பிரிவுக்குப் பின் – 54

நினைவின்
பயணங்கள் தான்
எங்கெங்கோ..

அதில் நீளும் பயணமாய்
நீயும் உன் பிரிவுகளும்;

வெறும் –
பயணமாக மட்டுமின்றி

உயிரின் இயக்கியாய்..
சிரிப்பின் அர்த்தங்களாய்..
வாழ்வின் அவசியமாய்..

வாழும் அர்த்தங்களுக்கு –
அவ்வப்போது சுகமும்

பிரிவின் வலியையும்
கற்பிப்பவளாய்
நீ.. நீ.. நீ மட்டுமே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 53

நீயில்லாத
வருத்தத்தில்
வாழ்க்கை நகர-

உன் பிரிவின் துயரம்
வானமும்
பூமியுமாய் –
நீண்டு விரிகிறது!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

காதலின் மறக்காத பொழுதுகள் – 51

ந்தா –
உனக்கான ஒரு சொட்டுக்
கண்ணீர் பரிசு.

எதுவுமே எழுதிடாத
வெள்ளை தாளில்
நம் அத்தனை நினைவுகளையும்
ஒரு சொட்டுக் கண்ணீரால்
நனைத்து அனுப்புகிறேன்.

வாசலில் காத்திருந்து
வந்ததும் சிரிப்பில் வரவேற்று
சாப்பிட்டாயா என்பதை சைகையில் விசாரித்து
பேசினால் மேல் மாடியில் கேட்டு விடுமோயென
இதயம் துடிக்கும் சப்தங்களோடு
கட்டியனைத்திருந்த நாட்களை எல்லாம்
ஒரு சொட்டுக் கண்ணீராய் மட்டுமே
அனுப்ப முடிந்ததெனக்கு.

ஓடிப் பிடித்து விளையாடவில்லை
கதைகதையாய் பேசவில்லை
வருடங்களை ஒன்றாய் இரண்டாய்
பார்வையில் மட்டுமே குடித்துவிட்டது
நம் அந்தநேர மவுனம்.

தெருவெல்லாம் பெய்த மழையில்
நனைந்து கொண்டே
உனக்காய் –
வாசலில் நின்ற எனக்கு
உன் பார்வையில் குடை பிடித்த
நினைவுகளை எல்லாம் வெறும்
அந்த மழைநீர் மட்டுமே தெரிந்திருக்கும்.

மேல்வீட்டில் நீயும்
கீழ்வீட்டில் நானுமாக வாழ்ந்த
அந்த வீடு –
மாற்றிக் கட்டப் பட்டிருந்தால்
இன்னொரு தாஜ்மஹாலாக
கனத்து நின்று –
நம் காதல் பேசியிருக்கும்.

நீ அழுகையை மறைத்து
சிரித்து கடந்த பொழுதும்
நான் சிரித்துக் கொண்டே உள்ளே அழுத
பிரிவின் வலிகளும்
முட்டிமோதி உடைத்தெறிய முடியாத
அந்த சுவற்றின் ஈரத்தில்
உடையாமல் நிற்கிறது அந்த வீடு – நம்
ஒரேயொரு சாட்சியாக.

படிக்கட்டில் நீ இறங்கிவரும் சப்தம்
அடி குழாயில் –
நீ நீர் கொள்ளும் தருணம்
எங்கோ தூர நின்று நீ
கத்தி அழைக்காமல் பார்க்கும் பார்வை
தூக்கத்திலும் எனை துளைத்து எழுப்பிய
அந்த கணங்கள் –
எந்த பதிவிலும் இன்று இல்லாமல் போனதை
யாரிடம் நாம் சொல்லியழப் போகிறோமோ.

வீடெல்லாம் உனை தேடி
புறப்பட்டப் பிறகும் –
உன் ஒரு பார்வைக்காய் காத்திருந்து –
நீ இல்லைப் போலென நினைத்து
மனமில்லாமல் வெளியேறுகையில்
வெளியே நீ எனக்காய் காத்திருந்து
உயிரை குடித்த காதல் –
எந்த ஏட்டில் திரையில் வந்து
உன்னையும் என்னையும் பற்றி பேசி
நம்மை சேர்த்துவைத்துவிடும்???

யாருமில்லா வீட்டில்
எத்தனை தனிமையான பொழுதுகள்
நம்மிரண்டு பேரின்
உண்மையான அன்பை மட்டுமே
சுமந்துபோனதை;
காதலென்றால் காமம் மட்டுமென்று பேசும்
இவ்வுலகம் எப்படி புரிந்துக் கொள்ளும்???

காற்றிற்கும் வெளிச்சத்திற்கும்
இருட்டிற்க்கும் மட்டும் தானே தெரியும்
உனக்காக நானும்
எனக்காக நீயும் வாழ்ந்த
அந்த உன்னதமான வாழ்க்கையை.

தலைதெரித்து ஆடும்
மதவெறிக்கு முன் –
மவுனத்திலும்
பார்வையிலும்
முத்தத்திலும்
இறுக அனைத்து நின்ற அணைப்பிலும்
நாம் பேச இயலாத பொழுதுகளும்
திட்டமிட்டுக் கொள்ளாத காதலும்
விரும்பாத சுயநலமும் –
நம்மை சேர்க்கவில்லைதானேத் தவிர
எக்காலமும் நம்மை மனதால் பிரிக்க இயலாது.

வெறும் மதமும்
இனமும் வேறென்ற காரணம் தவிர்த்து
எப்பழியும் ஏற்காத நம் பிரிவு
உலகத்தின் சாபமென்பதை
இந்த ஒருசொட்டுக் கண்ணீர்
உனக்குமட்டும் சொல்லும்.

காலம் எத்தனை கடந்தாலும்
உன் கண்ணீரும் என் கண்ணீரும்
எந்த அல்லாவையும் ஏசுவையும் ஈஸ்வரனையும்
புத்தனையும் மீறி வந்து நம்மை சேர்த்த்துவிடாது.
கடவுளை தாண்டி
மதத்தை முட்களாக பதிந்துக் கொண்ட
இச்சமூகத்தில் –
நீயும் நானுமொரு ஊமை பதிவு;
அவ்வளவு தான்.

மனசு –
எல்லோருக்கும் புரிவதில்லையடி தோழி,
காதலித்து பிரிவது
எத்தனை வலிக்குமென்பதை
எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.
போகட்டும்,
இவர்களுக்கு மத்தியில் –
நீயிருப்பாய்; நானுமிருக்கிறேன் என்றுசொல்லவே
இந்த வெள்ளை தாள்.
வெள்ளைத்தாளில் ஒருசொட்டுக் கண்ணீர்.
பிரித்துப் பார்த்துவிட்டு அழுவாய்
எதையெதையோ நினைத்தழுவாய்,
அதிக நேரம் அழாதே.
மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்க்காதே.
வெறும் காகிதமென்று கசக்கி
காற்றில் வீசி விடு.

காற்றில் அசைந்து அசைந்து
அந்த காகிதம் –
காற்றோடுப் பேசிக் கொண்டே
உன்னையும் என்னையும் வெறும்
பிணம் என்று பதிந்துக் கொள்ளட்டும்.

நம் இறக்காத உயிர்ப்பும்
யாருக்கும் தெரியாத நம் கதறலும்
எங்கோ ஒவ்வொரு மூலையில் நின்று
உலகின் தோல்விக்கு சாட்சியாகி
ஜாதியின் மதத்தின் வெறியை
மெல்ல மெல்ல கொல்லும்!
————————————————————————
வித்யாசாகர்

Posted in காதல் கவிதைகள் | 8 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 52

நான் –
வெளிநாடு வந்து
சில வருடங்கள் ஆகிறது

இம்முறை –
திருமணக் கனவோடு
ஊர் செல்கிறேன்..

ஊரில் எனக்கென்று
முன்னதாகனவே
பெண் பார்த்து வைக்கப் பட்டுள்ளது.

முதன் முதலாய்..
நானும் அவளும் சந்திக்கிறோம்
இன்றெனக்கு நிச்சயதார்த்தம்.

அடுத்த சில தினங்களில்
திருமணமும் முடிய..
காதல் பறவைகளை போல்
வாழ்வைத் துவங்கினோம்.

வாழ்க்கை சில தினங்கள்
சில்லறை பட்டாசுகளாய்
சந்தோசத்தில் வெடித்து ஓய்ந்துவிட…

காலம் –
கைகடிக்க ஆரம்பிக்கிறது!

பணத் தட்டுப் பாடு நிலவுகிறது..

கடன்கள் ஆங்காங்கே
முளைவிட்டிருப்பது தெரிகிறது..

மீண்டும் அனைத்து அனுபவ –
நற்-சான்றிதழ்களையும்
கையில் சுமந்துக் கொண்டு
மன அழுத்தத்தோடு –
வெளிநாட்டிற்கனுப்பும் படிகளில்
ஏறி இறங்குகிறேன்..

திடீரென ஒருநாள் –

‘விசா வந்துவிட்டதாம்..’
காலண்டரை கிழித்து விட்டுப்
பார்கிறேன் – மனம் வலிக்கிறது..

இத்தனை வருடம்
மனதில் சுமந்த கனவுகளெல்லாம்
ஏக்கங்களாய் என் முன்
பல்லிளித்துக் காட்டியது..

வெறும் –
நாட்கள் அளவில் தானா
நம் வாழ்க்கையென –
கவலை கொள்கிறது மனம்..

மனைவி கலங்கிய கண்களோடு
நிற்கிறாள்,

திருமண வாசமெல்லாம்
அவளுடைய கண்ணீரில் கரைந்து போக..
கையசைத்து விட்டு –
விமானமேருகிறேன்!

நாட்களை விழுங்கிவிட்டு
தொலைபேசியில் வருகிறது செய்தி
மனைவி அம்மாவாகிறாளாம்!

நான் அப்பாவாகிவிட்ட
சந்தோசத்தை –
தொலைபேசியில் என் மனைவியிடம்
எப்படி காட்ட???

‘இறந்து பிழைத்தேன் என்கிறாள்’ அவளாக.

என்னால் ‘எப்படி இருக்கிறாய்’ என்று கூட
கேட்கமுடிய வில்லை-
சற்று தாமதித்து..
மவுனத்தில் மாத சம்பளம்
வேகமாய் கரைகிறதே என்ற அச்சத்துடன்

‘உடம்பை பார்த்துக் கொள்ளலம்மா’ என்கிறேன்..

அவள் ‘எப்பொழுது வருவீங்க’
என்கிறாள்..

இப்போ தானே வந்தேனென்று என்னால்
சொல்லமுடியாவில்லை..

‘உடம்பை பார்த்துக் கொள்ளம்மா’ என்கிறேன்

‘குழந்தையை பற்றி கேட்கவே இல்லையே’ என்றாள்

‘சொல் சொல்
எப்படி இருக்கிறது நம் குழந்தை’ என்கிறேன்..

நம்மை போலவே இருக்கிறதென்கிறாள்.

நான் தொலைபேசியில் –
எச்சரிக்கை செய்ய வரும் – ‘பணம்
தீந்து விட்டதன்’ சிற்ரொளியின் சப்தம் கேட்டு

‘அச்சச்சோ போன்கார்டு முடிந்துவிடும்
நான் பிறகு பேசுகிறேன்’ என்றேன்

அவள் ‘கார்டு போகட்டும்..
பணம் போகட்டும்…
தயவுசெய்து வீட்டுக்கு வந்துவிடுங்கள்’ என்கிறாள்

‘எனக்கும் வரத் தான் ஆசை
வந்துவிடட்டுமா’ என்கிறேன் நான்

அவள் ‘என்னால் முடியலீங்க’ என்று
சொல்லிவிட்டு விசும்புகிறாள்..

‘எது அவளால் முடியவில்லை’ என்றெழும்
கேள்விகளின் பாரத்தை –
என்னால் தாங்க இயலாமல்

‘எத்தனை மணிக்கு
குழந்தை பிறந்தது என்கிறேன்..

அவள் –
‘இத்தனை மணிக்கு’ என்கிறாள்..

என்ன குழந்தை என்று கூட
கேட்கத் தோன்றாமல் –
அந்த கணம் மட்டும் எனக்குள் வலித்தது..

கண்களை துடைத்துக் கொண்டு
‘சரி உடம்பை பார்த்துக் கொள்’ என்கிறேன்

‘அழுகிறீர்களா’ என்றாள்

‘இல்லை தனியாக கஷ்டப்
பட்டிருப்பாயே’ என்றேன்

‘அதான் சொன்னேனே –
செத்துப் பிழைத்தேனென்று’ என்கிறாள்

என்னால் அடக்கமுடியவில்லை
விரைவில் வந்துவிடுவேனென்று சொல்வதற்குள்…..

என் வார்த்தை தடுமாறும்
உதறலை புரிந்துக் கொண்டு –
ஓ..வென கத்தி அழுகிறாள் என் மனைவி!

என்னால் –
ஆறுதல் சொல்ல முடியாமலேயே
தொலைபேசியில் பணம் தீர்ந்து போய்
இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.

இங்கு நானும் – அங்கு அவளும்
அழுகிறோம்..

இடையே.. யுள்ள –
பல்லாயிரக் கணக்கான மயில்களும்
எங்களை கேள்வி கேட்டது –
ஏனிந்த வாழ்க்கை என்று!!

Posted in பிரிவுக்குப் பின்! | 4 பின்னூட்டங்கள்

பசியை ரசித்திரு.. (25)

ங்கோ ஒரு ஜீவன்
ஒவ்வொரு பசி வேளையின் போதும்
திருடவோ –
ஏமாற்றவோ –
பொய்சொல்லவோ –
அல்லது இறக்கவேணும் தன்னை
தயார் படுத்திக் கொண்டுதான்
பசி தாங்கி அலைகிறது,

புறம் நான்கும்
பணம் இருந்தென்ன,
உடுத்தும் ஆடைக்குபதில்
கடை விற்றென்ன,
கோடிகளை கொட்டி
அடுக்கி வைத்தென்ன –
ஒருவேளை பசியை – ரசித்ததுண்டா
பணம் மிஞ்சி-யிருப்போரே???

ஏழை பசி கண்டு
உள்ளே வலிக்கார்க்கு
தன் பசியை கண்டால்
பேய் பயம் வருமேத் தவிர
பசியை எங்கு ரசித்திருப்பீர்
பணம் மிஞ்சி-யிருப்போரே???

முழுசோறு உண்கையில்
அறை சோற்றை –
பிறருக்கு ஈயாதாரை
பரவாயில்லை என விட்டொழி,

மாதத்திற்கும் வருடத்திற்குமென
மூட்டை மூட்டையாய் முடக்கியிருக்கும் ஜாம்பவான்கள்
இல்லார் பசி பற்றி
மீச்சிறு சிந்தித்தலில்
மீப்பெரு பசிப்பிணி மாந்தர்கேனும் தீருமே.

அடிவயிறெரியும் பசி-நெருப்பின் அனல்
எதையெல்லாம் தூண்டுமென –
எத்தனை மாமனிதர்கள் சிந்தித்தீர்
உலகத்தீரே???

பசியை ரசிக்கையில்
பசியின் வலி புரியும்;
பசித்திருந்து பாருங்கள்
ருசிக்கிறதா ஏழைகளின்
வெற்றுக் குடல் எரிக்கும் பசி என்று!

எவர் எக்கேடு கெட்டாலென்ன
வாழ்ந்தாலென்ன
வீழ்ந்தாலென்ன என எண்ணுவோர்
இக்கவிதையை வாசித்திருப்பின்
வருந்துகிறேன் –
உங்களுக்காவும் எழுதிய இக்கவிதைக்கு!

காலம் –
ஏழைகளுக்கு சோறு போடாவிட்டாலென்ன
மரணத்தையாவது அவர்களின் தலையில் போடும்;
நீங்கள் சேமித்து வையுங்கள் –
உங்களின் பணத்தையும்; ஏழைகளின் மரணத்தையும்!
———————————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்