37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்…

 

நீ வந்து வந்து செல்கிறாய் உள்ளே
பின் வராமலும் கொல்கிறா யென்னை
கால்தடம் நீ பதித்தஇதயம் பாவம்
நீ பார்க்காத இடந்தனில் நோகும்;

பூப்பூத்த ஒரு கணம் போலே
உள்ளே சிரிக்கசிரிக்க மலர்ந்தாயடிப் பெண்ணே
உன் கால்கொலுசு கதைகேட்கக் கேட்க
வருகையின் பூரிப்பில் உயிர்பூத்தேனடி நானே;

ஒருநொடி பார்த்தாய் பார்த்தாய் – ஒரு யுகம்
தொலைத்து வீழ்ந்தேன், இனி
வரம் ஒன்று வேண்டி – அதில்
உனக்கே உனக்கே பிறப்பேன் பெண்ணே!!

முகமதில் தங்கம் பூசி – பள பளக்கும்
கண்கள் சிரிக்கும், கனவிலும் ஒளியின் வெள்ளம்
உன் தேன்துளி இதழசைய சிந்தும், சொல்லாமல்
சொல்லுமுன் காதல் என் காலத்தை கண்மூடி வெல்லும்;

கதைகதையாய் நீ சொல்லக் கேட்க
என் நொடிப் பொழுதின் ஆயுள் நீளும்
நீ நகம் கடித்து வீசும் தருணம் – காதல்
தீ பிடித்து ஜென்மமது தீரும்;

கிட்டவந்து வந்து நீ போகும் வாசம்
எனை எரித்தாலும் போகாது பெண்ணே
இவன் அர்த்தம் ஒன்றென்று ஆயின் – அது
நீயே நீயே – நீயன்றி வேறிலையே!

 

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்…

  1. அழகான வரிகள்…
    வாழ்த்துக்கள்… நன்றி…

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      வெகு நாட்களுக்கு முன் எழுதியது தோழர், ஒரு பாடலுக்கு வேண்டி, இன்று வாசித்துப் பார்க்கையில் ஒரு லயமிதில் பிடித்தது. அந்த லயம் அந்த காதல் காலங்கடந்தும் நம் மனங்களை இயக்குவது இயல்பென்று உணர்ந்து வியந்து லயித்துப் போனதில் (கவிதையென்று இதையும்) பதிய துணிந்தேன்..

      தங்களின் வாழ்த்திற்கு நன்றியும் வணக்கமும்!!

      Like

பின்னூட்டமொன்றை இடுக