தமிழ் வணக்கம்
அ ஆ’ வில் உயிரூட்டி
அமுது தமிழை உரமாக்கி
இலக்கிய இலக்கணத் தெருவெங்கும் வாழ்தலின் ரசங்கூட்டி
அடிக்கு அடி மொழியாலே உலகப் பண்பு வளர்த்த தமிழ்மண்ணே;
மனித மாண்பூறிய உன்தாய்மடியில் எனை தமிழனாய்ப் பெற்றெடுக்க
வரம் தந்த மொழியே; தமிழே என் முதல் வணக்கம்!!
———————————————————————
அவை வணக்கம்
பசிக்கு தமிழ்தந்து படிக்க மனிதர் தந்து
கடிக்க சோறு போட்டு வயிற்றில் இனத்தின் அக்கறை நிரப்பி
கதைக்குக் கதை கவிதைக்குக் கவிதையென மொழியின் வளமைக்கு
மாதம் தவறாமல் கூட்டமிட்டு –
இனி பிறக்கும் தலைமுறைக்கு என் அறிவை விட்டுச்செல்ல மேடைகட்டி,
அன்பில் குடும்பத்தை அடக்கி ஆற்றலில் அகிலத்தையும் வெல்லப் பயிற்சியூட்டி,
தேவைபடும்போதெல்லாம் படைப்பாளிகளைப் பிரசவித்து
பாவரங்கு பாட்டரங்கு பட்டிமன்றமென நடைதளராமல் தமிழோட்டங் காணும் தா(ய்)யிடத்திற்கு, என் தமிழோசை உறவுகளுக்கு – என் அவை வணக்கம்!!
———————————————————————
தலைமை வணக்கம்
பொருளீட்ட மாளுமுலகில் தமிழ்தேடும் அரிய மனிதர்
தேன் சொட்டும் தமிழ்த்தன்னில் கவிபாடும் பற்றாளர்
பெரியோர் சிறியோர் மதித்து பண்பை வளர்க்கும் படைப்பாளி
தமிழுக்கும் தமிழருக்கும் துயரென்றால்’ இதய தசையெல்லாம் –
தீ பற்றி வாடும் நல்லுள்ளம்;
இன்று கைகூப்பி அழைத்தாலும்’ ஓடிவந்து உதவ நிற்கும் கொடையாளி
ஐயா கவிஞர் சாதிக்பாட்சா அவர்களுக்கு என் கவியரங்கத் தலைமையின் மரியாதை நிறைந்த வணக்கம்!!
———————————————————————————————————–
இக்கவியரங்கத்தில் எனக்கான தலைப்பு: விவேகானந்தர்
விவேகானந்தர் பற்றிய என் கவிதைக்கு நானிட்ட தலைப்பு: தென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்..
என் நெற்றிப்பொட்டில் நெருப்பு மூட்டி
என் சமூக அக்கறையின் தேடல் கூட்டி
மூண்ட தமிழ்த் தீ தனில் எனை எழுத்துக்களாய் சுட்டெடுத்து
மொழி ஆளுமையின் ஆழம் பகிர்ந்துக் கொண்டவன்;
மத பார்வையை உலக நீளஅகலத்திற்கு விரித்து
இறைபற்றிய புரிந்துணர்வை யாருக்கும் வலிக்காமல் வளர்த்துக் கொடுத்து
மனிதம் நிறைந்து வாழ்தலே போதிய ஞானமெனும் அறிவூட்டி
தன் மானசீக எழுத்துப் பட்டறையில் எனையும் மாணவனாக்கிக் கொண்டவன்;
உலகின் கண்களை மதங்கொண்டு திறந்து
கடவுளைப் பார்க்கையில் களங்கமுதறி
மனிதர் வாழ்க்கையின் மேன்மைக்கு சிந்தித்து
சூழ்ந்தோர் சூழ்ச்சியை அறிவினால் வெல்லும் திறனூட்டிய படைப்பாளன்;
ஆன்மிகக் கடலில் ஆத்ம முத்தெடுத்து
அதை உலகவீதிகளில் பார்வையினால் வீசி
ஞான வார்த்தைகளால் நாளுமிறைப் புகழ்பரப்பி
நம் நாட்டு பெருமைதனை மிலேச்ச நாடுவரை பரப்பிய பேச்சாளன்;
அடுக்கடுக்காய் நீதி சொல்லி
கதைகதையாய் மனிதம் போதித்து
கடவுள் வாழும் விலாசத்தை
ஏழை மனிதர் முன்னேற்றத்தில் பதிந்த மாவீரன்;
உயிர்களின் வதைக்கு அஞ்சி
உரிமையது மீறாத அன்பை அளந்து
பிறரைத் தாழ்த்திடாத அறிவே அறிவென்றுப் போதித்து
சமத்துவ சிந்தனையில் உலகின் நாகரிகத்தை வளர்த்த பேரறிவாளன்;
நடுங்கிய நரம்புதனில் தன்னம்பிக்கைத் தீரமூட்டி
ஒடுங்கிய மக்களுக்கு விழித்தெழும் வீரமூட்டி
அஞ்ஞானத்தில் கடவுள் தனித்துத் தெரிவதாகவும்; ஞானத்திலே கடவுளை
கடைந்தெழும் ஆழத்தில் கண்டதாகவும் சொல்லி
எளியோருக்கும் இறைபயம் அறுத்துப் போட்ட இலக்கியச் சித்தன்!
எட்டுதிக்கும் பரந்த உலகின் ஞானத்தை – தன்
சொடுக்கும் விரலிலடுக்கும் நினைவாற்றலும்
சொல்லித் தர வேண்டிய பாடத்தை சொல்லாமலே
உணர்வினால் புகட்டும் மனஓசை தெரிந்த ஆசான்!
இடுப்பில் தங்கம் உடுத்தி – உதட்டில் காமம் பூசி
அறைக்கு அறை – குறையாய் கிடக்கும்
அரசியல் வியாபாரம் நடத்தும்
காம கத்தியானந்தாக்களுக்கு மத்தியில்
பரிசுத்த பிரம்மமாய் தெரிந்த இறைநெறியாளன்!
இத்தனையிருந்தும்,
இப்படி நான் வார்த்தைக்கு வார்த்தை அவரை
அவன் அவன் என்று உச்சரித்தும்
என் நாவுக்கு அளவற்ற பலம் கூட்டும் குரு
சுவாமி விவேகானந்தருக்கே புகழனைத்தும்..” என முடித்து
இருகரம் கூப்பி எல்லோரையும் வணங்கி விடைகொள்கிறேன்; நன்றி; வணக்கம்!!
———————————————————————————————————–
வித்யாசாகர்
மிக அருமை!
LikeLike
நன்றியும் அன்பும் உமா. விவேகானந்தர் எனுமொரு மகானின் உள்ளுணர்வு என் சிறு பிராயத்திலிருந்தே இணைந்தே இருக்கின்றன. நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் ஓவியப் போட்டியில் வாங்கிய பரிசு விவேகானந்தரின் புத்தகம். அதன் பின் தேடி தேடி அவரைப் படித்ததுண்டு, ஆன்மிகம் குறித்த ஒரு நல்ல தெளிவு பிறக்க அவரின் படைப்புக்களும் உதவியாய் இருந்தன. பின்னாளில் அவரை ஒரு மானசீக குருவாய் ஏற்று தியானிக்க துவங்குகையில் ஒருசமயம் ‘விவேகானந்தா ஆன்மிக குழுமம் ஒன்றின் மூலம் ஓமானில் ‘திரு.சந்திரசேகர உடுப்பா’ அவர்களின் தியான பயிலரங்கு ஒன்றில் (1998-இல்) கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைய, நாங்கள் செய்வதும் அவர் சொல்லிய அனைத்து வழிமுறைகளும் ஒருங்கே அமைந்திருக்கையில், அந்த குருவாக எண்ணிய அவரின் ஆன்ம கரிசனம் உள்ளுணர்வில் புரிபட்டது. பின்பு இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கையில் எண்ணிக் கொள்வதுண்டு ஏதோ ஒரு தொடர்பு ஆத்மார்த்தமாய் இருப்பதாகவும், அது சிறு வயது தொட்டே தொடர்ந்து வருவதாகவும்..
எல்லாம் நம்பிக்கையின் ஆழம் பொருத்த செயல்கள். யாருக்கும் வலிக்காதபட்சத்தில், நமக்கு நிறைவினை தரும்பட்சத்தில் மனது சற்று இதெல்லாம் நம்பித் தான் கொள்கிறது..
LikeLike
அருமை… வாழ்த்துக்கள்… நன்றி…
LikeLike
இவ்விடம், குவைத்தில், தமிழோசை கவிஞர் மன்றம் மாதம் தவறாமல் கூட்டம் நடத்தி தமிழிலக்கியப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திச் சிறப்பிக்கிறது. அதன் எழுபத்தைந்தாவது பவளவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இம்முறை பட்டிமன்றம் கவியரங்கம் என நடத்தி இப்தார் விருந்தும் அளித்து, ஒரு சமத்துவ மனநிலையை நிலைநிறுத்தியது. அதில் கலந்துக் கொண்ட நிறைவாக நம் கவியரங்கும் அமைந்தவை மகிழத் தக்கதாக இருந்தது. குருசுவாமியைப் பற்றி பாடக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மனசெண்ணி மகிழ்ந்துதான் போனது..
குவைத் தமிழோசை கவிஞர் மன்றம் பல கவிஞர்களின் நன்றிக்குரியது என்பதில் என் பெயரையும் அடக்கிக் கொள்ளுமொரு வாய்ப்பாக இதிருக்கலாம். உங்களின் வாழ்த்திற்கும் கூட மெத்த நன்றியும் வணக்கமும்!!
LikeLike