தமிழ் ஆள; தமிழ் பேசு..

ஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இதலாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும் நம்மிடையே இப்போதெல்லாம் எண்ணற்றோருக்கு உண்டு.

 
என்றாலும் மொழி வளர்ச்சி, வாழ்வுநிலை, சுற்றத்தார் பொருத்து மொழியும் பல மாறுதலுக்கிணங்க தானே திரிந்தும் கலந்தும் விடுகிறது. எனவே எதையும் முற்றிலும் தமிழில்லை என்று அகற்றிவிடலாமா? அல்லது தனித்தமிழ் அல்ல என்று ஒதுக்கலாமா? எல்லாம் தமிழ்தான் ஆயினும் கலப்புத்தமிழ் இல்லையா என்று வருந்தியே நகர்வதா???
 
இதெல்லாம் சமஸ்கிருத, ஹிந்தி மற்றும் பிற மொழிச் சொற்கள் அல்லது பிற மொழிக் கலாச்சாரத்தால் வந்த சேர்ப்புகள் இல்லையா ? என்றாலும், அனைத்து மொழிக்குமே தாய் ‘நம் ஆதி மொழி’ தமிழ் தான் என்பதிலும் எண்ணற்றோருக்கு உலகளவில் மாற்றுக் கருத்தில்லையே.
 
எனவே இதலாம் தமிழுக்கு பிறமொழிகளிடமிருந்து வந்துள்ளது என்பதை விட, தமிழிலிருந்து தான் பிற மொழிகள் வந்துள்ளன என்பதை உலகமே இதோ மெல்ல மெல்ல ஏற்று வருகிறது. இவ்வருட கனடா ஜப்பான் லண்டன் அமெரிக்கா வளைகுடா நாடுகள் என உலகளாவிய பல பொங்கல் தினக் கொண்டாட்டங்களும் அதற்கொரு சான்று.
 
என்றாலும் குழந்தைகளுக்கு பெயரிடுகையில், விளக்கமளிக்க அவசியமற்றவாறு தனித்தமிழில் மிக அழகாக எவ்வித சார்புமற்று வைக்கலாம். வெண்ணிலா, அறிவு, செல்வன், மதிநிறை, குறள், அருவி, மல்லி.. என்றெல்லாம்.
 
வெள்ளைக்காரர்கள் இப்படித்தான் அவர்கள் மொழிக்கு நிறைவாக, ஸ்டவ், ஸ்ட்ரீட், ட்ரீ, ஸ்டீல், கேவ், மூன், கேட், ஃபிஷ், ஜாஸ்மின், காட் என்றெல்லாம் வைக்கிறார்கள்.
 
நாம் கூட முன்பு இப்படியெல்லாம் வைத்திருந்தோம்; சிவப்பு, செவளை, கருப்பு, தேனு, அடுப்பு, பறி, சூரியன், சந்திரன் என்றெல்லாம் நிறைவாக நம் சொல்லினிக்க மொழியினிக்க வைத்திருந்தோம்.
 
ஏன்னா பெயர் என்புது ஒருவரை அழைக்க, குறிப்பிட என்றாலும் வாழ்நாள் முழுவதும் வெற்றி வெற்றி என்று அழைப்பதொரு போற்றுதலும் இல்லையா? தாத்தா போல வரவேண்டும், பாட்டி போல இருக்க வேண்டும், சூரியனைப்பொல ஒளிர வேண்டும், அருவி போல நிறைய வேண்டும் என பலவாறு எண்ணற்ற மேற்கோள்கள், எதிர்ப்பார்ப்புகள், நன்னெறி கொண்ட சிந்தனைகள், மொழிச் சீர் கொண்ட சொற்கள், பழவகைகள், தவிர நேர்மறை எண்ணங்கள் புக, வர, வளர என பல ஆழப் பார்வை பெயர் வைக்கையில் உள்நிறைவதுண்டு.
 
இடையே கூட ஒரு குழந்தைக்கு ‘மதிநிறைச் செல்வன்’ என்று வைத்தோம், அவர்கள் வீட்டில் மதி என்றழைக்கிறார்கள், அழைக்க ஏதுவாக இருக்குமென்று.
 
அப்படி மதி, குயில், அகில், முகில், குறல், வெள்ளி, வாணி, அருள், மணி, சுடர், பாரி, ஓரி, நீதி, கொடை, தனம், அன்பு, நதி, மணி, முத்து, மரகதம், பவளம், குழலி, எழிலி, குறளி, வெண்பா என எண்ணற்ற அழகிய தமிழ் சொற்கள் பெயர்கள் மிகச் சிறப்பாக நம்மிடையே உண்டு அவைகளையெல்லாம் நாம் பார்த்து பார்த்து வைத்து பழக பழக மேலுள்ள கலப்புவகைப் பெயர்களின் மீதான ஆசை தானே ஒழியும். பின் பழக்கமும் அங்ஙனம் மெல்ல மாறிவிடும்.
 
பிறமொழி புகுதலை தடுத்து நிறுத்துகையில் தான் நம் மொழியின் வளம் மிகப் பெருகும். இது நமது தமிழுக்கென்று மட்டுமல்ல அவரவர் தாய்மொழிக்கும் பொருந்தும்.
 
வெறுமனே, ஒரு எண்ண பறிமாற்றம் தானே மொழி என்றெண்ணக்கூடாது. தகவலறிவிக்கத் தானே என்று விட்டுவிடலாகாது தமிழை நம்மால். மொழி தான் நிலத்தை பிரிக்கிறது என்பார் ஐயா கவிஞர் வைரமுத்து.
 
அங்ஙனம் நிலம் பிரிகையில் இனம் மாறிவிடுமோ எனும் நெடிய பதட்டம் இருக்கிறது. சான்றுகளை நாம் பல மாநிலப் பிரிவுகளின் வழியே கண்டுதான் வருகிறோம். அன்று நாம் சேர்ந்து கட்டிய நதியிலிருந்து வரும் தண்ணீரின்று மொழிவாரியாக பிரிக்கப்படுகிறது.
 
ஆக, இனம் மாறிக்கொண்டால் பழக்கவழக்கங்கள் சிதையும். அல்லாது, வெற்றிக் குவிப்புகள் இடம் மாறிவிடும். வரலாறு பிழையாக பிழையாக பேசப் புறப்பட்டு விடுவர் பலர். எண்ணற்ற குழப்பங்கள் மொழி திரிவதால் காலமாற்றங்களிடையே நிகழ்ந்துவிடும்.
 
எனவே மொழிமீது அக்கறை கொள்ளுங்கள். அவரவர் மொழிமீது அவரவர் அக்கறை கொள்ளுங்கள். தெலுங்கு பேச சந்தர்ப்பமோ, ஹிந்தி பேச சூழலோ, ஆங்கிலம் பேச கட்டாயமோ இருப்பின் அங்கே கசடற பேசுவோம். பேச பயிற்சி எடுப்போம்.
 
பல மொழி கற்றுக்கொள்வது பல மனிதர்களை புரிய அணுக ஏற்க மறுக்க வாதிட சொல்லித்தர வணிகம் செய்ய தேவைப்படும். பிற மொழிகளை கற்றல் என்பது திறனைக் கூட்டும். அவர்களின் பண்பாடு, வரலாறு உயர் குறிப்புகள் என அனைத்தையும் அறியலாம் தவறில்லை.
 
ஆனால் எவ்வாறு அம்மொழிகளைக் கற்று மிக நேர்த்தியாகப் பேசுகிறோமோ; அங்ஙனம் நம் மொழியையும் அதன் செழுமையோடு பேசுவதும் உச்சரிப்பதும் எழுதுவதும் பகிர்வதும் இன்றியமையாத ஒன்றாகும். எம்மொழியும் செறிவோடு பேசுகையில் கேட்கையில் அழகு தாம்.
 
ஆயினும் நமக்கு, நமது தமிழ் மிகச் சிறப்பான ஒரு மொழியாகும். மூப்பு நிறைந்த நமது மொழியை பிற மொழிகளைக் கலந்து சிதைப்பது நல்ல அறிவன்று. நீங்களே அதை தனித்து தமிழில் பேச பேச முற்றிலும் உணர்வீர்கள்.
 
எனவே முதலில் நேரம் சொல்வதில், வழி சொல்வதில், பெயரிடுவதில், தொழில் துவங்குவதிலிருந்து துவங்கி மிக இயல்பாய் நம் எளிய தமிழில் பேசிப் பழகுங்கங்கள். குட்மார்னிங், சாரி, தேங்க்யூ, சன்டே மன்டே, டுமாரோ வில் சீ, பை த பை, பட்(டு), நோ, யெஸ், லெப்ட்ல போ, ரைட்ல போ, ஸ்டாப், டேஸ்ட்டி போன்ற அனைத்து சொல்லாடல்களையும் தூக்கி குப்பையில் எறியுங்கள். இவைகள் தான் இன்றைய முழுச் சான்றுகள் நாம் நமது அழகு தமிழை எவ்வாறு சிதைத்துவைத்துள்ளோம் என்பதற்கு.
 
எனவே அங்கிருந்து துவங்கி எங்கும் நிறைந்த மொழி யெம் தமிழை ஒரு தமிழரின் மரபு அறிய, மறம் உணர்த்த, மாண்பு நிலைக்க தூக்கி பிடித்திருப்போம். தவறில்லை. மெல்ல மெல்ல வெறியின்றி குழப்பம் விடுத்து தெள்ளு தமிழில் பேசி நமக்குள் நாம் மகிழ்வோமே உறவுகளே.
 
தவறாக எண்ணாதீர்கள், இதலாம் என் அறிவிற்கு பட்டது. எல்லாம் சரியென்றில்லை. பிற கருத்துக்களும் அமையலாம். அவரவர் கருத்தை நான் ஏற்க தயார் எனினும் தமிழ் நம் மூலம் என்பதை எல்லோருமே அறிகிறோம், பிறகதை அழகுற பேசுவதற்கு, பெயர் சூட்டுவதற்கு தமிழை எப்போதும் நம் இனியதொரு அடையாளமாக வைத்திருப்பதற்கு தயங்குவானேன்.
 
குறைந்த பட்சம் வீட்டில் பிறமொழி கலப்பின்றி பேச முயலுங்கள். நண்பர்களோடு உறவினர்களோடு அக்கம்பக்கம் பழகுகையில் தூய தமிழ்பேசி பழகுங்கள். குழந்தைகள் நம்மிடம் பேசுகையில், குழந்தைகளிடம் நாம் பேசுகையில், குழந்தைகள் பிறரிடம் பேசிப் புழங்குகையில் பிறமொழி கலவாமல் பேசச் சொல்லிக்கொடுங்கள்.

குழந்தைகள் நம் வரம். தமிழ் அவர்களுக்கு நாம் தரும் பெரிய வரம். அதை உடைக்காது தருவோமே? எனக்கு நம்பிக்கையுண்டு; இப்போதெல்லாம் நம் மக்கள் மிக அறிவாக செறிவாக பாரம்பரியம் கெடாது வாழத்துவங்கி விட்டனர். எனவே தமிழையும் அழகாக உணர்வோடு சேர்த்து கலப்பின்றி பேசி மகிழ்வரென்று எனக்கு பெரிய நம்பிக்கையுண்டு.

என்றாலும் ஒன்று உண்மை. மொழி சார்ந்து நாமெல்லாம் சிந்திக்க பழகிவிட்டோம். இனி; நம் காதுகளில் பேசக்கேட்கும் பேசப்படும் தமிழும் மேலும் இனித்துவிடும் என்பது சத்தியம்.
 
அதற்கு நன்றி. வணக்கம். வாழ்க!!
 
வித்யாசாகர்
 
குறிப்பு: நீ முதல்ல வித்யாசாகர்ன்ற பெயரை தமிழ்ல வையிடான்னு திட்டிடாதீங்க. ஒன்று; வித்யா என்பது அன்று என் இறந்த தங்கையின் பெயர். அதனால் இன்று எனது மகளின் பெயர். எனவே அஃ தென் பெயரும் கூட.
 
எல்லாவற்றையும் விட, அறிவுக்கடல்னு தமிழில் வைத்தால் மிக அதீதமாகிவிடலாம். நான் கடல் அல்ல; நீங்களெல்லாம் கலந்திருக்கும் கடலின் ஒரு துளி..🌿
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

26, “விசுவாசம்” எனுமொரு திரைத் தென்றலின் தாலாட்டு (திரை விமர்சனம்)

ரு திரைப்படம் மனதை நேர் அலைவரிசைக்கு மாற்றுமெனில் அது சமூகத்திற்கான கலைச்சேரல் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு நடிகரை அப்பாவாகவும், ஒரு நடிகையை அம்மாவாகவும், ஒரு குழந்தையை தனது மகளாகவும், பார்க்க இடம்தருமொரு மூன்று மணிநேரத்தை வெறும் பொழுதுபோக்காக கருத இயலவில்லை.

வாழ்வின் அதிசயங்களை மட்டுமே காட்டும் பல கதாநாயகர்களுக்கு மத்தியில் குடும்பத்தின் உறவுகளை தனது தமிழ்மரபு குறையாது அறிமுகப்படுத்துமொரு கதைச்சித்திரத்தின் தந்தையாக பார்க்க கிடைத்த திரைப்படம் இந்த விசுவாசம். இது வெறும், திரைக்கலையின் மகிழ்ச்சியை மட்டும் தந்து முடியவில்லை, ஒரு சமூக மாற்றத்தின் பொறுப்பையும் எடுத்து தனது தோள்மேல் சுமந்துக்கொண்டு நல்ல குடும்பத்தின் கதையாக நகர்கிறது.

நாம் கண்ணெதிரே காணும் பல அறத்திற்கு முரணான அநீதிகள் நேரும் இடத்திலெல்லாம் ஒரு நாயகனோ நாயகியோ அதைத் தட்டிக் கேட்கையில் உள்ளூர நமக்கென்று ஒரு ஆனந்தம் பொங்குவதைப்போலத்தான் இந்த “விசுவாசம்” திரைப்படத்தைக் காண்கயிலும் நம் குடும்பத்துள் நாம் செய்யும் அறத்திற்கு புறம்பான செயல்களைக் கண்டு நமக்குள் நாமே பல திருத்திற்கான கேள்விகளை கேட்டுக்கொள்வதற்கான அவஸ்தையை நடிகர் திரு. அஜித் அவர்களின் நடிப்பும், அந்த அருமை மகள் சுவேதாவின் நடிப்பும் உணர்த்துகிறது.

ஒரு மகள் தனது அப்பாவையே அங்கிள் என்று அழைக்கும் வலி என்பது தாய் தனது பெற்ற மகன் எட்டி உதைக்கையில் சுமந்த வயிற்றில் வலிக்கும் வலியைப்  போன்றதொரு வலியாகும். அது இன்றும் எண்ணற்ற எனது “வெளிநாடுகளில் பொருள் ஈட்டச் சென்று வருடங்கள் பல கழித்து வரும் சகோதரர்களுக்கு” இருப்பதுண்டு.

இப்படத்தின் கதையோட்டத்தின் படி, மனைவி தனது கணவனிடம் கோபித்துக்கொண்டு மும்பைக்கு சென்று விடுகிறாள். அங்கே அவளும் வளர்ந்து, தனது மகளையும் வளர்த்து பெரியவளாக்கி வைத்திருக்கும் பத்து வருடங்களுக்கும் அவளுடைய ஆசைக் கணவனை கோபத்தினால் விட்டுப் பிரிந்திருக்கிறாள். அந்த பத்து வருடத்திற்கும் தனது மனைவியின் உணர்வை மதிக்கும் நல்லவொரு ஆண்மகனாக நாயகன் “தூக்கு துரையும்”  அவளை நேரடியாக நெருங்காமல் தூரத்திலிருந்தே அவர்களை கண்டு காத்து வாழ்கின்றான்.

இது ஒரு திரைப்படம் தான் என்றாலும், அவ்வாறு ஒரு ஆண்மகன் பெண்மையை மதித்து பண்போடு நடந்துகொள்வதும், ஒரு அப்பாவாக தூரத்திரிலிருந்தே அவர்களைப் பார்த்துக்கொள்வதும் காண்பதற்கு நிறைவாக  அமைந்திருக்கிறது. அப்பா அம்மா மகள் மூவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கியிருந்தும் ஒருவரை ஒருவர் மனதால் மட்டுமே கண்டுகொண்டு உலகின் பார்வைக்கு விலகியே இருப்பதை காண்கையில் மனது துடிதுடித்துப் போகிறது.

அதற்குப்பின் வரும் காட்சிகளில் தனது மகளைக் காப்பாற்ற வேண்டியதொரு கட்டாயம் வருகையில் அவன் தனது மனைவியின் கோபத்தையும் மதித்துக்கொண்டு, அவளுக்கு மறுப்பேதும் காட்டாமல், கணவன் எனும் திமிரை தொலைத்தவனாய், ஒரு பெருந்தன்மையின் சாட்சியாக அவளுடைய வீட்டிலேயே அவனது மகளுக்கு காவலனாக வேலைக்கு சேர்கிறான்.

பல இடத்தில அவன் சூழ்நிலை கைதியாகிப் போகும் காட்சிகளிலெல்லாம் நமது வாழ்வின் பல படிநிலைகளை நாம் எவ்வாறு கிடக்கிறோம், எவ்வாறு இருத்தல் சிறப்பெனும் ஒரு யோசனையோடு சற்று திரும்பிப் பார்க்கவைக்கிறது இத்திரைப்படம்.

எப்படியோ ஒரு கட்டத்தில் மகள் ஸ்வேதா அவனிடம் நெருங்கிப்பழக, அவளின் விருப்பம் தேடி தேடி அவளோடு அவன் ஊர்சுற்றும் தெருவெல்லாம் தனது மகளே அவளுடைய தந்தையைப் பார்த்து அங்கிள் அங்கிள் என்று அழைப்பதும், அவள் அங்கிள் அங்கிள் என்றழைக்கும் போதெல்லாம் அவன் கலங்குவதும், ஒரு கட்டத்தில் அவனிடமே அந்த மகள் சென்று என்னோட அப்பாவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று சொல்லுகையில் ஒரு தந்தை அடையும் தாய்மையின் வலியை திரைப்படத்தின் வழியேகூட நம்மால் காண இயலவில்லை.

ஆங்காங்கே மனதின் உணர்வாக எழும் மிக அழகிய உயிர்ப்பூட்டும் இசைப் பின்னணியில் உள்ளூர நிறைந்துநிற்க பல காட்சிகள் இப்படத்தில் உண்டு.  நெடுநாளைய நினைவிற்கு வேண்டி ‘அப்பா மகள் கதையாக’ இப்படம் மனதுள் சிம்மாசனமிட்டுக் கொள்கிறது. மிக முக்கியமாக ஒவ்வொரு உணர்வையும் காட்சிப்படுத்தியது மிக அழகு.  ஒவ்வொரு பிரேமிலும் தெரியும் அழகிய தேனியின் இயற்கை வளங்களெல்லாம் பச்சை பசேலென படத்திற்கு ஒரு கூடுதல் பலத்தை ஏற்படுத்திவிடுகிறது.

உண்மையில், இப்படத்தில் ஒரு மகளாக ஸ்வேதா நடித்தது சிறப்பா, ஒரு அம்மாவாக நயன்தாரா நடித்தது சிறப்பா, ஒரு அப்பாவாக அஜித் நடித்தது சிறப்பா இருக்க கேட்டால் நம்மால் எவரையும் குறைத்துச் சொல்வதற்கு இயலாது. என்றாலும் வெகுநாட்களுக்குப் பிறகு ‘வானத்தைப்போல’ ‘சின்ன கவுண்டர்’ ‘நாட்டாமை’ மாயி’ எனும் பல கிராம திரைப்படங்களின் வரிசையில் ஒரு அருமையான மனிதரை’ சிறந்தவொரு அப்பாவை’ நம்மால் இப்படத்தில் பார்க்கமுடிகிறது எனில் அதற்கு நடிகர் அஜித்தின் நடிப்பும் சிரிப்பின் அழகும் மட்டுமே காரணம் என்பதும் தீராத உண்மை. அந்த மீசையை நிச்சயமாக ஒவ்வொரு மகள்களுக்கும் அப்பாக்களின் மீசையாகப் பிடிக்கும் என்பதும் உண்மை.

நடிப்பென்று மட்டுமில்லை, ஆங்காங்கே வரும் துள்ளலான நடனமாயினும் சரி, சிரிப்பாயினும் சரி, அழுவதாயினும் சரி, சண்டைக்காட்சியிலும் கூட அப்பட்டமாக கதாநாயகனின் அத்தனை நடிப்புத் திறத்தையும் முழுமைபடுத்தி தந்திருக்கிறார் நம் நடிகர் அஜித். கண்டிப்பாக, இப்படத்தின் இயக்குனருக்கு ஒரு பெரிய நன்றி கூறல் உண்டு. இசைக்கு, மிக முக்கியமாக பாடகி சிரேயா கோஷ்வால் உச்சரிக்கும் பாடலின் சொற்களுக்கும் ஒரு ஆகா ஓகோ போடலாம் தான். பாட்டுகள் எல்லாமே கதையின் நரம்பாக சதையாக திரைக்கதையுள் ஒட்டியுள்ளது.

மிக தரம் மிக்க வசனங்கள் இப்படத்தில் பாராட்டத் தக்கவை. “தாயை மதிக்காதவன் முன்னேறியதாக சரித்திரமே இல்லையம்மா” என்று மக்களிடம் அப்பா சொல்லிகொடுத்து தனது மனைவியை மதிக்கச் செய்வதும், இது வரை நீ சாரி சொன்னதே இல்லையேம்மா, இருந்தாலும் என்ன மன்னிச்சிடும்மா என்று மகள் கேட்டு தனது தந்தையின் குணத்தை தாயிற்கு காட்டுவதும், மிக அழுத்தமாக ஒரு இடத்தில் அஜித் வந்து “மனைவியை மதிப்பது இயல்பு, மனைவி திட்டுவதோ  பேசுவதோ முரண் இல்லையே அதுகூட இல்லத்தின் ஒரு அறம் தானே” என்பதெல்லாம் அப்பப்பா மனதுள் நன்னெறியை விதைக்கிறது.

ஒரு காலம் தராத அறிவுகளை; அந்த காலத்தைக் கற்றுக்கொண்டு, பின் அதை கதையாக்கி, கதைகளை காட்சி படுத்தி, உணர்வோடு நாம் திரைவடிவில் செல்லுகையில்; அது கேட்ப்போருக்கு பார்ப்போருக்கு நேராக உணர்வின் வழியில் புரிகிறது. இறுதி காட்ச்சியில் இயக்குனர் மொத்த படத்தின் சாராமே “குழந்திகளை குழந்தைகளாக வளருங்களேன்” அவர்கள் அவர்களாக வளரட்டுமே” என்று தைப்பப்படத்தை முடிக்கையில், பரவாயில்லையே ஒரு நல்ல திரைப்படத்திற்கு குழந்தைகளோடு பார்க்கவந்தோமே என்றும் ஒரு நிறைவு வருகிறது.

மிக குறிப்பிட்டு சொல்ல எண்ணற்ற காட்சிகள் இப்படத்தில் உண்டு என்றாலும், கதைகளை மொத்தமாக இங்கு நான் சொல்லிவிட்டு உங்களை திரையரங்கிற்குள் வெற்று மனநிலையோடு விட்டுவிட மனமின்றி மெல்ல நகர்கிறேன்.

ஒரு திரைப்படத்தைக் கண்டுமுடிகையில்; அப்படத்தின் வில்லனை கூட உங்களுக்கு பிடித்துவிடும் என்றால் அது உண்மையிலேயே இத்திரைப்படமாகத் தான் இருக்கும், எனவே ஆங்காங்கே இருக்கும் சில குறைகளை நான் பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை.

மிக சுருக்கமாகச் சொன்னால், தன் மகளைக் கொஞ்சிக்கொண்டு, அவளை மட்டும் அவளின் கோபத்தோடு’ அடத்தோடு’ திமிரோடு’ விளையாட்டோடு’ சோம்பேறித்தனத்தோடு ஏற்றுக்கொள்ளும் அப்பாக்களுக்கு, அதே அப்பா ஸ்தானத்தில் இருந்து அவர்களின் மாமனாரின் மகள்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ளச் சொல்லும் மிக சிறப்பான திரைப்படம் இந்த “விசுவாசம்”.

மிக நல்ல சண்டைக்காட்சிகள், இரம்யமான இசை, நேர்த்தியான வடிவமைப்பு, சிறந்த திரைக்கதை, அருமையான வசனங்கள், ஆனந்தம் சூழ்ந்தவொரு குடும்பத்தின் காதல், மிக நெருக்கமான உறவுகளின் ஈர்ப்பென; நல்லதொரு திரைப்படத்தை வழங்கிய இயக்குனர் திரு. சிவா, சகோதரர் இமான், நடிகர் அஜித், நடிகை நயன்தாரா, சிறந்த நடிகை சுவேதா, ஐயா தம்பி ராமையா, சகோதரர் ரோபோ சங்கர் மற்றும் அனைவருக்கும் தைப் பொங்கலின் இனிப்பு வாழ்த்தும் வணக்கங்களும்!!

வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மழைநேரத்து நன்றி.. (வெளிநாட்டுவாழ் தமிழர்கள் சார்பாக )

கண்ணீரை வெல்லும் வானம்பாடிகள்.. (வெளிநாட்டு வாழ் தமிழர்கள்)

 

 

 

 

 

 

 

 

கூடுகளைத் தேடாமல் சிறகுகளுக்குள் அடங்கிக்கொண்டவர்கள் நாங்கள். கதகதப்பிற்கு மாறாக நெருக்கத்தின் வெப்பத்தால் தகித்தாலும் ஒற்றுமையெனும் வலிமைக்காய் கைகால் முடங்கிக்கொண்டு லட்சிய முழக்கத்தை நிறுத்திக்கொள்ளாத நெறியுள்ள வானம்பாடிகள் நாங்கள். எங்களுக்கு கனவு பறப்பதாக இல்லை வாழ்வதாக இருக்கிறது, ஆம் அது எல்லோருக்குமான வாழ்வு.

சிக்கி தவித்து துடித்து பசியில் வாடி, ஏழ்மையில் நலிந்து, எதற்கும் விலைபோனவர்களாய் வாழும் இலவச விரும்பிகளான எம் சமுதாயத்திற்கு ஓர் விடிவு வேண்டும். நாங்கள் சிறகடித்து பறக்கும் வானத்தைப் பற்றி பேசுவதேயில்லை, பசியை எல்லோருக்கும் போக்கிடாத கனவுதனை தீதென்று எண்ணி அஞ்சுகிறோம்.

ஆதி மனிதர்களான நம்மிடம் எல்லையற்ற பலமும் அறிவும் இருக்கிறது, மரபூரிய மாண்பும் மறமும் விஞ்சியிருக்கிறது, ஆயினும் ஏன் எங்குக் காணினும் இரண்டாம் பட்சமாய் எட்டித் தள்ளப்படுகிறோம்? எட்டித் தள்ளியப்பின்னும் எதற்கு அஞ்சி நிற்கிறோம்? யார் எம் சிறகுகளை உடைப்பவர்? கனவுக்கு துயிலும் தூக்கத்தை எம் விடுதலையோடுச் சேர்த்து, கொண்டுபோனவர் எவர்? எமக்குத் தெரியும்’ யாருமில.

ஆம்; யாருமில எமை வஞ்சித்தவர். எங்களை எம்மினத்தை யாராலும் தோற்கடிக்கவோ ஏமாற்றவோ முடியாது, ஆனால் தோற்க எங்கோ பிசகி எப்படியோ நாம் தயாராகிவிட்டோம். ஏமாற ஏனோ சம்மதித்து சம்மதித்து பெரியதொரு சதியின் பள்ளத்தில் விழ தானே பழகிக்கொண்டோம். அதிலிருந்து நாமெல்லாம் வெளியே வருகையில், தம் எண்ணத்துள் தாம் வென்றுநிற்கையில் எமது அடுத்த தலைமுறைக் குஞ்சுகள் நாளை விண்ணில் தானே பறக்கத் துவங்கிவிடும்.

எனவே நாங்கள் எங்கள் தூக்கத்தைத் தொலைத்து எமது தலைமுறையின் கனவுகளுக்கு விடைதனை தேடி கடல் தாண்டி அலைகிறோம். எமது விடுதலை இதோ எங்களின் சட்டைப்பையில் உண்டென்று எங்களின் பிள்ளைகள் நம்பும் புள்ளியில் எங்களின் ஏக்கங்களுக்கும் நாளை சிறகு முளைத்துவிடும்.

அதற்குச் சான்றாகத்தான் நாங்கள் கூடுகளாய்ப் பிரிந்துகொள்வதில்லை. மாறாக ஒற்றைக் கூட்டிற்குள் அடங்கிப் போகிறோம். ஏதோவொரு நாட்டிற்குள்ளும் தமிழர்களாக மட்டுமே அடையாளப் படுகிறோம். அந்த தமிழரெனும் கூட்டிற்கு குச்சிகளை தேடியலைந்து தங்கக் கம்பிகளை முடைந்துவிட்ட எங்களின் சேர சோழ பாண்டிய மன்னர்களான பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நன்றி.

ஏதோ முடிந்தது வாழ்வென ஓய்ந்துவிடாமல் எப்பொழுதும் உழைப்பு உழைப்பு வெற்றி வெற்றி என்று நாடு நாடாக தேசம் தேசமாக ஓடி ஓடி எங்கும் எப்பொழுதும் எதற்கும் தளர்ந்து நின்றுவிடாமல் உழைத்து உழைத்து முன்சென்ற எங்களின் கனவுத் தொழிற்சாலைகளுக்கும், அனைத்து வியர்வை வைரங்களுக்கும், எங்களன்பு உழைப்பாளிகளான மொத்த வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கும் இந்த மழைநேரத்து உதவிக்கான மாண்பு சொறிந்த நன்றி. வெறும் குச்சிகளை தங்கக் கம்பிகளாக்கிய பல தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் நன்றி.

வெறும் நன்றியோடு நிற்பதெங்கே, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமைத் தேரிழுப்போம். மழை வெள்ளம் இடி மின்னல் எது வரினும் நாம் ஒன்றே என கூடி நிற்போம். நம்மில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளெல்லாம் இடிந்துபோகட்டும் இனி. அன்புத் தீயிட்டு எரிப்போம் தீயெண்ணத்தை. அதில் சாதித் திமிரது இருந்தாலும் பொசுங்கிபோகட்டும். வானத்து விண்மீன்களை இழுத்து எம் வரிகளுள் கட்டிவைப்போம். காதலர்கள் கைகோர்த்துச்செல்கையில் பின்னே வண்ணங்களாய் மின்னட்டுமந்த விண்மீன்களெல்லாம். வாழ்க்கையை மிக அழகியலோடு வாழ்வோம், வருங்காலதிற்கு நல்லதாக நம் வரலாறு மிஞ்சட்டும் தோழர்களே..

வாய்மையையும் உழைப்பையும் அறத்தையும் ஒவ்வொருச் சொல்லுக்கும் போற்றுவோம்; வாழ்ந்தவர் தமிழரென்று இந்த உலகம் தானே நமை அடையாளங் கண்டுக்கொள்ளட்டும். அன்று பறக்கும் தமிழரின் வெற்றிக் கோடிக்கு மகிழ்ச்சியின் வண்ணங்களும், இனி நாம் ஒற்றுமையில் தோற்காத ஒற்றை நிறமுமே பூசப்பட்டிருக்கட்டும்.

வாழ்க எந் தமிழர்தம் நாடு; வளர்க எம்மக்கள்..

அன்புறவுகள் அனைவருக்கும் வணக்கம்!!

வித்யாசாகர்
மாதவரம், சென்னை

Posted in வாழ்வியல் கட்டுரைகள்!, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

போர்களத்தில் ஒரு திருமணம்.. (அணிந்துரை)

004

ரு பகைக் கொண்டு மனிதரைக் கொல்வாய்
விலங்குகளையும் மனிதரென வெட்டுவாய்
பொருட்களை ஒழிப்பாய்
எல்லாம் ஒழிந்து தனியே நிற்கையில்
தனிமை உனைக் கொன்றொழிக்கும்,
உள்ளேயொரு மனசு எதற்கோ வீறிட்டு அழுகையில்
உடம்பெல்லாம் ஒரு கேவு கேவும்
கதறியுனை அழச் சொல்லும்,
தனியே வாழ்தல் வாழ்தலல்ல, உயிர்த்திருத்தல்
மட்டுமே அது.,
தனித்திரு, மனதால், ஆசையொழிய தனித்திரு அது வேறு
ஆனால் நீ மகிழ்கையில் மகிழ, வெல்கையில் உனக்குக் கைத்தட்ட
கூடயிருந்து உன்னோடு பூரிப்படைய இந்த மனிதர்கள் வேண்டுமென்பதை உணர்த்திய சில போர்கள் உண்டு.

நடக்கும் அத்தனைப் போரும் வெற்றியை ஈட்டுபவை மட்டுமல்ல. சிலது வேதாந்தம் போதித்தவை. சிலது காவியத்தை படைத்தவை. சிலது கண்ணீர் கதையெழுதிச் சென்றவை. அப்படி நடக்குமொரு போரில் கற்ற வேதாந்தமாய்த்தான் இந்த நாவலையொரு திருமணத்தை மைய்யப்படுத்தி கதையினூடாகவொரு வரலாற்றை நினைவுபடுத்தும் சிறப்புமிக்கதொரு சாதனைக் கதையை தந்திருக்கிறார் திரு. எச். ஜோஸ்.

சிலருடன் பழக பழகத்தான் அவர்களுடைய இனிப்பை அருங்குணத்தை உணரமுடியும், சிலரைப் பார்த்தாலே இனிப்பாய் தெரிவர், சிலரைப் படித்தால் அவருடைய மனசு புரியும், அத்தகு வடிவில் கதையினூடே நமக்கும் தனது மனதைத் திறந்து காட்டுகிறார் திரு. ஜோஸ் எனும் இப்புதிய படைப்பின் கதையாசிரியர்.

ஒரு புதிய படைப்பாளியின் முதல் புத்தகம் இதுவென்றுச் சொன்னால் அதை அறவே நம்புவதற்கில்லை. பிறக்கும் குழந்தை ஞானியாகவே பிறப்பதைப்போல முதல் படைப்பையே இத்தனை பேராற்றல் கொண்ட எழுத்து நடையோடு தந்து நமக்கெல்லாம் ஒரு பெருநம்பிக்கையை தந்திருக்கிறார்.

கதை சொல்வது ஒருபாங்கு. கதை சொல்ல இவர் வேண்டுமென்று எழுத்தே ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்வது ஒரு வரம்; அப்படி இவர் தமிழுலகம் தேடிய ஒரு வரமென்றே சொல்ல மனம் விழைகிறது முழு நம்பிக்கையோடு. காரணம், சாண்டிலியன், கல்கி போன்றவர்களின் வரிசையில் வரும் பல படைப்பாளிகளை படித்தவர்கள் உணர்வர் இவருடைய நாவலின் நடையழகையும் பெயர்கள் சூட்டியுள்ள தனித்தன்மையையும் பற்றியெல்லாம் என்பதே உண்மை.

எனக்கொரு கவலை இருந்துவந்தது, கதைச் சொல்லிகள் குறைகிறார்களோ என்றொரு மனக்கவலையாக அது இருந்தது. அதுபோல் எனக்கு நெடுநாளாகவே யொரு ஆசையும் இருந்தது எப்படியேனும் ஒரு வரலாறுக் கதையெழுதி விடவேண்டுமென. மண்ணின் வரலாறுகளையும், சென்னைப் போன்ற பெருநகரங்களின் கதைகளையும், உள்ளது உள்ளபடியும் வாழ்ந்ததை வாழ்ந்த படியும் எழுதவெல்லாம் எனக்கு நிறைய ஆசை உண்டு. ஆயினும் பல வேலைகளின் பொருட்டும் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள இயலாமையினாலும் என்னால் அவைகளை இதுவரை தீர செய்திட இயலவில்லை. ஆனால் தம்பி திரு. எச். ஜோஸ் அவர்கள் அந்த குறையை ஒருபாதி போக்கும் விதமாக ஒரு வரலாற்றுக் கதையைப்போலவே தனது கற்பனை வளத்தின் மூலம் சிறந்ததொரு நடையில் இந்த எழில்மிகு வர்ணனைகள் கூடிய இந் நாவலை நிகழ்காலத்தில் நாம் நம் கண்ணில் காண்பதுபோலவே ஒவ்வொரு காட்சிகளையும் வனப்பு குறைவின்றி எழுதிக் காட்டியிருக்கிறார்.

ஒரு தனக்கான படைப்பாளியை தானெ தேர்ந்தெடுத்துக் கொள்வதென்பது தமிழுக்கே உள்ள மகதுவம் ஆகும். நாம் உணர்வோடு எழுதத் துவங்கினால் நமைக்கொண்டு ஒரு காலதவத்தையே எழுத்திற்குள் தீர்த்துக்கொள்ளும் மகத்துவ மொழி; தமிழ். அப்படிப்பட்ட இனிய தமிழ் இவர்மூலம் நம்மிடம் ஒரு நல்ல கதையைப் பேசுகிறது. ஒரு இனிய தமிழ் நடையை நமக்கு தரிசிக்க தருகிறது. அத்தகு பிரம்மாண்ட எழுத்து நடை இவருடைய எழுத்து நடை. அழகான பண்பு நிறைந்த கதைத்துவம் இவரிடம் உண்டு. நான் இடையிடையே சொலவதுண்டு ஐயா கல்கியின் ஆவி பிடித்துக் கொண்டதோ உன்னையென்று; வேண்டுமனில் பாருங்கள் இது முகம் நோக்கி பேசல் அல்ல, இது என் வாக்கு. எதிர்காலத்தில் பெருமைப்படத் தக்க ஒரு நல்ல படைப்பாளியாக இவர் திகழ்வார் என்பது திண்ணம். இப்படைப்பும் அதற்கேற்ற பல விருதுகளையும் பெருமைகளையும் அடையும் என்பதே நம்பிக்கை.

தமிழுலகம் பெரும்பேறு பெற்ற மண். இங்கே துளிர்ப்பவர்கள் உலகத்தை நோக்கியே பயணிக்கின்றனர். உலகத்திற்காகவே உருகி பல படைப்புக்களை படைக்கின்றனர், அப்படி இவருடைய பயணமும் உலகளவில் நீளும், நமது தமிழ் மண்ணிற்கு ஒரு சிறந்த படைப்பாளியாக வாழும் வரலாற்று கதைச் சொல்லியாக இவரும் திகழ்வாரென்பது எனது ஆழமான எதிர்ப்பார்ப்பு. அதற்கான என் முழு வாழ்த்தும் ஆசியும் அருமை தம்பிக்கு உண்டு. வாழ்வாங்கு வாழட்டும் பல வராறுகளை படைக்கட்டுமென வாழ்த்தி., தமிழாளை வணங்கி, அவரின் எழுத்தை மதித்து, உங்களையும் நாவலுக்குள் புக பதிப்பாளனெனும் உரிமையோடு உள்ளழைக்கிறேன். நன்றி. வணக்கம்.

