33 புகைப்படப் பெட்டியில் சிக்காத வரலாறு!!

லகத்தை –
தன் ரசனையில் காட்டி
உலகத்தின் பார்வையில்
தன்னை மறைத்துக் கொண்டவர்கள்;

வரலாற்று சுவடுகளை
தன் வியர்வையில் நனைத்தெடுத்து
வாங்கிய காசுக்கு வெறும்
பெயரை மட்டுமே போட்டுக் கொண்டவர்கள்;

இரவுபகல் அலைந்து திரிந்து
உறவுகளின் பிரிவை கூட
எடுக்கும் புகைப்படங்களில்
அலசிப் பார்த்தவர்கள்;

கழுத்தில் தொங்கும்
புகைப்படப் பெட்டியின் கண்களில்
தனை பார்க்கும் பொது மட்டும்
கறுப்புத் திரையை பூட்டிக் கொண்டவர்கள்;

சுனாமி, பூகம்பம், எரிமலை
கண்ணெதிரே வெட்டிக் கொள்ளும் சண்டை
எதுவாயினும் –
காலமே தீர்ப்பெழுதும் பராபரமேயென
புகைப்படத்தை சாட்சியாக்கியே; நீதிக்கு உயிர் தருபவர்கள்;

புயல் வெள்ளம் போர்
எது வந்தாலும் –
எங்கேனும் ஒரு மூலையில் ஒதுங்கியேனும்
உயிரையும் புகைப்படத்தையும்
ஒருங்கே மீட்டவர்கள்;

ஊருக்கெல்லாம் படம் காட்டி
மகிழ்வித்தும்
முடிவில் –
யாருக்கும் தெரியாமலே போனவர்கள்;

அழுவது சிரிப்பது
கோபம் கொள்வதில் கூட
அழகு பார்த்து –

கொட்டும் மழையில்
குடை விட்டு விலகி
அது நனையும் அழகை சேகரித்து –

சுடும் வெய்யிலில்
வியர்வை நுகர்ந்து
நிழலை படமெடுத்து –

இறக்கும் கால பொழுதுகளை
இறக்கா படங்களில் –
உயிர்ப்பித்து –
வருடங்களில் தொலைந்து போன
வரலாறுகள்; புகைப்படக் காரர்கள்!
————————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புதிய புத்தகத்திற்கு உங்கள் அணிந்துரை வேண்டும்..

அன்பு தோழமை உள்ளங்களுக்கு வணக்கம்,

இதுவரை எழுதி வந்த ஈழம் சார்ந்த வலி நிறைந்த கவிதைகளை நம் தளத்தில் படித்திருப்பீர்கள். இக்கவிதைகள் முற்றிலுமாய் முடியாது எனினும் ஒரு புத்தகம் முடியப் போகிறது. ‘இரக்கமில்லா மானுடமும்;ஈழப் போராட்டமும்’ என்ற தலைப்பில் வடலிப் பதிப்பகத்தால் அச்சிட்டு, முகில் பதிப்பகத்தால் வெளியிட உள்ளது. அதற்கு அனிந்துரை தர வேண்டியே உங்களுக்கிந்த மடல் எழுதுகிறேன். உங்களின் நல்ல விமர்சனங்களை பதிவாக்க எண்ணி புத்தகத்தில் வெளியிட உள்ளொம். எனவெ இந்த நம் படைப்பிற்கு அனிந்துரை தர எண்ணுவோர் தமிழீழக் கவிதைகள் பக்கத்தில் உள்ள மொத்தக் கவிதைகளையும் படித்துவிட்டு எழுதுங்கள்.‌

புத்தகத்தில் வெளியிட தகுந்த விமர்சனங்கள், தேர்ந்தெடுக்கப் பட்ட பின் தெரியப் படுத்தப் படும்.

எங்கோ பிறந்து எங்கோ வள‌ர்ந்தாலும் இணையத்தில் இணைந்துள்ள தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி அறிவித்து விடை கொள்பவனாய்..

வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60 வெறும் கதைகேட்ட இனமே…

ள்ளே மின்னலாய் வெட்டி
உள்புகுந்து –
உயிர்தின்கிறது முள்ளிவைக்காளின் ஓலம்;

மறக்கமுடியாத அந்நாட்களின்
இழப்பில் புதையுண்ட எம்
விடுதலையின் வேகத்தை
மீட்டெடுத்துவிடும் துணிவில் தான்
இரவு பகல் கடக்கின்றோம்;

அம்மா என்றழைக்கும் பிள்ளைகளின்
குரல் தாண்டி –
அம்மா……….யென அலறிய அலறலில்
ஒன்று கூட உலகத்தாரின்
மனம் துளைக்காத குற்றத்தால் தான் – இன்று
அனாதையாய் ஓர் இனமே தவித்து நிற்கிறது;

உயிர் போனால் போகட்டும்
துடித்து துடித்து போன கொடுமை
எம் இனம் தாண்டி எவருக்குமே
வேண்டாத கொடுமை தான்;
வேண்டாத கொடுமை தான்;

ஓடிக் கலைத்து
குண்டு வெடிப்பிலும் உயிர் மீட்டுப் பிழைத்து
எங்கோ கேட்ட
அப்பாயெனும் பெற்ற குழந்தையின் அலறல் தேடி
அலைகையில் –
இந்த குழந்தையா
இந்த குழந்தையாயென
வெடித்து சிதறி வீழ்ந்த பிஞ்சுகளை
பார்க்கவா பிறப்பெடுத்தோம்???

எங்கோ இருப்பார்கள் என்று
இருப்பதே கொடுமை
யாரும் இல்லையென்றறிந்தும்
ஏனிந்த வாழ்வோ??

இனம் என்றால் என்ன
தேசமென்றாலென்ன
வாழ்வென்றாலென்ன
வலியென்றாலென்ன என்றெல்லாம்
என்றோ எழுதி பாடி சொல்லி சலித்த
ஓரினத்தின் வரலாறு –
இப்படியா சரிந்து போகும்??

போர்கவசம் பூண்டு
வாளேந்தி
தேரோட்டி
சீவிய தலைகளோடு சிங்கமென புறப்பட்டு
கண்பட்ட இடமெலாம் கொடி பறக்க வாழ்ந்த வீரம்
மறந்து போனதா உறவுகளே???

புளிவிரட்டியதாய் கேட்ட கதை
நீதி பிறழ்ன்றதால் மதுரை எரித்த கதை
கங்கை கொண்ட சோழபுரத்தின் கதை
கரிகாலன் ஆண்ட கதை
கதை கதை கதையோடு
எம் மக்களின் மரணத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டு
நிம்மதியாய் தூங்கி யெழுங்கள் உறவுகளே;

நாங்கள் செத்து மடிந்த
வரலாறில் –
நாளை உங்கள் பிள்ளைகள்
நூற்றுக்கு நூறு
மதிப்பெண்ணெடுக்க –
இதோ இந்த நாட்களை எல்லாம் வேண்டுமெனில்
சேகரித்துக் கொள்ளுங்கள்,
இலவசமாக எங்களின் கண்ணீரையும்
தருகிறோம் – கதைஎழுதுங்கள்,
எங்கள் மரணம்
உங்களுக்காவது
வாழ்க்கையை தரட்டும்!!

நீங்கள் வாழ்ந்து தீர்க்கும்
மதப்பில் –
எங்களின் கல்லறைகள் கனக்கட்டும்!!

ஏனென்று கேட்காத
எதையேனும் செய்யாத
வீடுவிட்டு நகராத உங்களின்
வீரத்தில் –
ஈழம் கனவாகவே போகட்டும்!!

உங்களுக்கென்ன
யாரோ தானே இறக்கிறார்கள்
எங்கோ தானே குண்டு வெடிக்கிறது
ஏதோ எல்.டி.டி. தானே சண்டை போடுகிறார்கள்;
நீங்கள் தூங்கியெழுங்கள் தூங்கியெழுங்கள்
எழுகையில் காபியோடு கிடைத்த
ஒரு நாளேட்டில்
இத்தனை குழந்தை
இத்தனை பெண்கள்
இத்தனை முதியோர்
இத்தனை தமிழர்கள் ஈழத்தில்
இறந்ததாய் போட்டிருக்கும்
ஒரு உச்சு கொட்டிவிட்டு நாளேட்டை
புரட்டிவிடுங்கள் –
நாளைய தமிழினம் இன்றிலிருந்தே மடியட்டும்!!
————————————————————————-
வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கண்பட்ட இடமெலாம் கவிதை; கவிதை!!

சிறகின்றி பறக்கும்
துள்ளலின்றி நகரும் மேகங்களுக்குள் ஒளிந்து
அழகுற்ற வான மதப்பில்..
நீண்டு வளைகிறது –
வண்ணம் நிறைந்ததொரு ஓவியம்,

தூரல் மழையின் சிலிர்ப்பில்
காது மடல்கள் அசைவுற –
சிதறும் மழைத்துளிகளின் ஓசை
இயற்கையின் ஜாலமாய்
உள்புகுகிறது இசை,

பசுமையை அள்ளிப் பருகும்
மரங்களின் அசைவுகளில் – காற்று
விளையாடி யுள்ளே –
இதமாய் எழுதும் தென்றல்
தன்னை மறந்து எழுதுகிறதொரு, ‘கால கவிதை’,

சுடும் நெருப்பென தகிக்கும்
வெய்யிலின் வெக்கையில் –
காற்றினை சூடு கொள்ளைகொண்ட – இறுமாப்பை
உடைத்தெறிய –
இலட்சியமின்றி துணிகிறது; மர நிழல்கள்,

முகமெல்லாம் அழுக்கு பூசி
பால்குடி வாசம் கழுகாத மழலையின்
பளிச்சென்ற வெள்ளை சிரிப்பில் – மதிமயங்கி
லயிக்கிறதொரு –
ரசனை பூத்த யதார்த்தம்,

வாசலில் முகம் சாய்த்து
வருகைக்குக் காத்திருக்கும் மனைவியின்
முகம் பார்த்த பரவசத்தில் –
லேசாய் அவளுதிர்த்த புன்னகையில் – பிறக்கிறதொரு
குடும்பத்தின்; வெற்றிப் புன்னகை,

மரக்கட்டைக்குள் எரிக்கையிலோ
மண்கொட்டி மூடும் பொழுதிலோ
மனசு மட்டும் கனவு சுமந்து –
கதறியழ இயலாதா உயிர் போன உடலின்
ஈரத்திலிருந்து நீங்கியிராத –
நீண்டதொரு நன்றிக்கான ‘அம்மா’ ‘அப்பா’ எனும்
தோற்றுப் போன அழைப்பு நிரூபிக்கிறது
அவர்கள் வளர்த்த அன்பை!
————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

59 மலர்விழி என்றொரு மறைமொழி!

தீப்பட்ட புண்ணுக்கு
எம் – தாய் போட்ட மருந்தேது
நீ செய்த சேவையெல்லாம்
தாய்- யன்பின்றி வேறேது!

ஈழம் காக்க இரவு பகலும்
உறக்கம் தொலைத்த தியாகமது
எம் உணர்வு புரிந்து பாசம் தந்த
வீரமகளின் ஈரமது!

கரும்புலிகள் பாசறையில்
அன்பு சொறிந்த பாரவையது;
சமர் புரியும் போர்முனையில்
வெற்றி – முழக்கமிட்ட வீரமது!

தாய்தந்தை இழந்தாலும்
ஈழம் மட்டுமே உன் மூச்சானது;
தம்பி தங்கை இரண்டு மட்டும்
என்றைக்குமே உன் பேச்சானது!

கண்ணியத்து மறைமொழியே
தாயன்பு மலர்விழியே –
ஓய்வில் கூட வீரர்களின்
உதவிக்கு வாழ்ந்த சேவகியே;

கரும்புலிகள் ஆடைகளை வெளுத்துத் தந்த
தோழமையே;
தேய்த்துத் தந்த ஆடைகளில்
பூத்து நின்ற சகோதரியே;

மறக்க இயலா உன் நினைவுகளும்
ஆற்றிய நின் சேவையின் சாதனையும்
மறைந்து போன வீரர்களின்
இதயத்தில் வாழ்கிறதே;
இன்றும் கூட உனை நினைவூட்டி
அவர் கல்லறைகளில் பூக்கிறதே;

நீ ஊடுருவி தகர்த்த தளங்களெல்லாம்
எதிரியை திகைக்க செய்தது வியப்பென்ன;
அவன் – இறுமாந்திருந்த ஆணையிரவில்
புகுந்து – தாமரை குளத்தை தகர்த்ததென்ன;

மேஜர் ஆந்திரா, கேப்டன் சத்தியாவோடு சேர்ந்து
இயக்கச்சிப் பகுதியையே உளுத்ததென்ன;
துணிச்சலோடு போர்புரிந்து –
பனிரெண்டு கொமாண்டோக்களை கொன்றும்
நீயுமங்கே மறைந்ததென்ன;

வெற்றி கொண்ட ரகசியத்தை
உன் மரணம் கொண்டுப் போனதென்ன;
ஈழத்தமிழர் வரலாற்றில் –
மலர்விழி;
அன்பின் மறுமொழியாய் கலந்ததென்ன;

விடுதலை காற்றும், சுதந்திரக் கொடியும் ஓர்தினம்
அசைந்து அசைந்து – ஈழத்தில் பறக்குமம்மா;
அன்று – தமிழர் பாடும் வெற்றிப் பாடலில்
வீரமாய்
தியாகமாய்
தாய்மையாய்
இசையாய்
உன்பெயரும் ஒலிக்குமம்மா!!
——————————————————–
வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக