1
மிருகம் மனிதனைக் கொன்றது’ கொலை
மனிதன் மிருகத்தைக் கொன்றால்;
கடை!
2
மரங்களை வெட்டி
கூடுகள் கலைத்து கட்டப்பட்டது
ஒரேயொரு குடிசை!
3
பிணங்களென எரித்துவிட்டார்கள்
இத்தனை லட்சமென்று சொன்னார்கள்
என்னைச் சேர்க்காமல்!
4
காற்று நிறைய இருக்கிறது
தமிழர் வலியும், துரோகமும், அநீதியும்
சுவாசிப்பவர்களுக்கு வலிக்கவேயில்லை..
5
ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு
தேர்ந்தெடுத்தோம்
லஞ்சம் வாங்கும் தலைவர்களை!
6
நிறைய பேர்
அரசியல்வாதியாகிறார்கள்
மனிதராக நிறைய அரசியல்வாதிகளில்லை!!
7
நிறைய பெண்களின் கழுத்தில்
இல்லாமலேயே அறுபடுகிறது தாலி
காதல்!
8
மனது வேறெங்கோ இருந்தாலும்
முத்தங்கள் தரப்படுகின்றன
கட்டாயத் திருமணம்!
9
ஜாதியும் கௌரவமும்
மிகப் பெரிதாகத் தெரிந்தன
மகள் இறக்கும் முன்|!
10
நான் காதலித்தபோது போராடினேன்
என் மகன் காதலித்தான் போராடினான்
ஜாதியை; மெல்லத் தின்கிறது காதல்!!
11
ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்று படிக்க –
ஜாதி கேட்டார்கள் பள்ளிக்கூடத்தில்!!
12
உடம்பெல்லாம் அறுத்துப் பார்த்தேன்
எங்குமேத் தெரியவில்லை
ஜாதி மதத்தின் நிறம்!
13
ஒரு பிரியாணியும்
ஒரு குவளைச் சாராயமும் போதுமாகிறது
ஒரு கொலைக்கு!!
14
வயிற்றுப் பசியில்
எரிகிறது
சமுகத்தின் போராட்ட நெருப்பு!
15
நூறு பெண்கள் நம் தெருவில் போனால்
அதில் கொஞ்சம் விதவை, கொஞ்சம் வாழாவெட்டி
கொஞ்சம் முதிர்கன்னி, நிறைய பேர் வாழாதவர்களே!!
16
பிச்சைக் கேட்கிறாயே
வெட்கமாயில்லை’ யென்றேன்
பைசா போடு வெட்கம் போகுமென்றாள்!
17
சின்ன சின்ன வார்த்தையில்
எரிகிறது பெருநெருப்பு
ஹைக்கூ!
18
பத்து மீன்களைக் கொன்று
குழம்பு வைத்தேன்
சட்டியில் கொலையின் நாற்றமேயில்லை!!
19
காசுக்கு எல்லாம் கிடைக்கிறதாம்
கொஞ்சம்
மனிதமும் கிடைத்தால் தேவலை!!
20
இந்தியில் பேசினால் இந்திக் காரன்’ சரி
ஆங்கிலம் பேசினால் ஆங்கிலேயன்’ சரி
தமிழும் ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசினால்?
தமிழரென்பார்களோ?!!!
————————————————————————
வித்யாசாகர்
2,7.8,11 கைக்கு அடக்கமான ஹைக்கூக்கள்
LikeLike
நன்றி ஐயா. மனதிற்கு நிறைவாக இருக்கிறது!
LikeLike