மானுட கருணையின் பேரன்போடு..

வித்யாசாகர்
பதிப்பாசிரியர், முகில் பதிப்பகம்.

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பூகோளத் துண்டுகளும் ஒரு விஞ்ஞானக் கவிஞனின் பார்வையும்..

image

லகின் வெவ்வேறு நிலங்களில் விழும் மழைத்துளிகளைப் போல, ஆங்காங்கே அந்தந்த நிலத்தின் நீதிக்கேற்ப ஒரு புரட்சியும், அந்தப் புரட்சியை நிலமெங்கும் பரப்பி வெற்றியை நாட்ட ஒரு கூட்டமும், அந்தக் கூட்டத்திற்கு கண்ணியம் மிக்க ஒரு தலைவனும், அந்தத் தலைவனிலிருந்து தொண்டன் வரை போராட உந்துசக்தியைப் பாய்ச்சும் பல உணர்வுப்பூர்வமான படைப்பாளிகளும், அந்த படைப்பாளிகளின் எழுத்திலிருந்து நெருப்புக்குஞ்சாக எழுந்துநின்று உண்மைதனை உறக்கக் கத்திச்சொல்ல ஒரு சில சொற்களும், சொல்லுள் நின்று இந்த சமுதாயத்தையே புரட்டிப்போட சில எழுத்துக்களும், எழுத்துக்களை ஆயுதமாய் ஏந்தியே தனது வாழ்நாட்களை இந்த மண்ணிற்காகவும் தனது மக்களுக்காகவும் வாழ்ந்தது தீர்க்கும் சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் காலங்காலமாய் நமக்காக பிறந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எழுத்தென்பது விதைநெல்லை போன்றது. ஆலமரத்தின் ஆயிரம் விழுதுகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறு விதையினைப் போலத்தான் எழுத்தும் தனக்குள்ளே பல வீரிய வெற்றி மரங்களையும், காடுகளையும், எத்தனைப் பேர் வந்து திறந்தாலும் தீர்ந்திடாத பல மர்மங்களையும் உள்ளடக்கிகொண்டுள்ளது.

எழுத்தை வெறும் ஒரு புத்தகமாக கடந்துப்போதல் தீது. அறிவின் பொக்கிஷம் புத்தகம் என்ற்றிதல் வேண்டும். உணர்வின் மொத்த கலைவடிவமாகவும் இலக்கிய வெளித்தோன்றல்களாகவுமே புத்தகங்களைப் பார்க்கவேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக எழுத்தென்பது அனுபவங்களின் கூட்டுச் சோறு. நடந்த வரலாற்றின் சுவடுகள் பதிந்ததும் நடக்கவிருக்கும் எதிர்காலத்து கற்பனையுமாய் நமக்கு கிடைக்குமொரு அரிய பொக்கிஷம் தான் ஒவ்வொரு புத்தகமும் எனும் மதிப்பு நமக்குள் மேலோங்கி நிற்கவேண்டும்.

அவ்விதத்தில், இதுவரை இங்கிருந்து ஒருவர் வந்துவிடமாட்டாரா எனும் நம் போன்றோர்களின் ஏக்கத்தை ஒட்டுமொத்தமாய் தீர்க்கும் பொருட்டு தமிழிலக்கியத்தின் வரப்பிரசாதமாக வந்தவொரு படைப்புதான் இந்த “விழித்தெழுக என் தேசம்” எனும் ஐயா திரு. ஜெயபாரதனின் கவிதைத் தொகுப்பு.

நிலா என்பதைப் பெண்ணாகவும், நதி என்பதை காதலியாகவும், மழை என்பதை கதைகளோடும் கண்ட நமக்கு, மழையை மழையாகவும் நிலவை நிலவாகவுமே அறிவியல் கண்கொண்டுப் பார்க்கும் ஒருவரின் சிந்தனைக்கு தமிழால் வாரித்தந்த பரிசுக் குவியல்கள் தான் இப்படைப்பு. எரிமலையை கவிதையினால் குடையும் சக்தியும், அதன் மூலத்தை தேடும் அறிவும், கடகரேகை மகரரேகைகளை காதல் போலவும் காதலியினுடைய முத்தத்தின் இனிப்பினோடும் பார்க்கும் தெளிவு இப்படைப்பின் அதிகார உச்சமாகும்.

இணையங்களில் கவிஞர் திரு. ஜெயபரதன் அவ்வப்பொழுது அறிவியல் பற்றிய ஏதோவொரு படைப்பைக் கொண்டுவந்து “இது நியுட்ரின்” “அது பாஸ்டரின்” “இது மூலக்கோடு” “அது முதல்சுற்று” “இங்கே பூமி இப்படி இருக்கும்” “அங்கே நட்சத்திரங்கள் அப்படி இயங்கும்” என்றெல்லாம் அறிவியல் சார்ந்த புதிரான பல கட்டுரைகளை கவிதைகளை பதிவிடும்போதெல்லாம் எங்கோ நீரின்றி பாலைவனங்களில் திரிபவனுக்கு திடீரென வானம் பிளந்து மழை சோவெனப் பெய்ததைப் போலவொரு ஆதிமொழியின் அறிவியல் வளங்கண்ட பெருமை மனதுள் நிறைவதுண்டு. அப்படிப்பட்ட அவருடைய இப்படைப்பிற்கு அணிந்துரை எழுதுவது என்பதே ஆங்கிலம் பயின்ற யானையிடம் சென்று தமிழில் உன் பெயரென்ன என்று கேட்பதற்குச் சமம் தான். என்றாலும், அத்தனை அறிவிற்கு வலிக்காமல், மிக எளிமையாகப் படித்து நகர்ந்துகொள்ள, சீராக அறிவியல் கூறுகளைப் பற்றி புரிந்துக்கொள்ள ஏதுவாகவே எண்ணற்ற கவிதைகள் அமைந்துள்ளது என்பதும் இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பாகும்.

அணு ஆயுதம் சக்தி, தேய்பிறை கோலம், அக்கினிப்பூக்கள், தொடுவானம், அழகின் விளிப்பு என கவிதைகளின் தலைப்புக்களை மிக அழகாக தேர்ந்தெடுத்துள்ளார் கவிஞர் திரு. ஜெயபாரதன். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் தான் தேடிய விஞ்ஞான அறிவை குளோப்ஜாமூனுள் கரைந்த இனிப்பாக கரைத்துள்ளார் என்பதும் மிகையில்லை.

ஷேக்ஸ்பியர், ரூமி, வால்ட் விட்மன், பாப்லோ, உமர் காயம், அன்னை தெரசா மீராவின் கவிதைகள் என நீண்டு இரவீந்திர நாத் தாகூர் வரை ஒரு கவிதைப் பயணத்தையே மேற்கொண்டிருக்கிறார் கவிஞர். பேராசையிலிருந்து விடுப்பு, நிரந்தரமாய் கண்மூடும் நேரம், வாழ்வியல் கட்டுப்பாடு என பல தத்துவார்த்த கவிதைகளும் புத்தகத்திற்கு பலம் சேர்கிறது.

“பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
பொரி உருண்டை ஒன்று
பரமாணுக்களாகி, அணுவாகி,
அணுவுக்குள் அணுவாகி,

துண்டுக் கோள்கள் திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகி பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகி
சீராகி சேர்ந்து
சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
பிணைந்து பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
பாசபந்த ஈர்ப்பில்
அணைத்து
அம்மானை ஆடினாள் என் அன்னை”

என்று முடிக்குமாறு கவிதை இந்தப் பிரபஞ்சத்தின் சூழ்ச்சுமத்தை தனக்கானதொரு அறிவின்படி சொல்வதாய் அமைந்துள்ளது. அதுபோல, இன்னொரு கவிதையில் பொங்கல் விழாவைப் பற்றிச் சொல்கிறார் பாருங்கள், இவர் உண்மையிலேயே தமிழ்மண்ணின் வாசம் மறக்காத ஆங்கில தேசத்து அற்புத விஞ்ஞானி என்பதற்கு இந்த கவிதை தான் சான்று,

“பொங்கல் வைப்போம்
புத்தரிசிப்
பொங்கல் வைப்போம்
சர்க்கரைப்
பொங்கல் வைப்போம்
வீட்டு முற்றத்தில்
மாட்டுப்
பொங்கல் வைப்போம்
முன் வாசலில்
கோல மிட்டு, பெண்டிர்
கும்மி அடித்து
செங்கரும்புப் பந்த லிட்டு
சீராய்த் தோரணம்
கட்டிப் பால்
பொங்கல்வைப்போம் !”

அதுபோல், இன்னொரு கவிதையில் –

“ஓரிடத்தில் எரிமலை கக்கி
உலகெலாம் பரவும்
கரும்புகைச் சாம்பல் !

துருவப் பனிமலைகள்
உருகி
உப்பு நீர்க் கடல் உயரும்!

பருவக் கால நிலை
தாளம் மாறி
வேளை தவறிக் காலம் மாறும்,
கோடை காலம் நீடிக்கும்,
அல்லது
குளிர்காலம் குறுகும்; பனிமலைகள்
வளராமல்
சிறுத்துப் போகும்
துருவ முனைகளில் !

நிலப்பகுதி நீர்மய மாகும்
நீர்ப்பகுதி நிலமாகிப் போகும்
உணவுப் பயிர்கள் சேத மாகும்
மனித நாகரீகம் நாசமடைந்து
புனித வாழ்வு வாசமிழந்து
வெறிபிடித் தாடும்
வெப்ப யுகப் பிரளயம்”

என உலக அழிவு பற்றி கூறுகிறார். பல கவிதைகள் வசனக் கவிதைகளாக இருப்பினும், உள்ளிருக்கும் விளக்கங்கள் யாவும் வேறொருவர் சொல்ல இயலாதவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வீட்டு விளக்கில் நாட்டுக்கெனப் படித்த பல விஞ்ஞானிகள் நம்மில் இருப்பினும், கோள்கள் பற்றியும், கொதிநீர் ஆழத்தின் சூழல் குறித்தும் பேசும் எண்ணற்ற கவிதைகளின் வழியே இப்படைப்பு தனியிடத்தைப் பெற்றுக் கொள்கிறது.

பொதுவாக எழுதுபவர்கள் அத்தனைப் பெரும் கண்ணதாசனாகவே இருக்கவேண்டும் என்று நம் தமிழன்னை விரும்பியிருப்பின் அவருக்குப் பின்னொரு வாலியும், வைரமுத்துவும், அறிவுமதியும், பழனிபாரதியுமென, யுகபாரதி வரை பல பாவலர்களை இம்மண் இன்று காலத்திற்கு நிகராகப் பெற்றிருக்காது.

வெளியே புகழ்மணக்க இருக்கும் பல கவிஞர்களை இலகுவாய் சொல்லமுடிகிற நமக்கு, ஐயா இலந்தை சு ராமசாமி போலவும், சந்தர் சுப்பிரமணியத்தைப் போலவும், புலவர் ராமமூர்த்தி போலவும், புலவர்கள் மா வரதராசன், அழகர் சன்முகமென ஒரு பெரிய பட்டியல் நீண்டு கவிஞர் வள்ளிமுத்து வரை, கவிஞர் இசாக், கவிஞர் அலியார், கவிஞர் சேவியர், கவிஞர் சாதிக், கவிஞர்கள் விக்டர் தாஸ், ருத்ரா, வரையென தமிழ் உலகெங்கும் பரவியிருக்கும் எண்ணற்ற அரிய பல கவிஞர்களை அறியமுடியாமல் தானே ஒரு சூழல் நம்மண்ணில் இன்றும் இருக்கிறது. அத்தகைய சூழலை மாற்றுவோம். எழுதும் புனிதர்களை மனதுள் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்போம். என்றோ குப்பைகளை குவித்த ஒரு கிறுக்கனின் அறிவிலிருந்து தான் பல புரட்சிகளை உடைத்த விடுதலையின் குரல்கட்டுகள் அவிழ்கின்றன.

அங்ஙனம், இப்பேரண்டமும் ஒரு நாள் நல்ல பல சிந்தனைகளால் விழித்துக்கொண்டு, அறிவு பெருகி, மனது விசாலமடைந்து, இருப்போர் இல்லார்க்கு விட்டுக்கொடுத்து, அன்பினால் அனைவரும் கட்டியணைத்து, ஏற்றத்தாழ்வில்லா ஒரு சமுதாயத்தை அமைத்துக்கொள்ளுமென்று நம்புவோம். அதற்கு துணையாயிருக்கும் அத்தனைப் படைப்பாளிகளோடு’ ஐயா அணுவிஞ்ஞானிக் கவிஞர் திரு.ஜெயபாரதன் அவர்களின் புகழும் நிலைத்து நிற்கட்டுமென வாழ்த்தி, இந்த “விழித்தெழுக என் தேசம்” எனும் கவிதைத் தொகுப்பு தமிழ்கூறும் நல்லுலகில் தனக்கானதொரு அரிய இடத்தை பெற்றுக்கொண்டு, அடுத்தடுத்து பல நல்ல படைப்புக்களை தர மூல விதையாக அமையட்டுமென்று வேண்டி விடைகொள்கிறேன். நன்றி. வணக்கம்.

வித்யாசாகர்
(கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர்)

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக