அவளில்லா தனிமை
நெருப்பைப் போல சுடுகிறது
அவளைக் காணாத கண்களிரண்டும்
உலகைக் கண்டு சபிக்கிறது..
இரண்டு பாடல்கள் போதுமெனை
உயிரோடு கொல்கிறது..
ஒரு தனியிரவு வந்து வந்து
தினம் தின்றுத் தீர்க்கிறது..
பிரிவைவிட பெரிதில்லை யேதும்
அதுவொன்றே பெரிதாய் வலிக்கிறது,
வரமான காதலையும் மண்ணில்
பிணமாக்கி பிணமாக்கிப் புதைக்கிறது..
ச்சீ.. என்ன சமூகமிது (?)
யாருக்குத் தெரியுமென் வலியை, உள்ளே தவிக்கிறது
யாரறிவார் அதை’ மெல்ல மெல்ல
என் மரணமும் உள்ளே நிகழ்கிறது..
எவருக்கு புரியுமெங்கள் தாயன்பும்
அவளுயிர் சினேகமும்..?
எவருக்குப் புரியுமென் கண்ணீரும்
காத்திருப்பும்..?
எம் சிரிப்பைப் பற்றி யாருக்கென்ன கவலை??
எல்லோருக்கும் சாதி வேண்டும்..
மதம் வேண்டும்..
எனக்கு வேறொன்றும் வேண்டாம் அவள் போதும்..
வயதாகி விட்டால் அன்பு மறக்குமா?
வயதாகிவிட்டால் நினைவு ஒழியுமா?
வயதாகிவிட்டால் அவள்தான் எனை மறந்து
நிம்மதியாய் வாழ்வாளா?
பாழும் சமூகமே..
அவளுக்கு வலித்தால்
எனக்கு வலிக்குமென உனக்கெப்படித் தெரியும்???
உனக்குத் தெரியுமா ?
அவளென்றால் அத்தனை இனிப்பு
அவளென்றால் அத்தனை ஆசை
அவளென்றால் அத்தனை அன்பு
அவளுண்டென்றால் மட்டுமே’ இந்த
ஒற்றை யுயிரும் உண்டு..
நாங்கள் எங்கோ உலகின் வெவ்வேறு
மூலையிலிருந்தால்கூட பிரிந்திருப்பதில்லை,
உடலை தனித்துவிட்டதால்
பிரித்துவிட்டதாய் அர்த்தமா உனக்கு ?
வா வந்துயெனை மெல்ல
உயிர்க் கொல்லென் தாய்மண்ணே,
உயிர் எங்கிருந்து பிரிகிறதெனப் பார்
பார்த்து பார்த்து பிறகு நன்கு அழு..
உனக்கென்ன நீ யொரு வரம்பு
நீயொரு பிடிவாதம்
நீயொரு ஏமாற்றம்
நீயொரு துரோகி,
ஆம் எனது கலாச்சார உலகே
உனக்கென்ன; யார் மடிந்தாலென்ன (?) பிரிந்தாலென்ன (?)
இதோ எனது சாபம் உனக்கு –
நீயுமினி காதலித்துப் போ..
காதலென்ன தீதா?
ஒருமுறை காதலி
பிறகு பிரிந்து போ
உயிரோடு சாகும் வலி’ என்னவென்று புரியுமுனக்கு
அழுகையை மறைத்துக்கொண்டு சிரிக்கும் வலி
என்னவென்று அறிவாய் நீ
உணவோடு உண்ணும் அவளுடைய பிரிவுமெப்படி
நஞ்சாகுமென அறிவாய்’ போ காதலுறு..
காதலின் வெப்பந்தனில் வேகு
காதலால் வானம் உடை
பெய்யுமொரு புது மழையில்
காதலோடு நனை,
அதன் ஈரத்தில் பிறக்கட்டும் நம்
எவருக்குமான சமத்துவம்,
அதன் மழைச்சாரலில் ஊறட்டும்
எல்லா உயிர்க்குமான இரக்கமும், அன்பின் மகா கருணையும்..
———————————————–
வித்யாசாகர்
பிங்குபாக்: அவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல.. – TamilBlogs