தீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..

யிர் உயிர் உயிரென்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதே
உதிர்கின்றன எம் உயிர்கள்..

தானாடாவிட்டாலும் தசையாடும் வர்கத்தின்
உயிர்வாடிப் போகிற தொப்புள்கொடி உறவுகளெல்லாம்
ஒவ்வொன்றாய் அறுகிறது..

மனதிற்குள் சுமக்கும் உறவில்லை
உயிர் உணர்வு முழுதும்
ஒரு இனமென்று கலந்த தமிழ்ரத்தமது’ சுடுகாற்றில் உறைகிறது..

சொட்டச் சொட்ட வலிக்கும்
கணம் கடப்பதற்குள்
ஆறாய் பெருக்கெடுக்கிறது மீண்டும் அதே தீராக் கண்ணீர்..

ஒரு இலை காற்றில் காம்பறுந்து விழுவதற்கீடாக
வெந்தும் நைந்தும் வெகு சொல்பமாய்
வேகிறது எங்களின் இதயங்கள் கேட்பாரற்று..

நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளியிலும்
கேள்விகள் கோடி கனத்திருக்க, கிடைக்காத நியாயத்தில்
காலத்திற்குமாய் உதிரத்தில் நனைகிறது எங்கள் பூமி..

பச்சைமண்வாசம்போல் எங்களின்
உடல்கருகும் நெடி வீசியும்
அடைத்தேக் கிடக்கின்றன திறக்கப்படவேண்டிய நீதியின் கதவுகள்..

ஊருக்குத் தெரிந்தும்
உலகிற்குத் தெரிந்தும்
இன்னும் –
யாருக்குத்தெரிந்து அவன் இழைக்கவேண்டிய அநீதிகள் மிச்சமுள்ளதோ(?)!

காலம் ஒருநாள் அவனைக் கேள்வி கேட்கும்
அவனின் சட்டைபிடிக்கும்
மண்ணில் சாயும் அவனின் –
தந்திரப் போக்குகளை வென்று எங்களின் விடுதலை துளிர்க்கும்..

எல்லாம் சரிதான்,
எல்லாம் நடக்கும்,
எம் மாவீரர்கள் என்னாவார்கள்???

அதுவரை தீ நாக்கில் கருகும் கனவுகளென இன்னும்
எத்தனைப் பேரை இப்படி
தின்று செறிக்குமோ இக் காலம் ?
——————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக