செல்வந்தர். என்னைத் தேடிவரும் அவசியம் உங்களிடம் தென்படவே இல்லையே. நீங்கள் உடுத்தியிருக்கும் ஆடையே நீங்களொரு பெரிய பணக்காரராகத் தான் இருப்பீர்கள் என்பதை கான்பிக்கிறதே”

“ஆம் சாமி அதற்கெல்லாம் எந்த குறையும் இல்லை”

“வேறென்ன தொழிலில் விருத்தி இல்லையா?”

“அதுக்கெல்லாம் குறையில்லை சாமி, நகரத்திலேயே; பெயர் சொல்லக் கூடிய தொழிலதிபர் நான் தான்”

“மனைவி குழந்தைகள் ஏதேனும் குறை வைத்தார்களா?”

“அவர்களிடமெல்லாம் எனக்கு எந்த குறையும் தெரியவில்லையே சாமி, தங்கமானவர்கள் அவர்கள்”

“வீடு மனைகள் நிறுவனம் ஏதேனும் பறிபோய்விட்டதா ?”

“என்னை எல்லாம் யாரும் தொடக் கூட முடியாது சாமி”

“வீடு இருக்கு, மனைகள் இருக்கு, பணம் இருக்கு, குடும்பம் சூழ இருக்கு பிறகு உங்களுக்கு என்ன தான் குறையென்று எண்ணி என்னிடம் வந்தீர்கள் ஐயா?”

“எனக்கு எல்லாமிருந்தும் ஒரு நிம்மதி இல்லையே சாமி.., தூக்கம்னா என்ன விலைன்னு கேட்கிற வகையில ஆயிட்டேனே சாமி”

“அப்படியா?!!”

ஆம் சாமி; படுத்தால் உறக்கமில்லை, எழுந்தால் நிம்மதியில்லை, வாழ்க்கையில் என்ன அப்படி சுகம் இருக்கோன்னு ஒரு சலிப்பு வருது சாமி,   முடிவா சொன்னா; எதற்கு நாமெல்லாம் உயிர் வாழனும்னு இருக்கு”

“சரி நான் ஒரு யோசனை சொல்றேன் செய்வீங்களா?”

“நீங்கள் என்ன சொனாலும் செய்வேன் சாமி..”

“அப்போ போய் முதல்ல உங்களின் சொத்தை எல்லாம் விற்று ஒரு பெட்டியில் கொண்டு வாருங்கள், உங்களுக்கான புகழ் எல்லாம் அந்த ஒரு பெட்டியில அடங்கிடனும்”

“அது முடியாதே சாமி..”

“ஏன்…?”

“ஒரு பெட்டியில் எல்லாம் என் பணமும் புகழும் நிரையாதே சாமி”

“சரி அப்போ ஒன்னு செய் மொத்தத்தையும் விற்று தங்கமா மாற்றிக் கொண்டு வா..”

“அப்போ கூட போதாது சாமி”

“சரி; அப்போ ஒண்ணு செய், அந்த சொத்தை மொத்தத்தையும் உன்னைத் தவிர, உன் குடும்பம் தவிர, உனக்குப் பிடிக்காதவங்க யார் பேரிலாவது எழுதி அந்த பத்திரத்தை ஒரு பெட்டியில் போட்டுக் கொண்டு வா, யார் அந்த பெட்டியை அடைகிறார்களோ அவர்களுக்கே அந்த சொத்து முழுதும் போகும் அதை மனசுல வைத்துக் கொள்”  என்கிறார் அந்த பிக்குளி சாமி.

உடனே அந்த செல்வந்தர், வீட்டிற்கு போய் இப்படி இப்படி விவரம், வேறு வழியில்லை, சாமியார் சொல்லிட்டாரு, நான் எல்லாவற்றையும் விற்கப் போகிறேன் என்று சொல்ல; பிள்ளைகள் சொந்தமெல்லாம் அதை மறுக்க, இவர் அதட்ட, அவர்கள் கொபமுற, இவர் அடிக்கப் போக, யாரோ வந்து சிபாரிசு செய்யும் நிலைக்கு ஆகி கடைசியில்; இதில் எந்த மாற்றமும் இல்லை, பிடிக்காதவங்க வெளியில போங்க என்று சொல்ல –

எல்லோரும் வீட்டை விட்டே வெளியேற்ற. வீடு மற்றும் மொத்த சொத்தையும் ‘இங்ஙனம் இதை யார் அடைகிறார்களோ அவர்களுக்கே சொந்தம்” என்று எழுதி ஒரு பெட்டியில் போட்டு வைத்து விட்டு, நாளை சென்று சாமியை பார்க்கலாமென்று எண்ணி, அவ்வளவு பெரிய மாளிகையில் சென்று தனியே ஒற்றை ஆளாக படுத்துக் கொள்கிறார்.

சற்று நினைத்துப் பாருங்கள், யாருமில்லாத அந்த வீடு எப்படி இருக்கும் என்று. எப்படி இருக்குமென்ற வருத்தம் நமக்குப் புரியும் முன் அந்த செல்வந்தருக்கு புரிய வந்தது.

பிள்ளைகளும், பேரக் குழந்தைகளின் அன்பும் அவர்களின் பேச்சும் அரவணைப்பும் இல்லாத அந்த வீடு, தன்  சுயநலத்திற்காக எல்லோரையும் வீட்டை விட்டே விரட்டிவிட்டு படுத்திருக்கும் இந்த வீடு ‘மயனாத்தில் தனியே படுத்திருக்கும் ஒரு பிணத்தை காட்டுவது போல அவருக்கு ஒரே வாரத்தில் காட்டியது.

எங்கு திரும்பினாலும் குழந்தைகள் முகமும் மனைவியின் அன்பும் உறவுகளின் உபசரிப்பும் மாறிமாறித் தெரிய; யாருக்காக இத்தனை நாள் நாம் வாழ்ந்தோம், நம்மை வாழ்விக்கும் காரணிகள் எது எது என்று அவருக்கு நாளுக்குநாள் புரியவர, மேலும் அந்த வீட்டில் இனி ஒரு நொடி கூட தங்க மாட்டேன் என்று எண்ணிக் கொண்டு, அந்த செல்வந்தர் அங்கிருந்து எழுந்து அந்த பிக்குளி சாமியை தேடி ஓடுகிறார்.

இந்த இடைப் பட்ட நாட்களில் அவர் நடந்துக் கொண்ட அவருடைய செய்கையினால் இதுவரை அவருக்கு இருந்த பேரும் புகழும் போய் அவரை ஒரு பைத்தியம் போல் எல்லோரும் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். எடுத்ததை விடுவதற்குத் தயாராக இல்லாத அவரும் செய்வதை நிறுத்தவில்லையென்றாலும்; பொருளும் படையும் என எல்லாம் இருந்தபோது இவ்வுலகம் அவரை எப்படிப் பார்க்கிறது யாரும் தன்னோடு இல்லாமல் தனியே இருந்தால் எப்படி அவமதிக்கிறது என்பதை உணர்ந்தவராக அந்த சாமியாரை நோக்கி நடுஇரவையும் பாராமல் ஓட,

அவர் வருவாரென்பதையும் வருகிராரென்பதையும் முன்னமே அறிந்துக் கொண்ட அந்த சாமியார் வேறொரு மாறுவேடம் தரித்து; காட்டிற்குள் புகுந்த அந்த செல்வந்தரை வழி மறித்து, முகத்தில் ரெண்டு குத்துவிட்டு கீழ்தள்ளி  பெட்டியையும் பிடுங்கிக் கொண்டு ஓடி மறைந்துவிடுகிறார்.

அந்த செல்வந்தரும் துரத்தி துரத்தி பின் பிடிக்கவும் முடியாமல் அதற்குமேல் அவரால் ஓடவும் முடியாமல் விட்டு விட; இருட்டிய நடுஇரவின் மெல்லிய வெளிச்சத்தில், பூச்சுக்களின்; பறவைகளின் ரக்கையடிப்புகளில், மிருகங்களின் கத்தும் பிளிறும் சப்தத்தில், வெளிறிய முகத்தோடு ஓரிடத்தில் அமர்ந்துக் கொண்டார்.

ஐயோ மொத்த சொத்தும் போச்சு, சொந்தபந்தமும் போச்சு, பெரும் புகழும்கூட போச்சே; இனி யாரை நம்பி நான் வாழ்வது? பொருளற்ற என்னை இனி யார் மதிப்பார்? இந்த சாமியார் பேச்சைக் கேட்டு எல்லாத்தையும் இழந்தேனே, என் நிம்மதியே………. போச்சே’ என்று கதறி கதறி அழுதார்..

அந்நேரம் பார்த்து அந்த பெட்டியை பிடுங்கிப் போனவர் போல் யாரோ ஒருவர் எதிரே தெரிய துரத்திக் கொண்டு மீண்டும் ஓடினார், அப்போது தான் தெரியவந்தது, அந்த பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடுவது அந்த பிக்குளி சாமியார் என்று.

செல்வந்தருக்கோ கடுங்கோபம். கொலைவெறி பிடித்து மீண்டும் அவரை துரத்திக் கொண்டு ஓடுகிறார். விரட்டுகிறார். கத்துகிறார். கையில் சிக்கியதை எல்லாம் எடுத்து அவரை நோக்கி வீசுகிறார். ஒரு பாட்சாவும் பலிக்கவில்லை பிக்குளி சாமியிடம்.

அது எங்கோ காத்து போல ஓடி ஒளிந்துக் கொண்டது. சுற்றும் முற்றும் தேடி அலைந்து கடைசியாக ஓடி அலைந்து பின் பார்த்தால்; இடம் மாறி வேறெங்கோ வந்துவிட்டிருந்தார். வந்த வழியை தேடி தேடியே ஒரு நாள் போனது. பிறகு அங்குமிங்குமாய் அலைந்து அந்த சாமியாரை காடு முழுக்க தேடி அலைந்ததில் ஒரு வாரம் ஆனது.

ஒன்றுமே நடக்காலம் கடைசியாய் எங்கிருக்கிறோம் என்பது கூட விளங்காமல் ஏதுமற்றவனாய் வெறுமனே தோல்வியோடு ஊருக்குப் போக மனமின்றி காட்டுக்குள்ளேயே கொஞ்சநாள் சுத்துகிறார். இடைஇடையே உறவுகளின் நினைவு அவரை கொன்று வாட்டியது. மாற்றிகொள்ள இயலாத அதே பழைய  உடையும், தண்ணீர் கூட ஒழுங்காக குடிக்காத தன் நிலையம் எண்ணி மிகவும் வருந்தினார் அந்த செல்வந்தர்.

அப்போ திடுக்கென அந்த வழியே ஓடி வந்த ஓர் ஆள்; பொம்பளை வேஷம் போட்டுக் கொண்டு வந்து அந்த செல்வந்தரிடம் அந்த பத்திரம் இருக்கும் பெட்டியை திடீரென நீட்டினார்.

செல்வந்தார் ஒரு கனம் திகைத்து ஏதோ போன உயிர் திரும்ப வந்துவிட்டதாய் எண்ணி அந்த பெட்டியை பிரித்து பத்திரங்கள் இருக்கிறதா என்று பார்க்கிறார். போன தன் உயிரே வந்துவிட்டது போல் மார்போடு அனைத்துக் கொள்கிறார். பத்திரத்தை அதுதானா என்று படித்துப் பார்த்துவிட்டு கண்ணீரோடு ஒரு பெரும் மூச்சினை இழுத்து விட்டுவிட்டு, அந்த பெண்மணியாக வந்த ஆளிடம் “இப்போ தான் எனக்கு நிம்மதியே வந்தது” என்கிறார்.

அந்த பெண் வேசமிட்டிருந்த ஆசாமி விழுந்து விழுந்து சிரித்தார்.

ஏளன சிரிப்பு கண்டு அந்த செல்வந்தர் நிமிர்ந்து அந்த பெண்ணாக வந்த ஆசாமியை பார்க்க, “பின்ன என்ன ஐயா வெறும் பெட்டியையும் காகிதங்களையும் பெற்றுக் கொண்டு நிம்மதியே இப்போ தான் வந்தது என்கிறீர்களே” என்று அவரிடம் வினவ, “இது என் செல்வம், இது என் உழைப்பு, இது நான் சம்பாரித்த என் சொத்து, இது கிடைத்து விட்டால் இனி எல்லாம் கிடைத்துவிடும், இதனோடு போன என் நிம்மதியும் பேரும் புகழும் வந்து சேரும்.

வாழ்க்கைக்கான அர்த்தமே உறவுகளோடு பகிர்ந்து மகிழ்வாக வாழ்வது தானேப்பா? இப்படி யாருமின்றி இக் காட்டில் அனாதையாக திரிவது ஒன்றுமில்லையே” என்று சொல்ல, தன் பெண் வேஷத்தை கலைத்துப் போட்டு விட்டு, உன் நிம்மதியை உன்னிடமே வைத்துக் கொண்டு எங்கெங்கோ நிம்மதி தேடி அலைந்தீர்களே ஐயா என்று அந்த பிக்குளி சாமியார் கேட்க.

செல்வந்தர் பிக்குளி சாமியின் நாடகங்களெல்லாம் தன் நிம்மதி எதுவென்று தனக்குப் புரிய வைக்கத் தான் என்று எண்ணி, தன்னை மன்னித்து ஆசி வழங்குமாறு கேட்க, பிக்குளி சாமியின் ஆசியுடன் அந்த செல்வந்தர் மீண்டும் சென்று தன் உறவுகளை அழைத்துக் கொண்டு, மாடமாளிகையும் கூட கோபுரங்களோடும்; பேறும் புகழுமாய் நிம்மதியாக வாழ்ந்தாராம்” என்பதோடு கதை முடிகிறது.

இது வெறும் ஒரு கதை மட்டுமில்லை, இதன் பாடம் தான் நாம் அத்தனை பேருக்குமே இன்றைய வாழ்வு நிலையில் தேவையும் படுகிறது. வாழும் ஐம்பது சதவிகித மக்கள், நிம்மதியை உறவிகளிடத்திலும் , வீட்டினுள்ளும் ஏன் தன் கையிலேயே வைத்துக் கொண்டு தான் ஊரெல்லாம் தேடி அலைகிறது.

எனவே, அங்ஙனம் தன் நிம்மதியை பிறரிடம் தேடுவதை விட்டுவிட்டு, தன்னிடமே இருப்பதில் இன்பம் கண்டு, போதும் எனும் நிறைவோடு, வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் திறத்தோடு, தன்னாலியன்றதை தனக்கு கீழுள்ளோரோடும் பகிர்ந்து, எல்லோருமே நல்மனதோடு வாழ முயற்சித்தால்; நமக்கும் நம்மோடிருப்பவர்களுக்கும் நிம்மதி நம்புமளவு நிச்சயம் கிடைக்கும். கிலோ நாலுக்கல்ல இனாமாகவே பெறலாம்!!

கடைசியாய் விடைபெறும் முன் ஒன்றே ஒன்றினை சொல்லிக் கொள்கிறேன் “எல்லோரும் நலம் வாழ நாமும் வாழ்வதே; நிம்மதியும், மேன்மையுமன்றி வேறில்லை!!
——————————————————————————————-
வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“கோ” திரைப்படம் பற்றிய ஒரு பார்வை – வித்யாசாகர்!!

 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
திருவள்ளுவர்!

ந்த ஏழு சீர், இரண்டு அடியில் ஐயா திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் சொன்ன செய்திதான் “கோ” எனும் இப்படம் இறுதியாய் சொல்ல வரும் நீதியும்.

அந்த நீதியினை வழங்குவதற்குமுன் மக்களை மக்களோடுப் பின்னி; மக்களை சார்ந்த தொண்டர்களை காட்டி; தொண்டனின் தலைவன் செய்யும் அரசியலை ஒவ்வொரு இளைஞனும் கையிலெடுத்து இத்தேசத்தை திருத்தி ஆளும் தலைவனாக வாழ்ந்தாலென்ன?’ என்று மறைமுகமாய் கேட்கும் ‘ஒரு நல்ல தலைவனை தேடும் படம் இந்த “கோ”.

தலைவனை தலைவராக்கி, தலைவரை தலைவா என்று மெச்சிக்கொண்ட நமக்கு; வெளி உலகிற்கு தெரியாத ஒரு போலித் தலைவனை, மெய்யிலா தியாகியை, கதாபாத்திரங்களுக்குக் காட்டாமல் மக்கள் முன் தோலுரித்து காட்டிய படம் “கோ”. (கோ’ எனில் தலைவன் என்று அர்த்தம்)

ஒவ்வொருவரும் தன் மகன் மருத்துவனாவனா உயர் அதிகாரியாவனா நல்ல பொறியாளராக வருவானா என்று எதிர் பார்க்கிறோமே யொழிய தன் மகன் ஏன் நாட்டை, நாட்டு மக்களை வளப் படுத்தும் நல்ல முதலமைச்சராக வரக்கூடாது, ஏன் ஒரு நல்ல பிரதமாரக வரக் கூடாது என்று நாமெல்லாம் நினைப்பதில்லையே? அப்படி நினைக்க வேண்டும் என்கிறது இந்த ‘கோ’ எனும் நல்ல திரைப்  படம்.

நான் கூட இதைத் தான் பத்து வருடத்திற்கு முன்பு என் “திறக்கப் பட்ட கதவு” என்னும் ஒரு குறுநாவலில் ஐந்து நண்பர்களை வைத்து அரசியலுக்கு வருவது பற்றி சிந்திக்கும்; திட்டமிட்டுக் கொள்ளும் இளைஞர்களை காட்டி ஒரு கதை எழுதினேன். என் காதல் புத்தகம் விற்றளவு கூட அந்த “திறக்கப் பட்ட கதவு” விற்கவில்லை, என்பது மிக வருத்தமாக இருந்தது.

இருபத்தியெட்டு வயது இளைஞன் நம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கும் ஒரு காட்சி’ இப்படத்தில் இறுதியாக வருகிறது. மனதிற்குள் ஆயிரம் விளக்கேற்றி மகிழும் சந்தோச பூ மலரச் செய்தது அந்த காட்சி என்பது உண்மை. என் “திறக்கப் பட்ட கதவு” நூல் விற்பனையாகிவிடாதக் குறை; பத்து வருடங்கள் கழித்து அந்த ஒரு காட்சியினை கண்டதில் தீர்ந்துப் போனது.

மிக திறமையான ஒளிப்பதிவு, அதிக குற்றம் தெரிந்திடாத இயக்கம், உணர்வு ததும்பும் நல்ல பின்னணி இசை, திகட்டாத நடிப்பென; நுழைவு சீட்டிற்கு கொடுத்த பணம் ஜீரணித்துத் தான் போகிறது. இருப்பினும்,  இடைவேளைக்குப் பின் வரும் அந்த இரண்டுப் பாடல்களையும் ‘எழுதப் படாத சட்டங்களை கருதி’ வைக்காமல் நீக்கி இருந்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இன்னும் சற்று கூடுதல் தரத்திற்குரிய புரட்சிகரமான படைப்பாக “கோ” இருந்திருக்கும்.

பாடல்களில் வரும் காட்சிகள், இடம் தேர்வு செய்து அழகாக அமைத்த நடனம், அவைகளை அழகாக படம் பிடித்த ஒளிப்பதிவின் திறத்தில் அப்பாடல்கள் மிளிர்ந்தாலும்; என்னதான் எத்தனை அழகென்றாலும் ஒரு இடை சொருகலாக மட்டுமே வருதிருக்கிறதந்த பாடல்கள் என்பது படம் பார்ப்பவர்களுக்குப் புரியாமலில்லை. ஒருவேளை, இடம் மாற்றி வைத்திருந்தால் இன்னும் சிறந்திருக்கலாம்.

கடைசி காட்சிக்கு முன் நெக்ஷளைட் தீவிரவாதியான கதிருக்கு மருத்துவர் ஒரு ஊசியை போட்டுவிட்டு சிரஞ்சியை அருகில் வைக்க, அந்த சிரஞ்சியிலிருந்து சொட்டிய ஒற்றைச் சொட்டு மருந்தின் ஜாலத்தை கூட அழகாக காட்சி படுத்தியிருக்கும் விதமும் அதன் அசைவுகளின் சப்தத்தை கூட இசையால் அடையாளப் படுத்தியதும்போன்ற பல தருணங்கள் இசையமைப்பினையும் ஒளிப் பதிவையும் மெச்சிக் கொள்ளச் செய்கின்றன.

அஸ்வினாக வரும் ஜீவா ‘வீடு பற்றி எரியும் கோபத்தை கூட, புன்னகை வீசும் முகத்தால், இணக்கமான பேசினால் மாற்றி விடலாம்’ என்பதை நிரூபிக்கும் சில காட்சிகளில் யதார்த்தம் பிசகாமல் நன்றாக நடித்திருக்கிறார்.

ராதா தன்னை மீண்டும் திரைத்துறையில் மறுபதிவு செய்துக்கொண்டது போன்று எண்ணவைக்கும் ஓர் மலர்ந்த முகத்தைக் காட்டுகிறார்; அவரின் மகளாகிய கதாநாயகி கார்த்திகா. மிக ஒய்யாரமான அழகு தான். அடர்த்தி மிகு வளைவுகளை கொண்ட இன்னொரு மீன்போன்ற கண்ணும், நெட்டை நாட்டியமும், குறையறியா நடிப்புமாய்; வெள்ளை ஆடையில் வந்த வெண்கல தேவதையாக மனதை கில்லாமல் கவர்ந்துச் செல்கிறார்.

வசந்தாக வரும் அஜ்மல், வசந்த் நண்பர்களாகிய சிறகுகளின் குழுமம், ஜீவாவாகிய அஸ்வின், கதாநாயகியான கார்த்திகா, கிருஷ் இன்னும் இப்படத்தில் வரும் இவர்களை போன்றவர்களை தேடித் தான் இத்தேசம் கைவிரித்து நிற்கிறது.

அத்தகு, ஒரு தேசத்தின் தேடல் இப்படித் தான்’ இப்படிப்  பட்ட இளைஞனை தான் தேடியிருக்கும்’ எனும் கணிப்பிற்கு உரித்த நாயகர்களாகின்றனர் வசந்தும் வசந்த் சார்ந்த சிறகுகள் அமைப்புக் குழுவினரும். இவர்களைப் போன்று ஒரு இளைஞர் படை நம் நாட்டிலும் வந்திடாதா எனும் ஏக்கத்தை வசந்த் பாத்திரத்தின் நடிப்பு குறையின்றி நம் கண் முன்னேக் காட்டுகிறது. நிச்சயம் அடுத்தடுத்த படங்களில் வசந்த் எனும் அஜ்மல் இனி இருக்கலாம். இப்படத்தின் மூலம் ஒரு பத்து இளைஞர்களாவது தன் தேசத்திற்காக புறப்படலாம்.

சோதனைகள் ஆயிரம் வந்தாலும்; அதை உடைத்தெறியும் தீயை கண்களில் கொதிக்க கொதிக்க சுமந்து திரியும் இளைய ஜோதிகளிடையே அரசியலை ஒரு சாக்கடை என்று சொல்லாமல்; அரசியலுக்கான விழிப்பினை; சரித்திரத்தை திருத்தி எழுதும் சந்தர்ப்பத்தை முன்கூட்டி காண்பித்து கடந்துவிடுகிறது படம்.

மேடைகளில் வசந்த் பேசுவதாக காட்டும் காட்சிகளில்; அசத்தலான தோற்றத்தை காட்டி நடித்திருக்கிறார், அவ் விடங்களுக்கான வசனங்களை இன்னும் கூட சேர்த்திருக்கலாம். இயக்குனரின் வித்தையில் திரைக்கதை எழுதிய பக்கங்கள் சில ஒதுக்கப் பட்டிருக்கலாம் என்றொரு சந்தேகம் கூர்ந்து கவனிக்கையில் எழுகிறது. இருந்தாலும், அதை ஒட்டுமொத்தப் பேரின் நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும் தூக்கி மறைத்து விட்டு கதையில் நம்மை மூழ்கடித்து தன் படத்திற்கான காரணத்தை தேவையை மிக அழகாக சொல்கிறது “கோ” எனுமிந்த திரைப்படம்.

சரோவை, அஸ்வின் கொஞ்சும் காட்சிகளும், கதாநாயகி கார்த்திகாவிடம் அஸ்வின் காதலால் உருகும் இடமும், கண்களால் அவள் பேசும் அழகும் திரைப்படத்தின் இடையே, ‘இன்றைய சமரச நட்பு நிறைந்து பழகும் இளைஞர்களின் நட்பையும், காலத்திற்கும் திகட்டாத காதலின் முகங்களையும் அழகாகவும் உருக்கமாகவும் காட்டுகிறது.

யாரோ ஜெயித்தாலும் கூடி சிரித்து; கொல்லப் பட்டாலும் இறந்ததாய் நம்பி; இறந்து போனவனுக்கு சிலை வைத்தாலும் தியாகியென வணங்கி; இன்னும் அப்பாவித் தனமாகவே நம் நம்பிக்கையையும் உரிமைகளையும் சுதந்திரத்தையும்; நம் நாட்டுப் போலிகளை நம்பி நம்பியே வீணடிக்கிறோம் என்பதையும் மறைமுகமாய் உணர்த்துகிறது “கோ”.

எரிய திராணியே இல்லாத விளக்காக இருந்தும், ஊருக்கே வெளிச்சம் காட்டுவதாய் என்னும் சில அரசியல்வாதிகளின் முகங்களை உடைத்தெறியத் துணிந்ததோடு நில்லாமல்; இப்படித் தான் இருக்கிறோம் நாம், இப்படித்தான் நடக்கிறது நம் அரசு, இப்படித் தான் நடத்துகிறார்கள் நம் அரசியல் வாதிகள் நம்மையும் மற்றும் நம் காவல் துறையினையும் என்பதை நமக்கும் காவலாளிகளுக்கும் ஏன் அரசியல்வாதிகளுக்குமே கூட; வலிக்காமல் உரைக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்

தன்னால் இயன்றதையேனும் என் மக்களுக்காகவும் என் தேசத்திற்காகவும் செய்கிறேனே என்பவர்களின் முகத்தையும் காட்டத் தவறவில்லை இந்த “கோ”. அதேநேரேம், இன்றும் ரத்தம் கொதிக்க, நரம்பு புடைக்க சமூகத்தின் அவலம் காணும் போதெல்லாம் பொங்கி எழுந்து, மக்களின் சேவைக்கென மறைமுகமாய் உழைத்துக் கொண்டிருக்கும், உலக பார்வைக்கு வராத பல ஆக்கப் பூர்வமான இளைஞர்களை, யுவதிகளை, பெருமைக்குரிய மனிதர்களை இப்படம் காட்சிகளின் ஊடே தரமாக காண்பிக்கிறது.

இரவு நெருப்பில் அணையும் தீபங்களின் விலை, இவ்வளவு என்று’ சரோ விபச்சாரிகள் குறித்த விவரங்களை சொல்ல; அஸ்வின் அப்படியா என்று கிண்டலடித்து சிரிக்க, சரி அதை விடு எனக்கு எவ்வளவு விலை தரலாம் சொல்’ என்று கேட்க, அஸ்வின் அவளை அளந்து பார்த்துவிட்டு இவ்வளவென்று சொல்ல, அவள் இவ்வளவு தானா என்று சிணுங்கிக் கொண்டே ‘சரி இவளுக்கு எவ்வளவு தரலாம் என்று கதாநாயகியை காட்டிக் கேட்க’ அவன் அவளையும் அளந்துப் பார்த்துவிட்டு இன்னதென்று சொல்வதாக அமைந்த காட்சி யொன்று சற்று வளர்ச்சியின் விரசமாக தெரிந்தாலும் –

ஒரு ஆணும் பெண்ணும் அப்படி பேசுமளவும், அங்ஙனம் பேசிக் கொண்டாலும் தங்களுக்குள் எந்த காமப் பார்வையின் கொடூர நகங்களையும் பதித்துவிடாமலும், ஆண் என்பவன் பெண்ணை நம்பி, பெண் என்பவள் ஆணை நம்பி, நட்பு ததும்பி நிற்கும் அந்த காட்சிகள்; நம் இளையசமுதாயத்தினருடனான ஒற்றுமையினையும் பரஸ்பர புரிதலையும் காட்டுவதோடு மட்டுமல்லாமல், நாளைய நம் தலைமுறையின் சமரசத்தை நம் சந்தேகப் பார்வையினால் மறைத்துக் கொண்டு; அவர்களை தன் வசத்திற்கே மீண்டும் மீண்டும் வளர்க்க வேண்டாமே’ எனும் தெளிவையும் இப்படம் காட்டுகிறது.

என்னதான் இருந்தாலும்; ரொம்ப பெருசாக மெச்சிக் கொள்ளும் படமோ, பேச வேண்டிய பிரம்மிப்போ இல்லை என்று சிலர் இப்படத்தை பற்றிப் பேசிக் கொண்டாலும், நாளைய சரித்திரத்தை மாற்றி எழுதப் போகும் பொறி இப்படத்திலும் இருக்கிறது.

அந்த கிருஷ் எனும் பாத்திரம் அந்த சூழ்சுமம் புரிந்து; தமிழ்நாடே மெச்ச வேண்டிய இளைஞனை நான் மட்டும் மெச்சுகிறேன் என்று சொல்லி முடியும் இடத்தில்; எனக்கு நம் தேசத்தின் அதுபோன்ற எண்ணற்ற இளைய சமுதாயத்தினரின் முகம் அப்பட்டமாய் தெரிந்தது.

ஒரு பெரிய புரட்சிகரமான கதையை;  மிக யதார்த்தமான திரைப்பட பாணியில் சொல்ல முயன்ற இயக்குனருக்கு, அதற்கு பலம் சேர்த்த  இசையமைப்பாளருக்கு, ஒளிப்பதிவாளருக்கு, அவர்களின் வெற்றியை முழுதுமாக தன் நடிப்பினால் பெற்றுத் தந்த ஜீவா, அஜ்மல், கார்த்திகா மற்றும் சரோ, கிருஷ், கதிராக வரும் பாத்திரங்களும், சமூக அமைப்பான சிறகுகளின் உறவுகளும், பிரகாஸ் ராஜ்  போன்ற இன்னும் நிறைய பேர் மட்டுமின்றி திரைக்குப் பின்னின்று உழைத்தவர்கள் அனைவருக்குமே படத்தின் நுழைவுச் சீட்டினை தூக்கி வீசியதோடு நின்றுவிடாமல் மனதார ஓர் நன்றியையும் சொல்வோம்.

காரணம், இப்படத்தின் மூலக் கருத்து நம் தேசத்து ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் புரியவேண்டும். அரசியலுக்காக இளைஞர்கள் படிக்கவேண்டும். நானொரு முதலமைச்சராகி பிரதமராகி என் தேசத்தை உலகம் மெச்ச உருவாக்கிக் காட்டுவேன் என்று இளைய சமுதாயத்தினர் சபதம் ஏற்கவேண்டும். நம் தொகுதி வேட்பாளராகவாவது இளைஞர்கள் தன் ஒட்டுமொத்த அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மெல்ல மெல்ல நகர்ந்து தவறுகளின், சமூக அவலங்களின் ஆணிவேர் வரை ஊடுருவி அவைகளை கற்றையாகப் பிடுங்கி யெறிய வேண்டுமெனில் அரசியல் நமக்கு சரியாக புரியவேண்டும். அரசியல் வாதிகளை நமக்குள்ளிருந்து சரியாக நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு அரசியலை நாம் முறையாக கற்க வேண்டும். அரசியல் குறித்த நம் பங்கினை ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தெரிந்துக் கொள்ளவேணும் வேண்டும்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இந்த இளைஞர்கள் பக்குவப் பட்டவர்கள். இனி வரும் காலங்களில் இவர்களால் இன்னும்  ஒரு நல்ல சமுதாயத்திற்குரிய, மனிதர்களை இவர்கள் பெற்றுத் தருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. நாளைய சமுதாயம் நாளைய மனிதர்களால் எழுச்சிக் கொள்ள இன்றைய இளைய சமுதாயம் நல்ல விதையாக தம்மை தூவிக் கொள்ளுமென்று நான் நம்புகிறேன்.

அந்த நம்பிக்கையினை வலுப்படுத்த இதுபோன்ற திரைப்படங்களின் ஊடாக உணர்த்தப் படும் உணர்வுகள்; கலையினை என்றும் தமிழர்கள் மதிப்பதன் காரணமென்றுக் கருதி, இன்னும் பிற நாட்களின் நம் வளர்ச்சிக்கு நம் தமிழர் பண்பும், மொழியின் வளமும் அதொத்த காதலும், காதலினால் பாகுபாடற்ற தன்மையும் நமக்குள் நிறைந்து நமக்கு துணை நிற்குமென்று நம்பி; அந்த காதலின் மென்மை குறையாது நம் வாழ்தலைப் பற்றிப் பேசும் இதுபோன்ற திரைப் படங்களுக்கு; திரைப்படத்தில் அளவுக்கதிகமாக நாம் நம் நாட்டத்தை செலுத்திவிட்ட காரணத்தினால் நன்றியினை தெரிவிப்போம்!!
————————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 9)

இதற்கு முன்..

சடாரான ஏதோ வந்து மேல் விழுந்தது போலிருந்தது. கண்களை திடுக்கிட்டுத் திறந்தால் அம்மாவின் கையை விட்டுவிட்டு ஓடிவந்த குழந்தை யொன்று என் மீது விழுந்து எழுந்து மன்னித்துக் கொள்ளுங்கள் அங்கிள் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு ஓடியது.

ஒரு நொடி எனக்கு எங்கிருக்கிறேன் என்னானது என்று ஒன்றுமே புரியவில்லை. பின் கடந்த ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். விமான நிலையத்திலிருப்பதையும் யோசித்துக் கொண்டே கண்ணயர்ந்துப் போனதையும் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுறுத்திக் கொண்டேன்.

இப்பொழுது அந்த பாப்பா சற்று தூரம் சென்றும் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டே போனது. அதை பார்த்து கையசைத்துவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்துக் கொண்டேன். “ச்ச… ஏதேதோ யோசித்துக் கொண்டே உறங்கிப் போனேனா… கடைசியில். கனவு வேறு கண்டிருகிறேன், அதும் பாவம் மேகநாதன் அண்ணன் என் கண்ணெதிரிளேயே கத்தியால் ‘சதக் ‘சதக்கென்று  குத்தப் பட்டதுபோல் கனவு!! என்ன மனிதன் நான், இதைப் பார்த்துக் கொண்டு சிரிக்க வேறு செய்கிறேன். என்னாலேயே என்னை புரிந்துக் கொள்ள முடியவில்லை. எனை தாண்டி எப்படி கனவு வரும்; ஏதோ அவர் மீதான கோபம் உள்ளூர பதிவாகியுள்ளது அன்றி வேறில்லை.

ஏன் நாமெல்லாம் இப்படி முழுமையாய் மன்னிக்கும் மனோபாவமே நமக்கில்லையா? ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிருகத்தை வைத்துக் கொண்டுதான் திரிகிறோமா நாமெல்லோரும்? என் கேள்விகளால் நானே வருந்தினேன். மேகநாதண்ணன் பாவம், எத்தனை பரிவு காட்டினார் கடைசியில், இப்படி செய்தே இருக்கக் கூடாது நான். எங்கோ அவர் மேலெழுந்த கோபம் இன்னும் மனதில் மிச்சமாய் இருக்கிறது தான். இருந்தாலும் எப்பொழுது தூங்கினேன்; எப்போது கனவு வந்ததென்றே விளங்கிக் கொள்ள முடியவில்லை.  ஆழ்ந்து யோசித்தத்தில் எனையறியாது சோர்ந்து தூங்கிவிட்டேன் போல்.

உண்மையில் மேகநாதன் அண்ணன் ஆரம்பத்தில் அத்தனை அர்த்தமற்று பேசினாலும் அவரை விட்டுப் பிரிகையில். பிரியா விடை பெற்றேன் என்று சொன்னாலே தகும். ஏனெனில் ஈழம் பற்றி அவ்வளவு உருகினார், ஈழம் பற்றிய எந்த உதவி வேண்டுமாயினும் உடனே அழைக்கச் சொன்னார், அல்லது ஏதேனும் தமிழகத்தில் இருந்து செய்வது என்றாலும் பரவாயில்லை செய்யத் தயாரென்று அவர் சொல்லி அனுப்பியதெல்லாம் நினைவிலேயே இருந்தது.

அவரிடமிருந்து விடை கொள்கையில்; யாரோ ஒரு ஜீவனுக்குள் இருந்த விடுதலையின் தீயை மேலும் ஒரு சொட்டு எண்ணெய் ஊற்றி எரியவைத்ததாகவும், ஈழம் குறித்த விழிப்பினை; நாம் கொள்ளவேண்டிய அக்கறையினை நம் தமிழ்மண்ணின் மைந்தர் ஒருவருக்கு தன்னால் இயன்றவரை பதித்துவிட்டதாகவும் ஒரு திருப்தி எழுந்தது.

சட்டென நேரமாயிருக்குமோ என்றொரு பதட்டம் வர நேரம் பார்த்தேன்.. ஒரு மணி நேரத்திற்கு மேல் கழிந்து விட்டிருந்தது. மனதிற்குள் என்னவோ பல வருட வாழ்க்கையினை மூன்று மணிநேர திரைப்படத்தில் பார்த்துவிடுவதுபோல்.. நாளெல்லாம் நாங்கள் பேசி கழித்த பொழுதுகளெல்லாம் ஒரு மணி நேர ஓட்டத்தில் நினைவினை தொட்டு கடந்து போயிருந்தது.

மேகநாதன் அண்ணன் மற்றும் அவரை போல் ஈழத்தின் விடிவு குறித்து எந்த அக்கறையுமே இல்லாதவர்கள் பற்றியும், தன் வீடு, உறவுகள், குழந்தைகள், நாடு, இனத்தின் விடியல் என எல்லாம் குறித்தும் சிந்திக்க சிந்திக்க மனதிற்குள் ஏனோ மிக வெறுமையே உண்டானது.

மனதோடு சேர்ந்து சற்று உடலும் பாரமாக, வெகு நேரம் உட்கார்ந்திருந்தே உறங்கிவிட்டதனாலும், கணவு போல நேரம் கடந்துவிட்ட உணர்வும் உள்ளே பதட்டத்தோடு எழ; எழுந்து நின்று கைகளை சோம்பல் முறித்தவனாய் இங்கும் அங்கும் திரும்பிப் பார்க்கிறேன்.

கைப் பையினை  இருக்கையின் மெது வைத்துவிட்டு மடிக்கணினியை மட்டும் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு, ‘கொழும்பு விமான நிலையத்தின் அடைக்கப் பட்ட கண்ணாடியோரம் நின்று; விமானங்களையும், விமானத்தை புறப்பட தயாராக்கிக் கொண்டிருக்கும் ஊழியர்களையும், உடன் சேர்ந்து பணி புரியும் பெண் தொழிலாளர்களையும், ஆணுக்குப் பெண் நிகராக பளு தூக்கி, குறிப்பெடுத்து, ஆண்களோடு சேர்ந்து நேசமோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் சிறப்பினையும் கண்டு எல்லாவற்றையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டே வருகிறேன்.

ஒவ்வொரு விமானங்களையாக மாறி மாறிப் பார்ப்பது சற்றுத் தூரத்தில் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்மிக் காரர்களுக்கு எப்படித் தெரிந்ததோ என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. ஆழ்ந்து என்னையே பார்த்தார்கள்.

விர்ரென எழுந்து, தேடிக் கொண்டிருந்த திருடன் ஒருவனை பிடித்துவிட்டது போல்; அவசரமாக தோளில் மாட்டியிருந்த துப்பாக்கியினை வெளியே எடுத்து சரி செய்துக் கொண்டே எனை நோக்கி ஓடி வந்தனர்.

நான் புகைப்படம் எடுப்பதை அவர்களுக்காக நிறுத்தவில்லை. அவர்கள் என்னருகில் வந்ததும் என்ன செய்கிறாய் என்றனர். சிரித்துக் கொண்டே மிக அழகான ஊர் உங்கள் ஊர் என்றேன். விமானங்களை ஏன் படம் எடுக்கிறாய் என்றார்கள். விமானம் தாண்டி பசுமை பூத்திருக்கும் ஊரை தானெடுத்தேன், விமானம் எங்கள் ஊரில் இதைவிட நிறைய நிற்கும் என்றேன்.

சற்று  முறைத்தவாறு உன் பெயரென்ன கேட்பதற்கு மட்டும் பதில் சொல் என்றனர், சொன்னேன். எங்கிருந்து வருகிறாய் என்றனர், சொன்னேன். பிறகு எங்கே போகிறாய் என்ன செய்கிறாய் யாருடன் வந்தாய் போன்ற சாதாரண கேள்விகள் தான், என்றாலும், இடையே புகுந்த ஒரு கருங்காளி யொருவன் வெடுக்கென என் கையிலிருந்த புகைப்படப் பெட்டியை பிடுங்கிக் கொண்டு ‘என்ன வைத்திருக்கிறாய் பையில் என்றான், கணினி என்றேன். திற என்றான், திறந்தேன். அது என்ன என்றான்; மடிக் கணினி என்றேன். கணினியை மேலே எடு என்றான். எடுத்தேன். கீழே அடியில் தெரியுதே அது என்ன என்றான்.  போச்சுடா..!! என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்கு தூக்கிவாரி போட்டது.  அதொன்றும் இல்லை, எல்லாம் புத்தகங்கள் தான் என்றேன், அந்த புத்தகத்தை எடு என்று அடியிலிருந்து கொஞ்சம் மட்டும் தெரியும் ஒரு புத்தகத்தை காட்டினான். அவன் காட்டிய இடத்தில் எனக்கு வந்த எமன் போல அழகாக ஓரம் மட்டும் தெரிந்துக் கொண்டிருந்தது அட்டையின் கொட்டை எழுத்தில் பெயர் பதிக்கப் பட்ட ‘விடுதலையின் வேட்கை’ எனும் அந்த ஈழக் கவிதைகளின் புத்தகம்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதை எடுத்து இரண்டுப் பக்கம் தான் பிரித்தான் உள்ளே “அண்ணன் பிரபாகரனுக்கு சமர்ப்பணம்” என்றிருக்க முயலை காது பிடித்துத் தூக்கிப் போவார்களே; அதுபோல என்னை தூக்காத குறை தான்; ஒரு நிமிடத்தில் அவர்களின் தோற்றம் செய்யல பார்வை பேச்சு எல்லாமே மாறிப் போனது.

ஒருத்தன் அடி என்றான், ஒருத்தன் பிடி என்றான், குத்திடுவேன் வெட்டிடுவேன்னு குதிக்கிறானுங்க மாற்றி மாற்றி. நான் எதற்கும் துணிந்தவனாகவே சாதாரணமாக நின்றிருந்தேன். அதற்குள் ஒருவர் அமைதி பூனைப் போல வந்து தோளில் கைபோட்டு நேராக விமான நிலைய காவல் துறையின் உயர் அதிகாரிகள் இருக்கும் அறைக்கு அழைத்துப் போனார்.

எல்லோரும் என் பின்னே கத்திக் கொண்டே ஓடிவந்து அந்த அறைக்குள் புகுந்தனர். வரும் வழியிலேயே வாக்கிடாக்கியில் யார் யாரையோ அழைத்து சொல்லிவிட்டார்கள் பின்னால் வந்தவர்கள்.

உள்ளே அறைக்குள் போனதும், ஒருவரை மாற்றி ஒருவர் எனை அடிக்க கை ஓங்கினர். நான் சற்றும் பொருமை இழக்கவில்லை, பயம் துளியும் கொள்ளவில்லை; வெகு தெளிவாக கூறினேன், என்னைப் பற்றிய விவரம் சரிவர கேட்காது யாரும் என் மேல் கைவைக்க அதிகாரம் கிடையாது., நான் உங்கள் விமானத்தில் பயணிக்க விருப்பப்பட்டு வந்த ஒரு பயணி. வேண்டுமெனில் தீர விசாரித்துக் கொள்ளுங்கள், பிறகு நீங்கள் சொல்வதற்கு நான் கட்டுப் படுகிறேன், காரணம் நீங்கள் ஏன் இப்படி என்னை நடத்துகிறீர்கள் எனபதே எனக்கு புரியவில்லை’ என்றேன்.

ஒருவன் பின்னால் வந்து தலையில் கைவைத்துத் தள்ளினான்.. ‘நீ என்ன பெரிய புடுங்கியா, உனக்கு சொல்லனும்னு எல்லாம் அவசியம் கிடையாது என்பது போல் ஏதோ ஏதேதோ அவனது மொழியில் திட்டினான். நல்லவேளை எனக்குப் புரியவில்லை ஒன்றும் என்றாலும் அந்த தலையில் கைவைத்து தள்ளிய கோழிக் கிறுக்கன் யாரென்று பார்ப்பதற்குள் அதிகாரி ஒருவர் அங்கே அவசரமாக ஓடிவந்து; ‘யாரும் பயணியின் மேல் கை வைக்காதீர்கள், நாம் விசாரித்துவிட்டு சந்தேகமெனில் சிறப்புக் காவலாளிகளிடம் ஒப்படைத்து விடுவோம்’ என்று சொல்லிவிட்டு விசாரிக்க மட்டும் உத்தரவிட்டார்.

“எப்படி வந்தது இந்த புத்தகம் உன்னிடம்?” என்றார் இடையே வந்த ஒருவர். இல்லை இல்லை இது இவனுடைய புத்தகம் புகைப்படம் இருக்கே, பின்னாடி பார் என்றான் மற்றொருவன். அவன் புத்தகத்தை திருப்பி பின்பக்கம் பார்த்து விட்டு –

எத்தனை புத்தகம் எழுதி இருக்கிறாய், யார் நீ?”

“நானா?!!!!!!!!!, நான் சத்தியசீலன். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளன். எனக்கும் புத்தகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை’ என்றேன். என்ன கதையடிக்கிறாய் இதோ உன் புகைப்படம் இருக்கிறதே?” என்றான் ஒருவன் ஆவேசமாக.

அதை நன்றாக பாருங்கள், அவர் வேறு நான் வேறு நானென்ன அத்தனை சிறுவனா? எனக்கு முப்பத்தேழு வயதாகிறது. பார்வை மங்கி கண்ணாடி இட்டுத் திரிகிறேன். அவர் வேறு யாரோ’ நானல்ல என்றேன்.

இல்லை இல்லை பொய் சொல்லாதே உன்னை போலவே இருக்கே இந்த புகைப் படம் என்றனர்.

அதற்கு நான் பொறுப்பில்லை. அவர் என்னைப் போல் இருக்கலாம் அதற்காக சத்தியசீலன் எப்படி “காதம்பரி” ஆக முடியும்? அதும் ஒரு பெண் பெயர் எப்படி எனதாக இருக்க முடியும். நானொரு ஆண். சொல்ல வேண்டிய கட்டாயம் வேறு எனக்கு.

ஆனால், நானொரு ஆண், அது ஒரு பெண்ணின் பெயர் என்ற பொது தான், அவர்களுக்கு தெளிவே வந்தது. ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொண்டனர். தமிழ் தெரிந்த ஒருவரை அழைத்து வந்து கேட்க புத்தகத்தில் ‘காதம்பரி’ என்று எழுதியிருப்பதாக சொல்ல.

பிறகு இந்த புத்தகம் எப்படி உன் பையில் வந்தது?” என்றனர்.

“நான் வரும் வழியில் ஒரு கடையில் விற்றது, வாங்கினேன்” என்றேன்.

“அப்போ இந்த படத்தில் இருப்பது நீயில்லையா?”

“சத்தியமாக நானில்லை. இதோ என் கடவுச் சீட்டு, பயணச் சீட்டு எல்லாம் பாருங்கள்” எடுத்துக் கொடுத்தேன்.

ஒவ்வொன்றினையாய் பிரித்து எல்லோரும் பார்த்தார்கள். விமானம் புறப்பட இன்னும் ஏறக்குறைய ஒரு மணிநேரமே உள்ளது நான் புறப்படுகிறேன் என் புகைப்படக் கருவியை கொடுங்கள் என்றேன்.

அவர்களுக்குள்ளேயே ஒரு ஐந்து நிமிடத்திற்கு கலந்து பேசிக் கொண்டார்கள். முடிவாக விட்டுவிடலாமா என்று பேசிக் கொண்டிருக்கையில் ஒரு சதி காரன் வந்தான்.புத்தகத்தை வாங்கிப் பிரித்து பார்த்து விட்டு –

“இதோ இந்த புத்தகத்தில் தான் வலைதள முகவரி இருக்கிறதே என்று காட்ட; புத்தகத்தில் உள்ள முகவரி படி இணையத்தை திறந்து வலைதளத்தை காட்டி, தமிழ் படிக்கத் தெரிந்த ஒருவரை அழைத்து படித்துச் சொல்லச் சொன்னனர்.

அவர் உடம்பில் ஒடுவதென்ன தமிழர் ரத்தம் தானே ஏதோ விவகாரம் உள்ளதரிந்து; அத்தனை சரியாக முழுதாக சொல்லவில்லை. இதை அருகில் நின்று பார்த்த கொஞ்சநஞ்சம் தமிழ் தெரிந்த சிங்கள ஆர்மி காரர்கள் கண்டுக் கொள்ள, ஒருவன் அவரைப் பார்த்து உறுமினான்.

இவன் புலியோட ஆளு, கள்ளன், சரியாய் சொல்லமாட்டான், விடாதீங்க இவனை; என்று அவனை சட்டையை பிடித்து தள்ளிவிட்டு, தமிழ் படிக்கத் தெரிந்த வேறு ஒரு சிங்களக் காரரை கூட்டி வந்து படிக்கச் சொல்ல, அவன் லேசாக அங்கும் இங்குமாய் பார்த்துவிட்டு ‘இது ஒரு பொது வலைத்தளம் தான், வெறும் காதல் கவிதைகள் தான் இருக்கிறது என்றான் மேம்போக்காக.

அதற்குள் இன்னொருவன் தொடர்பு விவரம் இருக்கா பார் என்று சொல்லி எப்படியோ இதை அதை அழுத்தி பெயர் – சத்தியசீலன், விலாசம் இது இது மேலும் குவைத் என்றிருக்க, அதை அந்த சண்டாளன் படித்தும் காட்டிவிட,  எகுறி எல்லோரும் என் மேல் பாயாத குறையாக, எட்டிச் சட்டையை பிடித்துக் கொண்டார்கள்.

நான் எதற்கும், அசருவதாக இல்லை, ஒரேயடியாக அடித்து என் தலைமீது சத்தியமாக நான் இல்லவே இல்லை என்றேன். ‘காதம்பரி’ என்றால் எனக்கு யார் என்ன என்று கூடத் தெரியாதென்றேன். அதெப்படி ஒரே முகம் ஒரே பெயர் வருமென்று கேட்டு ஒருவன் துப்பாக்கியால் பின்னாலிருந்து குத்தினான்.

விட்டக் கொடுக்கவில்லை நான். அதை பற்றி எனக்கு கவலையே இல்லை. என் பெயர் சத்தியசீலன், நானிருபப்து லண்டனில் நீங்கள் குவைத்தினை பார்த்துவிட்டு பேசுகிறீர்களே’ என்று சத்தமாகவும் அழுத்தமாகவும் கேட்க; அவர்கள் பயணச் சீட்டினை வாங்கி மீண்டும் பார்த்துவிட்டு –

சரி அந்த வலைதள முகவரிப் படி கொடுத்துள்ள குவைத் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பினை கொடுங்கள் என்று சொல்ல –

உடனே அந்த எண்ணில் அழைத்து பேசிப் பார்க்க, குவைத்திலிருந்து தொலைபேசி எடுக்கப் பட்டு எப்படியோ யாரோ ஒருவர் ஆமாம் ‘காதம்பரி’ என்பவர் இங்கு தான் இருக்கிறார். இந்த தொலைபேசி எண் கூட அவருடையது தான், அவரிடமிருந்து என் நண்பர் வாங்கிக் கொள்ள, என் நண்பரிடமிருந்து நான் தற்காலிகமாக வாங்கினேன்’ என்று சொல்ல, லோட்ச்பீக்கரில் அதை கேட்ட எனக்கு நிம்மதிப் பெருமூச்ச்சே வந்தது.

“பார்த்தீர்களா; நான் சொன்னேனில்லையா, இப்போது லண்டனுக்கு அழைத்துப்பாருங்கள் என்று லண்டனின் நிறுவன விவரம் சொல்ல; ஆம் இங்ஙனம் பெயரில் ஒருவர் இங்கு பணியாற்றி வருகிறார் என்று அவர்கள் தெரிவிக்க மீண்டும் நான் அழுத்தமாக பிடித்துக் கொண்டேன் –

“ஏன் ஒருவரை போல் ஏழு பேர் இருப்பதாய் சொல்வார்களே உங்களுக்கு தெரியாதா? அதும் நான் ஒரு இந்தியன் என்னை இப்படி நடத்துகிறீர்களே என்றேன் ( உள்ளே கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது).

அதலாம் விடு, அதிகம் பேசினால் பிடித்து சிறப்பு காவலாளியிடம் ஒப்படைத்து விடுவோம் என்றான் ஒருவன். உன்னை சுட்டு அதோ அந்த மூலையில் கடாசிவிட்டு ‘புலி’ என்று சொல்லி விசாரணை கூட ரத்து செய்துவிடுவோம், கூடுதல் பேசாதே’ என்றான் இன்னொருவன். மாறி மாறி ஒவ்வொருவர் ஒவ்வொன்று சொன்னார்கள்.

வயலுக்குள் திரிந்த எலியை பத்து கழுகுகள் சூழ்ந்து கொண்டது போல் இருந்தது எனக்கு. புத்தகத்தில் என்ன எழுதியுள்ளது என்று தெரியுமா என்றார்கள்; என்னவோ கவிதை தொகுப்பு போல் என்றெண்ணி தான் வாங்கினேன் இன்னும் படிக்கவில்லை’ என்று சொல்ல.

என் முகத்தை மாறி மாறி பார்த்தார்கள். சாணக்கியனின் நினைவு மட்டுமே உள்ளிருந்தது எனக்கு. எதிர்காலத்தில் ‘என் தமிழ்மக்கள் சானக்கியனுக்கு பதில் என்னை சொல்லட்டும் என்பது போலொரு உறுதியினை உணர்வு முழுக்க நிறைத்துக் கொண்டு பாவம்போல் அமர்ந்திருந்தேன். என்னை உட்கார வைத்துவிட்டு கால் மணிநேரம் அவர்களுக்குள் அவர்கள் மாறி மாறி பேசிக் கொண்டார்கள்.

பிறகு; இதுபோன்ற புத்தகத்தை எல்லாம் இனி வாங்கிவரக் கூடாதென்று சொல்ல, தொடக் கூட மாட்டேன் என்றேன். சரி, அப்போ போ…, விடு போகட்டும்’ என்றார் அந்த மேலதிகாரி.

நான் நகர்ந்து வெளியே வர, என் பின்னே ஒருவன் ஓடிவந்து; ‘இடைஞ்சலுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள், எங்கள் பணியை நாங்கள் செய்தோம்’ தவறாக எண்ண வேண்டாம், இந்தியரை நாங்கள் மதிக்கிறோம்’ என்றான்.

மண்ணாங்கட்டி” என்றி மனதில் நினைத்துக் கொண்டு, பரவாயில்லை பரவாயில்லை ஒரு பயணியை நாலுபேர் பார்க்க இப்படி அழைத்துவந்து அசிங்கம் செய்கிறீர்கள். எனக்கு விமானத்திற்கு வேறு நேரம் நெருங்கிவிட்டது, விடுங்கள் நான் போகிறேன்” என்று அவசரம் காட்ட –

அவனோடு இன்னும் இருவரும் வந்து நிற்க, அவர்கள் மூவரும் கலந்து பேசிவிட்டு; அங்கிருந்தே வாக்கிடாக்கியில் விமான அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, பிறகு, என்னோடு விமானமேறும் அறை வரை வந்து; விமான ஊழியர்களிடம், சோதனையின் காரணமாக தாமதமாகி விட்டது என்று விவரம் தெரிவித்து, இருந்தாலும் எதற்கும் சற்று கவனம் கொள்ளுமாறு கிசுகிசுத்து விட்டு  அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்களை எல்லாம் நான் கூடுதல் கவனத்தில் கொள்ளவில்லை, விமானத்தில் ஏறி அமர்ந்தேன். ஆர்மிக் காரர்களால் கொண்டுவந்து விடப் பட்டதால் எல்லோரும் என்னையே ஒரு குற்றவாளி போல் பார்த்தனர். ஒரு நடுத்தர வயது பெண். கண்ணீரில் ஊறிய விழிகளோடு அவளும் என்னை பார்த்தாள். என்னைப் பிடித்ததும் விட்டுவிட்டதும் எனக்கு ஒரு கனவு கண்டு விழித்தது போலவே இருந்தது. என்னை விட்டுவிடுவார்கள் என்று நான் நம்பவேயில்லை.

எப்பொழுதும்; வேகமோ உணர்ச்சிவயப் படலோ சில இடத்தில் அத்தனை பயனைத் தருவதில்லை. இங்கும், அவர்களிடத்திலும், அது தான் நடந்தது. சற்று யோசித்து என் கடவுச் சீட்டில் என்று நான் இந்தியா போனேன். எப்போது மீண்டும் லண்டன் சென்றேன். குவைத் இதற்கு முன் சென்றுள்ளேனா, இல்லையா ஒரு விவரமும் பார்க்கத் தோணவில்லை அவர்களுக்கு.

ஒரு சின்ன குழந்தையிடம் இப்படி நடந்தது என்று சொன்னாலும், ஏன் நான் குவைத்திலிருந்துவிட்டு ஊர் சென்றிருக்க கூடாது, பிறகு லண்டன் போயிருக்கக் கூடாது’ என்றெல்லாம் யோசித்து விட்டிருக்கக் கூடும். இவர்களும் அதை யோசித்து என் காவுச் சீட்டினைப் பார்த்திருந்தால் நான் தான் அந்த “காதம்பரி” என்பது மிக தெளிவாகியிருக்கும். அந்த புத்தகத்தை எழுதியது நான் தானென்று அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. இதலாம் தான் கடவுள் செயல் போலும்.

அறிவாளிகள் தவறு செய்வதும், முட்டாள் தெளிந்துவிடுவதும் கூட சிலநேரம் யதார்த்தமாகவே நடந்துவிடுகிறது.

அதற்குள் வெஇருந்து மீத பயணிகளும் விமானத்தினுள்ளே வர ஒரே சலசலப்பாக இருந்தது எனக்கு. ஆங்காங்கே தன் இருக்கை பார்த்தும், பொதிகளை இங்குமங்கு மாற்றி வைத்துக்கொண்டும் இருந்தனர் பிற பயணிகள்.

நான்  ஒரு பெருமூச்சு விட்டவனாய் அமைதியாக என் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். அந்த பின்னாளிருந்து வந்து தலையில் தட்டிய ஆர்மி குபீரென நினைவிற்கு வந்தான்.

அதை யோசிக்க வேண்டாமென மாற்றி யோசித்தேன். மறுமுறை அந்த துப்பாக்கியால் குத்திய ஆர்மியும் நினைவிற்கு வந்தான். உயிர்போனால் போகட்டுமென திருப்பி யடித்திருப்பேன் தான், நான் தானடா “காதம்பரி” என் தங்கையின் பெயரையே புனைப் பெயரை வைத்து எழுதுகிறேன், என்னத்தை கிழித்து விடுவாய், அதிகமாக செய்வதெனில் சுடுவாய்’ அவ்வளவு தானே சுடு!!’ என்று கேட்டிருப்பேன் தான். ஆனால; எனக்கு என் சுய மானத்தை விட, எனக்கு நான் படும் என் அசிங்கத்தை விட; என் தேசம் பெரிதாகப் பட்டது. என் மக்கள் பெரிதாகப் பட்டார்கள்.

சட்டென கொண்டுவிடும் கோபத்தை விட, அமைதி காத்து சாதிக்கும் வல்லமை ஒரு வித்தை. மிச்சமிருக்கும் என் கடமைகளை முடிக்க அந்த வித்தை எனக்கு சரியெனப் பட்டது.

மேகநாதன் போல் இன்னும் நிறைய பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள்; அவர்களிடம் அவருக்கு சொன்ன விவரத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நூலிழையிலான நேரத்தில் மின்னலென வெட்டியது அந்த எண்ணம்.

என் உறவுகள் கொத்து கொத்தாய் தூக்கிப் போட்டு பிணமாக எரித்த கோர சம்பவங்களை, ஒரு தேசம் எனும் பெயரில் மறைந்துக் கொண்டு இன்னொரு இனத்தையே அழிக்க செய்த மோசடிகளை இதுபோல் என் புத்தகம் வாயிலாக பதிவு செய்திடல் வேண்டும் எனும் எண்ணம் எனை பொறுமை இழக்காமல் என் கைகளை கட்டிப் போட்டது.

உயிரை கொடுத்த என் உறவுகளுக்கு மத்தியில், ஆண்டாண்டு காலமாய் மாய்ந்த  என் மாவீரர்களுக்கு மத்தியில்; அவன் தலையில் தட்டியது ஒன்றும் எனை பேரவுமானத்திற்குள் தள்ளிவிடாது.

காலம் ஓர் தினம், திரும்பி என் இனத்தின் வீழ்ச்சிக்கான பதிலை சொல்லாமலா போகும்? அன்று எனக்குள்ளே நான் கர்வப் பட்டுக் கொள்வேன்’ என்று நினைத்துக் கொண்டே இருக்கையில்; அந்த வலியும், திருப்பி அவனை பதிலுக்கு அடிக்க இயலா சுயமானமும் கண்ணீராக கரைந்து சூடாக என் கன்னங்களில் வழிந்தது. கண்களை இன்னும் இறுக்கி மூடிக் கொண்டேன்.

ஒரு விமானப் பணிப்பெண் வந்து அழைத்தாள். விமாணம் புறப்பட உள்ளது என்று சொல்லி நேராக அமரும் படி கேட்டுக் கொண்டார். நிமிர்ந்து அமர்ந்தேன். “ஏதேனும் இயலாமையா? உதவிகள் ஏதேனும் வேண்டுமா” என்றாள்? அதலாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, மொத்தம் நீங்கள் எத்தனை பணிப்பெண்கள் இந்த விமானத்தில் உள்ளீர்கள் என்றேன், அவளிடம்.

அவள்; ஏன் என்று வினவி; பின் சற்று நிதானித்து, எட்டு பேர் வரை உள்ளோம் என்றார். எல்லோருமே தமிழா என்றேன். இல்லை இல்லை; எல்லோருமே சிங்களம் என்றார் ஆங்கிலத்தில். அப்படியா!! நல்லது என்று சிரித்துக் கொண்டேன். ஏன் இதலாம் கேட்கிறாய் என்றாள் அவள். இல்லை தெரிந்துக் கொள்ளத் தான் கேட்டேன்’ என்று சொல்ல – சிரித்துக் கொண்டே போனார் அந்த சகோதரி.

எனக்கு உள்ளே ஈட்டி போல இறங்கியது, அந்த ஓரவஞ்சக அமிலம். இலங்கையில் நடக்கும்  ஒரு இன அழிப்பின் தந்திரம் இங்கிருந்தும் புரியவந்தது. சரி, தமிழில் ஏதேனும் ஒரு வார்த்தையேனும் சொல்கிறார்களா என்று பார்த்தேன்; ஒருவள் தமிழுக்கு பதில் டமிலில் ஏதோ பயிற்சி எடுத்துக் கொண்டு பேசுவது போல் ‘வண்கம்’ என்று சொல்லிவிட்டு அதே பாவனையில் பேசினாள்;

பொறுமையே இல்லை எனக்கு. முதுகில் அடிக்கும் கோழைகள்; குள்ள நரிகள்; பத்து பேரில் ஒரு தமிழச்சிக்கு வேலை கொடுத்தாலென்ன விமானம் நொறுங்கி வீழ்ந்துவிடுமா’ என்றேன் உணர்ச்சி அடக்கமாட்டாமல்.

என்னருகில் அமர்திருந்த சகோதரி ஒருவர் ‘விமானம் எல்லாம் நொறுங்காது, தமிழராகிய நாம் தமிழராக அடையாள பட்டுப் போவோமே என்றாள்.

நான் தமிழில் பேசிய ஒரு பெண் குரல் கேட்டு மகிழ்வுற்றவானாக அவரைப் பார்த்து ‘நீங்கள் தமிழா’ என்றேன்.

“ஆம்”

“எந்த ஊர் ஈழமா?”

“ஆம்”

“ஈழத்தில் எங்கே?”

“கிளிநொச்சியை சேர்ந்தவள்”

“கிளிநோச்சியா?” சற்று சத்தமாக கேட்டுவிட

“சத்தம் போடாதீர்கள். நானே தப்பித்து செல்பவள்” என்றார் அவர்

எனக்குப் புரியவில்லை. என்னாச்சு எங்கிருந்து என்று சந்தேகப் பார்வையோடு அவர்பக்கம் திரும்ப. விமானம் மேலே ஏறி நடுவானத்தைப் பிடித்து பறக்கத் துவங்கியது.

பணிப்பெண் ஒருத்தியும் ஒரு ஆடவருமாக வந்து எங்கள் அருகில் நின்று தள்ளுவண்டியினுள் இருந்து உணவினை தட்டில் வைத்து சிரித்துக் கொண்டே கொடுத்தனர். அவள் சைவம் பெற்றுக் கொண்டாள், நானும் எனக்குத் தந்த அசைவத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு சைவம் போதுமென்றேன்.

அவள் அந்த உணவுத் தட்டினை வாங்கி வெறுமனே வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தால். எனக்கோ; நேற்று மாலையிலிருந்தே  ஒன்றும் கழித்திடாத மயக்கம். இருந்தாலும் நான் மட்டும் தனியாக உண்பதற்கு நெருடலாக இருக்க; ஏன் நீங்கள் சாப்பிட வில்லையா’ என்றேன்

“சிங்களன் கையில் தண்ணி வாங்கிக் குடிப்பதை விட நானென் கழுத்தை அறுத்துக் கொண்டு சாவேன்” என்றாள். அவளின் வீரியம் என்னை கலவரப் படுத்தியது. “இதை நான் குடித்தால் என் மண்ணுக்காக மாய்ந்த எம் வீரர்களுக்கு பாவம் தான் சேரும்” என்றாள்.

“அப்போ நீங்கள் யார்?” என்றேன்

என் மண்ணிற்காக செத்த மாவீரர்களுக்கு மத்தியில்; உயிரை காப்பாற்றிக் கொள்ள, கல்ல கடவுச் சீட்டில் நாடு கடந்துப் போகும் ஒரு கோழை” என்றாள் அவள்.

“என்னிடம் சொல்கிறீர்களே நான் யாரிடமேனும் சொல்லிவிட்டால்?” என்றேன்.

உன்னை கொன்றுவிட்டு பிறகு நானும் செத்துப் போவேன் என்றாள். சற்றும் யோசிக்காமல்..
——————————————————————————————–
தொடரும்..

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்