“கோ” திரைப்படம் பற்றிய ஒரு பார்வை – வித்யாசாகர்!!

 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
– திருவள்ளுவர்!

இந்த ஏழு சீர், இரண்டு அடியில் ஐயா திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் சொன்ன செய்திதான் “கோ” எனும் இப்படம் இறுதியாய் சொல்ல வரும் நீதியும்.

அந்த நீதியினை வழங்குவதற்குமுன் மக்களை மக்களோடுப் பின்னி; மக்களை சார்ந்த தொண்டர்களை காட்டி; தொண்டனின் தலைவன் செய்யும் அரசியலை ஒவ்வொரு இளைஞனும் கையிலெடுத்து இத்தேசத்தை திருத்தி ஆளும் தலைவனாக வாழ்ந்தாலென்ன?’ என்று மறைமுகமாய் கேட்கும் ‘ஒரு நல்ல தலைவனை தேடும் படம் இந்த “கோ”.

தலைவனை தலைவராக்கி, தலைவரை தலைவா என்று மெச்சிக்கொண்ட நமக்கு; வெளி உலகிற்கு தெரியாத ஒரு போலித் தலைவனை, மெய்யிலா தியாகியை, கதாபாத்திரங்களுக்குக் காட்டாமல் மக்கள் முன் தோலுரித்து காட்டிய படம் “கோ”. (கோ’ எனில் தலைவன் என்று அர்த்தம்)

ஒவ்வொருவரும் தன் மகன் மருத்துவனாவனா உயர் அதிகாரியாவனா நல்ல பொறியாளராக வருவானா என்று எதிர் பார்க்கிறோமே யொழிய தன் மகன் ஏன் நாட்டை, நாட்டு மக்களை வளப் படுத்தும் நல்ல முதலமைச்சராக வரக்கூடாது, ஏன் ஒரு நல்ல பிரதமாரக வரக் கூடாது என்று நாமெல்லாம் நினைப்பதில்லையே? அப்படி நினைக்க வேண்டும் என்கிறது இந்த ‘கோ’ எனும் நல்ல திரைப்  படம்.

நான் கூட இதைத் தான் பத்து வருடத்திற்கு முன்பு என் “திறக்கப் பட்ட கதவு” என்னும் ஒரு குறுநாவலில் ஐந்து நண்பர்களை வைத்து அரசியலுக்கு வருவது பற்றி சிந்திக்கும்; திட்டமிட்டுக் கொள்ளும் இளைஞர்களை காட்டி ஒரு கதை எழுதினேன். என் காதல் புத்தகம் விற்றளவு கூட அந்த “திறக்கப் பட்ட கதவு” விற்கவில்லை, என்பது மிக வருத்தமாக இருந்தது.

இருபத்தியெட்டு வயது இளைஞன் நம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கும் ஒரு காட்சி’ இப்படத்தில் இறுதியாக வருகிறது. மனதிற்குள் ஆயிரம் விளக்கேற்றி மகிழும் சந்தோச பூ மலரச் செய்தது அந்த காட்சி என்பது உண்மை. என் “திறக்கப் பட்ட கதவு” நூல் விற்பனையாகிவிடாதக் குறை; பத்து வருடங்கள் கழித்து அந்த ஒரு காட்சியினை கண்டதில் தீர்ந்துப் போனது.

மிக திறமையான ஒளிப்பதிவு, அதிக குற்றம் தெரிந்திடாத இயக்கம், உணர்வு ததும்பும் நல்ல பின்னணி இசை, திகட்டாத நடிப்பென; நுழைவு சீட்டிற்கு கொடுத்த பணம் ஜீரணித்துத் தான் போகிறது. இருப்பினும்,  இடைவேளைக்குப் பின் வரும் அந்த இரண்டுப் பாடல்களையும் ‘எழுதப் படாத சட்டங்களை கருதி’ வைக்காமல் நீக்கி இருந்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இன்னும் சற்று கூடுதல் தரத்திற்குரிய புரட்சிகரமான படைப்பாக “கோ” இருந்திருக்கும்.

பாடல்களில் வரும் காட்சிகள், இடம் தேர்வு செய்து அழகாக அமைத்த நடனம், அவைகளை அழகாக படம் பிடித்த ஒளிப்பதிவின் திறத்தில் அப்பாடல்கள் மிளிர்ந்தாலும்; என்னதான் எத்தனை அழகென்றாலும் ஒரு இடை சொருகலாக மட்டுமே வருதிருக்கிறதந்த பாடல்கள் என்பது படம் பார்ப்பவர்களுக்குப் புரியாமலில்லை. ஒருவேளை, இடம் மாற்றி வைத்திருந்தால் இன்னும் சிறந்திருக்கலாம்.

கடைசி காட்சிக்கு முன் நெக்ஷளைட் தீவிரவாதியான கதிருக்கு மருத்துவர் ஒரு ஊசியை போட்டுவிட்டு சிரஞ்சியை அருகில் வைக்க, அந்த சிரஞ்சியிலிருந்து சொட்டிய ஒற்றைச் சொட்டு மருந்தின் ஜாலத்தை கூட அழகாக காட்சி படுத்தியிருக்கும் விதமும் அதன் அசைவுகளின் சப்தத்தை கூட இசையால் அடையாளப் படுத்தியதும்போன்ற பல தருணங்கள் இசையமைப்பினையும் ஒளிப் பதிவையும் மெச்சிக் கொள்ளச் செய்கின்றன.

அஸ்வினாக வரும் ஜீவா ‘வீடு பற்றி எரியும் கோபத்தை கூட, புன்னகை வீசும் முகத்தால், இணக்கமான பேசினால் மாற்றி விடலாம்’ என்பதை நிரூபிக்கும் சில காட்சிகளில் யதார்த்தம் பிசகாமல் நன்றாக நடித்திருக்கிறார்.

ராதா தன்னை மீண்டும் திரைத்துறையில் மறுபதிவு செய்துக்கொண்டது போன்று எண்ணவைக்கும் ஓர் மலர்ந்த முகத்தைக் காட்டுகிறார்; அவரின் மகளாகிய கதாநாயகி கார்த்திகா. மிக ஒய்யாரமான அழகு தான். அடர்த்தி மிகு வளைவுகளை கொண்ட இன்னொரு மீன்போன்ற கண்ணும், நெட்டை நாட்டியமும், குறையறியா நடிப்புமாய்; வெள்ளை ஆடையில் வந்த வெண்கல தேவதையாக மனதை கில்லாமல் கவர்ந்துச் செல்கிறார்.

வசந்தாக வரும் அஜ்மல், வசந்த் நண்பர்களாகிய சிறகுகளின் குழுமம், ஜீவாவாகிய அஸ்வின், கதாநாயகியான கார்த்திகா, கிருஷ் இன்னும் இப்படத்தில் வரும் இவர்களை போன்றவர்களை தேடித் தான் இத்தேசம் கைவிரித்து நிற்கிறது.

அத்தகு, ஒரு தேசத்தின் தேடல் இப்படித் தான்’ இப்படிப்  பட்ட இளைஞனை தான் தேடியிருக்கும்’ எனும் கணிப்பிற்கு உரித்த நாயகர்களாகின்றனர் வசந்தும் வசந்த் சார்ந்த சிறகுகள் அமைப்புக் குழுவினரும். இவர்களைப் போன்று ஒரு இளைஞர் படை நம் நாட்டிலும் வந்திடாதா எனும் ஏக்கத்தை வசந்த் பாத்திரத்தின் நடிப்பு குறையின்றி நம் கண் முன்னேக் காட்டுகிறது. நிச்சயம் அடுத்தடுத்த படங்களில் வசந்த் எனும் அஜ்மல் இனி இருக்கலாம். இப்படத்தின் மூலம் ஒரு பத்து இளைஞர்களாவது தன் தேசத்திற்காக புறப்படலாம்.

சோதனைகள் ஆயிரம் வந்தாலும்; அதை உடைத்தெறியும் தீயை கண்களில் கொதிக்க கொதிக்க சுமந்து திரியும் இளைய ஜோதிகளிடையே அரசியலை ஒரு சாக்கடை என்று சொல்லாமல்; அரசியலுக்கான விழிப்பினை; சரித்திரத்தை திருத்தி எழுதும் சந்தர்ப்பத்தை முன்கூட்டி காண்பித்து கடந்துவிடுகிறது படம்.

மேடைகளில் வசந்த் பேசுவதாக காட்டும் காட்சிகளில்; அசத்தலான தோற்றத்தை காட்டி நடித்திருக்கிறார், அவ் விடங்களுக்கான வசனங்களை இன்னும் கூட சேர்த்திருக்கலாம். இயக்குனரின் வித்தையில் திரைக்கதை எழுதிய பக்கங்கள் சில ஒதுக்கப் பட்டிருக்கலாம் என்றொரு சந்தேகம் கூர்ந்து கவனிக்கையில் எழுகிறது. இருந்தாலும், அதை ஒட்டுமொத்தப் பேரின் நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும் தூக்கி மறைத்து விட்டு கதையில் நம்மை மூழ்கடித்து தன் படத்திற்கான காரணத்தை தேவையை மிக அழகாக சொல்கிறது “கோ” எனுமிந்த திரைப்படம்.

சரோவை, அஸ்வின் கொஞ்சும் காட்சிகளும், கதாநாயகி கார்த்திகாவிடம் அஸ்வின் காதலால் உருகும் இடமும், கண்களால் அவள் பேசும் அழகும் திரைப்படத்தின் இடையே, ‘இன்றைய சமரச நட்பு நிறைந்து பழகும் இளைஞர்களின் நட்பையும், காலத்திற்கும் திகட்டாத காதலின் முகங்களையும் அழகாகவும் உருக்கமாகவும் காட்டுகிறது.

யாரோ ஜெயித்தாலும் கூடி சிரித்து; கொல்லப் பட்டாலும் இறந்ததாய் நம்பி; இறந்து போனவனுக்கு சிலை வைத்தாலும் தியாகியென வணங்கி; இன்னும் அப்பாவித் தனமாகவே நம் நம்பிக்கையையும் உரிமைகளையும் சுதந்திரத்தையும்; நம் நாட்டுப் போலிகளை நம்பி நம்பியே வீணடிக்கிறோம் என்பதையும் மறைமுகமாய் உணர்த்துகிறது “கோ”.

எரிய திராணியே இல்லாத விளக்காக இருந்தும், ஊருக்கே வெளிச்சம் காட்டுவதாய் என்னும் சில அரசியல்வாதிகளின் முகங்களை உடைத்தெறியத் துணிந்ததோடு நில்லாமல்; இப்படித் தான் இருக்கிறோம் நாம், இப்படித்தான் நடக்கிறது நம் அரசு, இப்படித் தான் நடத்துகிறார்கள் நம் அரசியல் வாதிகள் நம்மையும் மற்றும் நம் காவல் துறையினையும் என்பதை நமக்கும் காவலாளிகளுக்கும் ஏன் அரசியல்வாதிகளுக்குமே கூட; வலிக்காமல் உரைக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்

தன்னால் இயன்றதையேனும் என் மக்களுக்காகவும் என் தேசத்திற்காகவும் செய்கிறேனே என்பவர்களின் முகத்தையும் காட்டத் தவறவில்லை இந்த “கோ”. அதேநேரேம், இன்றும் ரத்தம் கொதிக்க, நரம்பு புடைக்க சமூகத்தின் அவலம் காணும் போதெல்லாம் பொங்கி எழுந்து, மக்களின் சேவைக்கென மறைமுகமாய் உழைத்துக் கொண்டிருக்கும், உலக பார்வைக்கு வராத பல ஆக்கப் பூர்வமான இளைஞர்களை, யுவதிகளை, பெருமைக்குரிய மனிதர்களை இப்படம் காட்சிகளின் ஊடே தரமாக காண்பிக்கிறது.

இரவு நெருப்பில் அணையும் தீபங்களின் விலை, இவ்வளவு என்று’ சரோ விபச்சாரிகள் குறித்த விவரங்களை சொல்ல; அஸ்வின் அப்படியா என்று கிண்டலடித்து சிரிக்க, சரி அதை விடு எனக்கு எவ்வளவு விலை தரலாம் சொல்’ என்று கேட்க, அஸ்வின் அவளை அளந்து பார்த்துவிட்டு இவ்வளவென்று சொல்ல, அவள் இவ்வளவு தானா என்று சிணுங்கிக் கொண்டே ‘சரி இவளுக்கு எவ்வளவு தரலாம் என்று கதாநாயகியை காட்டிக் கேட்க’ அவன் அவளையும் அளந்துப் பார்த்துவிட்டு இன்னதென்று சொல்வதாக அமைந்த காட்சி யொன்று சற்று வளர்ச்சியின் விரசமாக தெரிந்தாலும் –

ஒரு ஆணும் பெண்ணும் அப்படி பேசுமளவும், அங்ஙனம் பேசிக் கொண்டாலும் தங்களுக்குள் எந்த காமப் பார்வையின் கொடூர நகங்களையும் பதித்துவிடாமலும், ஆண் என்பவன் பெண்ணை நம்பி, பெண் என்பவள் ஆணை நம்பி, நட்பு ததும்பி நிற்கும் அந்த காட்சிகள்; நம் இளையசமுதாயத்தினருடனான ஒற்றுமையினையும் பரஸ்பர புரிதலையும் காட்டுவதோடு மட்டுமல்லாமல், நாளைய நம் தலைமுறையின் சமரசத்தை நம் சந்தேகப் பார்வையினால் மறைத்துக் கொண்டு; அவர்களை தன் வசத்திற்கே மீண்டும் மீண்டும் வளர்க்க வேண்டாமே’ எனும் தெளிவையும் இப்படம் காட்டுகிறது.

என்னதான் இருந்தாலும்; ரொம்ப பெருசாக மெச்சிக் கொள்ளும் படமோ, பேச வேண்டிய பிரம்மிப்போ இல்லை என்று சிலர் இப்படத்தை பற்றிப் பேசிக் கொண்டாலும், நாளைய சரித்திரத்தை மாற்றி எழுதப் போகும் பொறி இப்படத்திலும் இருக்கிறது.

அந்த கிருஷ் எனும் பாத்திரம் அந்த சூழ்சுமம் புரிந்து; தமிழ்நாடே மெச்ச வேண்டிய இளைஞனை நான் மட்டும் மெச்சுகிறேன் என்று சொல்லி முடியும் இடத்தில்; எனக்கு நம் தேசத்தின் அதுபோன்ற எண்ணற்ற இளைய சமுதாயத்தினரின் முகம் அப்பட்டமாய் தெரிந்தது.

ஒரு பெரிய புரட்சிகரமான கதையை;  மிக யதார்த்தமான திரைப்பட பாணியில் சொல்ல முயன்ற இயக்குனருக்கு, அதற்கு பலம் சேர்த்த  இசையமைப்பாளருக்கு, ஒளிப்பதிவாளருக்கு, அவர்களின் வெற்றியை முழுதுமாக தன் நடிப்பினால் பெற்றுத் தந்த ஜீவா, அஜ்மல், கார்த்திகா மற்றும் சரோ, கிருஷ், கதிராக வரும் பாத்திரங்களும், சமூக அமைப்பான சிறகுகளின் உறவுகளும், பிரகாஸ் ராஜ்  போன்ற இன்னும் நிறைய பேர் மட்டுமின்றி திரைக்குப் பின்னின்று உழைத்தவர்கள் அனைவருக்குமே படத்தின் நுழைவுச் சீட்டினை தூக்கி வீசியதோடு நின்றுவிடாமல் மனதார ஓர் நன்றியையும் சொல்வோம்.

காரணம், இப்படத்தின் மூலக் கருத்து நம் தேசத்து ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் புரியவேண்டும். அரசியலுக்காக இளைஞர்கள் படிக்கவேண்டும். நானொரு முதலமைச்சராகி பிரதமராகி என் தேசத்தை உலகம் மெச்ச உருவாக்கிக் காட்டுவேன் என்று இளைய சமுதாயத்தினர் சபதம் ஏற்கவேண்டும். நம் தொகுதி வேட்பாளராகவாவது இளைஞர்கள் தன் ஒட்டுமொத்த அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மெல்ல மெல்ல நகர்ந்து தவறுகளின், சமூக அவலங்களின் ஆணிவேர் வரை ஊடுருவி அவைகளை கற்றையாகப் பிடுங்கி யெறிய வேண்டுமெனில் அரசியல் நமக்கு சரியாக புரியவேண்டும். அரசியல் வாதிகளை நமக்குள்ளிருந்து சரியாக நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு அரசியலை நாம் முறையாக கற்க வேண்டும். அரசியல் குறித்த நம் பங்கினை ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தெரிந்துக் கொள்ளவேணும் வேண்டும்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இந்த இளைஞர்கள் பக்குவப் பட்டவர்கள். இனி வரும் காலங்களில் இவர்களால் இன்னும்  ஒரு நல்ல சமுதாயத்திற்குரிய, மனிதர்களை இவர்கள் பெற்றுத் தருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. நாளைய சமுதாயம் நாளைய மனிதர்களால் எழுச்சிக் கொள்ள இன்றைய இளைய சமுதாயம் நல்ல விதையாக தம்மை தூவிக் கொள்ளுமென்று நான் நம்புகிறேன்.

அந்த நம்பிக்கையினை வலுப்படுத்த இதுபோன்ற திரைப்படங்களின் ஊடாக உணர்த்தப் படும் உணர்வுகள்; கலையினை என்றும் தமிழர்கள் மதிப்பதன் காரணமென்றுக் கருதி, இன்னும் பிற நாட்களின் நம் வளர்ச்சிக்கு நம் தமிழர் பண்பும், மொழியின் வளமும் அதொத்த காதலும், காதலினால் பாகுபாடற்ற தன்மையும் நமக்குள் நிறைந்து நமக்கு துணை நிற்குமென்று நம்பி; அந்த காதலின் மென்மை குறையாது நம் வாழ்தலைப் பற்றிப் பேசும் இதுபோன்ற திரைப் படங்களுக்கு; திரைப்படத்தில் அளவுக்கதிகமாக நாம் நம் நாட்டத்தை செலுத்திவிட்ட காரணத்தினால் நன்றியினை தெரிவிப்போம்!!
————————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 9)

இதற்கு முன்..

சடாரான ஏதோ வந்து மேல் விழுந்தது போலிருந்தது. கண்களை திடுக்கிட்டுத் திறந்தால் அம்மாவின் கையை விட்டுவிட்டு ஓடிவந்த குழந்தை யொன்று என் மீது விழுந்து எழுந்து மன்னித்துக் கொள்ளுங்கள் அங்கிள் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு ஓடியது.

ஒரு நொடி எனக்கு எங்கிருக்கிறேன் என்னானது என்று ஒன்றுமே புரியவில்லை. பின் கடந்த ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். விமான நிலையத்திலிருப்பதையும் யோசித்துக் கொண்டே கண்ணயர்ந்துப் போனதையும் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுறுத்திக் கொண்டேன்.

இப்பொழுது அந்த பாப்பா சற்று தூரம் சென்றும் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டே போனது. அதை பார்த்து கையசைத்துவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்துக் கொண்டேன். “ச்ச… ஏதேதோ யோசித்துக் கொண்டே உறங்கிப் போனேனா… கடைசியில். கனவு வேறு கண்டிருகிறேன், அதும் பாவம் மேகநாதன் அண்ணன் என் கண்ணெதிரிளேயே கத்தியால் ‘சதக் ‘சதக்கென்று  குத்தப் பட்டதுபோல் கனவு!! என்ன மனிதன் நான், இதைப் பார்த்துக் கொண்டு சிரிக்க வேறு செய்கிறேன். என்னாலேயே என்னை புரிந்துக் கொள்ள முடியவில்லை. எனை தாண்டி எப்படி கனவு வரும்; ஏதோ அவர் மீதான கோபம் உள்ளூர பதிவாகியுள்ளது அன்றி வேறில்லை.

ஏன் நாமெல்லாம் இப்படி முழுமையாய் மன்னிக்கும் மனோபாவமே நமக்கில்லையா? ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிருகத்தை வைத்துக் கொண்டுதான் திரிகிறோமா நாமெல்லோரும்? என் கேள்விகளால் நானே வருந்தினேன். மேகநாதண்ணன் பாவம், எத்தனை பரிவு காட்டினார் கடைசியில், இப்படி செய்தே இருக்கக் கூடாது நான். எங்கோ அவர் மேலெழுந்த கோபம் இன்னும் மனதில் மிச்சமாய் இருக்கிறது தான். இருந்தாலும் எப்பொழுது தூங்கினேன்; எப்போது கனவு வந்ததென்றே விளங்கிக் கொள்ள முடியவில்லை.  ஆழ்ந்து யோசித்தத்தில் எனையறியாது சோர்ந்து தூங்கிவிட்டேன் போல்.

உண்மையில் மேகநாதன் அண்ணன் ஆரம்பத்தில் அத்தனை அர்த்தமற்று பேசினாலும் அவரை விட்டுப் பிரிகையில். பிரியா விடை பெற்றேன் என்று சொன்னாலே தகும். ஏனெனில் ஈழம் பற்றி அவ்வளவு உருகினார், ஈழம் பற்றிய எந்த உதவி வேண்டுமாயினும் உடனே அழைக்கச் சொன்னார், அல்லது ஏதேனும் தமிழகத்தில் இருந்து செய்வது என்றாலும் பரவாயில்லை செய்யத் தயாரென்று அவர் சொல்லி அனுப்பியதெல்லாம் நினைவிலேயே இருந்தது.

அவரிடமிருந்து விடை கொள்கையில்; யாரோ ஒரு ஜீவனுக்குள் இருந்த விடுதலையின் தீயை மேலும் ஒரு சொட்டு எண்ணெய் ஊற்றி எரியவைத்ததாகவும், ஈழம் குறித்த விழிப்பினை; நாம் கொள்ளவேண்டிய அக்கறையினை நம் தமிழ்மண்ணின் மைந்தர் ஒருவருக்கு தன்னால் இயன்றவரை பதித்துவிட்டதாகவும் ஒரு திருப்தி எழுந்தது.

சட்டென நேரமாயிருக்குமோ என்றொரு பதட்டம் வர நேரம் பார்த்தேன்.. ஒரு மணி நேரத்திற்கு மேல் கழிந்து விட்டிருந்தது. மனதிற்குள் என்னவோ பல வருட வாழ்க்கையினை மூன்று மணிநேர திரைப்படத்தில் பார்த்துவிடுவதுபோல்.. நாளெல்லாம் நாங்கள் பேசி கழித்த பொழுதுகளெல்லாம் ஒரு மணி நேர ஓட்டத்தில் நினைவினை தொட்டு கடந்து போயிருந்தது.

மேகநாதன் அண்ணன் மற்றும் அவரை போல் ஈழத்தின் விடிவு குறித்து எந்த அக்கறையுமே இல்லாதவர்கள் பற்றியும், தன் வீடு, உறவுகள், குழந்தைகள், நாடு, இனத்தின் விடியல் என எல்லாம் குறித்தும் சிந்திக்க சிந்திக்க மனதிற்குள் ஏனோ மிக வெறுமையே உண்டானது.

மனதோடு சேர்ந்து சற்று உடலும் பாரமாக, வெகு நேரம் உட்கார்ந்திருந்தே உறங்கிவிட்டதனாலும், கணவு போல நேரம் கடந்துவிட்ட உணர்வும் உள்ளே பதட்டத்தோடு எழ; எழுந்து நின்று கைகளை சோம்பல் முறித்தவனாய் இங்கும் அங்கும் திரும்பிப் பார்க்கிறேன்.

கைப் பையினை  இருக்கையின் மெது வைத்துவிட்டு மடிக்கணினியை மட்டும் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு, ‘கொழும்பு விமான நிலையத்தின் அடைக்கப் பட்ட கண்ணாடியோரம் நின்று; விமானங்களையும், விமானத்தை புறப்பட தயாராக்கிக் கொண்டிருக்கும் ஊழியர்களையும், உடன் சேர்ந்து பணி புரியும் பெண் தொழிலாளர்களையும், ஆணுக்குப் பெண் நிகராக பளு தூக்கி, குறிப்பெடுத்து, ஆண்களோடு சேர்ந்து நேசமோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் சிறப்பினையும் கண்டு எல்லாவற்றையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டே வருகிறேன்.

ஒவ்வொரு விமானங்களையாக மாறி மாறிப் பார்ப்பது சற்றுத் தூரத்தில் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்மிக் காரர்களுக்கு எப்படித் தெரிந்ததோ என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. ஆழ்ந்து என்னையே பார்த்தார்கள்.

விர்ரென எழுந்து, தேடிக் கொண்டிருந்த திருடன் ஒருவனை பிடித்துவிட்டது போல்; அவசரமாக தோளில் மாட்டியிருந்த துப்பாக்கியினை வெளியே எடுத்து சரி செய்துக் கொண்டே எனை நோக்கி ஓடி வந்தனர்.

நான் புகைப்படம் எடுப்பதை அவர்களுக்காக நிறுத்தவில்லை. அவர்கள் என்னருகில் வந்ததும் என்ன செய்கிறாய் என்றனர். சிரித்துக் கொண்டே மிக அழகான ஊர் உங்கள் ஊர் என்றேன். விமானங்களை ஏன் படம் எடுக்கிறாய் என்றார்கள். விமானம் தாண்டி பசுமை பூத்திருக்கும் ஊரை தானெடுத்தேன், விமானம் எங்கள் ஊரில் இதைவிட நிறைய நிற்கும் என்றேன்.

சற்று  முறைத்தவாறு உன் பெயரென்ன கேட்பதற்கு மட்டும் பதில் சொல் என்றனர், சொன்னேன். எங்கிருந்து வருகிறாய் என்றனர், சொன்னேன். பிறகு எங்கே போகிறாய் என்ன செய்கிறாய் யாருடன் வந்தாய் போன்ற சாதாரண கேள்விகள் தான், என்றாலும், இடையே புகுந்த ஒரு கருங்காளி யொருவன் வெடுக்கென என் கையிலிருந்த புகைப்படப் பெட்டியை பிடுங்கிக் கொண்டு ‘என்ன வைத்திருக்கிறாய் பையில் என்றான், கணினி என்றேன். திற என்றான், திறந்தேன். அது என்ன என்றான்; மடிக் கணினி என்றேன். கணினியை மேலே எடு என்றான். எடுத்தேன். கீழே அடியில் தெரியுதே அது என்ன என்றான்.  போச்சுடா..!! என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்கு தூக்கிவாரி போட்டது.  அதொன்றும் இல்லை, எல்லாம் புத்தகங்கள் தான் என்றேன், அந்த புத்தகத்தை எடு என்று அடியிலிருந்து கொஞ்சம் மட்டும் தெரியும் ஒரு புத்தகத்தை காட்டினான். அவன் காட்டிய இடத்தில் எனக்கு வந்த எமன் போல அழகாக ஓரம் மட்டும் தெரிந்துக் கொண்டிருந்தது அட்டையின் கொட்டை எழுத்தில் பெயர் பதிக்கப் பட்ட ‘விடுதலையின் வேட்கை’ எனும் அந்த ஈழக் கவிதைகளின் புத்தகம்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதை எடுத்து இரண்டுப் பக்கம் தான் பிரித்தான் உள்ளே “அண்ணன் பிரபாகரனுக்கு சமர்ப்பணம்” என்றிருக்க முயலை காது பிடித்துத் தூக்கிப் போவார்களே; அதுபோல என்னை தூக்காத குறை தான்; ஒரு நிமிடத்தில் அவர்களின் தோற்றம் செய்யல பார்வை பேச்சு எல்லாமே மாறிப் போனது.

ஒருத்தன் அடி என்றான், ஒருத்தன் பிடி என்றான், குத்திடுவேன் வெட்டிடுவேன்னு குதிக்கிறானுங்க மாற்றி மாற்றி. நான் எதற்கும் துணிந்தவனாகவே சாதாரணமாக நின்றிருந்தேன். அதற்குள் ஒருவர் அமைதி பூனைப் போல வந்து தோளில் கைபோட்டு நேராக விமான நிலைய காவல் துறையின் உயர் அதிகாரிகள் இருக்கும் அறைக்கு அழைத்துப் போனார்.

எல்லோரும் என் பின்னே கத்திக் கொண்டே ஓடிவந்து அந்த அறைக்குள் புகுந்தனர். வரும் வழியிலேயே வாக்கிடாக்கியில் யார் யாரையோ அழைத்து சொல்லிவிட்டார்கள் பின்னால் வந்தவர்கள்.

உள்ளே அறைக்குள் போனதும், ஒருவரை மாற்றி ஒருவர் எனை அடிக்க கை ஓங்கினர். நான் சற்றும் பொருமை இழக்கவில்லை, பயம் துளியும் கொள்ளவில்லை; வெகு தெளிவாக கூறினேன், என்னைப் பற்றிய விவரம் சரிவர கேட்காது யாரும் என் மேல் கைவைக்க அதிகாரம் கிடையாது., நான் உங்கள் விமானத்தில் பயணிக்க விருப்பப்பட்டு வந்த ஒரு பயணி. வேண்டுமெனில் தீர விசாரித்துக் கொள்ளுங்கள், பிறகு நீங்கள் சொல்வதற்கு நான் கட்டுப் படுகிறேன், காரணம் நீங்கள் ஏன் இப்படி என்னை நடத்துகிறீர்கள் எனபதே எனக்கு புரியவில்லை’ என்றேன்.

ஒருவன் பின்னால் வந்து தலையில் கைவைத்துத் தள்ளினான்.. ‘நீ என்ன பெரிய புடுங்கியா, உனக்கு சொல்லனும்னு எல்லாம் அவசியம் கிடையாது என்பது போல் ஏதோ ஏதேதோ அவனது மொழியில் திட்டினான். நல்லவேளை எனக்குப் புரியவில்லை ஒன்றும் என்றாலும் அந்த தலையில் கைவைத்து தள்ளிய கோழிக் கிறுக்கன் யாரென்று பார்ப்பதற்குள் அதிகாரி ஒருவர் அங்கே அவசரமாக ஓடிவந்து; ‘யாரும் பயணியின் மேல் கை வைக்காதீர்கள், நாம் விசாரித்துவிட்டு சந்தேகமெனில் சிறப்புக் காவலாளிகளிடம் ஒப்படைத்து விடுவோம்’ என்று சொல்லிவிட்டு விசாரிக்க மட்டும் உத்தரவிட்டார்.

“எப்படி வந்தது இந்த புத்தகம் உன்னிடம்?” என்றார் இடையே வந்த ஒருவர். இல்லை இல்லை இது இவனுடைய புத்தகம் புகைப்படம் இருக்கே, பின்னாடி பார் என்றான் மற்றொருவன். அவன் புத்தகத்தை திருப்பி பின்பக்கம் பார்த்து விட்டு –

எத்தனை புத்தகம் எழுதி இருக்கிறாய், யார் நீ?”

“நானா?!!!!!!!!!, நான் சத்தியசீலன். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளன். எனக்கும் புத்தகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை’ என்றேன். என்ன கதையடிக்கிறாய் இதோ உன் புகைப்படம் இருக்கிறதே?” என்றான் ஒருவன் ஆவேசமாக.

அதை நன்றாக பாருங்கள், அவர் வேறு நான் வேறு நானென்ன அத்தனை சிறுவனா? எனக்கு முப்பத்தேழு வயதாகிறது. பார்வை மங்கி கண்ணாடி இட்டுத் திரிகிறேன். அவர் வேறு யாரோ’ நானல்ல என்றேன்.

இல்லை இல்லை பொய் சொல்லாதே உன்னை போலவே இருக்கே இந்த புகைப் படம் என்றனர்.

அதற்கு நான் பொறுப்பில்லை. அவர் என்னைப் போல் இருக்கலாம் அதற்காக சத்தியசீலன் எப்படி “காதம்பரி” ஆக முடியும்? அதும் ஒரு பெண் பெயர் எப்படி எனதாக இருக்க முடியும். நானொரு ஆண். சொல்ல வேண்டிய கட்டாயம் வேறு எனக்கு.

ஆனால், நானொரு ஆண், அது ஒரு பெண்ணின் பெயர் என்ற பொது தான், அவர்களுக்கு தெளிவே வந்தது. ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொண்டனர். தமிழ் தெரிந்த ஒருவரை அழைத்து வந்து கேட்க புத்தகத்தில் ‘காதம்பரி’ என்று எழுதியிருப்பதாக சொல்ல.

பிறகு இந்த புத்தகம் எப்படி உன் பையில் வந்தது?” என்றனர்.

“நான் வரும் வழியில் ஒரு கடையில் விற்றது, வாங்கினேன்” என்றேன்.

“அப்போ இந்த படத்தில் இருப்பது நீயில்லையா?”

“சத்தியமாக நானில்லை. இதோ என் கடவுச் சீட்டு, பயணச் சீட்டு எல்லாம் பாருங்கள்” எடுத்துக் கொடுத்தேன்.

ஒவ்வொன்றினையாய் பிரித்து எல்லோரும் பார்த்தார்கள். விமானம் புறப்பட இன்னும் ஏறக்குறைய ஒரு மணிநேரமே உள்ளது நான் புறப்படுகிறேன் என் புகைப்படக் கருவியை கொடுங்கள் என்றேன்.

அவர்களுக்குள்ளேயே ஒரு ஐந்து நிமிடத்திற்கு கலந்து பேசிக் கொண்டார்கள். முடிவாக விட்டுவிடலாமா என்று பேசிக் கொண்டிருக்கையில் ஒரு சதி காரன் வந்தான்.புத்தகத்தை வாங்கிப் பிரித்து பார்த்து விட்டு –

“இதோ இந்த புத்தகத்தில் தான் வலைதள முகவரி இருக்கிறதே என்று காட்ட; புத்தகத்தில் உள்ள முகவரி படி இணையத்தை திறந்து வலைதளத்தை காட்டி, தமிழ் படிக்கத் தெரிந்த ஒருவரை அழைத்து படித்துச் சொல்லச் சொன்னனர்.

அவர் உடம்பில் ஒடுவதென்ன தமிழர் ரத்தம் தானே ஏதோ விவகாரம் உள்ளதரிந்து; அத்தனை சரியாக முழுதாக சொல்லவில்லை. இதை அருகில் நின்று பார்த்த கொஞ்சநஞ்சம் தமிழ் தெரிந்த சிங்கள ஆர்மி காரர்கள் கண்டுக் கொள்ள, ஒருவன் அவரைப் பார்த்து உறுமினான்.

இவன் புலியோட ஆளு, கள்ளன், சரியாய் சொல்லமாட்டான், விடாதீங்க இவனை; என்று அவனை சட்டையை பிடித்து தள்ளிவிட்டு, தமிழ் படிக்கத் தெரிந்த வேறு ஒரு சிங்களக் காரரை கூட்டி வந்து படிக்கச் சொல்ல, அவன் லேசாக அங்கும் இங்குமாய் பார்த்துவிட்டு ‘இது ஒரு பொது வலைத்தளம் தான், வெறும் காதல் கவிதைகள் தான் இருக்கிறது என்றான் மேம்போக்காக.

அதற்குள் இன்னொருவன் தொடர்பு விவரம் இருக்கா பார் என்று சொல்லி எப்படியோ இதை அதை அழுத்தி பெயர் – சத்தியசீலன், விலாசம் இது இது மேலும் குவைத் என்றிருக்க, அதை அந்த சண்டாளன் படித்தும் காட்டிவிட,  எகுறி எல்லோரும் என் மேல் பாயாத குறையாக, எட்டிச் சட்டையை பிடித்துக் கொண்டார்கள்.

நான் எதற்கும், அசருவதாக இல்லை, ஒரேயடியாக அடித்து என் தலைமீது சத்தியமாக நான் இல்லவே இல்லை என்றேன். ‘காதம்பரி’ என்றால் எனக்கு யார் என்ன என்று கூடத் தெரியாதென்றேன். அதெப்படி ஒரே முகம் ஒரே பெயர் வருமென்று கேட்டு ஒருவன் துப்பாக்கியால் பின்னாலிருந்து குத்தினான்.

விட்டக் கொடுக்கவில்லை நான். அதை பற்றி எனக்கு கவலையே இல்லை. என் பெயர் சத்தியசீலன், நானிருபப்து லண்டனில் நீங்கள் குவைத்தினை பார்த்துவிட்டு பேசுகிறீர்களே’ என்று சத்தமாகவும் அழுத்தமாகவும் கேட்க; அவர்கள் பயணச் சீட்டினை வாங்கி மீண்டும் பார்த்துவிட்டு –

சரி அந்த வலைதள முகவரிப் படி கொடுத்துள்ள குவைத் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பினை கொடுங்கள் என்று சொல்ல –

உடனே அந்த எண்ணில் அழைத்து பேசிப் பார்க்க, குவைத்திலிருந்து தொலைபேசி எடுக்கப் பட்டு எப்படியோ யாரோ ஒருவர் ஆமாம் ‘காதம்பரி’ என்பவர் இங்கு தான் இருக்கிறார். இந்த தொலைபேசி எண் கூட அவருடையது தான், அவரிடமிருந்து என் நண்பர் வாங்கிக் கொள்ள, என் நண்பரிடமிருந்து நான் தற்காலிகமாக வாங்கினேன்’ என்று சொல்ல, லோட்ச்பீக்கரில் அதை கேட்ட எனக்கு நிம்மதிப் பெருமூச்ச்சே வந்தது.

“பார்த்தீர்களா; நான் சொன்னேனில்லையா, இப்போது லண்டனுக்கு அழைத்துப்பாருங்கள் என்று லண்டனின் நிறுவன விவரம் சொல்ல; ஆம் இங்ஙனம் பெயரில் ஒருவர் இங்கு பணியாற்றி வருகிறார் என்று அவர்கள் தெரிவிக்க மீண்டும் நான் அழுத்தமாக பிடித்துக் கொண்டேன் –

“ஏன் ஒருவரை போல் ஏழு பேர் இருப்பதாய் சொல்வார்களே உங்களுக்கு தெரியாதா? அதும் நான் ஒரு இந்தியன் என்னை இப்படி நடத்துகிறீர்களே என்றேன் ( உள்ளே கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது).

அதலாம் விடு, அதிகம் பேசினால் பிடித்து சிறப்பு காவலாளியிடம் ஒப்படைத்து விடுவோம் என்றான் ஒருவன். உன்னை சுட்டு அதோ அந்த மூலையில் கடாசிவிட்டு ‘புலி’ என்று சொல்லி விசாரணை கூட ரத்து செய்துவிடுவோம், கூடுதல் பேசாதே’ என்றான் இன்னொருவன். மாறி மாறி ஒவ்வொருவர் ஒவ்வொன்று சொன்னார்கள்.

வயலுக்குள் திரிந்த எலியை பத்து கழுகுகள் சூழ்ந்து கொண்டது போல் இருந்தது எனக்கு. புத்தகத்தில் என்ன எழுதியுள்ளது என்று தெரியுமா என்றார்கள்; என்னவோ கவிதை தொகுப்பு போல் என்றெண்ணி தான் வாங்கினேன் இன்னும் படிக்கவில்லை’ என்று சொல்ல.

என் முகத்தை மாறி மாறி பார்த்தார்கள். சாணக்கியனின் நினைவு மட்டுமே உள்ளிருந்தது எனக்கு. எதிர்காலத்தில் ‘என் தமிழ்மக்கள் சானக்கியனுக்கு பதில் என்னை சொல்லட்டும் என்பது போலொரு உறுதியினை உணர்வு முழுக்க நிறைத்துக் கொண்டு பாவம்போல் அமர்ந்திருந்தேன். என்னை உட்கார வைத்துவிட்டு கால் மணிநேரம் அவர்களுக்குள் அவர்கள் மாறி மாறி பேசிக் கொண்டார்கள்.

பிறகு; இதுபோன்ற புத்தகத்தை எல்லாம் இனி வாங்கிவரக் கூடாதென்று சொல்ல, தொடக் கூட மாட்டேன் என்றேன். சரி, அப்போ போ…, விடு போகட்டும்’ என்றார் அந்த மேலதிகாரி.

நான் நகர்ந்து வெளியே வர, என் பின்னே ஒருவன் ஓடிவந்து; ‘இடைஞ்சலுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள், எங்கள் பணியை நாங்கள் செய்தோம்’ தவறாக எண்ண வேண்டாம், இந்தியரை நாங்கள் மதிக்கிறோம்’ என்றான்.

மண்ணாங்கட்டி” என்றி மனதில் நினைத்துக் கொண்டு, பரவாயில்லை பரவாயில்லை ஒரு பயணியை நாலுபேர் பார்க்க இப்படி அழைத்துவந்து அசிங்கம் செய்கிறீர்கள். எனக்கு விமானத்திற்கு வேறு நேரம் நெருங்கிவிட்டது, விடுங்கள் நான் போகிறேன்” என்று அவசரம் காட்ட –

அவனோடு இன்னும் இருவரும் வந்து நிற்க, அவர்கள் மூவரும் கலந்து பேசிவிட்டு; அங்கிருந்தே வாக்கிடாக்கியில் விமான அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, பிறகு, என்னோடு விமானமேறும் அறை வரை வந்து; விமான ஊழியர்களிடம், சோதனையின் காரணமாக தாமதமாகி விட்டது என்று விவரம் தெரிவித்து, இருந்தாலும் எதற்கும் சற்று கவனம் கொள்ளுமாறு கிசுகிசுத்து விட்டு  அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்களை எல்லாம் நான் கூடுதல் கவனத்தில் கொள்ளவில்லை, விமானத்தில் ஏறி அமர்ந்தேன். ஆர்மிக் காரர்களால் கொண்டுவந்து விடப் பட்டதால் எல்லோரும் என்னையே ஒரு குற்றவாளி போல் பார்த்தனர். ஒரு நடுத்தர வயது பெண். கண்ணீரில் ஊறிய விழிகளோடு அவளும் என்னை பார்த்தாள். என்னைப் பிடித்ததும் விட்டுவிட்டதும் எனக்கு ஒரு கனவு கண்டு விழித்தது போலவே இருந்தது. என்னை விட்டுவிடுவார்கள் என்று நான் நம்பவேயில்லை.

எப்பொழுதும்; வேகமோ உணர்ச்சிவயப் படலோ சில இடத்தில் அத்தனை பயனைத் தருவதில்லை. இங்கும், அவர்களிடத்திலும், அது தான் நடந்தது. சற்று யோசித்து என் கடவுச் சீட்டில் என்று நான் இந்தியா போனேன். எப்போது மீண்டும் லண்டன் சென்றேன். குவைத் இதற்கு முன் சென்றுள்ளேனா, இல்லையா ஒரு விவரமும் பார்க்கத் தோணவில்லை அவர்களுக்கு.

ஒரு சின்ன குழந்தையிடம் இப்படி நடந்தது என்று சொன்னாலும், ஏன் நான் குவைத்திலிருந்துவிட்டு ஊர் சென்றிருக்க கூடாது, பிறகு லண்டன் போயிருக்கக் கூடாது’ என்றெல்லாம் யோசித்து விட்டிருக்கக் கூடும். இவர்களும் அதை யோசித்து என் காவுச் சீட்டினைப் பார்த்திருந்தால் நான் தான் அந்த “காதம்பரி” என்பது மிக தெளிவாகியிருக்கும். அந்த புத்தகத்தை எழுதியது நான் தானென்று அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. இதலாம் தான் கடவுள் செயல் போலும்.

அறிவாளிகள் தவறு செய்வதும், முட்டாள் தெளிந்துவிடுவதும் கூட சிலநேரம் யதார்த்தமாகவே நடந்துவிடுகிறது.

அதற்குள் வெஇருந்து மீத பயணிகளும் விமானத்தினுள்ளே வர ஒரே சலசலப்பாக இருந்தது எனக்கு. ஆங்காங்கே தன் இருக்கை பார்த்தும், பொதிகளை இங்குமங்கு மாற்றி வைத்துக்கொண்டும் இருந்தனர் பிற பயணிகள்.

நான்  ஒரு பெருமூச்சு விட்டவனாய் அமைதியாக என் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். அந்த பின்னாளிருந்து வந்து தலையில் தட்டிய ஆர்மி குபீரென நினைவிற்கு வந்தான்.

அதை யோசிக்க வேண்டாமென மாற்றி யோசித்தேன். மறுமுறை அந்த துப்பாக்கியால் குத்திய ஆர்மியும் நினைவிற்கு வந்தான். உயிர்போனால் போகட்டுமென திருப்பி யடித்திருப்பேன் தான், நான் தானடா “காதம்பரி” என் தங்கையின் பெயரையே புனைப் பெயரை வைத்து எழுதுகிறேன், என்னத்தை கிழித்து விடுவாய், அதிகமாக செய்வதெனில் சுடுவாய்’ அவ்வளவு தானே சுடு!!’ என்று கேட்டிருப்பேன் தான். ஆனால; எனக்கு என் சுய மானத்தை விட, எனக்கு நான் படும் என் அசிங்கத்தை விட; என் தேசம் பெரிதாகப் பட்டது. என் மக்கள் பெரிதாகப் பட்டார்கள்.

சட்டென கொண்டுவிடும் கோபத்தை விட, அமைதி காத்து சாதிக்கும் வல்லமை ஒரு வித்தை. மிச்சமிருக்கும் என் கடமைகளை முடிக்க அந்த வித்தை எனக்கு சரியெனப் பட்டது.

மேகநாதன் போல் இன்னும் நிறைய பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள்; அவர்களிடம் அவருக்கு சொன்ன விவரத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நூலிழையிலான நேரத்தில் மின்னலென வெட்டியது அந்த எண்ணம்.

என் உறவுகள் கொத்து கொத்தாய் தூக்கிப் போட்டு பிணமாக எரித்த கோர சம்பவங்களை, ஒரு தேசம் எனும் பெயரில் மறைந்துக் கொண்டு இன்னொரு இனத்தையே அழிக்க செய்த மோசடிகளை இதுபோல் என் புத்தகம் வாயிலாக பதிவு செய்திடல் வேண்டும் எனும் எண்ணம் எனை பொறுமை இழக்காமல் என் கைகளை கட்டிப் போட்டது.

உயிரை கொடுத்த என் உறவுகளுக்கு மத்தியில், ஆண்டாண்டு காலமாய் மாய்ந்த  என் மாவீரர்களுக்கு மத்தியில்; அவன் தலையில் தட்டியது ஒன்றும் எனை பேரவுமானத்திற்குள் தள்ளிவிடாது.

காலம் ஓர் தினம், திரும்பி என் இனத்தின் வீழ்ச்சிக்கான பதிலை சொல்லாமலா போகும்? அன்று எனக்குள்ளே நான் கர்வப் பட்டுக் கொள்வேன்’ என்று நினைத்துக் கொண்டே இருக்கையில்; அந்த வலியும், திருப்பி அவனை பதிலுக்கு அடிக்க இயலா சுயமானமும் கண்ணீராக கரைந்து சூடாக என் கன்னங்களில் வழிந்தது. கண்களை இன்னும் இறுக்கி மூடிக் கொண்டேன்.

ஒரு விமானப் பணிப்பெண் வந்து அழைத்தாள். விமாணம் புறப்பட உள்ளது என்று சொல்லி நேராக அமரும் படி கேட்டுக் கொண்டார். நிமிர்ந்து அமர்ந்தேன். “ஏதேனும் இயலாமையா? உதவிகள் ஏதேனும் வேண்டுமா” என்றாள்? அதலாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, மொத்தம் நீங்கள் எத்தனை பணிப்பெண்கள் இந்த விமானத்தில் உள்ளீர்கள் என்றேன், அவளிடம்.

அவள்; ஏன் என்று வினவி; பின் சற்று நிதானித்து, எட்டு பேர் வரை உள்ளோம் என்றார். எல்லோருமே தமிழா என்றேன். இல்லை இல்லை; எல்லோருமே சிங்களம் என்றார் ஆங்கிலத்தில். அப்படியா!! நல்லது என்று சிரித்துக் கொண்டேன். ஏன் இதலாம் கேட்கிறாய் என்றாள் அவள். இல்லை தெரிந்துக் கொள்ளத் தான் கேட்டேன்’ என்று சொல்ல – சிரித்துக் கொண்டே போனார் அந்த சகோதரி.

எனக்கு உள்ளே ஈட்டி போல இறங்கியது, அந்த ஓரவஞ்சக அமிலம். இலங்கையில் நடக்கும்  ஒரு இன அழிப்பின் தந்திரம் இங்கிருந்தும் புரியவந்தது. சரி, தமிழில் ஏதேனும் ஒரு வார்த்தையேனும் சொல்கிறார்களா என்று பார்த்தேன்; ஒருவள் தமிழுக்கு பதில் டமிலில் ஏதோ பயிற்சி எடுத்துக் கொண்டு பேசுவது போல் ‘வண்கம்’ என்று சொல்லிவிட்டு அதே பாவனையில் பேசினாள்;

பொறுமையே இல்லை எனக்கு. முதுகில் அடிக்கும் கோழைகள்; குள்ள நரிகள்; பத்து பேரில் ஒரு தமிழச்சிக்கு வேலை கொடுத்தாலென்ன விமானம் நொறுங்கி வீழ்ந்துவிடுமா’ என்றேன் உணர்ச்சி அடக்கமாட்டாமல்.

என்னருகில் அமர்திருந்த சகோதரி ஒருவர் ‘விமானம் எல்லாம் நொறுங்காது, தமிழராகிய நாம் தமிழராக அடையாள பட்டுப் போவோமே என்றாள்.

நான் தமிழில் பேசிய ஒரு பெண் குரல் கேட்டு மகிழ்வுற்றவானாக அவரைப் பார்த்து ‘நீங்கள் தமிழா’ என்றேன்.

“ஆம்”

“எந்த ஊர் ஈழமா?”

“ஆம்”

“ஈழத்தில் எங்கே?”

“கிளிநொச்சியை சேர்ந்தவள்”

“கிளிநோச்சியா?” சற்று சத்தமாக கேட்டுவிட

“சத்தம் போடாதீர்கள். நானே தப்பித்து செல்பவள்” என்றார் அவர்

எனக்குப் புரியவில்லை. என்னாச்சு எங்கிருந்து என்று சந்தேகப் பார்வையோடு அவர்பக்கம் திரும்ப. விமானம் மேலே ஏறி நடுவானத்தைப் பிடித்து பறக்கத் துவங்கியது.

பணிப்பெண் ஒருத்தியும் ஒரு ஆடவருமாக வந்து எங்கள் அருகில் நின்று தள்ளுவண்டியினுள் இருந்து உணவினை தட்டில் வைத்து சிரித்துக் கொண்டே கொடுத்தனர். அவள் சைவம் பெற்றுக் கொண்டாள், நானும் எனக்குத் தந்த அசைவத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு சைவம் போதுமென்றேன்.

அவள் அந்த உணவுத் தட்டினை வாங்கி வெறுமனே வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தால். எனக்கோ; நேற்று மாலையிலிருந்தே  ஒன்றும் கழித்திடாத மயக்கம். இருந்தாலும் நான் மட்டும் தனியாக உண்பதற்கு நெருடலாக இருக்க; ஏன் நீங்கள் சாப்பிட வில்லையா’ என்றேன்

“சிங்களன் கையில் தண்ணி வாங்கிக் குடிப்பதை விட நானென் கழுத்தை அறுத்துக் கொண்டு சாவேன்” என்றாள். அவளின் வீரியம் என்னை கலவரப் படுத்தியது. “இதை நான் குடித்தால் என் மண்ணுக்காக மாய்ந்த எம் வீரர்களுக்கு பாவம் தான் சேரும்” என்றாள்.

“அப்போ நீங்கள் யார்?” என்றேன்

என் மண்ணிற்காக செத்த மாவீரர்களுக்கு மத்தியில்; உயிரை காப்பாற்றிக் கொள்ள, கல்ல கடவுச் சீட்டில் நாடு கடந்துப் போகும் ஒரு கோழை” என்றாள் அவள்.

“என்னிடம் சொல்கிறீர்களே நான் யாரிடமேனும் சொல்லிவிட்டால்?” என்றேன்.

உன்னை கொன்றுவிட்டு பிறகு நானும் செத்துப் போவேன் என்றாள். சற்றும் யோசிக்காமல்..
——————————————————————————————–
தொடரும்..

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை – 8)

இதற்கு முன்..

“பிரிட்டீஷ்காரனுங்க எப்பவுமே ஒரு இடத்தோட வாழ்ந்தோமா இருந்தோமான்னு போக மாட்டானுங்க. அப்பல்லாம், நாடு புடிக்க அலையிறதே அவனுங்களுக்கு வேலை. அதில்லாம, அவனுங்க நாட்டுல தப்பு பண்ணினா(ல்), தண்டிக்க அமெரிக்கா என்கிற குடியேற்றப் பகுதியில் போட்டு தண்டிக்கிறது தான் அப்போதைய அவனுங்க வழக்கமா இருந்துது”

“அமெரிக்காவுல போட்டா!!!?”

“ஆமாம், அமெரிக்காவுல தான்”

“அமெரிக்காவுக்கும் கதை இருக்கா?”

“நம்ம தெருவுக்கு பேரு ‘முனியப்பன் தெரு’வுன்னு வைத்ததற்குக் கூட ஒரு கதை இருக்கும். நாம் தான் ஆராய்வதுமில்லை. வரலாற்றை ஆராய்ந்து தேடி படித்து நம்மை நாம் முழுமையாய் தெரிந்துக் கொள்வதுமில்லை”

“சரி அமெரிக்கா பெரிய கதையா? உன் கூட பேசி பேசி நேரம் போனதே தெரியலையேப்பா” இருவரும் பேசி பேசியே மதியம் வரை கடந்திருந்தார்கள். நடுவில் மேகநாதன் அண்ணனிடம் நாளை சத்யா புறப்படுவதற்கான விமானப் பயணச் சீட்டு கொண்டுவந்து கொடுக்கப் பட்டது.

இருவரும் பேசிக் கொண்டே நடந்துச் சென்று அருகாமையில் உணவகம் ஒன்றில் உணவுண்டார்கள். சாப்பிட்டுவிட்டு வந்து மீண்டும் அதே அறையில் ஏசி சரியாக பணி செய்யவில்லை என்று திட்டிக் கொண்டே மின்விசிறியின் வேகத்தினை அதிகப் படுத்திக் கொண்டு அமர்ந்துக் கொண்டார்கள். சத்யா அமெரிக்கா பற்றி சொல்லத் துவங்கினான்.

“அது ஒரு உருவாக்கப்பட்டு பின் விரிவு படுத்தப் பட்ட ஐம்பது மாநிலங்களின்  கூட்டணி தேசம்ண்ணே. முதலில், நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் பன்னிரெண்டாயிரம் ஆசிய மக்கள் சென்று வாழ்ந்த இடம் அது.

பின் பல நாட்டு மக்களின் குடியேற்றத்திற்கு  பிறகு, ஜெர்மனியின் வரைபட நிபுணரான மார்டின் வால்ட்ஸ்முல்லர் என்பவரால்; மேற்கத்திய அரைக்கோள நிலப்பகுதிக்கு ‘இத்தாலிய ஆய்வுப் பயணியாக வந்தவரும், வரைபட நிபுணருமான அமெரிக்கோ வெஸ்புகியின்‘ பெயரில் “அமெரிக்கா” எனப் பெயரிடப் பட்டது. பிறகு அது வளர்ந்து பெரிய அமெரிக்கக் கண்டமாக அறிவிக்கப்பட்டது என்பதெல்லாம் வேறு நிறைய பெரிய கதை.

இருப்பினும், அப்போதைக்கு அங்கே, குறைந்தளவே மக்கள் வாழ்ந்து வர, அவர்களோடு மேலும், ஐம்பதாயிரம் குற்றவாளிகளை தண்டிப்பதற்காக, பிரிட்டீஷிலிருந்து கொண்டுபோய் அமெரிக்காவில் சிறைவைத்து, அவ்விடத்தினை ஒரு தவறு செய்பவர்களை நாடுகடத்தித் தண்டிக்கப் பயன்படுத்தும் அடிமைகளின் இடமாகவே வைத்திருந்தார்கள் பிரிட்டீஷ் காரர்கள்.

அதேப் போல இந்தியாவுல தப்பு பண்ணா தண்டிக்கவும், தண்டிக்கையில யாருமே வந்து என்னன்னு கேட்காத மாதிரியும் ஓரிடம் தேவைப் பட்டதாகக் கருதி பிரிட்டீசாரால் தேர்ந்தெடுக்கப் பட்ட தீவு தான் அந்தமான்”

“அதுசரி, அப்போ அப்படி தான் அந்தமான் வந்துதா”

“அப்படி பயன்படுத்தப் பட்டது”

“அமெரிக்கா கூட அவர்கள் உருவாக்கியது தானா?

“அவர்கள் உருவாக்கியது கிடையாது, பிரித்தானியர்களால் நாடுகடத்தப் பட்ட குற்றவாளிகள் அங்கே விடப்பட்டு, அடிமைகளாக வைத்து ஆளப் பட்ட இடம். பின் பல குடியேற்றங்களுக்குப் பிறகு; தன்னை ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள்’ என்று தன் ஒற்றுமையாலும், உழைப்பாலும், முன்னேற்றத்தாலும் அறிவித்துக் கொள்ளுமளவிற்கு வளந்துப் போனது அமெரிக்கா”

“ஓ… ஹோ…”

“அந்த உத்தியில தான் பெரிய பெரிய குற்றவாளிகளை யெல்லாம் இன்றும் அந்தமான் ஜெயிலுக்கு மாத்துவாங்க. இந்த அந்தமான் பிரித்தானியர்களால் எப்படி இதற்கென கவரப் பட்டதோ; அது போல, அவனை துறைமுகம் சார்ந்தும் அழகு சார்ந்தும் மிகவும் கவர்ந்த இடம் ‘திரிகோணமலைப் பகுதியாகும். இந்த திரிகோணமலை நம்ம பாரம்பரியத் தமிழர் வாழ்ந்த  பகுதியில ஒன்று.

உலகின் நிறைய நாடுகளை, தனக்கு கீழாக வைத்திருந்த பிரிட்டீசாரின் பல நாடுகளுக்கு மத்தியில்; இந்தியா ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது வெள்ளையனுக்கு. எனவே,  எங்க இலங்கையை சும்மாவிட்டா அது வழியா வந்து பிரெஞ்சு காரங்க இந்தியாவை கைப்பற்றுவாங்களோன்னு பயந்து டச்சுக் காரர்களிடமிருந்த இலங்கையையும் அவனே பிடித்துக் கொண்டான்.

அதற்கு மிக முக்கிய காரணமாக; இலங்கையில் இருந்த அந்த திரிகோணமலை துறைமுகமும், அந்த திரிகோணமலை ஒரு பூலோக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப் பெற்றதுமாக இருந்தது.

பின் கண்டி மலை நாட்டைக் கையகப்படுத்தி இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து, மொத்த இலங்கையையே முழுதாகப் பிடித்து ஆளத் துவங்கினான்.

அவனை பொறுத்த வரை இலங்கை வேறில்லை, இந்தியா வேறில்லை, எல்லாம் தனக்குக் கீழான அடிமை பிரதேசங்கள், அவ்வளவு தான்.

அப்பவும், தமிழன் ஒரு புறம், சிங்களர் ஒரு புறம்னு வாழ்ந்து வந்த நிலையில; இலங்கை முழுதும் ஆளத் தொடங்கிய வெள்ளையன் அவனுக்கு சாதகமா எல்லோரையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா எண்ணி ஒட்டுமொத்தத்தையும் சிங்கள தேசம்னு அறிவித்துவிட்டு போயிட்டான்.

அவன் கொடுமைகளிலிருந்து விடுபடல் ஒன்றே போதுமென்று எண்ணிய தமிழ் மக்களும்; சிங்களன் இத்தனை பெரிய கொடுங்கோளனாக வருவான் என்று எள்ளளவும் எண்ணாது விடுதலை ஒன்று கிடைத்தால் போதுமென்றே காத்திருந்து; பின் கிடைத்த விடுதலையை சிங்களனிடம் தொலைக்க வேண்டியதாகிப் போனதெல்லாம் எழுதா விதியாகிவிட்டதென்பது ‘நாம் நாணப் படவேண்டிய விடயத்தில் ஒன்று.

இதற்கு முன்னதாக, தன் ராஜ்யத்தின் கீழுள்ள இந்திய மக்கள்வேறு (இருப்பதையெல்லாம் வந்தேறிகள் சூறையாடிக் கொண்டதால்) ஆங்காங்கே வருமையில் கிடப்பதாய் எண்ணி, அதையெடுத்து இங்கே விட்டலாவது நல்ல வேலை பார்க்க ஆளாகுமே என்று கணக்கிட்டு; 1827 ஆம் ஆண்டு ‘எட்வட் பர்ன்ஸ்’ற ஆங்கில கவர்னர் ஒருவனால், கண்டி மலைப் பிரதேசத்தில் காபித் தோட்டங்களை நிர்மாணித்து; அவற்றில் வேலை செய்வதற்காக சென்னை மாகாணத்தில் இருந்து 300 தொழிலாளர்கள் வரவழைக்கப் பட்டார்கள். இந்த எண்ணிக்கை தான் காலப் போக்கில் பல மடங்காகப் பெருகிப் போனது.

காரணம், அவர்களின்  உழைப்பில் திகைத்துப் போய் வாயடைந்துப் போன வெள்ளைக்காரன் பிறகு பாலம் கட்டுவதிலிருந்து, சாலை அமைப்பது வரைக்கும்; நம்ம தமிழரை வைத்துத் தான் செய்திருக்கிறான். அதோடு விட்டானான்னா; அதுவும் இல்லைன்னு தான் சொல்லுது வரலாறு”

“அதுசரி..” அவர் புதிதாக கேட்கும் கதைபோல கேட்டுக் கொண்டிருந்தார்.

“முதலில் காப்பி தோட்டம் அமைத்து, பிறகு; காபிக்கு பூச்சி பிடிக்கும் ஆபத்து வருவதைக் கண்டு, காப்பி தோட்டத்தினை அப்படியே விட்டுவிட்டு தேயிலை தொழிலை ஆரம்பித்து, அதை விருத்தி செய்ய இன்னொரு புறம் மீண்டும் தமிழர்களை போட்டுக் குவித்து, அடர்ந்து பயங்கரமாக வளர்ந்திருந்த காடுகளையெல்லாம் அழித்து, அழகான பசுமை பிரதேசங்களாக உருவாக்கின, தமிழர்களால உருவான, தமிழனின் ரத்தம் அன்றே வியர்வையாய் சிந்தி ஊறிய மண் அது ஈழம்”

“எந்த வருசத்துல.. தம்பி”

“வருசம்லாம் சொன்னா நிறைய சொல்லனும்ணே”

“தெரிஞ்சா சும்மா சொல்லுங்களேன், கேட்டு வைப்போமே”

“எனக்கு தெரிந்த வரையும், படித்தது வரையும் சொல்றேன், மீதியை நீங்கதான் ஆராய்ந்து சரிபார்த்துக் கொள்ளனும் சரியா..”

“எண்ணத்த பாக்க, அதான் இவ்வளோ விவரமா சொல்லுதியலே, விவரமா தானே படிச்சிருப்பிய, சும்மா சொல்லுங்க”

“கி.மூ 500க்கும் முன்னால் விஜயன்ற இளவரசன் நடத்தைக் கேடு காரணமாக தனது பதினெட்டாவது வயதில் நாடு கடத்தப்பட்டு, எழுநூறு பேரோட இலங்கையின் தம்பலகாமத்திற்கு வந்திருக்கிறான். (அவ்விடம் தங்கப்ப்பண்ணி என்றும் கூறப்படுகிறது. (இப்போதய அமைப்பு படி அவ்விடங்கள் மன்னார், நேகோம்போ, புத்தளம் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்)

அங்கனம் வந்தவன், அங்கு வசித்து வந்த இயக்கர் இனத்தின் தலைவியான குவேனியை மனம் முடித்து அவ்விடத்தின் தலைவனாகி, பிறகு பதினைந்து வருடம் கழித்து பாண்டிய மன்னனின் இளவரசியை மணந்து இலங்கையின் மன்னனாக விளங்கியதாக மகாவம்சமும் சில வரலாற்று குறிப்புகளும் கூறுகின்றன. .

அவன் அங்கு மன்னனானதோடு அல்லாமல் அவனோடு வந்து குடியேறிய எழுநூறு பேரும், அங்கு வசித்துவந்த தமிழ் பெண்களையே மணம் முடித்து, பிறகு அவர்களால் ஒரு கலப்பு சமூகம் உருவாகி, வளர்ந்து, அவ்வம்சாவழிகளால் புத்தம் பரப்பப் பட்டு, சிங்களம் உருவாக்கினதா சிங்கள ஆசிரியர்களே சொல்வதுண்டு.

பாளி மொழி பேசும் மகாவம்சத்தினருக்கு புத்தம் பரப்ப வேண்டி இங்ஙனம் ஒரு தனி இனம் தேவைப்பட, அவர்களின் ஆதரவின் பெயரில் தமிழர்களிடமிருந்தே தனித்த ஒரு இனமாக சிங்களர்கள் அடையாளப் படுத்தப் பட்டு மேன்மைபடுத்தவும் பட்டனர்.

அப்போதைய தேச அமைப்பு படி, மகத நாடும், கலிங்க நாடும் அருகாமை தேசங்கள். மாகத நாடு என்பது வங்கத்து ஒரு பகுதியையும் சேர்த்து பீகாரோடு அமைந்திருந்த இதியாவின் பல சிறப்புக்களை கொண்ட ஒரு பெரிய தேசமாகும்.

கலிங்க நாடு என்பதுஒரிஸ்ஸா ஆந்திராவோடு சேர்ந்து வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து கோதாவரி வரையிலும், கிழக்கு மேற்காக வங்காள விரிகுடாவிலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த வளம் பொருந்திய தேசமாகும். அதுமட்டுமின்றி வலிமை மிக்க கடற்படை கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ, பாலி, சுமாத்திரா மற்றும் ஜாவா ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப படுகிறது.

இதன் மூலமாக சிலர் விஜயன், வங்கத்தை சேர்ந்தவன் என்றும் சிலர் ஒரிசாவை சேர்ந்தவன் என்றும் சிலர் வேறு சிலவாறும் சொல்வதுண்டு. ஆனால், உண்மையில் நடந்ததாக மகாவம்சம் விஜயன் பற்றிய வரலாற்றுக் கதை ஒன்றினை கூறுகிறது.

அது, வங்கதேசத்து மன்னன் ‘வங்கா‘ என்பவன் கலிங்கதேசத்தின் மன்னனின் மகளை மணந்ததாகவும்,  அவனுக்குப் பிறந்த சுபதேவி உலகமகா அழகும் அதேநேரம் காமரசமும் கொண்டவளென்றும், அவள் விதியின் வசப்படி சிங்கத்துடன் சேர்ந்து”

“சிங்கத்துத்தனா?????!!!”

“இவ்வளவு பெரிய ஆச்சர்ய குறி போட்டால் அதன் கிளை கதைகள் போகும் நேரம் பத்தாதாது”

“இல்லை இது கதையா ? அல்லது நடந்த வரலாறா?”

“இப்படி கேட்டால் நானும் பதில் சொல்ல இயலாது. இப்படி நடந்ததாக சிங்கள வரலாற்று நூல் தெரிவிக்கிறதாம். சிங்கள வரலாறு பகிர இக்கதைகள் வருகின்றன. இந்த வாங்க மன்னனுக்கு ஏற்கனவே சுபதேவி பிறந்த போதே ஜோதிடர்கள் கணித்து நம் தேசத்தின் வரலாற்றில் இப்படி ஒரு சோகம் இருக்கிறதென்று சொல்லி விடுகிறார்களாம்.

அதாவது, இக்குழந்தை மிக அழகாகவும் அதே நேரம் காமவிரோதங்கள் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்று கூற, அவர் எத்தனை அடக்கியும் அவள் ஒரு ஆண் பிறப்பினை போல தன்னை ஒரு வீரனாக அடையாளம் காட்டிக் கொள்பவளாகவும் அவள் விருப்பத்திற்கு இருப்பவளுமாகவே இருக்க வங்க மன்னன் அவளை ஒதுக்கு புறமான ஒரு காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைக்க –

அங்கே, ஓர்தினம் எதிரி நாட்டிலிருந்து தன் நாடு புடிக்க வருபவர்களை மடக்கி சண்டையிடப் போகும் வீரர்கள் செல்வதை பார்க்கிறாள், ஆர்வத்தில் தானும் கலந்துக் கொள்கிறாள். அப்படி கலந்து போகும் வழியில் ஒரு பெரிய காட்டுச்சிங்கம் அவர்களை வழி மடக்கி கொள்ளப் பார்க்க சுபதேவி அந்த சிங்கத்தோடு சண்டையிட்டு அடக்கி தன்வசப் படுத்தி போர்வீரர்களை விடுவிக்கிறாள்.

பின் அந்த சிங்கத்தோடு சேர்ந்து நெருங்கி கருவுற்றும் போக, அவளுக்கு சிங்கபாபு மற்றும் சிங்கஷிவாளி என்று இரண்டு ஆண்பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். சிங்க அடையாளம் கொண்ட அக்குழந்தைகளோடு அவளும் சேர்ந்து சிறிது காலம் அங்கிருந்த ஒரு குகைக்குள்ளேயே குடும்பமாக வாழ்கிறார்கள்.

ஆனால் சிங்க மற்றும் மனித உடலமைப்புக் கொண்ட அக்குழந்தைகள் வளர்ந்து பிற சிங்கங்களின் தொல்லைக்கு ஆட்பட, சுபதேவி அவர்களை அந்த குகையிலிருந்து அழைத்துக் கொண்டு வேறு இடத்திற்கு நகர்கிறாள். அங்கனம் சிறிது சிறிதாக நகர்ந்து ஒரு வாழ்விடத்தினை அமைக்கிறார்கள். அவ்வாறான ஓர் சமயம், சிங்கபாபு தன் தந்தையை கொன்றுவிட்டு தங்கை சிங்கஷிவாளியை மணக்கிறான்.

அவளோடு அவன் வாழ்ந்து பின்னால் விருத்தி செய்யப்பட்ட இடம் சிங்கூர் என்றும் சிங் பூர் என்றும் விளங்கி பின் சிங்கப்பூர் ஆனது. (அதாவது சிங்கம் வாழ்ந்த இடம் என்பது அர்த்தம்)

சிங்கஷிவாளிக்கு இரண்டு இரட்டையர்கள் பிறக்கிறார்கள். அவர்களில் மூத்தவன் விஜயன். இளையவன் சுமித்தா.

மூத்தவனான விஜயன் பேய்களிடம் தொடர்பு கொண்டவனாகவும் ஏக அட்டகாசங்கள் செய்பவனாகவும் இருக்க அதை பொறுக்காத மன்னன சிங்கபாபுவால் அவனும் அவனோடு ஏழுநூறு பேருமாக நாடு கடத்தப் படுகிறான்.

ஆக, வங்கத்து தேசத்தின் ஒரு மிகுதி மகத நாட்டோடு சேர்ந்திருந்தமையாலும், மகத நாடென்பது இப்போதைய பீகார் மாநிலம் என்பதாலும், கலிங்கம் ஒரிசாவை உள்ளடக்கியதாலும், களிங்கத்து இளவரசி வழியாக வந்த வம்சத்தை சேர்ந்தவன் என்பதாலும், விஜயனை சிலர் பிகாரிலிருந்து வந்தானென்றும், சிலர் ஒரிஸ்ஸாவிலிருந்து வந்தானென்றும், சிலர் வங்கத்து இளவரசன் விஜயனென்றும் வேறு வேறாக கூறுவதுண்டு.

“ஆக இலங்கையை பிடித்துக் கொண்டு இது என் நாடு, எனது மண்; என்று சொல்லும் சிங்களர்கள் வந்தேறி குடிகள் தான் இல்லையா சத்யா?”

“அதிலென்னண்ணே சந்தேகம். வந்தவர்கள் தானே இப்போ நம்மை ஆள்கிறார்கள். அதை சற்று விரிவா பிறகு பேசுவோம், ஆகமொத்தம், விஜயன்ற மன்னன் நம்ம மண்ணில் வந்து கி.மு 543-இல் துவங்கி கி.மு 504 வரை, 38 ஆண்டுகள் முழுதாக ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

அதுக்கப்புறம் அசோகா சக்ரவர்தியோட மகன் மகிந்தன் எனும் மகிந்த தேரரும் அவனுக்குப் பின்  வந்த அவனின் சகோதரி சங்கமித்தையும் சேர்ந்து புத்தம் பரப்பினதாவும், அதற்கு முன்னரே அங்கு நாகர் இயக்கர்னு நான் முன்னம் சொன்னதுபோல நம்ம இனம் அங்கே வாழ்ந்ததாவும் தான் வரலாறு இருக்கு. அதுக்கப்புறமும் கூட நம்ம எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை  44  வருடம் ஆண்டிருக்கிறார்”

“சரி, எல்லாம் சரி தான் ஆனால் கதைய மாத்தீட்டீங்களே!!! முதல்ல வெள்ளைக் காரன் ஆட்சியில தமிழர் சென்னையிலிருந்து போய் அங்கே காடழித்து ஊர் வளர்த்தார்கள் என்று சொன்னீங்களே!!!  அதை முழுசா சொல்லலியே?”

“அதலாம் பெரிய கொடுமைண்ணே. இந்தியாவானாலும் சரி இலங்கையானாலும் சரி இரண்டுமே பிரிட்டிஷாரின் கீழிருந்த காரணத்தினால் எங்கும் எல்லோருமே அடிமைகள் தானே எனும் வருத்தம் எல்லோருக்குமே இருந்தது. யாரையும் யாரும் பிரித்துப் பார்த்துக் கொள்ளவில்லை. அனைவரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குடிமக்கள் எனபதை மட்டுமே கருத்தில் கொண்டு இந்தியாவிலிருந்தும் கண்டிக்குப் புறப்பட்டனர்.

யாரும் செல்லவே இயலாத அடர்காடுகளுக்கு இம்மக்கள் அனுப்பப்பட்டு தன் ரத்தத்தை வியர்வையாக்கி இலங்கையின் பிற்கால ஏற்றுமதி உற்பத்திக்கு தன் உயிரையும் உழைப்பினையும் முதலாக இட்டனர். அவர்களால் செழுமை படுத்தப் பட்ட அந்நிலமே பின்னர் அழகிய மலையகமானது. அதற்கென அவர்கள் கொடுத்த உயிர்களின் என்னிக்கை கணக்கிலடங்காதவை என்கிறது வரலாறு.

1926 -இல் மட்டும் மலையகம் வந்தவர்களில் நூற்றில் நாற்பது சதவிகிதத்தினர் இறந்துபோனதாகவும், 1841-ற்கும் 1849 -ற்கும் இடையில் எழுபதாயிரம் பேர், அதாவது 25 சதவிகிதத்தினர் இறந்துப் போனதாகவும் பத்திரிகை செய்தியொன்றினால் சொல்லப் படுகிறது.

அதன் பொருட்டே; 1837 – இல் 4,000 ஏக்கராக இருந்த காபித் தோட்டத்தின் பரப்பு 1881 இல் 2,56,000 ஏக்கராக வளர்ச்சி கண்டுள்ளது. பின், 1860 இல் தேயிலை பயிரிடுதல் அறிமுகப்படுத்தப்பட்டு 1870 -இல் பூச்சிகள் தாக்கி காபிச் செடிகளெல்லாம் சேதமானதை கருத்தில் கொண்டு அவைகளெல்லாம் தேயிலை தோட்டங்களாக மாற்றப்  பட்டன. அதன் பொருட்டு 1917 இல் தேயிலை உற்பத்தி 4,26,000 ஏக்கராக ஏற்றம் கண்டது.

இப்படி இன்றைய இலங்கையின் முதன்மை உற்பத்தி தொழிலான தேயிலை உற்பத்திக்கு அடி உரமாக தமழரின் உயிரும், பாலம் கட்டுதல், இருப்புப்பாதை மற்றும் சாலைகள் அமைத்தல் என வியர்வை சொட்டுமிடமெல்லாம் தமிழரின் ரத்தம் சொட்டப் பட்டும்; உருவான ஒரு மண்ணில் இன்று சொந்த ஒரு வீட்டிற்கு கூட இடமின்றி, போதிய சுதந்திரத்தோடு வாழ தகுதியற்றுப் போனான் தமிழன் எனில்; சொல்பவரை திருப்பி யடிக்க மாட்டானா தமிழன்????

சொட்டு சொட்டாக உயிரை விட்டு விட்டு காத்து வந்த மண்ணில் தனக்கு உரிமையில்லை என்றால் இல்லை என்றவனை எட்டிச் சுடமாட்டானா தமிழன்?

உலகிற்கு நாகரீகம் போதித்து; வாழ்விற்கு அர்த்தம் சொல்லிக் கொடுத்து, ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முன்னரே கொடி பறக்க வாழ்ந்த இனத்தை பின்னால் வந்தவன் வெளியேறு என்றால்; வெளியேறி விடலாமா தமிழன்?

அவன் ஆத்திரம் பொங்கக் கேட்கிறான். சத்தியாவின் கேள்வியில் எழும் கோபத்திற்கு பதிலற்ற இவ்வுலகின் ஊமைப் பார்வையின் வழியே மேகநாதனும் அமைதியாய் அவனையே பார்க்க; கொடுங்கோபம் வந்தவனாய் தன் சட்டையினை வெடுக்கென தன்னிரு கைகளால் பிய்த்தெரிந்து மார்பை காட்டி பார்த்தியா!! பார்த்தியா!! என்று மார்புகளைக் காட்டிக் கத்த, மார்பில் ‘ஈழம் எம் மூச்சு, ஈழம் எம் தேசம், ஈழம் எம் லட்சியம்’ என்று பச்சை குத்தி எழுதப் பட்டிருந்தது.

மேகநாதன், சற்று அதிர்ச்சியுற்றவராகப் பார்க்க, சடாரென நான்கு பேர் அந்த அறைக்குள் நுழைந்து  மேகனாதனை நோக்கிப் பாய, சத்தியன் சிரித்துக் கொண்டே தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு அங்கிருந்த மேசையின் மீதேறி அமர்ந்து ஹா ஹா என்று கொக்கரித்து அரக்கத் தனமாக சிரிக்க, அந்த நான்கு பேரில் இரண்டு பேர் உடனே பாய்ந்து மேகநாதனைப் பிடித்து ஜன்னல் கம்பிகளின் வழியே கயிறு போட்டு கட்டி விட, மற்ற இரண்டு பேர் எகுறி பாய்ந்து மேகநாதனை சதக் சதக்கென கத்தியினால் குத்தி ரத்தசகதியாக்க, சத்தியன் வானமே அதிரும் அளவிற்கு மீண்டும் சிரிக்கத் துவங்கினான்….
———————————————————————————————-
தொடரும்…

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை – 7)

இதற்கு முன்..

அவர் உணர்வுகளால் தகித்திருந்தார்.

“தலையை எல்லாம் கொடுக்க வேண்டாம்ண்ணே. தலையை பயன்படுத்தனும். அவர்களின் விடிவிற்கு எது சரின்னு பார்க்க ஒரு தலைமையை தேர்ந்தெடுத்து, எந்த அரசியல் நிறமும் சேர்த்துக் கொள்ளாத ஓர் தலைமையின் கீழ் நின்று; அவசியமெனில் எல்லோரும் புறப்படத் தயாராகனும்.

அப்படி ஒரு தலைமை வேண்டுமே முதலில்!! என்று யோசனை வரலாம், வருமெனில்; போகும் நூறு பேரில் ஒருவரை தேர்ந்தெடுப்போம். உடனிருக்கும் ஆயிரம் பேரில் ஒருவரை நம்பி நிற்கவைப்போம். அவர் கீழ் பணியாளனாக நிற்பதற்கு பதிலாக இணையாக நின்று தோள் கொடுப்போம்.

தோள் கொடுப்போர் அவருக்கு நிகராக நின்று சிந்திப்போம், எது நம் தமிழரின் மதிப்பினை கூட்டுமோ, எது நமக்கு நம் செல்வாக்கினை, நிலையான ஒரு பிடி மண்ணினை மீண்டும் பெற்றுத் தருமோ, அடிமை நிலையிலிருந்து எது நம்மை நிலைமாறச் செய்யுமோ, இரண்டாம் பட்ச இடத்தை தூக்கி எறிந்துவிட்டு தனக்கான சுதந்திரத்தோடு வாழ,  எந்த நிலைப்பாடு  நம்மை மாற்றித் தருமோ, வாழ்விக்குமோ, நம் விடுதலைக் காற்றினை சுவாசிக்க எது தக்க வழிவகையின செய்யுமோ; அதற்கென சிந்திக்கனும். புதிய உத்திகளோடு நாம் நம் பழைய இடத்தினை அடையனும். அதற்கு தலை வேணும்ண்ணே”

“அப்போ நாமோ பழையமாதிரி இல்லாம மாறிட்டோம்ங்றியா?”

“கண்டிப்பா. நிறைய இடத்தில் நாம் மாறிவிட்டோம். எத்தனை அந்த மாற்றம் நமக்கு நல்லது செய்கிறது, கெட்டதாக அமைகிறது என்பதை விட, அதனால் நாம் இழந்தவை எத்தனை, என்னென்ன என்று யோசித்தால் கவலை வந்துவிடுகிறது.

எப்போ; வெள்ளைக்காரனின் வாழ்க்கை நமக்கு உயர்வாக பட்டுவிட்டதோ; அன்றிலிருந்தே சிறுமை பட்டுப் போனோம்ண்ணே. ஆங்கிலத்திற்கு ஆசைப் பட்டு தமிழை விற்கும் கயமைத் தனத்தை வேறெந்த இனமும் இத்தனை வேகமாக செய்திருக்காது.

வாட்சை தமிழென்றும், பக்கெட்டை தமிழென்றும், ஷூவை தமிழென்றும், லோன் தமிழென்றும், கரண்ட் தமிழென்றும், லெட்டர் தமிழென்றும், லெப்ட்டும் ரைட்டும் சரியென்று நினைத்தும் வளரும் குழந்தைகளுக்கு கைகடிகாரம், வாளி, பாதுகை, கடன், மின்சாரம், கடிதம், இடது, வலது என்று சொல்லித்தந்தால் என்ன மானம் குறைந்தா  போய்விடும்?

ஆனால், இனி ‘எல்லோரும்’ அப்படி தெரிந்துக் கொள்ளவோ பழக்கி விடவோ தூய தமிழில் பேச தன்னை தயார்படுத்தவோக் கூட மீண்டும் ஒரு பிறப்புதான் தேவை என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுவிட்டதே; அது நம் குறை தானே???

தொலைக்காட்சி நாம் கண்டுபிடிக்கவில்லை போகட்டும், ரேடியோ நாம்கண்டு பிடிக்கவில்லை போகட்டும், கார் பஸ்சு ஏரோபிளேன் நாம் கண்டுபிடிக்கவில்லை போகட்டும், நன்றி வணக்கம் மன்னிப்பு போன்ற சொற்கள் கூட அற்றுப் போன ஓர் இழி பிறப்பா நாம்?

வாட்ச் கட்டு, டீ.வி போடு, போன் கொடு, பக்கெட்ல ஊத்து, அண்ணாக்கு பாய் சொல்லு, மாமாக்கு கிஸ் பண்ணு…னு’ இப்படி ஆங்கிலத்தை கலந்து கலந்து மழலையில் சிரிக்கும் பார்க்கும் தவழும் போதிலிருந்தே நாம் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை கெடுத்துவிட்டால், பிறகு தமிழில் இதற்கெல்லாம் என்ன வார்த்தையென்று எப்படி அவர்களுக்கு சரியாக தெரியவரும்ண்ணே?”

“ஏன்பா அதுக்குன்னு தொலைபேசியில் பேசு, மகிழுந்தில் போ’ கார்மேகம் சூழ்ந்து மழை பெய்யும் நேரம்’ என்றெல்லாம் பேசினால்; கேட்கிறவன் சிரிப்பானேப்பா!!!”

“சிரிக்கிறவனை அடிக்கனும்ண்ணே………., தமிழரிடத்தில் தமிழில் பேசினால் ஒருத்தன் சிரிப்பான்னா அவனை உதைக்கனும். ஆனால் அவனை அடிக்கும் முன்னாடி யோசிக்கவும் செய்ய வேண்டிய கட்டாயவாதிகள் தான் நாமெல்லோரும். காரணம், அவனை அப்படி வளர்த்ததே நாம் தானே???

பிறகு சிரிக்கிறவனை திருத்துவதும் நம் கடமை இல்லையா? சிரிக்கிறவனை சிரிக்கிறவனுக்கு புரியவைத்துவிட்டால் பிறகு சிரிப்பனா?

தெருவுல குடிச்சிட்டு விழுந்து புரளும் போது சிரிக்குதே மக்கள், குடிக்கிறதை விட்டுட்டோமா? அடுத்தவன் ஒரு இனத்தையே அழிக்கிறான், உலகமே தமிழகத்தின் மௌனத்தை எண்ணி சிரித்ததே; பொங்கி எழுந்துட்டோமா? பிறகு இதுக்கு மட்டும் எங்கிருந்துண்ணே வந்தது மானமும் வெட்கமும் அசிங்கமும்???

தமிழன் தமிழில் பேசினால் ஒருத்தன் சிரிச்சான்னா அவன் சிரிக்கட்டும், அவனை முட்டாள் என்று எண்ணிவிட்டு போவோம்ண்ணே.

ஒரு ஆங்கிலம் பேசும்போது இடையில் தமிழில் பேசுறோமா? ஹிந்தி பேசுகையில் இடையில் தமிழில் பெசுறோமா? பிறகு தமிழில் பேசுகையில் ஆங்கிலம் கலந்துப் பேசுவது மட்டும் எப்படி அழகும் நாகரிகமும் ஆனது?

கேட்டால், ஆங்கிலமே பேசலைன்னா உச்சரிப்பு வராதாம். வராதுதான். அதற்குத் தனியே அமர்ந்து ஆங்கிலத்தில் மட்டும் பேசி பயிற்சி எடு. ஏன், தமிழரிடம் தமிழில் பேசிவிட்டு தனியே ஆங்கிலத்தில் பேச அவசியம் ஏற்படும் போது, துல்லியமாக தெளிந்த ஆங்கிலத்தில் பேசு; யார் அதை மறுப்பார். அதைவிடுத்து; தமிழில் ஆங்கிலம் கலந்து பேசிவிட்டு பின் தமிழுக்கே தமிழன் பயிற்சி எடுப்பது என்பது எத்தனைப் பெரிய குறை இல்லையா நமக்கு?

மொழி என்பது முக்கியம்ண்ணே. ஒரு இனத்தின் உயிர், மொழி தான். மொழி தான் நம் அடையாளம். தாய் மொழியை தாய்மொழியாக மட்டுமே கருதனும். தமிழனாகிய என் தாய்மொழி தமிழ் மட்டும்தானேத் தவிர, தமிழும் ஆங்கிலமுமல்ல’ என்று உறுதியினை மனதில் கொண்டு, தமிழரிடத்தில் பேசுகையில் நாம் தமிழில் மட்டுமே பேசவேண்டும்.

ஏன் பேசாவிட்டாலென்ன? தமிழ் பேசாவிட்டால் என்ன சோறா கிடைக்காது என்றெண்ணுகின்றனர் சிலர். சோறு கிடைக்கும், அதைத் தின்னும் நாம் தமிழராய் தின்னமாட்டோம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்று புரியாத வரை; தமிழர் தன்னை ஆதிப் பெருமைக்கு உரிய முதல் மனிதராய் எக்காலத்திலும்  அடையாளப் படுத்திக் கொள்ளப் போவதில்லை.

பல மொழி கற்றவன் பல மனிதனுக்கு சமம் என்பார்கள். வரவேற்போம். ஆயிரம் மொழி கற்போம். அந்தந்த இனத்தவரிடம் அவருடைய மொழியில் பேசுவோம். அதற்கு முன் தமிழரிடத்தில்; தமிழில் பேசுவோம்ண்ணே…

தேங்க்ஸ் என்று பல முறை சொல்லும் இடத்தில் நன்றி ஐயா, நன்றி மணி, நன்றி துரை என்று சொல்லிப் பழகட்டுமே; பற்களா கொட்டிப் போகும்?

‘சாரி’ சொல்லச் சொல்ல சாரி சொல்லத் தயாராகிறான் ஒவ்வொரு தமிழனும். மன்னித்து விடச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள்; செய்த தவறுக்காய் வெட்கி நாணிப் போவீர்கள்.

தவறுகள் திருத்தப் படனும்னா தவறை எண்ணி வெட்கப்படனும் வருந்தனும். தனை திருத்திக் கொள்ள அறிவு மனசை உறுத்தனும். தவறு செய்யக் கூடாதேன்னு உள்ளே உரைக்கனும். அப்படி உரைக்கனும்னா மன்னித்துக் கொள் என்று சொல்லிப் பாருங்கள்.

தவறு நிகழும்போதெல்லாம், மன்னித்துக் கொள் என்றே சொல்லுங்கள். அப்படி ஒவ்வொரு முறை சொல்லும் முன்பும் இனி சொல்லக் கூடாதென்றும் யோசிக்கத் தயாரவீர்கள். அப்படி யோசிக்கும் இடத்திற்கு மொழி நம்மை அழைத்துச் செல்கிறது. தமிழரினம் தமிழராய் தன்னை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டுமெனில், முதலில் நாம் தமிழராய் நம் இன உணர்வோடு பண்பு மாறாது வாழனும்ண்ணே..”

