சங்கரின் ‘நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன்’


மிழகத்து நகரெங்கும் தொங்கும் தமிழென்னும் திராட்சை மரத்தின் தேனிற்கிடையே சொட்டும் ஒரு துளி நஞ்சாகக் கலந்த ஆங்கிலம் விடுத்து முழுக்க முழக்க தன்னம்பிக்கையெனும் அமிழ்தம் நிறைந்த களம் ‘இந்த நண்பன் எனும் திரைப்படம்.

என் மகன் படித்து பெரிய பட்டதாரி ஆவான் என்ற காலம் கடந்து அவன் பெரிய விஞ்ஞானியாக வருவான், மருத்துவனாக ஆவான், குறைந்த பட்சம் ஒரு பொறியாளனாகவேனும் ஆகியேத் தீருவான் என்று வளரும் குழந்தைகளின் கனவுகளை தன் கண்களில் தன் விருப்பத்திற்குத் தக சுமக்கும் அப்பாக்களின் அம்மாக்களின் விழித்திரை கிழித்து பிள்ளைகளுக்கான சுதந்தரத்தை வெளியெடுத்துத் தர விழையும் நம்பிக்கை நிறைந்த புதிய ‘நண்பனிவன்’

அம்மா பற்றி அநேகம் பேசியும் தீராத வார்த்தைகளை மிச்சம் வைத்து அப்பாப் பற்றியும் பேச ஆரம்பித்த திரையுலகம், அம்மாவிற்கு நிகரான தாய்மைப் பூண்ட அப்பாவின் கருணையை, ஒரு பெண்மையில் பூத்த ஆணின் மனதை, அவனிலிருந்து மலரும் உயிர் பரவிய அன்பை அப்பாவின் மூலம் அழுத்தமாக சொல்லத் துணிந்த திரைவரிசையில் இந்த நண்பனும் குறைந்தவனில்லை.

துள்ளும் காதல், எள்ளி நகைக்கவைக்கும் காட்சிகள், இடையே வாழ்க்கையை யதார்த்தமாகச் சொல்லித் தரும் அக்கறை, எட்டி எட்டி மனதைத் தொட்டுக் கலங்கவைக்கும் கண்ணீரும் நிறைந்த திரைவானில் மிளிரும் கதம்ப ஆசிரியன் இந்த நண்பனும்.

‘எல்லாம் நன்மைக்கே’ எனுமொரு வாசகமானது ‘நம்பிக்கையினை நிறைகுடம் தளும்பா ஞானம் மிக்க நிலைக்கு தள்ளும் வாசகம் தான். இதயத்தை காற்று நிரப்பாமல் உணர்வுகளால் ஊதும் மாயச் சொல் தான். அதன் லாவகம் புரிந்தவன் சொடுக்கிய சாட்டையின் வீரியத்தில் ஒரு பிடி உணர்வெடுத்து, வெள்ளித் திரைக்கு தமிழிலொரு விருந்து சமைத்திருக்கிறார் இயக்குனர் சங்கரும்.

சங்கரின் முகம் தெரியாமல் அவரின் எந்தப் படமும் இருந்ததில்லை. சமூகத்தை சமூக நலனை தன் நரம்புகளில் தேக்கிக் கொண்ட ஒரு மனநிலை பொருந்தியவர் இந்த சங்கரும் என்பதற்கு, என்னதான் மொழிமாற்றுப் படமானாலும், இந்த நண்பனின் காட்சிகளிலிருந்தும் சிலவை சாட்சியாகாமலில்லை.

எங்கு தன் நண்பன் தேர்வில் தோற்றுப் போவானோ என்று இரவின் இருட்டில் திருடிவந்து கொடுத்த கேள்வித் தாள்களை தூக்கி வீசிவிட்டு, எனக்கு இதலாம் வேண்டாண்டா, நான் படித்தே தேர்வில் தேர்ச்சிப் பெற்றுக் கொள்கிறேன், இல்லையேல் தோற்றுப் போனாலும் பரவாயில்லை குறுக்குவழியில் எனக்குக் கிடைக்கும் அந்த பொறியியல் படிப்பே வேண்டாம்’ என்று சொல்லுமிடமும், வேலை தரும் ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்விற்கு போகுமிடத்தில் மனசு போல மறைக்காமல் ஜீவா பேச; இப்படி வெளிப்படையாக இருந்தால் உனக்கு வேலை கிடைக்காது என்று நேர்முக தேர்வாளர்கள் சொல்ல, அதனாலென்ன, இப்போது தான் நான் வாழவேத் துவங்கியுள்ளேன், இதுதான் என் உண்மையான வெளிப்பாடு, இது பிடிக்காமல் இனியும் நான் மறைத்து நடித்துதான் பேச வேண்டுமெனில் அப்படிப்பட்ட வேலையே எனக்கு வேண்டாமென்று சொல்லுமிடமும் ‘சற்று கண்ணியத்தின் மீது’ நெஞ்சு நிமிர்ந்த நேர்மை உணர்வின் மீது’ தனியொரு பார்வையை படர்த்தத் தான் செய்கிறது.

அதுபோல், நிறைய பிள்ளைகளை நிறைய அப்பாக்களுக்குப் புரியாததுபோல், நிறைய பிள்ளைகளுக்கும் நிறைய அப்பாக்களும் புரிவதில்லை. இங்ஙனம், எதையோ அவர் அவர் விருப்பத்திற்கு செய்கிறார் என்று அப்பாக்களை கடிந்துக் கொள்ளும் நமக்கெல்லாம் ‘அப்பாவின் அன்பை உருக உருகக் காட்டுகிறது இந்த படத்தின் சில காட்சிகள்.

படத்தின் ஒரு முக்கிய கட்டம் வரை, மகனாக நடித்த ஸ்ரீகாந்த், தன் முழு ஆற்றலையும் மகனென்னும் பாத்திரம் சற்றும் கோணாதவாறு மிக அற்புதமாக நடித்துள்ளார்.

அல்லது அத்தகைய அன்பு நிறை மகனாகவே அவர் வாழ்ந்துள்ளார் என்றும் சொல்லலாம். அநேகம் இப்படம் இனி ஸ்ரீகாந்திற்கான நிறையப் படங்களைப் பெற்றுத் தரும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளதை படம் பார்த்தோர் புரிந்திருப்பர்.

என்றாலும், அவரின் மூலம், ஒரு அப்பா மகனுக்கான பண்பை எல்லோருக்கும் புரியும் விதமாக இத்தனை உயர்வாகக் எடுத்துச் சொல்லியதன் பெருமையில் அப்பாவாக நடித்தவருக்கும், மூலப் படத்தின் இயக்குனருக்கும் கூட பெரிய பங்குண்டு.

இப்படத்தின் மூல வேர் என்பதே நட்பு தான். நட்பை இதயம் நிறைய காட்டுமொரு படம் தான் இந்த நண்பன் என்றாலும், அதை சாட்சிப் படுத்த நிறைய நல்ல நல்ல காட்சிகள் படத்தின் நெடுக நட்பின் உயர்வு பற்றி பேசினாலும், ஒரு இடத்தில் தலைமை ஆசிரியர் சத்யராஜின் நயவஞ்சக செயலை எதிர்க்கவோ மறுக்கவோ முடியாமல் அதனால் நொந்த மனதை மதுவருந்தி நண்பர்கள் மூவரும் ஆத்திக் கொள்ளுமொரு காட்சி வருகிறது. அதன் பின் நகர்வாக –

மொட்டைமாடியில் இருந்து மூவரும் பீர் குடித்துக் கொண்டே ஏதேதோ பேசி சத்யராஜ் மீதான கோப உணர்வைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்க, நாயகன் விஜய் நாயகி இலியானாவைப் பார்த்து தன் காதலை சொல்லவேண்டுமென்ன்றும், அதைச் சொல்லாமைக் கூட குற்றம் தான் என்றும் அவனின் இரு நண்பர்களும் கேளிக்கை செய்து அவனை தூண்டிவிட, விஜய் அதை அத்தனை சீரிய விடயமாக எண்ணித் துணியாமல், நண்பர்களிடத்தில் மட்டும் தனது விவேகமான எண்ணங்களைப் புகட்டிவர –

அவர்கள் அவன் சொல்வதை மறுத்து’ உனக்குத் தான் தைரியமேயில்லை உன் காதலைக் கூட சொல்லமறுக்கிறாய், என்று சொல்ல அதற்கு விஜய் ஸ்ரீகாந்தைப் பார்த்து, நீ முதலில் உன் அப்பாவிடம் சென்று உனக்கு விருப்பப்பட்ட படிப்பை வாழ்க்கைக்கென நீ துவங்கப் போவதாகச் சொல்’ என்று சொல்ல்விட்டு, ஜீவாவிடம் திரும்பி நீ முதலில் உன் அக்கறை சார்ந்த கடமைகள் குறித்த பயத்தை விட்டொழி’ பயத்தை விட்டொழித்தால் வெற்றி என்பது தேடிவரும், பயந்து பயந்து இப்படி நம்மை நாமே தோல்விக்குள் தொலைத்தே விடுவது தான் தவறு என்று சொல்ல, அவர்கள் இருவரும் சேர்ந்து –

‘சரி நீ முதலில் சென்று உன் காதலியிடம் உன் காதலைச் சொல், பிறகு நாங்கள் நீ சொல்வதை சொல்லும்படியேக் கேட்கிறோம் என்று சொல்ல, அவன் தன் நண்பர்களின் எதிர்காலத்தை பெரிதாக மனதில் கொண்டு, காதலியான தன் தலைமை ஆசிரியர் சத்யராஜின் மகளைத் தேடி, நாயகி இலியானாவைத் தேடி அவள் வீட்டுக்கேப் போக, ஸ்ரீகாந்த் குடித்திருந்த போதையில் சற்று கூடுதலாக ஆவேசப் பட்டு, தன் தலைமை ஆசிரியர் மீதான கோபத்தை தனித்துக் கொள்ளும் பொருட்டு’ தபால்பெட்டி மீதே சிறுநீர் கழித்துவிட,

இத்தகு அநாகரிகமாக செயலைக் கண்டு எரிச்சலுறும் சத்யராஜிடம் மறுநாள் போதைத் தணியாமல் கல்லூரி வரும் மூவரில் ஜீவா மட்டும் பிடிபட்டுப் போக, அவனை தன் தனியறையில் அழைத்து கல்லூரிவிட்டு நீக்குவதாகச் சொல்கிறார்.

அவன் தன் குடும்பத்தின் ஏழ்மை நிலையினை எல்லாம் எடுத்துச் சொல்லி மன்னித்துவிட வேண்டுகிறான். அத்தருணம் பார்த்து தலைமை ஆசியராக நடிக்கும் சத்யராஜ் ‘சரி உன்னை விட்டுவிடுகிறேன், நீ அவனைக் காட்டிக் கொடு, பாரி தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல், அவனைக் கல்லூரியிலிருந்து விளக்கி விடுகிறேன் என்று சொல்லி, தன் நண்பனையே காட்டிக் கொடுக்கச் சொல்லிக் கேட்க –

ஜீவா சற்று யோசிக்கிறான். தன் ஏழைத் தாயின் கனவான படிப்பும் முக்கியம், அதேநேரம் நண்பன் அதைவிட முக்கியமென பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஓடிப்போய் மாடியிலிருந்து ஜன்னல்வழியாக கீழே குதித்து விபத்திற்கு உள்ளாகிவிடுவதும், அதன் பின் அவனை மருத்துவமனையில் சேர்த்து ஒரு தாய்மனதிற்கு ஈடாக விஜயும் ஸ்ரீகாந்தும் பார்த்து பார்த்து நடத்தி குணமடைய வைப்பதும் –

கடைசியாக ஒருகட்டத்தில் அக்கா திருமணம் பற்றி தான் நண்பன் வருந்துவான் என்று அறிந்து, சுயநினைவின்றி இருக்கும் நண்பனை எழுப்ப ‘டேய் செந்தில் அக்காவை நம்ம வெங்கட் கட்டிக்கிறானாம்டா’ என்று ஸ்ரீகாந்தைக் காட்ட, அதற்கு ஸ்ரீகாந்த் அதிர்ச்சியாகி தவிக்க, ஜீவாவும் உணர்ச்சிப் பொங்கி விழித்து சிரித்துக் கொண்டே கன்னத்தில் வழியும் கண்ணீரை பொருட்படுத்தாமல் விஜயை அருகில் அழைத்து –

‘ஏன்டா உன் புளுகுக்கு ஒரு அளவே இல்லையா’ என்று கண்ணீர் வழியக் கேட்க, அவர்கள் மூவரும் அங்கே ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொள்ளுமிடம், நட்பின் மீதும் இயக்குனர் மீதும் இந்த நடிகர்களின் மீதும் ஒரு பெரிய மரியாதையினையே ஏற்படுத்துகிறது.

அதுபோல், ஒரு கட்டத்தில் ஜீவாவின் அப்பா மருத்துவமனியில் இருக்க வாசலில் நிற்கும் விஜய் ஸ்ரீகாந்திடம் கதாநாயகி வந்து ஏன்டா நீங்கள்லாம் இன்று தேர்வு எழுதப் போகலையா என்று கேட்க அதற்கு விஜய் ‘தேர்வுகள் நிறைய வரும் ரியா அப்பா வருவாரா? அவர் ஒருத்தர் தானே இருக்கார் என்று யதார்த்தமாக சொல்லியமர, நண்பர்களைக் கட்டிக் கொண்டு ஜீவா அழும் காட்சி நமக்கும் இப்படி நண்பர்கள் அமைய வேண்டுமே என்பதைவிட; நாம் இப்படிப்பட்ட நண்பராக நம் நண்பர்களிடம் நடந்துக் கொள்ளவேண்டுமே எனும்’ நட்பின் பண்பு குறித்த உயர் நீதியை மனதில் பதிய வைக்கிறது இத்திரைப்படம்.

அதுபோல், நண்பர்கள் கூடிநிற்க விஜய் கதாநாயகியின் அக்காவிற்கு பிரசவம் பார்க்குமொரு காட்சி, ஏற்றுக் கொள்ள பல மறுப்புகள் இருப்பினும்; உணர்ச்சித் ததும்பலின் பெருமிதம் தான்.

இயந்திரவியல் படிக்கும் மாணவர்களின் சாதுர்யத்தையும், கல்லூரி மாணவர்களின் ஆபத்திற்கு ஒன்று சேரும் நற்குணத்தையும், ஒரு ஆணின் தூய மனத் தன்மை புரிந்தால் அதைப் புரிந்துக் கொண்ட பெண் ஒருவள் அந்த ஆணை எதுவரைக்குமும் நம்பச் சம்மதிப்பாள் என்பதற்கு சாட்சியாக விளங்கும் காட்சியது.

அதை மிக நேர்த்தியாக காட்சி படுத்திய திறமை இயக்குனரோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளர், இசையமைப்பளார், திரைக்கதை ஆசிரியர் என எல்லோருக்கும் அதன் நன்மதிப்பு சாருகிறது.

உண்மையில், ஒரு புது யுகம்.. புது யுகம்.. என்கிறோமே, அப்படியொரு புதிய தலைமுறையின் பார்வை, கோணம் ஒன்றினை இப்படத்தின் திரைக்கதை காட்டுவதும் கவனிக்கத் தக்க உண்மை. ஆங்கிலம் கலந்த பண்டம் என்பதால் நிராகரிக்கத் தக்கதாகவே இருந்தாலும், அந்த லாவகம், கதை சொல்லும் யுத்தி, மாறுபட்ட புது நடையை பரிட்சயப் படுத்தும் முனைப்பு படத்தில் கேகா பைட்டாகவும்.. மில்லி மீட்டராகவும்.. சிரிக்கவும் ரசிக்கவும் சிந்திக்கவும் கிடைக்கிறது தான்.

பாடல்களும் ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை, ஒருபாடல் ஒருமுறையே கேட்டதால் நினைவிலில்லை என்றாலும், அந்நேரம் கேட்கையில் கவிதையாய் காதுகளில் கரைந்து, காற்றோடு மனத்திலும் கலந்து, தனை முழுமையாய் ஆட்கொண்டு விடுகிறது.

வெற்றி குறித்த கனவு எப்படியிருக்கும்? தன் லட்சியம் தோற்றால் அவன் எப்படி அழுவான்? ஒரு இளைஞனின் முயற்சி மறுக்கப்படுகையில் அவனுக்கு எத்தனை வலிக்கும்? என்பதை ஒரு கல்லூரி மாணவன் தன் சாதனை நிராகரிக்கப் படுகையில் இறக்க முடிவெடுத்து, இறக்கும் முன் பாடுமொரு பாடலில் அவனின் நிகழவிருக்கும் மரணத்தை அவன் பாடுமந்த பாடலின் வரியும் இசையும் இதயம் நனைத்துச் சொல்கிறது.

பாடலின் அமைவுகள், படக் காட்சியின் நேர்த்தி என ஒரு ஒரு கட்டமும் மனதில் பதிந்து பதிந்து தன்னை முழுக்க இப்படத்தின் கதைக்குள் ஆழ்த்திவிட்டதன் பெருமை’ அதை இயக்கிய இயக்குனரின் மனதில் நினைத்தளவு செய்தும் முடித்த இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா, நடிகர்களையும் சாரும் என்று சொல்லத் தக்க எல்லோரின் உழைப்பிலும் மிளிர்பவன் இந்த எல்லோரும் காணத் தக்க நண்பன் என்பதே ஏற்கத் தக்கது.

பொதுவாக நான் எப்போதுமே, ஒவ்வொரு விஜயின் படத்திற்கு போனபோதும் சொல்வேன், விஜய் ஒரு சிறந்த நடிகர், மிகச் சிறந்த திறமைசாலி, அவரை பயன்படுத்துவதோ அல்லது அவர் பயன்படுவதிலோ குறையுண்டு’ என்பேன். இப்படத்தில் அக்குறை நீங்கி இருக்கிறது.

கொஞ்சமும் நமக்கு விஜய் தெரியவில்லை, அவரின் திறமை தின்னமாகத் தெரிகிறது. மிக அழகாக மனதில் ஒட்டிக் கொள்ளுமாறு நேர்த்தியாக புத்தியைக் கிழிக்கும் துண்டு வசனங்கள் இல்லாமல் யதார்த்தமாக நடித்துள்ளார்.

கதாநாயகியின் நடிப்பில் சாதுர்யம் இருக்குமளவு சங்கரும் தெரிகிறார். என்றாலும் அவர் நினைத்ததை நடிப்பில் காட்டியப் பெருமை கதாநாயகியையே சாரும், அவருக்கு தமிழில் முதல் படமிது என்று சொன்னால் நம்பவே முடியாதளவிற்கு மிக நன்றாகவே நடித்துள்ளார் இலியானா.

எனினும் நடிப்பு என்றாலே கண்ணிற்கு முன்னால் நிற்பவர் தலைமை ஆசிரியராக நடித்த நடிகர் திரு. சத்யராஜ் தான். உண்மையில் மிகத் திறமாக நடித்துள்ளார். ஒருவேளை இவருக்கு இவ்வருடம் இப்படத்திற்கான விருது கிடைக்கவில்லை எனில்; இல்லை இல்லை அதெதற்குக் கிடைக்கவில்லையெனில் என்று சொல்ல’ நிச்சயம் கிடைக்கும்.

பொதுவாக திரைப்படங்கள், உணர்ச்சியை தூண்டுபவையாக இருப்பவை ஒரு கண்ணீரின் ஈரத்தோடு விலகிப் போகிறது. உணர்ச்சியின்பால் நின்று சிந்திக்கவும் வைக்கும் சில படங்கள் நம் வெற்றிக்குப் பின்னால் மறைமுகமாக நின்றுக் கொண்டிருக்கின்றன.

வெறும் மூன்று மணிநேரத்தை போக்குவது அல்ல ஒரு படம், ஒரு கலை என்பது. ஒரு கலை என்பது தனக்குள் ஆழ்ந்துப் போனோரை பிறருக்குக் காட்டுவதாக இருக்கவேண்டும். ஏதோ ஒரு பொழுதுபோக்க எண்ணியோ, மனதின் சந்தோஷம் தேடியோ, மன அழுத்தம் குறைத்துக் கொள்ளவோ என பல நோக்கங்களோடு பார்க்க வரும் ஒரு திரைப்படம் அவர்களின் எதிர்காலத்தை இப்படியும் மாற்றியமைத்துக் கொள்ளலாமோ என்று காட்டும் விதமாய், அங்கனம் வாழத் தக்க நம்பிக்கைக்கான ஊற்றினை நமக்குள் பிறப்பிக்கும் விதமாய் இருக்குமானால்; அது நம் நன்றிக்குரிய திரைப்படம் தானே?

அப்படி ஒரு வரிசையில் வரவிருக்கும் பல படங்களுக்கான முதல் வாசலை திறந்துவைக்கிறான் இந்த மொழிபெயர்ப்புப் படமான சங்கரின் ‘நண்பன்!

நன்றிடளுடன்..
——————*———————–*——————–
வித்யாசாகர்

குறிப்பு: இப்படத்தின் மூலக் கதையான Five Point Someone என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் “சேட்டன் பகத்” பற்றிய விவர விக்கிப்பீடியா பக்கம் http://en.wikipedia.org/wiki/Chetan_Bhagat  நன்றிகளுடன்…

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in திரை மொழி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to சங்கரின் ‘நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன்’

  1. saranya சொல்கிறார்:

    nice

    Like

  2. saranya சொல்கிறார்:

    VERY NICE

    Like

  3. Umah thevi சொல்கிறார்:

    அருமையான விமர்சனம்.
    படத்தை பார்க்க தூண்டுகிறது.
    கண்டிப்பாக விடுமுறை நாளில் பார்து வருகிறேன்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி உமா. உண்மையில் கல்லூரி படிப்பு காலத்தில் ஏற்படும் புரிதல் நமை காலத்திற்கும் ஏற்ப பக்குவப் படுத்துகிறது. அவ்விதம் இப்படத்தில் சில நம்பிக்கை சார்ந்த கருத்துக்களும் சுயவிடுதலை உணர்வுகளும் அது சார்ந்த தைரியமும் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. என்னதான் மொழி மாற்றம் செய்த படம்தான் என்றாலும் அதன் அச்சு பிசகாமல் நம் உணர்விற்கு ஏற்ப தந்தமை சிறப்பென்று எண்ணம். இதில் எழுதா நிறைய பேரின் திறனும் உண்டு, ஸ்ரீகாந்திற்கு அப்பாவாக வருபவர், ஜீவாவிற்கு அம்மாவாக வருபவர் எல்லாவற்றிற்கும் மேல் சத்யன், படத்தின் திருப்புமுனையே மீண்டும் அவரிடத்தில் தான் துவங்குகிறது. மிக நன்றாக நடித்திருப்பார். எதிர்மறை எண்ணம் சார்ந்த சுயநலப் போக்கு நிறைந்த பாத்திர படைப்பு என்பதால் மேலே பகிர்ந்திடவில்லை. என்றாலும் அவரின் நடிப்பு அவரின் மேல் எரிச்சலை ஊட்டும அளவிற்கு நடிப்பில் அவர் வெற்றி பெற்றுள்ளார். மிக்க பாராட்டிற்குரியவர். அதுபோல் இப்படத்தில் எனக்குப் பிடித்த பாத்திரம் ஜீவா, மிக யதார்த்த நடிப்பு, ஒழுக்கமாக இருக்க முனையும் எண்ணம், எல்லாம் கடந்து எனக்கேயான ஒரு நண்பனை நான் சந்தித்துவிட்ட ஒரு நிறைவு ஜீவாவிடம் இருந்தது. பாத்திரங்கள் இப்படி மனதில் நிற்கத் தக்க நல்ல படம். முடிந்தால் பாருங்கள் உமா. பிடிக்கும். நன்றியும் வணக்கமும்!

      Like

  4. sivaparkavi சொல்கிறார்:

    விமர்சனம் ஓகே…

    http://sivaparkavi.wordpress.com/
    sivapakavi

    Like

  5. வித்யாசாகர் சொல்கிறார்:

    மிக்க நன்றியும் வணக்கமும் சிவபார்கவி. இப்படத்தின் மூலக் கதையான Five Point Someone என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் பற்றிய விவர விக்கிப்பீடியா பக்கம் http://en.wikipedia.org/wiki/Chetan_Bhagat நன்றிகளுடன்…

    Like

பின்னூட்டமொன்றை இடுக