அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

alrededores-de-biblioteca-de-alejandria1-500x278

ஞ்சறைப் பெட்டியின்
வாசத்தில்
அழகழகாய் பிள்ளைகளைச் செய்தவள் நீ;

அடுக்குமாடிக் கட்டிடத்தின்
இடுக்கிலும்
கனவுகளை வண்ணமாய் நெய்தவள் நீ,

நெஞ்சுக்குழி படபடப்பில்
வயது நாற்பதை
நான்காகக் குறைத்துக்கொள்பவளே; இதோ

நீயில்லா தெருக்களில்
விளக்குகள் இருக்கிறது
வெளிச்சமில்லை,

உனைக் காணாத வீட்டினுள்
வெளிச்சமுண்டு
இருட்டை என்னால் அகற்றவே முடிவதில்லை,

நஞ்சு கலக்காத
மரணத்தில்
மெல்ல மெல்ல மூழ்கடிக்கிறாய்

முற்றும்
துறந்தவனைப் போல
முக்காலும் பேசவைக்கிறாய்,

செத்தும்
சாகாத தனிமையை
நினைவுகளால் உடைக்கிறாய்,

நான்
நீயில்லாதவீட்டின் கதவுகளை மூடிவிட்டு
உன் நினைவுகளோடு
வெளியேப் பார்க்கிறேன்

ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள்
அழகிய
மலர்க்கொத்து இருக்கிறது,

தெருவில்
ஒரு மாளிகை
அத்தனை அழகாய்க் கட்டப்பட்டுள்ளது

ஒரு குழந்தை
கேகே கேகே வென
சில்லரைக்கொட்டி சிரிக்கிறது

மழையொழுகும் வீடு’
உள்ளே பசி’
கிழிந்த ஆடைக்கூட
அழகானக் கவிதையொன்றுள்
அகப்பட்டுக் கிடக்கிறது

அதோ
ஒரு பாட்டியொருத்தி
யாருமற்ற தெருவில்
வாழ்க்கையை அசைப்போட்டபடி நடக்கிறாள்

நீ விதவை என்றுச் சொன்ன
தெருக்களையும்
ஊரையும் சபித்துக்கொண்டே
இளம்பெண்ணொருத்தி முகம்மூடி நடக்கிறாள்

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த உனக்காக
என் இத்தனை வருட உறவையும்
வீட்டையும் விட்டு
நான் வருகிறேன் சரி; நீ…………?

கண்ணீரால் வீடெல்லாம்
நனைத்து
உன்னிடம் கொடுக்க நான்
எனது சிரிப்பை –
பெற்றவரிடமிருந்து பறித்து வந்திருக்கிறேன்
நீ…………?

உடம்பெல்லாம் தங்கம்
உயிர்முழுக்க சுகத்தால் ஆனவை
அருகாமை கூட நறுமணம் மிக்கது
அழகெல்லாம் அவர்கள் தந்தது
அத்தனையையும் பெற்று நீ
அவர்களுக்கு எனக்கீடாய் என்ன தருவாய்………..?

பதறாமல் கேட்கிறாள்
பதினாறு வயதானவள்,

பதில் தேடாத ஆண்கள்
பல அரசியலுள் அகப்பட்டு
சில முந்தானைக்குள்
முடங்கிப் போகிறார்கள்..

தற்கொலை தானாக
நிகழ்கிறது,

தனை கம்பீரமாகக் காட்டிக்கொண்ட
ஆண்கள்
அதோ விழுதுகளைப் போல
பழைய பாடங்களுள்
விடாதுத் தொங்கிக்கிடக்கிறார்கள்..,

‘நான்’ நான்’ என
உலக உருண்டை சுருங்கி
நீருக்குள்ளும்
நீர் தீர்ந்து நகருக்குள்ளும்
தாகமாகவும் மரணமாகவும்
ஒரு பேயைப் போல
கற்பனைக்குள்
தன்னையொரு கடவுளென நினைத்துக்கொண்டு
நிர்வாணமாக நிற்கிறது “நான்”

யாருக்கும் அசிங்கமில்லை
அவரவருக்கு அது
அவருடைய நிர்வாணம்
அவருடைய “நான்”

ச்சீ…

இந்த “நான்” எனும்
திமிர் தான்
நாடுகளுக்கு மத்தியிலும்
வீடுகளுக்கு மத்தியிலும்
ஏன் மனிதர்களுக்கிடையே கூட
இரத்தக் கோடுகளைக் கிழிக்கிறது,

ரத்தமொழுகும்
இரு உடைந்த முகங்களுக்கிடையேப் புகுந்து
ஒன்றை
வெற்றியாளனாய் அறிவிக்கிறது,

எல்லாவற்றையும்
வேடிக்கைப் பார்த்தவனாய்
நீ இல்லாத தனிமையோடு நடக்கிறேன்,

தெருக்களில் எல்லோரும் உமிழும் எச்சில்
வெண்சுருட்டுத் துண்டு
வெய்யிலில் பூ விற்பவள்
விளையாட –
லட்சத்திற்கு நாய்க்குட்டி வாங்கிப்போகும்
மிராசுகள்,
எல்லோருக்கும் எல்லாம் சமமென
வாய்த்தாளம் போட்டுவிட்டு
வரியை மட்டுமே வக்கனையாய்த் தீட்டும்
சர்வ வல்லமைக் கொண்ட அரசு
அதற்கு வேட்கமேயின்றி
ஒத்துப் பேசும் மேதாவிகள் குறித்தெல்லாம்
நிறைய குறிப்பு கிடைக்கிறது
அவைகளையெல்லாம் மிக பத்திரமாய்
உன்னிடம் பேசவேண்டி வைத்திருக்கிறேன்,

ஏனென்றெல்லாம்
உடனே யோசித்துவிடாதே,

உன்னிடம் பேசித் தீர்க்க மட்டுமே
மிச்சமிருக்கிறது
எனக்கான இந்தச் சின்ன வாழ்க்கை..
——————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக