35, இலைகள் அசையா மரம் பற்றியும் மனிதன் பற்றியுமான கவலை..

1
ரம் விரிச்சோடிக் கிடந்தது
காற்றேயில்லை
கயிறு கட்டிலை நம் தாத்தாவோடு நாம்
எரித்திருத்தோம்!
—————————————————————————–

2
ரம் வெட்டி மரம் வெட்டி
மரவெட்டியானான் மனிதன்;
மனிதத்தையும் மரத்தோடு வெட்டியிருந்தான்!!
—————————————————————————–

3
மி
ன்னல் விழுந்து
பனைமரம் எரிந்துபோன கதையெல்லாம்
இப்போது நடப்பதில்லை;

பனைமரம் வெட்டப்பட்டபோதே
மின்னலையும் நிறைய வெட்டிவிட்டோம் நாம்!
—————————————————————————–

4
ரு மரம் வெட்டினேன்
காக்கை குருவிகள் வீடிழந்து அலைந்தன,
இன்னும் பல மரம் தேவைப்பட்டது

எனக்கான  ஒரு வீடுகட்ட..
—————————————————————————–

5
ழை வரவில்லை அழுதோம்
மழை வந்தது அழுதோம்
மழை;
அழுகைக்கும் பாடுபொருள்!!
—————————————————————————–

6
ழைக்குத் தெரியாது
வந்து வந்து போகும்போது
எத்தனைப் பேர் இருக்கிறோம்;

எத்தனைப்பேர் இல்லையென்று..
—————————————————————————–

7
பு
யல்  வீசி மரங்கள் சாய்ந்து
பல உயிர்கள் அழிந்து
மனிதர் செத்தது மட்டுமே செய்தியில் சொல்லப்பட்டது;

மற்ற உயிர்களுக்கு
கையிருந்தும்
காலிருந்தும்
பசியிருந்தும்
வலியிருந்தும்
வாழ்க்கையிருந்தும்
மனிதனுக்கு பெரிய பொருட்டாக அது தெரியவில்லை

மனிதன் தனக்கான கொலையைத் துவங்கிய இடம்
இப்படி தன்னைமட்டும் பெரிதாகக் காத்த இடமாகயிருக்கலாம்
அல்லது பிற உயிர்களையொரு –
பொருட்டாகக் கூட எண்ணாதக் குற்றமாயிருக்கலாம்..
—————————————————————————–

8
ழை பெய்ததான நினைவு
மண்வெட்டியெடுத்து தரையில் கொத்தினேன்
பாறையென இறுகிய மண்
இன்றையச் சோற்றில் விழ –

குழந்தைகளின் வயிற்றில் கைவைத்துக் கொண்டு
இரவின் இருட்டிற்குள் விழுந்தோம்,

ஒருவேளை மழை நாளைக்கும் வராதுயெனில்
மண்வெட்டிகள் நாளை நிறைய அவசியப்படலாம்

கொண்டுவாருங்கள்..

மழை பின்
மற்றவர்களுக்கேனும் பெய்யட்டும்!!
—————————————————————————–

9
ரத்தை வெட்டி
வீட்டைக் கட்டினோம்
அந்த வீட்டில் பிறந்த குழந்தைக்குத் தெரியாது
அந்த வீடு
மரத்தின் இடமென்று!!
—————————————————————————–

10
ட்சத்திரங்கள் நிறைய இருந்தன
அதில் ஒன்று அம்மாவாகவும்
இன்னொன்று அப்பாவாகவும் தெரிந்தது

நான் தனியாக நின்றிருந்தேன்!!
—————————————————————————–

11
ந்த கடலுக்குத் தெரியும்
நான் பைத்தியம் இல்லையென்று
என் சேலையினை
இந்த கடலின் அலைதான் கிழித்துப்போட்டது!!
—————————————————————————–

12
கடலே உனக்கு வேண்டுமென்றால்
ஒரு பத்து ரூபாய் தரேன்
என் குழந்தையைக் கொடேன்..

இல்லையேல் இந்தா என் ரவிக்கையை தரேன்
நீ போயி…
—————————————————————————–

13
டி இடிக்கும்
படுக்கையை சுருட்டிக்கொண்டு
வீட்டினுள் ஓடுவோம்,

இப்போதும் இடி இடிக்கிறது
படத்தில் பார்க்கும்போதே
காதைமூடிக் கொள்கிறோம்..
—————————————————————————–

14
பூ
கம்பத்தின் போது
என் வீடும் உள்ளே போனது,

என் வீட்டின் கனவுகள்
அந்த பூகம்பத்தைச் சபித்திருக்கும்!!
—————————————————————————–

15
ழை வந்துபோனது
கொசு நிறைய ஆனது
காய்ச்சலும் வந்துபோனது;

வட்டி கட்டவேண்டியது மட்டும்
தீரவில்லை இன்னும்..
—————————————————————————–

16
ழைவந்து மழைவந்து
காய்கிறது
ஏழையின் வயிறு;

ஏழையின் வயிற்றிலேறி
மிதித்துச் செல்கின்றன; சில
பணக்கார மிருகங்கள்..
—————————————————————————–

17
ரத்தை வெட்டும்போதேல்லாம்
கீழே சாய்கிறது
மனிதம்;

மனிதன் மரத்தோடுச் சேர்த்து
மறைமுகமாய் தன்னையும் எரிக்கிறான்..
—————————————————————————–

18
டி இடிக்கிறது
பனைமரங்கள் கருகுவதில்லை
இடியை மரத்தோடு வெட்டியிருந்தோம்;

இயற்கை மரத்தின்வழி முடியத் துவங்கியது!!
—————————————————————————–

19
பூ
கம்பத்தில் அறுந்தது
சில தொப்புள் கொடியும்
சில தாலிகளும்..

பூகம்பம் மீண்டும் வரும்
தாலிகளும் அறும்
உபயம்; நீயும் நானும்..
—————————————————————————–

20
பூ
பூத்தது
உதிர்ந்தது
அது வாழ்ந்ததன் குறிப்பு நம்மிடமில்லை;

நம்மைநினைத்து தலைகுனிந்துக் கொள்கின்றன
மலர்கள்..
—————————————————————————–

21
கு
ளிருக்கு கோணியைப் போர்த்தி
மூடிக்கொண்ட சிறுவனால்
மழையை மூடமுடியவில்லை;

மழை; ஓட்டையின் வழியே
மரணமாகவும் சொட்டியது..
—————————————————————————–

22
வெ
ய்யிலில்
விறகு வெட்டினோம்,

மழையில் நனைகிறது அடுப்பும்
அடிவயிற்றுப் பசியும்
மனிதனின் சுயனலத்தனமும்..

—————————————————————————–

23
சி கழிப்பிடத்தில் சூடில்லை
சல்லி உடைக்குமிடத்தில்
வெற்றுடம்பைச் சுட்டது சூரியன்;

ஏற்றத்தாழ்வுகளை எப்படிக் களைவது ?

ஏசியை கழிப்பறையிலேனும் நிறுத்திக் கொள்
அல்லது
வெற்றுடம்பை மனிதத்தால் மூடு!

—————————————————————————–

24
ள்ளங்கையைக் குவித்து
மழைநீர் சேமிக்கிறது குழந்தை
காய்ச்சல் வருமென்று
கன்னத்தில் அரைகிறாள் அம்மா;

ஐயோ பாவமென்று
மழையை நிறுத்திக் கொள்கிறார் கடவுள்;

இன்னொரு கன்னத்தையும் காட்டி
அடித்தால் பரவாயில்லை – ஆனால்
மழை கண்டிப்பாக வேண்டுமென்கிறது குழந்தை..

பயந்துப்போனார் கடவுள்; கண்ணீர்
மழையாகக் கொட்ட
மீண்டும் கைநீட்டியது குழந்தை மழையில்!
—————————————————————————–

25
பி
ணங்கள் என்று சொல்லி
ஒன்றாகச் சேர்த்தே தூக்கிவந்தனர்
புயலில் சிக்கி இறந்தப்பின்
கோமணம் கட்டியிருந்தவனையும் கோட்டுசூட்டு போட்டவனையும்..

ஆனால் அதற்குமுன்னரே அவர்கள்
தங்களைத் துண்டுபோட்டுக்கொள்ள
கத்தியை –
ஜாதியிலும் மதத்திலும் இனத்திலும்
ஏன் பணத்தில் கூட செய்துவிட்டிருந்தனர்..
—————————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to 35, இலைகள் அசையா மரம் பற்றியும் மனிதன் பற்றியுமான கவலை..

 1. munusivasankaran சொல்கிறார்:

  ”மின்னல் விழுந்து
  பனைமரம் எரிந்துபோன கதையெல்லாம்
  இப்போது நடப்பதில்லை;

  பனைமரம் வெட்டப்பட்டபோதே
  மின்னலையும் நிறைய வெட்டிவிட்டோம் நாம்!”

  மின்னல்போல் வெட்டியது இவ்வரிகள்..!

  Like

  • மு.பாலு சொல்கிறார்:

   அன்பு வித்யாசாகர் அவர்களுக்கு வணக்கம் ..!நலமா ?நீண்ட நாட்களாகி விட்டது ..!கவிதை படித்தேன் ..முடித்தவுடன் மனம் வேதனையில் ..”பூகம்பம் மீண்டும் வரும் ,தாலிகள் அறும் .,உபயம் நீயும் நானும் “என்ற வரிகள்!!!! ..மனிதன் …பழமைகளை எரிக்க ஆரம்பித்து விட்டான் …பலி ஆகப் போவது நாம்தான் எனத் தெரியாமல் …! கவிதையில் உள்ள அனைத்து வரிகளும் ..இயற்கையை அழிக்க நினைப்பவர்களுக்கும் ..பழமைகளை எரிக்க நினைப்பவர்களுக்கும் ஓர் எச்சரிக்கை …வாழ்த்துக்கள் வித்யசாகர் .

   Like

   • வித்யாசாகர் சொல்கிறார்:

    தங்களின் விரிவான கருத்திற்கும் சரியான புரிதலுக்கும் நன்றி. இயற்க்கை சீர்கேட்டின் விளைவு தனது கொடிய முகத்தைக் காட்டியதை நாமறிவோம்; ஆயினும் இயற்க்கைக்கு மாறாக நாம் பயணிக்கும் பாதை இன்னும் கொடூர விளைவுகளை ஏற்படுத்தலாம். அப்போதும் ஏழ்மைக் குடிகளே இயற்கையின் தண்டனைக்கு உட்படுகிறது. பணமிருப்பவர் அங்கும் தனை மட்டும் பாதுகாத்துக் கொள்கின்றனர். அது அவர்கள் மீதான குற்றமல்ல, அதில் நாமும் அடக்கம், அதுபோல் நம் கண்ணெதிரே போகும் இன்னொரு உயிரின் விலைக்கும் நாம் பொறுப்பில்லையா? எதை வைத்து ஈடு செய்ய என்று அறியாமலே கண்முன் பறிக்கப்படும் எண்ணற்றோரைப் பற்றிய பொதுவான கவலையும் அவர்களையும் காப்பதற்கான ஏற்பாடும் நமக்கு சம அளவில் வேண்டாமா? குறைந்தபட்சம் இயற்க்கைக்கு மாறான செயல்களை குறைப்பதைவிட நிறுத்தவேணும் செய்வது கடமை என்றுணர்ந்து அதற்குத் தக நம் வாழ்வியலை சீர்செய்து கொள்ளல் நம்மையும் நம்மோடுள்ளவரையும் இன்னபிற உயிர்களின் நலன்களைக் காப்பதாகவும் அமையாதா?

    ஒருநாள் கடற்கரை ஓரம் செல்கிறோம், ஒரு சுயநினைவினை இழந்த சகோதரி ஆடை களைந்து கடலில் எறிகிறாள், பார்ப்போர் பயித்தியம் என்று துணிகொண்டு மூடுகிறார்கள். அந்த சகோதரியின் வலி எதுவாக இருக்குமோ? எனும் கவலை மனதைத் தொற்றிக் கொண்டது. ஒருவேளை கடல் கொண்டுபோன தன குடும்பத்தை குழந்தையை தன்னிடம் இருப்பதாக என்னும் அந்த ரவிக்கையை எடுத்து வீசி; இந்தா இதை எடுத்துக் கொள், என் குழந்தையை கொடுத்துவிடு என்று கேட்டிருப்பாளோ என்று கவலை வந்து நெஞ்சையடைத்தது.

    எதுவாயினும் இதுபோன்ற கொடூர வாழ்க்கையினை விதைக்கும் செயல்கள் இயற்கையின் வளத்தை குறைபப்தன்றி வேறெங்கிருந்து ஆரம்பித்திருக்கும் ?

    வெறும் பாவம் பாவமென்று சொல்லி உச்சிகொட்டி விட்டால் மட்டும் போதுமா? நம்மால் ஆனமட்டும் சுற்றியிருக்கும் மரம் செடி கொடி மற்றும் கால்நடைகளையேனும் காக்க முயல்வோம். சிறு உயிர்களின் வலி குறித்தும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவோம்.

    ஏதோ ஒரு பாதைக்கு நாம் பழக்கப்பட்டு பயணப்பட்டுவிட்ட போதிலும் அதன் மாற்றத்தின் தேவையை, குறைநிறைகளை, நன்மை கேடுகளை இயன்றவரையிலேனும் இனி வரும் சந்ததிக்குச் சொல்லித் தருதல் இப்போதைய சூழலின் பெருங்கட்டாயம் என்றே கருதுகிறேன்..

    Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   நன்றி ஐயா. நெடுக நின்ற பனைமரங்களின் நிழலில் அன்று நாங்கள் நின்ற நடந்த நன்றிக்குரிய உணர்வுகள் வரிகளானதில் மின்னுகிறது போல்.

   யாரேனும் ஒரு பனைமரம் நட்டால் சரி; அவர்களுக்கு இந்த கவிதைகளும் சமர்ப்பணம்..

   Like

 2. வணக்கம்
  வித்தியாசாகர்(அண்ணா)

  //பூ பூத்தது
  உதிர்ந்தது
  அது வாழ்ந்ததன் குறிப்பு நம்மிடமில்லை;

  நம்மைநினைத்து தலைகுனிந்துக் கொள்கின்றன
  மலர்கள்..//

  சிந்திக்கும் ஆற்றலுடன்
  சிந்தனை மிக்க கவிவரிகள் தந்த எங்கள்
  பாமாலைக் கவிஞனே உன்கவியை
  படித்தேன் மாசற்ற
  உள்ளங்கள் படித்து பயன் பெற
  உன் கவியை நான் வாழ்த்துகிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றியும் அன்பும்பா..

   இயற்கையைப் பற்றிய அக்கறை நமக்குப் போதவில்லை. இன்னும் இயற்க்கை மீதான தாவரங்களின் செழுமை மீதான அக்கறை தேவை என்பதை எடுத்துச் சொல்லவே அங்ஙனம் எழுதியிருந்தேன். தாவரங்கள் இயற்கைச் சுழற்சியின் நிலைப்புத் தன்மைக்கான மேன்மைக்கான பெருஆயுதம். அதைக் காத்து எருவூட்டி வளர்க்கவேண்டிய கட்டாயம் இப்போதுள்ளது. முக்கியமாக அதன் அழிவை தடுத்து நம் சுற்றுச் சூழலை இன்னும் பசுமை பூக்க வைத்துக்கொள்ள வேண்டியது நம் கடன்..

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s