45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்!

மௌனம் உடையா பொழுதொன்று நிலவும்
முகமெல்லாம் ஒரு சோகம் படரும்
நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும்
அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்;

உடை கூட ஆசை களையும்
உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும்
உறக்கமது உச்சி வானம் தேடும்
உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்;

பகலெல்லாம் பொழுது கணக்கும்
சட்டைப்பை சில்லறைத் தடவும்
முந்தானை ஓரத்தில் ஒரு கல்லேனும் முடியும்
படுக்க அன்றாடம் சுடுகாடே தேடும்;

காதில் தனது பிள்ளை பேசினால் இனிக்கும்
வார்த்தை தடுமாறி பேரனின் ஒன்றோயிரண்டோ கேட்கும்
போகும்வரும் வாசலில் கண்கள் யாருக்கோ காத்திருக்கும்
போகாத உயிரை விட்டுவிட்டுப் பிடித்துவைக்கும்;

வாழ்நாள் கனவுகள் வந்துவந்து மறையும்
வாழ்ந்த நாட்களை அசைப் போட்டுத் திரியும்
வந்த துணையின் பிரிவதை எண்ணி –
பழுத்த மனசது பாவம் கண்ணீராய் கரையும்;

காலத்தை மனதால் கணமும் நொந்தே; நொந்தே; சாகும்!!
————————————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to 45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்!

  1. nathnaveln சொல்கிறார்:

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    Like

  2. Umah thevi சொல்கிறார்:

    கவிதையின் தலைப்பே, மிக அருமை!
    முதுமை வாழ்கையை மிக அற்புதமாக, வரிக்கு வரி மிகவும் அழகான வார்தைகளில் படைத்து உள்ளீர்கள்.
    பாராட்டுக்கள்!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் உமா. ஒவ்வொரு தலைப்பு இடுகயிலும் கவிதைக்குத் தக்க சிந்தித்தே இடுகிறேன். தலைப்பே கவிதைக்கான அழைப்பினை விடுப்பதாய் என் எண்ணம்..

      மிக்க நன்றியும் வணக்கமும்.. உமா!

      Like

  3. suganthiny75 சொல்கிறார்:

    பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்!
    ஆஹா இத்தனை அருமையான கவிதை, உங்கள் உள்ளத்தில் இருந்து சிதறுண்டு விழுந்தவை தான் ஆனாலும், அத்தனையும் தேடி எடுத்த முத்துகள். காலம் கரைந்தாலும் கலையாத உணர்வுகள். பல சரித்திரங்கள் கக்கிவிட்டு சென்ற உண்மை கசப்புகள் அவை.

    விழுந்து எழுந்தாலும் எழுந்து விழுந்தாலும் உலகிற்குத் தெரியாத வலிகள் அவை.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றியும் வணக்கமும் சகோதரி.

      என் கவிதைக்கான ஆழப் பொருள் அத்தனையையும் உங்களின் மறுமொழியே பறைசாற்றி நிற்கிறது. முதுமை நம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை என்பதை காட்டிலும், பொறுத்துக் கொள்ளத் தக்க பிறரின் வலி..

      Like

  4. amaithicchaaralஅமைதிச்சாரல் சொல்கிறார்:

    //வாழ்நாள் கனவுகள் வந்துவந்து மறையும்
    வாழ்ந்த நாட்களை அசைப் போட்டுத் திரியும்
    வந்த துணையின் பிரிவதை எண்ணி –
    பழுத்த மனசது பாவம் கண்ணீராய் கரையும்;//

    இறுதிக் காலத் தவிப்பை அழகாகச் சொல்லும் வரிகள்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றியும் வணக்கமும், உண்மையிலேயே எங்கோ திசை தெரியாமல் உற்று நோக்கும் தாத்தா பாட்டிகளின் முகமே எனக்கு தீபாவளி கவிதை எழுத எடுக்கையில் இடையே தெரிந்தது. தீபாவளிக் கவிதை இதுவரை எழுதவேயில்லை!

      Like

  5. munu. sivasankaran சொல்கிறார்:

    பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்… …
    ஓய்ந்த மழையின் புலம்பலா..? தேய்ந்த இளமையின் தேம்பலா..?

    Like

பின்னூட்டமொன்றை இடுக