இலண்டன் பாராளுமன்றத்தில் வித்யாசாகர் அவர்களுக்கு வழங்கிய “இலக்கியச் சிகரம்” விருது…

ங்கிலாந்து நாட்டின் “ஐந்தாவது உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழ்  சாதனையாளர்கள் விருது விழா – 2019” கடந்த திங்கட் கிழமை நாள் 09.09.2019 அன்று இலண்டன் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல நாட்டு தொழிலதிபர்களின் முன்னிலையிலும், இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்குள்ள பிற தமிழ் அமைப்பினர்களின் போற்றுதலோடும் இவ்விருது விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

உலகத் தமிழர் அமைப்பு (WTO ) மற்றும் கூட்டமைப்பின் தலைவர் திரு. ஜேகப் ரவிபாலன் இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்த,  நடன ஆசிரியர் மற்றும் சன் தொலைக்காட்சி புகழ்மங்கை திருமதி.திவ்யா அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில், உயர்த்திரு. நியா கிரிஃபித், மார்ட்டின் வொய்ட்பீல்டு, வீரேந்திர சர்மா போன்ற இலண்டன் (MP) பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜெனிவா நாட்டின் (MP) பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. சசீந்திரன் முத்துவேல், டாடா (TATA ) நிறுவனத்தின் இங்கிலாந்து பிரிவுத் தலைவர் திரு. டிம் எல் ஜோன்ஸ், மற்றும் தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், குவைத், ஜெர்மன், துபாய், இந்தியா, கொரியா போன்ற நாடுகளிலிருந்து பல சாதனையாளர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மதிப்புமிகு மூத்த தொழிலதிபர் உயர்திரு. விஜிபி சந்தோசம், தென்னாப்பிரிக்கா தொழிலதிபர் திரு. கார்த்திகேசன் மூத்சாமி, குவைத் தொழிலதிபர் திரு. ஐதர் அலி போன்றோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், நம் சல்லிக்கட்டு நாயகன் திரு. கார்த்திகேய சேனாபதி, குவைத் கவிஞர் திரு. வித்யாசாகர், லண்டன் தொழிலதிபர் திரு. ஜாஹிர் உசேன்,நம் சல்லிக்கட்டு நாயகன் திரு. கார்த்திகேய சேனாபதி, பிரான்சிலிருந்து வந்திருந்த திருமதி. ரேஷ்மி  ஜவகர் கணேஷ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் திரு. குமரன் கவுண்டர், இளம் தொழில் வல்லுநர்கள் திரு. சுகேந்திரன் மூலே மற்றும் திரு. அகமத் வதூத்  போன்றோருக்கு சாதனையாளர் விருதும் வழங்கி இம்மாமன்றம் பல நாட்டு திறமையாளர்களை கௌரவித்தது.

இவ்விழாவில் கவிஞர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கு அவரது தமிழ் ஆளுமை, படைப்பு நேர்த்தி, மற்றும் பல தமிழ்ப் பணித் திறன்களைப் பாராட்டி  “இலக்கியச் சிகரம்” என்ற பட்டமும் தந்து (WTO ) உலக தமிழர் அமைப்பு பெருமைச் சேர்த்தது.

தொழில் முன்னேற்றம் மற்றும் பல நாடுகளில் உள்ள தொழில்வளம் பற்றியெல்லாம் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் கருத்து பரிமாறிக்கொண்டனர். அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் விருது பெற்ற அனைத்து திறனாளர்களுக்கும் வாழ்த்தினை தெரிவிக்க, வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் அமைப்பின் தலைவர் உயர்திரு. ஜேகப் ரவிபாலன் அவர்கள் நன்றி பாராட்டி விழாவை நிறைவு செய்தார்

Posted in அறிவிப்பு, விருது விழாக்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை…

வானந் தொடுந் தூரம்
அது நாளும் வசமாகும்,
பாடல் அது போதும்
உடல் யாவும் உரமேறும்;

பாதம் அது நோகும்
பாதை மிக நீளும்,
காலம் ஒரு கீற்றாய்
காற்றில் நமைப் பேசும்;

கானல் எனும் நீராய்
உள் ளாசை வனப்பூறும்,
மூளும் நெருப் பாளும்
நிலமெல்லாம் நமதாகும்;

கனவே கொடை யாகும்
கடுகளவும் மலை யாகும்,
முயன்றால் உனதாகும்
உழைப்பால் அது பலவாகும்;

நேசம் முதலாகும்’நொடி
தேசம் உனதாகும்,
அன்பில் பிரிவில்லை’ உயி
ரெல்லாம் அமுதூறும்

வெற்றி நிலை யாகும்
மனம்போல அது மாறும்,
கடல் மூடும் அலைபோல
நினைப் பொன்றே  வரமாகும்;

நானென்று கொண்டாய்
இனி நாமென்று காணேன்
உடல் தீதொன்று மில்லை
உள் உள்ளே நான் நீயே!
—————————————————–
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அப்பா யெனும் வனம்..

மிதிவண்டியில்
அரை பெடல் அடித்த
நாட்களவை..

எங்களின் கனவுகளையும்
வாழ்வின் ரசனைகளையும்
அப்பாவின் கண்களின் வழியே கண்ட நாட்களது;

மதில்சுவற்றில் எட்டி செம்பருத்தியையும்
கறிவேப்பிலையையும் தின்றுவிட்டு
தெருநடுவில் சாணம்போட்டுப் போகும் மாடுகளை
மந்தையாக விரட்டிவிடும் அப்பா தான்
எங்களுக்கெல்லாம் மருது பாண்டியும்
மதுரை வீரனும்;

அப்பாவோடு இருந்த நாட்கள்
உண்மையிலேயே நந்தவன நாட்கள்,
அவர் பூப்பது பற்றி பேசினால்
கேட்கையில் நாசிக்குள் மணக்கும்,
அவர் பார்ப்பது பற்றி பேசினால்
நினைக்கையில் நெஞ்சுக்குள் இனிக்கும்
அப்பாவிற்கு மட்டுமே தெரிந்த மந்திரமது;

அதெப்படியோ தெரியவில்லை
கையெழுத்து போடத் தெரியாதவர் தான் என்றாலும்
எங்களின் தலையெழுத்தை
தெரிந்துவைத்திருந்தவர் அப்பா மட்டுந் தான்
அப்பாவொரு அறிவினுடைய வனம்
அன்பின் ஆழ்கடல்
அப்பா மட்டும் யாருக்கும் இறக்கவே கூடாது;

அந்த மீசை மாதிரி அழகு
அவர் தொப்பை போல விளையாட்டு
அவர் தோள்மேல தூக்கம்
அவர் கூட அமர்ந்து சாப்பாடு
அவர் நடக்கும் போது வீரம்
எங்களுக்கு ஒண்ணுன்னா துடிக்கும் துடிப்பு
அப்பப்பா.., அப்பாக்கள் எப்போதுமே
அப்பாக்கள் தான்;

அப்பாவிற்கு மட்டுந்தான்
நினைத்ததும் ஆயிரம் சிறகுகள் முளைக்கிறது,
அப்பாக்களால் மட்டுமே
ஆண்கள் எனும் தணல் உள்ளத்தே
நீர் வார்த்ததைப் போல் அணைகிறது,
பொதுவாகப் பெண்களுக்கு
அப்பா தான் முதல் தாய்,
ஆண்களுக்கு அப்பா தான் முதல் தோழன்;

சாமியைப் போல் அவர்
கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும்
மதித்தாலும் மதிக்கவிட்டாலும்
கேட்டாலும் கேட்கவிட்டாலும்
திட்டினாலும் கோபித்துக்கொண்டாலும்
நம்மை குழந்தைகளாக மட்டுமே
பார்க்கும் அப்பாக்கள் அப்பாக்கள் தான்,
அப்பாக்கள் மாறுவதேயில்லை
எனக்கும் அவளுக்கும்
எனக்கும் அவனுக்கும்
அப்பாக்கள் ஒரு மாதிரி தான்;

வாழ்க்கை தான் கணப்பொழுதில்
மாறிவிடுகிறது,
திடீரென மறையும் நட்சத்திரத்தைப்போல
அப்பாக்களும் மறைந்துவிடுகிறார்கள்,
மனது மட்டுமென்னவோ
அப்பாக்களுக்கு மகனாகவும்
அப்பாக்களுக்கு மகளாகவுமே
தன்னை எண்ணிக்கொண்டு உயிரோடு நகர்கிறது..
—————————————————–
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

டாய்லெட்

“டாய்லெட்”
—————-

“என் மகளின் பிறப்புறுப்பில்
புண்ணென்று உங்களுக்குத் தெரியுமா ?

உங்களுடைய மகள்களுக்கில்லை யென்று
உங்களுக்குத் தெரியுமா ?

உங்களுடைய மகள்களின் பள்ளிக்கூடங்களில்
கழிப்பறை உண்டா ?

உண்டெனில் அவைகள் சுத்தம் தானா ?
உங்களின் மகள்களுக்கு அது ஏற்றதா ? அறிவீரா ?

போங்கள்; போய் முதலில் மகளுடைய கழிவறைகளைக்
கண்காணியுங்கள், குறிப்பாக பள்ளிக்கூடங்களில்..

இப்படிக்கு

எவனோ

இப்படியொரு கறுப்புப் பலகையில் எழுதி
அந்த கழிப்பறைச் சுவற்றில்
மாட்டப் பட்டிருந்ததைக் கண்டு
அதிர்ந்துப்போனேன் நான்

மனசெல்லாம் படபடத்தது
என் மகள்களை நோக்கிச் சிறகடித்து

பெரியவளை அழைத்துக் கேட்டேன்
ஏன்டா இப்படிப் பார்த்தேன்டா, நீங்களெல்லாம்
எப்படிம்மா என்றேன் பட்டும் படாமலும்

“நா’ யெல்லாம் அங்க போனதேயில்லைப்பா
இப்பல்லாம் காலையில நாங்க போறதேயில்லைப்பா
அடக்கிக்குவோம்
பழகிடுச்சி
வீட்டுக்கு வந்தாதான்ப்பா எல்லாம்”

பகீரென்றது
நெருப்பின்றி கனலொன்று உள்ளே சுட்டது
இல்லாத கடலுக்குள் மூழ்குவதுபோல் தவித்தேன்

ஆண்களுக் கென்ன
இலகுவாக மேலே அடித்துவிடுவோம்
ஆம் பெண்கள் என்ன செய்வார்கள்?!!

எனக்கு கோபம் கோபமாக வந்தது
இளையவளை அழைத்தேன்
என்னம்மா என்றேன்

“நான் அப்படியே போய்டுவேன் ப்பா
என்னால அடக்க முடியாதுப்பா
ஆனா நாற்ற மடிக்கும், எரியும்பா, அம்மாதான்…”

ஏதோ சொல்லவந்தாள்
நான் சட்டென வெளியேறினேன்
சுடுகாட்டில் பிணம் நடப்பதுபோல நடந்தேன்

கடவுளே!! தெருவெங்கும் கோயில்கள் கட்டினோம்
பள்ளிக்கூடங்களைக் கட்டினோம்
கழிப்பறை கட்டினோமா?
சுத்தமாக வைத்தோமா ??

வேறென்னச் செய்வதென் றறியாது
ஓடிச்சென்று அந்த கழிப்பறைச் சுவற்றின்
வாசகங்களை மறுபடி மறுபடி வாசிக்கிறேன்
மண்டைக்குள்
பெரியவளும் சின்னவளும் எட்டி எட்டி உதைத்தார்கள்
ஆண் ஆண் என்று ஏதோ கத்தி கூச்சல் போட்டார்கள்
கதறி கதறி அவர்கள் அழுவதுபோல் வலித்தது

மகள்கள்.. மகள்கள்..
இந்த உலகம் மகள்களால் ஆனது
ஆம், இந்த உலகம் மகள்களால் ஆனது எனில்
இனி மகள்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்???

முதலில் டாய்லெட் கட்டுவோம்!
—————————————
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் கவிஞர் வித்யாசாகர் அவர்கட்கு “ஆய்வுச் செம்மல் விருது”

இந்த உலகம் சுழல்வதை சுவாசிப்பதை உயிர்களை உள்ளவாறு உயிர்ப்பித்து வைத்துள்ளதை நாம் எல்லோருமே அறிவோம். ஆயினும் ஆங்காங்கே இன்று தமிழ் பேசி, குறள் ஓதி, வள்ளுவம் காத்து, அறம் போற்றி எமது தமிழர் மிக கம்பீரமாக வளம் வருகின்றனர் என்றால் அதற்கு அன்றிலிருந்து இன்று வரை எங்கோ யாரோ ஒரு தனிமனிதன் உழைத்து பொருளீட்டி அதை நம் தமிழிற்கென்று வாரிவழங்கி மொழிக்காக்க உயிர்வாழ்ந்து வருகிறான் என்பதை வரலாற்றை புரட்டிப் பார்த்தல் நன்கறியலாம்.

அவ்வாறு, நம் தாய்தமிழகத்தின் தலைநகராம் நமது சிங்காரச் சென்னையில் “தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து 13.10.2019-ஆம் திகதி சென்ற மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று “பேரறிஞர் அண்ணா அரங்கில்” மிக கம்பீரமாக “ஒரு பன்னாட்டுத் தமிழ் மாநாட்டை” மிக வெற்றிகரமாக நடத்தி மகிழ்ந்தது.
 
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பல அறிஞர்களோடு தமிழகம், புதுச்சேரி என பல தமிழறிஞர்களும் தமிழார்வலர்களுமாய் அரங்கம் நிறைந்திருக்க உலகப் பொது மறை தந்த அய்யன் வள்ளுவனை வணங்கி தொடங்கப்பட்ட மாநாட்டில் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை நிறுவனர் திரு.சேக்கிழார் அப்பாசாமி அவர்கள் தலைமையுரையாற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. மணவழகன் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
 
தமிழ்நாடு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு க. பாண்டியராஜன் அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டு கவியரங்க கவிதை தொகுப்பான ” எங்கள் கனவுகள் ” நூல் உள்ளிட்ட எட்டு நூல்கள் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். முதுபெரும் கவிஞர் ஐயா பழமலை அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றமை, அதை வாழ்த்தி மாண்புமிகு அமைச்சர் பேசியதெல்லாம் நிகழ்வின் பெருஞ்சிறப்புக்களாக விளங்கியது.
 
பல துறைகளைச் சார்ந்த சாண்றோர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது ”, ஆய்வரங்கத்தில் கலந்துகொண்ட குவைத் கவிஞர் வித்யாசாகர் டென்மார்க் முல்லைநாச்சியார் உள்ளிட்ட மற்ற நாட்டு பிரதிநிதிகளுக்கும் ” ஆய்வுச்செம்மல்” விருது , கவியரங்கத் தலைமை ஏற்றவர்களுக்கு “பெருங்கவி விருது ” என திறனறிந்து பல விருதுகள் வழங்கி படைப்பாளிகள் எண்ணற்றோர் பெருமைசெய்யப் பட்டனர்.
 
தமிழ்ப்பட்டறை இலக்கிய பேரவை நிறுவனர் திரு. சேக்கிழார் அப்பாசாமி தலைமையேற்க, டென்மார்க் கவிஞர் முல்லை நாச்சியார் , சிங்கப்பூர் பாவலர் கிருஷ்ணமூர்த்தி , இலங்கை முனைவர் ஹனிபா இஸ்மாயில் , குவைத் கவிஞர் வித்யாசாகர் , மொரிசியஸ் கவிஞர் ராஜா , பிரான்ஸ் கவிஞர் கனகராணி செல்வரத்தினம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. மணவழகன் ஆகியோர் மேடையில் வீற்றிருந்து மாநாட்டிற்கு மதிப்பு சேர்த்தனர்.

அதைத் தொடர்ந்து “பன்னாட்டுப் பரப்பில் தமிழ்ப் படைப்பிலக்கிய செல்நெறிகள் ” எனும் தலைப்பில் ஆய்வரங்கம் கலைமாமணி திரு. நெய்தல் நாடன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. டென்மார்க் கவிஞர் முல்லை நாச்சியார் , சிங்கப்பூர் பாவலர் கிருஷ்ணமூர்த்தி , இலங்கை முனைவர் ஹனிபா இஸ்மாயில் , குவைத் கவிஞர் வித்யாசாகர் , மொரிசியஸ் கவிஞர் ராஜா , பிரான்ஸ் கவிஞர் கனகராணி செல்வரத்தினம் போன்றோரின் தத்தம் நாடுகளில் நிகழும் தமிழ் விழாக்கள், தமிழிலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழர்தம் முன்னேற்றம் குறித்தெல்லாம் மிகச் சிறப்பாக உரையாற்றி அவரவர்தம் நாட்டின் தமிழிலக்கிய குறிப்புகளை மாநாட்டில் செம்மையாக பதிவிட்டனர்.

முன்னதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ. விசயராகவன் மாநாட்டை வாழ்த்தி சிறப்புரை நிகழ்த்தினார்கள். மாநாட்டில் “எங்கள் கனவுகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் கலந்துகொண்ட கவிஞர்களுக்கு” கவிச்செம்மல் ” விருது வழங்கி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. மணவழகன் விரிவுரை நிகழ்த்தினார்கள் .மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்குபன்னாட்டு மாநாட்டு நினைவு குறித்த பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை
Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக