லெப்ட்ல கட் பண்ணி; ரைட்ல கட் பண்ணு!

வாட்சும்
பஸ்சும்
காரும்
ட்ரெயினும்
லைட்டும்
சுச்சும்
தமிழென்று நினைத்தே
நிறைய தமிழன் –
செத்துபோய்ட்டான்;

தேங்க்சும் சாரியும்
‘பட்’ டும் ‘சோ’ வும்
எஸ்கூஸ்மியும்
தமிழாகிவிடுமென்றே
நிறைய தமிழன் வெய்ட் பண்றான்;

லெப்டும் ரைட்டும்
கட் பண்ணியும்
வாழ்க்கையில் அவுட் ஆகாத
தமிழன் –
தமிழை சூட் பண்ணியும்
வெற்றிய மீட் பண்றது தான்
கேட்க கேவலமா இருக்கு;

ரைட்டோ தப்போ
வாழ்க்கைய ஸ்ட்ரெய்ட்டா வுடு
எந்த கார்னர்ல முட்டிக்கினாலும்
எல்லாம் எஸ்பீரியன்ஸ் தான்னு
சொல்லிக்கிற தமிழனின்
ஆங்கில டம்பத்தில் – தான்
வீழ்கிறது தமிழ்!

சார் என்று
சொல்லும் தமிழனுக்கு
ஐயா என்று சொல்வதிலும்
பங்க்சன்ல ஜாய்ன் பண்ணி
பார்ட்டி வைக்குற தமிழனுக்கு
பார்ட்டியை விழா என்று
உச்சரிக்கவும் எந்த மானம்
கப்பலேறிப் போகிறதோ தெரியவில்லை!

ஸ்டைலுக்கு பேசுமிந்த மொழி
அறியாமையால் ஆங்கிலம் கலந்து
அறுபட்டு வாழும் தமிழ் –
நம் வாழ்வின் அடையாளத்தையும்
நம் யதார்த்தங்களையும் நாளை –
மொழி திரித்துக் குறித்துக் கொள்ளுமெனில்
யாரால் திருத்தி விட முடியும்?

வேறொன்றும் வேண்டாம்,
வாயில் ஒரு சொட்டு
விஷம் வீழுமெனில்
எத்தனை வேகத்தில் அதை
காரி உமிழ்வோமோ –
அப்படி உமிழ்ந்து விடுவோம் –
இடையே கலந்த ஆங்கிலத்தை
தமிழ் தானே மிஞ்சும்!
————————————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 4 பின்னூட்டங்கள்

மருத்துவ மனை (14)

ரிசையாய் நிற்கும்
நோயாளிகளின் வலி கூட்டும்
நிர்வாகம்;

தெய்வம் வந்து தாங்கிடாத
பொழுதுகளில் –
மனிதனை உயிர்ப்பிக்கும் விஞ்ஞான வளாகம்!

பணம் போட்டு
நலம் காக்கும்
பொதுசேவை வியாபாரம்;

பணம் தாண்டியும்
மனிதம் சுரப்பிக்கும் கடவுள்கள்
மருத்துவர்களாக மாறிய இடம்!

உயிரோடு
விளையாடி –
தொழில் கற்கும் ஏகாந்தம்;

உயிர் கொடுத்தும்
உயிர் காக்கும் –
மதம் தாண்டிய மருத்துவாலயம்!

ஏழைகளின் உயிர் வருத்தியும்
உயிர் காத்தும் வளரும் –
செங்கல், மண் கட்டிடம்;

எத்தனையோ பணக்கார மருத்துவர்கள்
இரவு பகலை தொலைத்து –
மருத்துவம் பார்க்கும் மனிதநேய மண்டபம்!

சகோதரிகளின்
கவனக் குறைவால் –
உயிர் தின்னும் பொழுதுபோக்கிடம்;

மருத்துவரில்லாத அவசரத்தில்
உயிர் காத்த – செவிலித் தாய்களின்
அன்பு பூக்கும் தளம்!

இவை எல்லாம் கடந்து –
எத்தனையோ அலறல்களும்
கண்ணீர் கதறல்களும் –
உயிர்பிரிந்த கணப் பொழுதுகளும்
ஒரு ரசாயன மனமாய் காற்றில் கலந்து
காற்றாக மாறிய இடம்!
————————————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

தெருக் குழாய் (13)

குடிசைவாசிகளின் தெருக்கடவுள்
உயிர் வாழ்தலுக்கான –
ஏழைகளின் முதல் உணவு!

வாழ்ந்ததற்காகான அடையாளத்தில்
மறக்க மறுக்கும் –
நினைவுச் சின்னம்!

வந்து போவோருக்கு
தாகம் தீர்க்கும் –
எந்திர தன – கொடையாளி!

வறுமை தீரா அரசின்
கட்டளைக்கிணங்கி இயங்கும் –
பகுதி நேர ஊழியன்;

கஞ்சு சோறும் கால்ரூபாய் ஊறுகாயோடும்
வயிறு நிறையும் மருந்து போட்ட
குவளை நீர்!

காதலர்கள் காலையில்
விழித்ததும் சந்திக்கும் –
முதலிடம்!

குடும்பத்து குத்துவிளக்குகள்
வாய் வாள் வீசி –
வீட்டு அசிங்கத்தை தெருவில் இரைக்கும் போர்க்களம்!

இதலாம் தாண்டி,

யார் யாரோ வந்தாகிவிட்டது
ஆண்டாகிவிட்டது
மகன் பிறந்து பேரன் பிறந்து
கொள்ளுப் பேத்தி அதோ குழாயடியில் நிற்கிறாள் –

சொந்தமாக ஒரு வீடும் ஒரு குழாயும்
கனவாகவே நகர்கிறது – நிறையப் பேரின் காலம்;

தெருக்குழைக்கு ஆதலாம் தெரிவதேயில்லை
தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது!!
————————————————————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

வீடு (12)

கோவில்களின் பிறப்பிடம்
நான்கு சுவற்றாலான –
மனசு!

உடல் சுட்டெரிக்கும் கோபம் காமம்
போட்டி பொறாமை வெற்றி தோல்வி
மகிழ்ச்சி கண்ணீர் –
அனைத்தும் சுமந்த மண் ஓவியம்!

முயற்சியும்
உழைப்பும்
குழைந்துக் கொண்ட சாதனை!

பண இருப்பை
உலகிற்குக் காட்டிக் கொள்ளும்
படோடாபம்!

நிறைய பேருக்கு
சுயமாக கிடைத்திடாத
வாழ்நாள் கனவு!

தெருவில் –
குடும்பம் நடத்துபவரை கண்டு
பல்லிளிக்கும் வண்ணக் குவியல்!

விட்டுச்சென்ற அம்மா
அப்பாவின் சப்தங்கள் நிறைந்த
நினைவுக் கூடு!

நான் தத்தி நடந்த
வளர்ந்த – அழுது அடம் பிடித்த
வாழ்ந்த மொத்தத்தின் அடையாளம் வீடு!
————————————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

மதம் – இன்றைய பார்வையில் (11)

னிதன் –
தன் தலைமேல் இட்டுக் கொண்ட
முதல் தீ – மதம்!

அணுகுண்டு
வீசாமல் வெடிக்கும்
மனிதக் கொல்லி – மதம்!

கடவுளை காட்ட புறப்பட்டு
கொலை கொள்ளை கற்பழிப்பை கூட
தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி – மதம்!

மனிதனை மனிதனாகவும்
மிருகமாகவும் –
வளர்க்கும் சக்தி – மதம்!

இறைவனை சென்றடைய
மனிதன் போட்டுக் கொண்ட
நெட்டை பாதை – மதம்!

காலம் திரித்த கயிறுகளில்
சரியும் சதியுமாய் –
முடைந்துப் போன விதி – மதம்!

வெறித் தனம் கொண்ட
மனிதர்களின் –
‘தான்’ னின் முழு அடையாளம் – மதம்!

மக்களை ஏமாற்றும்
வித்தை புரிந்த சாமியார்களுக்கு
உருவமற்று இயங்கும் ஆயுதம் – மதம்!

நல்லதை பேசி
கெட்டதை திருத்தியும் –
சில கெட்டதை விட்டெறியாததால்
மனிதனுக்குள்ளே மனிதன் கிழித்துக் கொண்ட
பிரிவுக் கோடு; மூட எல்லை – மதம்!

மனிதன் –
தன்னை உணரும் முன்னே
‘இவன்’ என்று முழங்கிக் கொண்ட
மதம் – மதம்!!
————————————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக