மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 5)

யிர் பூக்கும் இடத்தில் இதயமும், இதயம் உள்ள இடத்தில் நினைவுகளும், வாழ்வின் நிராசைகளும் நிறைந்து கிடப்பதை தெரியாமல் தான் மீனை பிடிக்கவும் விற்கவும் வாங்கவும் தின்னவும் நாம் மனிதராகியுள்ளோம் போல்.  
 
ஒவ்வொரு மீனின் சுவைக்குள்ளும், கடலின் ஒரு பகுதி கதைகள் அழியப் பட்டுள்ளது என்பதை நாம் அறிய முற்பட்டோமா என்றால் உடனே இல்லை, அதன் சுவையான வாசனை அவைகளை மறைத்துக்கொண்டது எனலாம்.
 
ஒரு மரம் கூட தான் துளிர்ப்பதற்கும் வாடுவதற்கும் ஒரு காரணத்தை கொண்டுள்ளது. தன் உயிர்ப்பை பட்டவர்த்தனமாக காட்டும் மீன்களும் பிற உயிர்களுமா அர்த்தமின்றி பிறந்திருக்கும்? ? ?
 
உண்மையில், ஒரு மரம் பூப்பதற்கும் காய்ப்பதற்கும் கூட காரணம்; மரத்திற்கும் உயிரிருப்பதே என்கின்றனர் முன்னோர். சரி மரமாவது ஒரு மரத்தை வெட்டினால் இன்னொரு மரம் வந்து தடுக்கவோ அல்லது ஐயோ அதை வெட்டுகிறானே பாவி என  சபிக்கவோ, நாமாவது தப்பித்து ஓடி நம்மை காப்பாற்றிக் கொள்வோமென ஓடவோ செய்வதில்லை.
 
அதே ஒரு மீனை பிடிக்க நீரில் கை வைத்தால், கூட்டத்திலிருந்து பிரிந்து ஓடும் பிற மீன்களுக்கு எத்தனை உயிர் பயம் இருக்கவேண்டும்? ஒரு கோழியை கழுத்தறுத்து கீழே எறிந்தால், அது துடித்து துடித்து அடங்குவதற்கு எத்தனை உயிர்பிரியும் வலியை அந்த கோழி அனுபவித்திருக்க வேண்டும்??? ஒரு ஆட்டினை கழுத்தை துண்டமாக வெட்டிவிட துடித்து துடித்து வாழ்வின் துடிப்புகள் அடங்குவதை கால் சூப்பு குடிக்கும் எத்தனை பேர் பார்த்திருப்போம்? வருந்தியிருப்போம்?
 
இப்படி பிற உயிர்களின் உயிர் பறிக்கத் தான், ‘நம் நாக்கில் எச்சில் ஊறுகிறதென  உணர படுவோமானால், மீன்கள் மிச்சப் பட்ட வரலாற்றினை, ‘நாளை வேறு யாராவது எழுத மாட்டார்களா…?
 
ஒவ்வொரு முறை நாம் அவைகளை கொள்ளும் போதும், ஐயோ விட்டுவிடு விட்டுவிடு என்று தன் மொழியில் கதறும் அலறல்; நம் நாக்கை மட்டுமா’ கட்டிப் போட மறுக்கும்? தன் வீட்டில் உள்ள ஒரு குழந்தையை வெட்டி சாப்பிட யாராலாவது சிந்திக்கவாவது செய்வீர்களா??? பிறகு வீட்டில் அல்லது ஏதோ காட்டில் உல்லாசமாய் வாழப் பிறந்த பிற உயிர்களுக்கு தீணியிடவும், வளர்க்கவும், துடிக்க துடிக்க வெட்டவும், தின்னவும், ஏப்பம் விட்டு, ‘பாவம் போச்சென்றும் சொல்ல’ எப்படி நாம் உரிமை பெற்றோம்? 
 
என்னை யாரேனும் பணம் கொடுத்து வாங்கி வளர்த்து கழுத்தறுத்து குழம்பு வைக்கப் போனால் மறுக்க எப்படியெல்லாம் நான் போராடுவேனோ, அப்படித் தானே ஒவ்வொரு கோழியை, ஆட்டினை, மாட்டினை வெட்டும் போதும், அவைகளால் இயன்றளவு அவைகளும் மறுப்பை தெருவிக்கின்றன? பிறகு என்னை வெட்டுவது கொலை; நரபலி. ஆடோ கோழியோ வெட்டித் தின்றால்; பாவம் விட்டொழியுமென்றோ, அதலாம் தவறில்லை  என்றோ ஒரு கண்மூடித் தனமான புரிதலை எந்தப் புள்ளியில் இட்டு நியாயப் படுத்திக் கொள்ளத்  துணிந்தோமோ; அந்தப் புள்ளியிலிருந்தே  நம் பாவங்கள் நம்மையும் கொள்ளப் புறப்பட்டுவிட்டது.
 
