ஒரு தேசம்
மலர்கிறது…
ஜாதி கொடுமைகளில்லை
மத வெறியில்லை
எந்த பிரிவின் பாகுபாடுமில்லை
பொறாமையில்லை
கொடும் மரணம் கொலைகள் இல்லை
எல்லாம் கடந்து இயற்கையாய்
இயல்பாய் விரியும் மலரினை போல்
ஒரு தேசம் பொதுநலங்களில்
பூத்து சிரிக்க மலர்கிறது;
இருப்பவர் இல்லார்க்கும் கொடுக்கும்
நேசம்,
அன்பை இயல்பாய் பொழியும்
மனசு,
விருப்பத்தை புரிந்து
அலசி
ஆராய்ந்து
நிவர்த்தி செய்ய துடிக்கும் உறவுகள்,
சுயநலம்
அறவே இன்றி
ஒருவரை ஒருவர் சார்ந்து
ஒருவற்கு இன்னொருவர்
வாழ்ந்து –
சிரத்தை பாராமல் பிறர் நலனை
தன் தலை மேல் சுமந்து
பரஸ்பரம் –
எல்லோரும் மகிழ்ந்து வாழும் ஒரு
தேசம்;
குண்டுகளில்லை
வெடி சப்தமில்லை
காவலாளிகள் அவசியப் படவில்லை
கேட்டால் கொடுக்கும் அழகிய நகரங்களில்
திருடும் எண்ணமேயில்லை,
லஞ்சம் வாங்காத ஊழியர்கள்
காமமில்லாத பார்வை
சகோதரத்துவமான நட்பு
சொன்னதை சொன்னதுபோல் செய்துமுடிக்கும்
இளைஞர் பட்டாளாம்
எழுச்சிக்குப் படிக்கும் பள்ளிக்கூடம்
தூக்கமில்லாத அலுவலகம்
வளர்ச்சியை மட்டுமே சிந்திக்கும்
அரசாட்சி –
வாழ்வெனில் இப்படி வாழ்வோமெனும்
பண்பு பூத்து குலுங்கிய ஒரு
பிரம்மாண்ட தேசம் மலர்கிறது;
பெண்கள் காயப் படவில்லை
படிப்பு இயல்பாகவே மறுக்கப் படவில்லை
காதல் ஏற்கப் படுகிறது பெற்றோர்களால்
காதல் மறுக்கப் படவில்லை சமூகத்தால்
சுதந்திரமாய் கொட்டும் மழையில்
கைகள் சுழற்றி
ஆடி வருகிறாள்
பாடி வருகிறாள்
அவசியமெனில் மார்தட்டி வாள் தூக்கவும்
துணிந்து நிற்கிறாள் பெண்; அப்படி ஒரு
தேசம்;
அழகாக் தமிழ் பேசுகிறார்கள்
என்றோ படித்த
எங்கோ கற்பனை செய்த தமிழர்கள்
உலா வருகிறார்கள்,
தமிழர் என்றால் மதிப்பு
பூரிக்கிறது உலகத்தார் மத்தியில்;
திரும்பிய திசையெலாம் தமிழ் ஒலிக்கிறது
பிற மொழி கலக்கவில்லை
ஆங்கிலம் எங்கோ யாரோ பேசுவதாக
சொல்லிக் கொள்கிறார்கள்,
என்னால் நம்பமுடியவில்லை
கண்களை கசக்கிப் பார்க்கிறேன் ஒரே
இருட்டு –
கனவா என ஆழ்ந்து கவனிக்கிறேன்
கனவில்லை. மெய்! மெய்!!
ஆம்; எல்லாம் உண்மை!!
எப்படி சாத்தியமிது??!!
ஆச்சர்யத்தில் திளைக்கிறேன் நான்;
ஆம்; அப்படி ஒரு தேசத்தில்தான்
இருக்கிறோம் நாம்;
அப்படிப் பட்ட பெருமைக்குரிய
மக்களோடு தான்
வாழ்கிறோம் நாம்;
தேவையெனில் –
அத்தேசத்தை
உருவாக்கிக் கொள் தமிழினமே என்றது
மனசாட்சி!!
————————————————————-
வித்யாசாகர்
