“பண்பு மாறாம வாழனும் தான், ஆனால், எவன்பா வாழறான்?”

“யாரும் இதில் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்தோ அல்லது குற்றம் சொல்லியோப் பயனில்லை. பிறரை கைகாட்டும் முன் தன்னை பற்றி மட்டுமே ஒவ்வொரு தமிழரும் சிந்திக்கவேண்டும். இது ஒரு காலநகர்தலின், வளர்ச்சி வேகத்தின் இடையே இடைசொருகளாய் நிகழ்ந்துவிட்ட குற்றம். ஆனால் அந்த காலநகர்த்தலின் குற்றத்திற்கு நாமும் காரணமானோம் என்பதே வருந்தத் தக்கது.

கடைசியாய் வெள்ளைக்காரன் விட்டுப்போகும் போது எல்லோரையும் இந்தியர்னு சொல்லிப் பிரித்து, தனியே இலங்கைன்னு சொல்லிப் பிரித்துச் சென்றதில்லாமல், அதற்கு முன்னதாகவே; சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட தேசத்தை,  பின் களப்பிரர்கள், களப்பிரர்களுக்குப் பின் பல்லவர்கள்,  பல்லவர்களோடு இடையாக சாளுக்கியர்கள்,  விஜயநகர பேரரசுகள், மொகலாயர்கள், மராட்டியர்கள் இடையே வந்து வந்துப் போன டச்சுக் காரர்கள், போர்ச்சுக் கீசியர்கள், பிரெஞ்சு காரர்கள் என்று கொஞ்சம் கொஞ்சம்னு; அவரவர் பங்குக்கு அவரவர் புகுந்து, நான் தான் நாட்டுக்கு ராசான்னு நடந்து போன பாதையில் விழுந்த நம் வீரதீரத்தால், நேரிட்ட மாற்றங்களால் நமக்குள் புது விதைகள் பல நன்மையையும் தீமையுமாய் இரைக்கப் பட்டுவிட்டது.

ஆனால்; அவைகளிலிருந்தெல்லாம் விலகி நின்று நாம் யார்? எப்படி வாழ்ந்தவர்கள்? எங்கு நிற்கிறோம்? இனி எப்படி வாழப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டிய பிறப்பு நம் தமிழ் பிறப்பில்லையா?

270  வருடம் நம்மை முழுமையாய் அடிமை படுத்தி ஆண்ட வெள்ளைக் காரானிலிருந்து எல்லாருக்குமே சென்னைனா வசதியான துறைமுகம் மட்டிமில்லாம  தமிழ்நாடுன்னா வரப் போக வெல்லம் மாதிரியாச்சே!! இவுங்களுக்கு மத்தியிலெல்லாம் நம்ம பண்பும் வாழ்க்கை முறையும் பேச்சு வழக்கும் சற்று மாறத் தானே செய்யும், ஆனால் முற்றும் மாறிவிடுவது தவறில்லையா?

இதுல சமஸ்கிருத கலப்பு, வடமொழி திணிப்பு, ஆங்கில ஆசைன்னு நம்மள சற்று ஒழுங்கும்; நிறைய நாசமும் பண்ணின சக்திகள் நம்மை கடந்து போகவில்லை, தமிழினத்தை தந்திரமாய் மிதித்துப் போயிருக்கிறது..

இதுல வேற தெலுங்கு, சவ்ராஸ்ட்ரம், மலையாலம்னு எல்லாம் சேர்த்துக் குழப்பி நம்ம அடையாளத்தையே நாம் மெல்ல மெல்ல நமக்கே தெரியாமல்; மொழி, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வின் தேவை, தேடுதல்கள் என எல்லாவற்றிலுமே முறைகேடான மாற்றத்தை சந்திக்கும் நிலைக்கு ஆட்பட்டுவிட்டோம்.

என்ன ஒன்னு, என்னதான் யார் வந்து யார் போனாலும் கடைசியா எப்படியோ தமிழர்கள் வாழும் பகுதியென;  தமிழ்நாடுன்னு ஒரு பேரு மட்டுமே நமக்குன்னு மிச்சப் பட்டிருக்கு. ஆனால், அதற்கு வைக்கப்பபட்ட பெயர் பலகைகள் கூட ஆங்காங்கே ஆங்கிலத்தில் வைக்கப்படுகிறதே; அதை பற்றியேனும் சிந்திக்கவேண்டாமா??!!!

“நம் இனத்தை பற்றிச் சிந்திக்க இவ்வளவு தகவல்களை வைத்துக் கொண்டு வெறும் டிக்கெட் மட்டும் இல்லை இல்லை பயணச் சீட்டினை மட்டும் போட்டுக் கொடுத்து காலத்தை கழித்து விட்டேனே சத்யா? சரிப்பா; வேற யாராவது வரதுக்கு முன்ன “ஸ்ரீலங்கா பத்தி சொல்லேன், வேற கஸ்டமர் யாராவது வந்துடப் போறாக..”

“வேறென்னண்ணே, நாம வாழ்ந்த மண்ணு, அதில்லாம நாம் வியர்வை சிந்தி உருவாக்கின மண்ணு, அதை நாம தான் காக்க வேணும், அதுக்கு என்ன வழின்னு பார்க்கணும்”

“அதென்ன உருவாக்கின மண்ணு? “

“ம்ம்.., அங்கே நாம் உருவாக்கின மண்ணும் இடங்களும் கூட உண்டுண்ணே. அது நாம் வாழ்ந்த இடம் என்பதில்லாம காட்டினை அழித்து உருவாக்கின உழைப்பும் அந்த மண்ணில் உண்டுண்ணே.., இந்த நூற்றாண்டுல சுதந்திரம் வேண்டி ரத்தம் சிந்தினோம், இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் ரத்தத்தை வியர்வையாய், உயிராய் – விட்டு ஊர் அமைத்து, விவசாயம் செய்துக் கொடுத்தோம். எல்லாவற்றையுமே செய்தோம்; இழந்தோம்; இழந்ததை எவனோ அனுபவிக்க, தமிழர் ஏமாளியாயினர்”

“அதை பத்தி சொல்லுங்களேன்…?
—————————————————————————————————————
தொடரும்..

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 6)

இதற்கு முன்..

நான் ஒன்றும் பேசவில்லை.

பேசாமல் அவரையே பார்த்தேன். என் அமைதியில் நான் அடக்கிக்கொள்ளும் கோபத்தினை அவர் கண்டிருப்பார் போல் –

“எனக்கென்ன சீட்டை வாங்கிக் கொடுத்தோமா போனோமான்னு இருக்கனும், ஆனா, தனியா அறைப் போட்டு, ஏசி போட்டு, கூட மேஜைமேல் கூடுதலாக ஒரு மின்விசிறியும் வெச்சு, சுத்துப்பட்டு கிராமத்துல டை கட்டின ஆளா திரியிறேனா, அதான் கோபம் சுருக்குனு வந்துட்டுது”  என்று அவர் தன்னை பொருமைப் படுத்திக்கொண்டு பேசினார்.

என்றாலும் அவர் இத்தனை விளக்கிக் கூறியப் பின்பும் ‘அதென்ன நம் தேசமா? நாம் இந்தியர், அவர்கள் இலங்கையர் தானே? என்றதும், குறிப்பாக அதென்ன நம் தேசமா நாம் வக்காலத்து வாங்க என்றதும்; எனக்கு முகம் பாராத ஒரு கோபம் சுள்ளென வந்தது.

“என் மக்கள் வாழ்ந்த, என் உறவுகள் வாழும் அந்த மண்ணை என் தேசமென்று சொல்லாமல் வேறெப்படிண்ணே சொல்வது?

சரி அதை விடுங்க, உங்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை. இனியும் இது தொடர்ந்தால் எனக்கு மீண்டும் கோபம் தான் வரும். கொழும்பு வழியாவே ஒரு பயணச் சீட்டு இருக்குன்னீங்களே அதையே பதிஞ்சி கொடுங்க நான் போறேன் “

“சரி தம்பி……, அண்ணன்னு சொல்லிப்புட்டு ஏன் இத்தனை கோபப் படுறிய? நான் தெரிஞ்சிக்கத் தானேக் கேட்கிறேன்? அது ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கீங்க, மூச்சுக்கு முன்னூறு தரம் ஈழம் ஈழம்றீங்க, அது நம்ம மக்கள் வாழ்ந்த தேசம்னு சொல்றீங்க, உண்மையாவே தெரிந்துக் கொள்ளனும்னு ஒரு அவா; இலங்கை என்ன நம்ம தேசமா?”

“ஆமாம்னே, இலங்கைன்றது நம்ம மக்கள் வாழ்ந்த இடம்ண்ணே, வரலாற்றுப் படி பார்த்தோம்னா ‘இலங்கைன்னு ஒரு பெயரே அங்கு முன்பு கிடையாது. இலங்கைன்றது இப்போ இருநூறு ஆண்டுகளுக்கு முன் வைத்த பெயர். லங்கா என்றால் தீவு என்று அர்த்தம். அதோடு நம் தமிழர் முறை படி ‘இ’ சேர்த்து இலங்கை ஆனது. மங்களகரம் வேண்டி ஸ்ரீ  சேர்த்து  ஸ்ரீலங்காவாக மாற்றம் கொள்ளப் பட்டது. ஆனால்; ஈழம் என்பதற்கு கிட்டத்தட்ட நான்காயிரத்து முன்னூறு வருடத்திற்கும் மேலான வரலாறு உண்டு.

இப்பவும் வடமேற்குப் பகுதியில் புத்தளத்திலிருந்து, கிழக்கே அம்பாறை மாவட்டம் துவங்கி  வடக்கே யாழ்ப்பாணம் வரை நம்ம மக்கள் தான் இருக்காங்க, நடுவில் புகுத்தி  வளர்க்கப்பட்ட சிங்களந்தான் தன் அரசபலத்தால் நகர்ந்து நகர்ந்து நம்மை ஈழம் விட்டே விரட்டப் பார்க்கிறான்”

“அபப்டியா???!!! அப்போ நீ போறியே கொழும்பு வழி; அதலாம் ஈழம் நாட்டை சேர்ந்தது தானா?”

“இப்போ இருக்குற ஈழம்னு எடுத்துக்குட்டீங்கன்னா கொழும்பு தாண்டி  போகனும்ண்ணே. கொழும்பு, கொழும்பு தாண்டினா கம்பகா, கம்பகா தாண்டி புத்தளம், அப்புறம் அங்கிருந்து ஈழம் துவங்குது”

“அப்படியா!! சரி சரி..”

“ஆனா, மொத்தமாவே நம்ம வளர்ச்சி புடிக்காம சிங்களன் ஒரு பக்கம் ஆடுறான்னா, கூட சேர்ந்து வல்லரசு நாடுகளுமில்ல நிக்குது. எங்க ஈழம்னு ஒரு தனிதேசம் வந்தா நாளை தமிழகமும் அதோடு சேர்ந்துக் கொள்ளுமோ; பிறகு அதை பார்த்து பிற மாநிலங்கள் தனி தேசம் கேட்கத் துவங்குமோன்ற ஒரு அரசியல் நோக்கு இந்தியாவிற்கே உண்டு”

“ஓ… அதனால தான் இந்தியா இலங்கைக்கு, மன்னிக்கணும் சிங்களனுக்கு துணை போவுதா?”

“அதனாலையா இல்லை ஆள்பவர்களுக்கு அதையும் கடந்து சுய விருப்புவெருப்புக்கள் உண்டான்னு கடவுளுக்குத் தான் தெரியும்”

“இவனுங்க என்னத்த நினைத்து என்ன பண்ண? அதது கிடைக்கவேண்டியவர்களுக்கு கிடைக்கும் தம்பி”

“அந்த பயம் தான் அவர்களுக்கு, எங்கு நாம் நம் தேசமென்று ஈழத்தை பிடித்துக் கொண்டு; பிறகு மெல்ல மெல்ல அவர்களை விரட்டி விடுவோமோ எனும் பயம்.

அதற்கு உடன்பட்டுவிடக் கூடாதே நம்ம பகுதியிலிருந்து நம்மைச் சார்ந்த இனத்திலிருந்து உருவான இனமாயிற்றே சிங்கள இனமெனும் சுயநலம் கொண்ட பாகுபாடுகளும்;  உள்ளே நம் இந்திய நாட்டவரான வடநாட்டவர்களுக்கு உண்டு. அதின்றி; எப்படி எல்லாம் நம்மை அழிக்கலாம் என்று கங்கணம் கட்டித் திரியும் நம் அண்டை  மாநிலத்து சதிகாரர்களும் இதற்கு இன அழிப்பிற்கு உடந்தை.

மத்தியில் வீரியமில்லாத, எங்கு அதை கேட்கப் போய்; தன் இருக்கை பறிபோகுமோ என்று பயந்துக் கிடக்கும் நம் அரசியல்வாதிகளின் சுயநலக் கயமைத் தனம்; அவனுக்கு பலகாரம் செய்ய சர்க்கரை கிடைத்தது போல் ஆயிற்று.

உள்ளுக்குள்ள கூட்டுச் சேர்ந்துகே கொண்டு, ஊர் பார்வைக்கு சிங்களன் அடிச்சான்னு வீர வசனங்கள் வேற. எல்லாத்துக்கும் மத்தியில நம்ம உடைமைகளை பிடுங்கிக் கொண்டு; நம்மை அவர்களின் அடிமை போல, இரண்டாம்பட்சமாவே வைத்து அடக்கி ஆளப் பார்க்கிறான் நம்ம பின்னால வந்து நம்ம மண்ணுல புகுந்தவனால் உருவானவன்”

“யாரு?”

“சிங்களன் தான்..”

“இப்பயும் அடிக்கிறானா?”

“இனிமேலாவது கண்களை கொட்ட திறந்து ஈழம் பற்றிய செய்திகளை படிங்கண்ணே. கொத்து கொத்தா அழிக்கிறான்.  ஒரு நாயி நாதி ஏன்னு கேட்கலை. ஊர் உலகமெலாம் தமிழர் இருந்தும் என்ன புண்ணியம்? கேவலமா இருக்குண்ணே நம்மை நினைத்தாலே”

“வாஸ்தவந் தே(ன்)…”

“அதான் எனக்கு கோவம். வெட்டி முறிக்கனும்னு கோபம்”

“பின்ன வராத பின்ன??”

“அப்படி வாடி ஆத்தி; இப்போ புரிதில்ல; அப்போ கூட நாம் இலகிடுவோம்ண்ணே. நம்ம மனசு அதலாம் மன்னிச்சிடும். ஆனா, அவனுங்க போனாப்போகட்டும்; நம்ம மக்களை நாம மறக்கக் கூடாது இல்லையா? அவர்களுக்கு எதாச்சும் நம்மால முடிந்ததை செய்யனுமால்லையா?”

“கண்டிப்பா செய்யணும் தம்பி”

“நம்ம ஈழம்ண்ணே அது, நம்ம தமிழீழம்ணே அது. நம்ம தமிழர் வாழ்ந்த, வாழும் மண்ணுண்ணே அது. அதை எப்படின்னா மீட்கனும்ண்ணே. எல்லாத்தையும் நீ கொண்டு போ; என் பாட்டன்முப்பாட்டன் வாழ்ந்த மண்ணுல, என் சனம் வாழுற இடத்தையாவது மீட்டு; தாடான்னு  பிடிங்கியாவது; தமிழர்னா என்னன்னு அவனுக்கும், தமிழன் வாழ்ந்தா எப்படி வாழ்வான்னு இந்த உலகத்திற்கும் ஆண்டு காட்டனும்ண்ணே.

நினைச்சாலே, சிலதை எல்லாம் படிச்சாலே மனசு உருகிப் போகுதுண்ணே. நம் எத்தனை வீரதீர செயல்களுக்கு முன்னால்; நாகரீகம் போதித்த இனத்திற்குப் பின்னால் வந்தும் இப்படி தலைகுனியும் சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டோம்னா அது நம் பாடம் வழியா நமக்கு இழைக்கப்பட்ட துரோகமன்றி வேறில்லை.

நம்ம வரலாறையே நம்மக் கண்ணுலக் காட்டாம எப்படி நம்மை இருட்டடிப்பு செய்திருக்காங்களேன்னு நினைத்தால்; ரத்தம் பொங்கிக் கொதிக்கிறது.  எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறோம் தெரியுமா நாம?

அந்த மண்ணுல புதைக்கப்பட்டு வருகிற நம்ம வரலாறு எப்படிப் பட்ட வரலாறு தெரியுமா?

எத்தனை நம் தமிழ் மன்னர்களால் அன்றிலிருந்தே ஆளப்  பட்ட மண்ணது தெரியுமா?

பண்டார வன்னியன் வீரசாகசம் புரிந்து வெற்றிகொண்டு மீட்ட மண்ணது. அதற்கும் முன், இராஜேந்திரச் சோழன் போரில் வென்று ஆண்ட மண்ணது. அதற்கும் முன்னால் எல்லாளன்ற மன்னனால ஆளப் பட்டிருக்கு…, அதுக்கும் முன்னாடி நாகர்கள் என்ற பெயரில் தமிழர்களே அங்கு வாழ்ந்திருக்கிறாங்க.

அது தவிர, இயக்கர்கள் என்ற பெயரில் சிங்களரல்லாதவர்களும்  வாழ்ந்து வந்த சமயம் இடையே வந்து அக்குடியில் மணம் முடித்து சிங்களக் குடிக்கு முதல் விதை தூவி; இன்று நான் தான் நாட்டுக்கே அரசன்னு சொன்னா அது தவறு தானே???”

“ஆமாமா…”

“அப்படியே நீ அரசனா கூட இருந்துட்டுப் போ; எங்களை ஏன் சீன்டனும்?”

“வேற??!!!”

“அதுதான்ண்ணே கோபம், அதுக்காக புல்லு பூண்டு வரை எங்கல்லாம் தமிழ் கேட்குதோ அங்கல்லாம் அவன் தந்திரமா வெளிய ஒண்ணு காமிச்சு உள்ளே ஒண்ணு செய்து எல்லாத்தையும் அழிச்சிகிட்டு வரான்..”

“சரி தம்பி, நம்ம தானே முதல்ல இருந்தே இருக்கோம் பிறகு எப்படி நம்ப தேசம் மொத்தமும் அவனுக்கு கைமாறி போச்சி?”

“அது ஒரு காலக் குறைண்ணே. ஒண்ணு வெள்ளைக்காரன் செய்த ஒரு பெரிய அநியாயம்னு சொல்லலாம். அதை பிறகு சொல்றேன். அதுக்கும் முன்னால – நம் நாடு என்னும் இந்தியாவின்’ வடதேசத்தில் இருந்து போன விஜயன்னு ஒருத்தன் போய் உருவாக்கிய இனம் தான் சிங்கள இனம். இதை அவர்களின் மகாவம்சம் எனும் ஒரு பாளி மொழியில் எழுதப் பட்ட வரலாற்று நூலே உறுதி செய்கிறது”

“ஓஹோ.. பிறகு ஏன் இவர்களுக்கு இந்த கொள்ளை அநியாயம்???”

“அதுதான்ண்ணே என் கேள்வியும். நான் அடிக்கடி இப்படி நினைத்துக் கொள்வதுண்டு; ஒருவேளை விஜயன்னு ஒருத்தன் (அப்போதைய மகத நாடான பிகாருக்கும், கலிங்கத்து தேசமான ஒரிஸ்ஸாவுக்கும் இடையேயான வங்கப் பகுதியிலிருந்து) வட இந்தியாவிலிருந்து ஈழத்திற்குப் போகலைன்னா,  கலிங்கத்தை வென்ற பின் பௌத்தத்திற்கு மாறிய அசோக சக்ரவர்த்தியோட மகன் மகிந்தன் அங்க வந்து புத்த மதத்தை பரப்பலைன்னா, புத்தமதத்தை பரப்ப புத்த பிக்குகள் பாளி மொழியில் எழுதிய மகாவம்ச நூலை தனக்கென்று ஒரு தனி இனம் வேண்டிய அவசியம் கருதி சிங்களரை ஆதரித்து உணர்ச்சி ஊட்டி விடலைன்னா; அங்க சிங்களன்னு ஒருத்தன் இன்னைக்கு இருந்திருப்பனா? ன்றது கூட சந்தேகம் தான்”

“காலத்தை யாரால மாத்தமுடியுது தம்பி? அது என்ன நினைக்குதோ அதைத்தானே அதன் விருபத்திற்கு நகற்றிக் கொள்ளுது”

“மனிதர் மட்டுமில்லைண்ணே, இந்த இயற்கை கூட நமக்கு சதிண்ணே.”

“அதெப்படி”

“போரோட அதுவும் ஒண்ணுமா இன்னைக்கு வந்து  அழித்த கடல்கோளிலிருந்து அன்னைக்கு நீரில் மூழ்கிய லெமூரியா கண்டம் வரை, இயற்கையின் சதி தானே?

அன்னைக்கு மட்டும் அந்த லெமூரியா கண்டம்னு ஒண்ணு கடல்ல மூழ்கலைன்னா; இன்று ஈழம் இன்னொரு தேசமா ஆயிருக்குமா?

உலகாளும் ஒரு தமிழ்பெருங்குடியா இருந்திருப்போம்!!”

“அப்படியா?!!!! சரி, அதென்ன லெமூரியா கண்டம்?”

“அது முன்பு இருந்த நாகரிகம் வளர்ந்திருந்த ஒரு கண்டம்ண்ணே.  தமிழர்கள் தான் மூலக் குடியினர் என்பதற்கு உலகின் சான்றாக இல்லாமல் இயற்கையினால் கடல்கோல் வந்து கொண்டுசெல்லப் பட்ட, மூழ்கப் பட்ட ஒரு கண்டம். தற்காலிகமாக அதை அறிந்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதற்கு லெமூரியா கண்டம் என்று பெயர் வைத்துள்ளனர்.

இயற்கையும் அதன் பின் வந்த மனிதர்களும் செய்த சதி; இன்று ஆண்ட தமிழனையே வாழ ஒரு மண்ணின்றி போராட வைத்துவிட்டது  பார்த்தீர்களா?

தன் மக்களை இழந்து, உறவுகளை இழந்து, தாயின்றி தந்தையின்றி, பெற்றக் குழந்தைகள் கூட வயிற்றின் கர்ப்பத்திலேயே கொள்ளப் பட்டு, ஆண்டாண்டு காலமாக  ரத்தம் சிந்தி; உயிர்விட்டு; வருந்த வைத்துவிட்டது பார்த்தீர்களா? அறுபது வருடத்துக்கும் மேலாக எத்தனை உயிர்? எத்தனை குழந்தைகள்; எத்தனை பெண்கள்? எவ்வளவு தியாகம்? எவ்வளவு பொது ஜனம்ண்ணே சாவறது???”

“அப்படியா, அதலாம் நமக்கு தெரியாதே தம்பி………”

“தெரிந்துக் கொள்ளனும்ணே. இதலாம் தெரியாம பேசுறோமே, பெரிய இவரு மாதிரி கிழிக்கிறோமே; மேஜைக்கு கீழ தர நாலு காசு லஞ்சத்துக்கும், அதை தொடர்ந்து கொடுக்கிற அரசியல் இருக்கைக்கும்  மனித மரியாதயினை எல்லாம் விட்டு கீழிறங்கிவந்து; மானங் கேட்டு போய் நிக்கிறோமே; தப்பில்ல அது?”

“இவ்வளவு இருக்குன்னா தப்புதான்.. தம்பி, கண்டிப்பா தப்பு”

“மெல்ல சொல்லாதீங்க; நம்ம இனம் அழிய நாமே அமைதி கொண்டு இப்படி பார்த்துக் கொண்டிருந்தா கண்டிப்பா அது தவறு தான் தவறு தான் தவறு தான்னு உரக்கச் சொல்லுங்க”

“நீங்க இதலாம் படிக்கிறீங்க தெரியுது, நமக்கெங்க?”

“சும்மா படிக்கலைண்ணே; வலி. கொத்து கொத்தா மக்கள் சாவுறதை பார்த்துட்டு வந்த வலி, வலிச்சி, தனியா யாரு இல்லாதப்போ தொலைகாட்சியில் செய்தியில் வருவதை எல்லாம் பார்த்துவிட்டு ஓ’ன்னு கத்தியழுத வலி. தடுக்க முடியாத கோபம். ஒத்தையாப் போயி ‘நிறுத்துங்கடா போரைன்னு’ நிறுத்திட முடியாத வெறுமை. நம்  கையாலாகாத் தனத்தால நாணிக் கிடந்த தருணத்தின் வெம்மை. ஏன் இப்படி நடக்குது, எங்கே தவறு நிகழ்ந்ததுன்னு தேடி தேடி பார்த்ததுல படித்ததுல தெரிந்துகிட்ட கொஞ்சநஞ்ச பாடம்”

“அப்போ, சுத்தி வளச்சி யோசிச்சா;  நம்ம இலங்கையை நமக்கே கொடுக்கணும்றீங்க, அதானே?”

“அவ்வளவு வேணாம்ண்ணே, அங்கிருக்கறதும் அப்பாவி ஜனங்க தானே? நமக்கெதுக்குண்ணே அவன் சுதந்திரம் பறிக்கும் ஆசை எல்லாம்? அவர்களும் மனிதர்கள் தானே? அங்கும் குழந்தையும் பெண்களும் பொதுமக்களும் வாழ்கிறார்கள் தானே? அவர்கள் வாழும் இடத்தில் அவர்கள் வாழ்ந்துக் கொண்டு போகட்டும்.

நம்ம ஆதிகாலத்துல இருந்தே ஆண்ட இடத்தைக் கூட விட்டுட்டு வெளியே வந்து பார்த்தா  தெரியுதுபார்; இப்போ நம் மக்கள் வாழும் மண்ணு, அது நமக்கு கிடைத்தா போதும். ஓடி ஓடி நாட்டை பிடித்து கோடி நட்ட தமிழன், வாழ ஒரு குடிசை தேடி; நாடு நாடா அலைந்து கப்பலில் திருப்பி யனுப்பப் படும் சோகங்கள் நிகழாம இருந்தால் அது போதும்.  நம்ம இடம் மட்டும் நமக்குக் கிடைத்தால் போதும்ண்ணே.

ஆனால், வருத்தம் பார்த்தீங்கன்னா ‘இது யாருக்குமே தெரியவோ புரியவோ மாட்டேங்குது. நாம இப்பக் கூட அவனுடைய இடத்தையா கேட்கிறோம்; நாங்க ஆளும் வரை எங்களுக்கு கொடுங்கடா, நாங்க தனியா வாழ்ந்துக்குறோம்னு தானே கேட்கிறோம்? அதை கொடுக்கமறுத்து நம்மையே அழிக்கவும் பார்த்தால்; தமிழன் சும்மா இருப்பானா?”

“அதெப்படி??”

“அதான் அடிக்கிறான். அதனால தான் சண்டை வருது. அதனாலத் தான் அன்னைக்கும் வந்தது, இன்னைக்கும் நடக்குது, இத்தனை வருடங்களா அதுக்குத் தான் போராடவும் செய்யுறோம்.

இதை, கூட நாம் அபுரிந்துக் கொள்ளாமல் விட்டுவிட்டு தூர நின்று வேடிக்கை பார்க்க அவர்கள் யாரு யாரோ வேற்று மக்களா? போகட்டும்னு விட.

வேற்று மக்கள்னாலே விடமாட்டோம், அப்படிப் பட்ட தமிழர் பரம்பரை நம்ம பரம்பரை. அதுக்கே என்னடா இப்படி பன்றானுவளேன்னு மனசு இளகும், கேட்கும் உரிமை அற்றுப் போயும் தவிக்கும். பிறகு, இவர்கள் நம் குடிகளாயிற்றே; ஏன்டா ன்னு ஒரு குரல் நாம கொடுத்திருந்தா அவனுக்கு இப்படி ஏறிவந்து விஷ குண்டு போட்டு நம்மை அழிக்க; நம் அடையாளங்களை அழிக்க; நம்மை வரலாற்றிலிருந்தே அகற்ற எண்ணம் கொள்வானா?

அதிலும், இன்றைய சூழ்நிலை பார்த்தீங்கன்னா; நாம தொலைத்த சில நம்மோட பழந்தமிழர் அடையாளங்களை கூட மாறாம அதிகபட்சம் வைத்துக் கட்டிக் காப்பதும், அழகிய தமிழ் பேசி தமிழுக்காகவும் தமிழருக்காகவும் வீருகொண்டெழுவதும்; தமிழ்மண்ணின் புகழை உலக அரங்கில் நிறுத்த முயல்வதும் அந்த நம்ம ஈழ மக்கள் தான்ணே.

நாம் இந்தியா எனும் ஒரு  வட்டத்தில் நின்றுக்கொண்டு வெறும் இந்தியராகத் தான் இருக்கிறோம். அவர்கள் தான் இன்னும் தமிழராய், தமிழீழ தேசத்தின் விடுதலைக் காற்றாகத் தன்னையே  தன் தேசத்திற்கென இழந்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் நம்ம பழமை பாரம்பரியங்களை தொலைக்காம பத்திரமா வைத்திருக்க அவுங்க வாழனும்ணே”

“கண்டிப்பா கண்டிப்பாப்பா, கண்டிப்பா வாழனும்பா. அவர்களை அழிய விடக் கூடாது, அவர்களை கொள்ள விடக் கூடாது. அவர்களுக்கு ஏதேனும் செய்யனும் சத்யா….., அதுக்கு என் தலையை கொடுக்கணும்னா கொடுப்பேன்!!!!!!
—————————————————————————————————————
தொடரும்..

நன்றி: விக்கிப்பீடியா மற்றும் பிற இணைய தளங்கள்!!

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்