ஒரு கன்றுக் குட்டியை தடவி தடவி அன்பு செய்யும் ஒரு மாட்டினையோ, ஒரு ஆட்டினை துரத்தி விளையாடும் இன்னொரு ஆடோ.., கோழிக் குஞ்சுகளை தொடப் போனாலே மயிர் சிலிர்ப்பி குத்தவரும் கோழியோ, ஒன்றன் பின் ஒன்றாக ஓடி கூட்டமாக துள்ளிக் குதித்து விளையாடும் மீன்களோ.. மற்றும் இன்ன பிற உயிர்களும்.. முற்றிலும் உணர்வுகளற்றவை என்று நாமே எப்படி நம் விருப்பத்திற்கு முடிவெடுத்துக் கொண்டோமோ.
 
கேட்டால், நாம் கொன்றுவிடா விட்டால் பல்கி பெருகி vidum என்கிறார்கள். காட்டில் இருக்கும் சிங்கமோ புலியோ பெருகி விடுமென யாரேனும் அடித்துத் திண்ண துணிவீர்களா? காட்டில் வாழும் பாலூட்டி இனத்திற்கெல்லாமென்ன மடியில் யாருமே பால் கறக்க வில்லையே என்று பால் கட்டிக் கொள்கிறதா..?  இயற்க்கை நம்மை படைத்ததை போல் அவைகளும் படைக்கப் பட்டுள்ளன. எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் மனிதனின் சுயநலமே ‘இப்போது மனிதனை வரை கொன்று தின்னவும் முன்னேறி விட்டது.
 
இதலாம் எழுதும் நோக்கம் உடனே உயிர்களை கொள்வதை விட்டு விடுங்கள், நாளையிலிருந்து எதையுமே கொன்று தின்னாதீர்கள் என்று சொல்வதற்கல்ல. அங்ஙனம் தின்பது அத்தனை சரியா என்பதை மட்டும் சிந்தியுங்கள். பிற உயிர்களை கொள்வதை நிறுத்த இயலுமா என யோசியுங்கள். ஒரு எறும்பு கை பட்டு இறந்து விட்டால் கூட வருத்தம் கொள்ளுங்கள்.
 
பிறகு கோழியை கொல்வதும், மீனை அறுப்பதும், ஆடு மாடுகளை வெட்டுவதும் தன்னை யாரோ கொல்வதும் ஒன்றே எனப் புரியலாம். அதன் பிறகு இறைச்சி தின்பதை நிறுத்துவதை பற்றி யோசிப்போம்.  வேறொன்றுமில்லை, எப்படி காகிதங்களை வீணாக்குவதை நிறுத்திக் கொண்டால்; மரங்கள் மிஞ்சுமோ, நான்கு சட்டை தேவையான இடத்தில் பத்து சட்டை எடுப்பதை நிறுத்திக் கொண்டால் ‘ அந்த மீத சட்டைகள் பிறருக்காய் போய் சேருமோ; அப்படி நாமும் பிற உயிர்களை, யாரோ கொன்ற இறைச்சியினை உண்பதை நிறுத்துவோம். பிற உயிர்கள் தானே மிஞ்சும்.
 
அல்ல, நான் அப்படித் தான் செய்வேன், தின்பேன் தான், உடனே நிறுத்த எப்படி முடியும், என்றெல்லாம் கேட்டால், மறு பதிலுக்கு அவசியமில்லை. தாராளமாக உட்கொள்ளுங்கள். பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு வலிக்கும் ஏதேனும் ஒரு ஆட்டிறைச்சியோ, தொண்டையில் குத்திக் கொண்டு வலிக்கும் ஒரு மீன் முள்ளோ; மீனை கண்டமந்துண்டமாக வெட்டிய வலியை நிச்சயம் நினைவுறுத்தும்.
 
 நமக்கென்ன, நாம் தான் மனிதராயிற்றே, பிற உயிர்கள் என்ன பேசினாலென்ன.., புரியாததை கத்துகிறதென சொல்லி வாயை அழுத்தி, துடிக்க துடிக்க வெட்டி, ‘அடி சக்க என, நாக்கில் எச்சிலூற சுவை பார்த்து, கொன்று தின்று… “வேண்டாம் வேண்டாம்.. இனி நீங்கள் எதையோ செய்யுங்கள்.. நான் இன்னும் இருக்கும் சற்று நேரத்திற்கேனும், வாழ்வின் கடைசி நிமிடங்களை வாழப் போகும் அந்த இரண்டு மீன்களோடு சற்று வாழ்ந்து விட்டு வருகிறேன்…
——————————————————————————————————————————————-
வித்யாசாகர்
Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

6 இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!

ந்த மின்னலின் வேகத்தில்
இதய சொந்தமானவளே,
சொக்கும் விழிப் பார்வையின்றி
மனதால் சொக்குப் பொடி போட்டவளே;
 
மிச்சமுள்ள ஆசைகளில்
மொத்தமாய் பூத்தவளே,
மூன்று கடல் தாண்டி நின்றும்
காதலால்; இதயத்தில் அறைந்தவளே; 
 
காலதவம் பூண்டெழுந்து
பரிசிட்ட பெண்விளக்கே,
கவிதை நெருப்பென பொங்கி 
இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே;
 
மூச்சிக்கு முன்னொரு முறையேனும் 
சுவாசத்தில் வசிப்பவளே, 
எனக்கு இதய வாசல் கதவு திறக்க
இணையத்தில் வந்தவளே;
 
நட்புக்கு சக்கரை போட்டு
காதலாய் திரித்தவளே,
கெட்டுப் போகாத உன் குணத்தால
மனசெல்லாம் கெடுத்தவளே;
 
குண்டு குண்டு கண்ணாலே
மின்னஞ்சலில் மிரட்டியவளே,
யாரும் விரட்டாத அன்பெடுத்து
கைகோர்க்க துடிப்பவளே;
 
கற்கண்டு  தேனாட்டம்
கனவு கூட இனிக்குதடி,
நீ கூடி வாழும் நாளுக்குத் தான்
வாழ்க்கை சொர்க்கமாய் கனக்குதடி;
 
மாலை மாத்தும் நாளு இதோ
இப்போ கூட போகுதேடி,
இனிமேலும் தயக்கமென்ன
ஓடிவந்து கட்டிக்கடி!! உயிரெல்லாம் பூத்துக்கடி!
———————————————————————————-
வித்யாசாகர்

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , | 13 பின்னூட்டங்கள்

நேற்று ராவணன் படம் பார்த்தோம் – திரை விமர்சனம் – வித்யாசாகர்!

 
நேற்று ராவணன் படம் பார்த்தோம், சொல்ல வார்த்தைகளே இல்லாத படைப்பு. யாரையும் விட்டுப் புகழ வாய்ப்பில்லை. மொத்தத்தில் மணிரத்தினம் அவர்களுக்கே அத்தனை பாராட்டுக்களும் என திரும்பினால்., இசையிலிருந்து; ஒளிப்பதிவிலிருந்து; இடம் தேர்விலிருந்து; அலங்காரத்திலிருந்து; நடிப்பிலிருந்து; வசனத்திலிருந்து … அப்பப்பா… காலம் மாறிப் போச்சின்னு சொல்லி குத்துப் பாட்டு போட்டால் தான் படம் ஓடும் என்பவர்களுக்கு புத்தியிலுரைக்கும் படம்.
 
பெருசா மாடன் படம் எடுத்துவிட்டேனென பீத்திக் கொள்பவர்கள் மணிரத்தினத்திடமிருந்து பாடம் பயின்றுக் கொள்ளலாம். வெளியில் கேட்டிடாத புன்னகையாக ஒருபுறம் புத்தியை பிரண்டாமல் உள்நுழைகிறது படம். மறுபுறம் நம் இன்ப தமிழில் கலப்படமில்லா பிரம்மாண்ட படைப்பாக புருவம் உயர்த்த வைக்கிறது. ஒடுக்கப் பட்ட மக்களின் கர்ஜனையை நடிப்பில் பிரதிபலித்து அம்மக்களுக்காய் இறக்கம் கொள்ள செய்கிறார் விக்ரம்.
 
அழகான பெண்ணை பார்க்கையில் மதி மயங்கும் மனிதனின் கட்டுப் பட்டிடாத இயல்பு குணமும், அதையும் மீறி தனக்குரியவள் அவளில்லையென ஒதுங்கி நின்று காயப் படுத்தாமல் கொச்சையுறாமல் அன்பினை  மட்டுமே தனக்குள் வளர்த்துக் கொள்ளும் ஒரு சாமானியனின் யதார்த்தத்தையும், அதை உணர்ந்து; மறுக்காமலும் ஏற்காமலும் தன்னிலை மாற்றிக் கொண்டிடாமலும் ‘அவனை புரிந்து; அனுதாபத்தை அன்பாக மனதில் நிறைத்துக் கொள்ளும், ‘ஒரு பெண்ணின் உணர்வும் விக்ரம் ஐஸ்வர்யா ராயினாலும், ஒளிப்பதிவாலும், இசையாலும், இயக்கிய திறனாலும் மிக அழகாக உணர்த்தப் பட்டுள்ளது படத்தில்.
 
ஒரு பக்க நியாயமாக மண்ணில் புதைந்துள்ள வரலாற்றை; யாரையும் உறுத்தாமல் சொல்கிறது படம். காட்டில் வாழ்ந்த வீரப்பனின் கோபத்திற்கு நியாயத்தையும், உலகிற்கு தெரியாமல் போன அவர் செய்த நல்லவைகளையும் படம் நினைவு படுத்துகிறது. யாரோ ஒரு (காவலாளியை) லட்சிய இளைஞனை அழைத்து அவன் ஒரு குற்றவாளி அவனை பிடிப்பதே நம் தேசத்திற்கு நல்லதென தன் பக்க தவறுகளை மறைத்து, ‘ஒரு நல்லவனை வைத்தே நல்லவனையும் அழிக்கும் அரசியலை நினைவுறுத்துகிறது படம்.
 
பாடலை பற்றி நிறைய சொல்லலாம். வைரமுத்துவை இது தான் வைரமுத்து எனும் பாடல் வரிகள். ஆட்டமும் பாட்டமும் கும்மாளமுமாக வாழ்ந்தாலும் இடையே நீதிக்கும் நியாயத்திற்கும் அன்பிற்கும் கட்டுப் பட்டு எதற்குமே குறையாதவன் தமிழன் எனும் பாங்கை ஆங்காங்கே காட்சிகளிலும் நிறைய பாடலிலும் உணர வைக்கிறார்கள் படக் குழுவினர். பாடலும் இசையும் வரியும் படத்தின் முழு பலம். அவசியத்திற்குரிய இடத்தின் பாடல்கள் அல்லது பாடல்களுக்கேற்ற சலிப்பில்லாத கதையமைப்பு ரசனை குறையாமல் படம் பார்க்க வைக்கிறதெனலாம். உசுரே போகுதே.. உசுரே போகுதே.. பாடல் கேட்கையில் உயிர் மென்று தின்கிறது. 
 
சொல்லவும் பாராட்டவும் வாழ்த்தவும் நிறைய உள்ளது ராவணா படத்தில். குறிப்பாக இசையும், பாடல் வரிகளும், ஒளிப் பதிவும், பாத்திர தேர்வும் சிறப்பு. ஒரு ஆங்கிலக் கலப்பில்லாத ஆங்கிலப் பட தரத்தில் ஒரு தமிழ் படம் பார்த்த உணர்வு. அந்த ‘யாத்தே…’ அப்படியே மனதில் ஒட்டிக் கொண்டது. படம் பார்த்து விட்டு வெளியேறுகையில் இப்படி ஒரு படத்தை எடுக்கும் அளவிற்கு தமிழன் எத்தனை சுத்தமான உயர்வான மனதை கொண்டுள்ளானென, தமிழரை நினைத்து பெருமை கொள்ள வைக்கிறது படம்.  
 
கள்வரே.. கள்வரே.. பாடலில் ஒரு தம்பதியரின் முந்தைய வாழ்க்கையை அழகிய பாடலும் நடனமுமாக காட்டி முடிக்கும் உத்திக்கு இயக்குனரை பாராட்டுவதா, ஐஸ்வர்யா ராயை பாராட்டுவதா அல்லது திரைக்கு பின்னால் இயங்கிய இப்பாடலுக்கான நடன ஆசிரியை சொபனாவை பாராட்டுவதா என வியக்க வைக்கிறது.
 
இசைப்புயல் படத்திற்கென உழைத்திருக்கிறார். அவரின் மெனக்கெடல் அவர் மனதை போலவே படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது. இசை இசை இமாலய அளவு உயர்ந்துள்ள ரசனை மிக்க இசையின் நகர்வுகளே படமெங்கும் வியாபித்து நம் இதயம் பிடித்து கசக்கிப் பிழிகிறது. இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துக் கொள்கிறது.
 
ஒளிப்பதிவு பெட்டி திமிறி சுழன்று காட்சிகளை அள்ளி கண்களில் புகுத்தாமல், ரசனையில் மனம் உள்வாங்கிக் கொள்ளும் விதமும், அதை இசையில் கோர்த்தெடுத்த விதமும், அதற்கு முகபாவம் காட்டும் விக்ரமும் ஐஸ்வர்யா ராயும்.. பிரபு கார்த்திக் பிரிதிவி இன்னும் பிற அத்தனை பேரும் அப்பப்பா… இது தான் மணிரத்தினமென சொல்லாமல் சொல்கிறது படம்.
 
ஒவ்வொரு பாத்திரமும் படத்தை இரண்டு மூன்று நாளைக்காவது நினைக்க வைக்கும் என்பது உறுதி. மொத்தத்தில்… வைரமுத்துவின் தண்ணீர்தேசம் நாவல் படித்து முடித்து சில நாட்கள் கடலில் கிடந்த கதையாய், ராவணின் இது போன்ற  ஒழுக்கத்தை, ஒரு பக்க நியாயத்தை எண்ணி; அத்தனை பேரின் உழைப்பிற்குள்ளும் நனைகிறது மனசு!!
 
வெளியில் தெரியாமல் திரைக்குப் பின் உழைத்த இதர பல படைப்பாளிகளுக்கு, இத்திரைப்படக் குழுவிற்கு  பாராட்டவும் வாழ்த்தவும்.. உலகளாவி நிறைய பேர் இருப்பார்கள்.. நன்றி சொல்லவே நான் கடமை பட்டேன்!
 
பெரு நன்றிகளுடன்..
 
வித்யாசாகர்
Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 5

தொட எண்ணினால் இனிக்குமோ
பார்த்தால் கவருமோ 
பார்த்த பின் மயக்கமோ
மயங்கினால் சிரிக்குமோ
சிரித்தால் சொர்கமோ
சொர்க்கம் தரையிலோ
நடக்கும் பெண்ணிலோ
பெண்ணென்றால் பூவோ
சுடும் தென்றலோ
சொல்லியடங்கா எல்லையின் விரிவோ
விரிந்த வான் மனமோ
ஆழக் கடல் எண்ணமோ  
என்னெல்லாம் எழுதினேன் –
அவள் எழுதிய என் காகிதத்தை படித்து
மடித்துக் கொண்ட பின் –
ஒற்றை பார்வையின் சிரிப்பில் உதிர்த்தாள் 
அவள் காதலை!
———————————————————————-
Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 4

னை நான்
தூர நின்று பார்ப்பேன்
கற்பனையில் நெருங்குவேன்
கண்ணியத்தில் தொடுவேன்
காற்றுக்கும் தெரியாமல் மனதால் ரசிப்பேன்
உனை பார்க்கும் போது கூட
உன்னிடம் –
பார்ப்பதை காட்ட அச்சப் படுவேன்;
 
பேசினால் வார்த்தையினூடே தெறிக்கும்
காதலையும் விழுங்கி விழுங்கி பேசுவேன்;
 
அதலாம் மீறி
எப்படியோ உனக்குத் தெரிந்து விட்டது
நானுன்னை நேசிப்பது.
 
நீ என்னிடம் மிக நன்றாக பேசுகிறாய்,
சிரிக்கிறாய்,
என்னை தொடுகிறாய்,
என்னோடு மட்டுமே அதிக நேரமிருக்கிறாய்,
தூர நிற்கையில் குரலெழுப்பி அழைக்கிறாய்
அருகே; மிக அருகே ஒட்டி நிற்க
முயல்கிறாய்,
இதில் எதை காதலென்று சொல்லி
உனை  காதலிப்பதாய் சொல்வேனோ?
 
வேண்டுமெனில் ஒன்று செய் –
இம்மடலை படி
படிக்கமட்டும் செய்
நாளை சந்திக்கையில் படித்துவிட்டேனெனத்
திருப்பிக் கொடு. 
 
பிறகு பார்  
நீ என்னை பார்க்கும் பார்வையில் –
நானுன்னை நெருங்கும் மௌனத்தில்
உன் கண்ணும் என் கண்ணும்
நம் காதலை நிறையவே பேசும்!!
———————————————————————-
Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக